2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிளி. கனகாம்பிகை அம்மன் ஆலய வீதியை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தும் முயற்சியில் படையினர்- ஈ.சரவண

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் தேர் இழுக்கும் வீதியின் பெருமளவு பகுதியில் முட்கம்பிகளை அடைத்து இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கும்  முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் குறிப்பாக கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வோடு ஒருமித்திருக்கும் இந்த ஆலயத்தினை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பதன்  மூலம் எதிர்காலத்தில் அரச மரங்களுக்கும் கோயில்களுக்கும் இடையிலான முரண்நிலை  மத ரீதியான மோதல்  தோன்றுவதற்கு வித்திடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.


கிளிநொச்சி கனகாம்பிகை குள அம்மன் ஆலயப் பகுதிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன்  ஆகியோர் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர். இதன் பின்னரே மேற்கண்டவாறு சரவணபவன் எம்.பி கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கனகாம்பிகை குள அம்மன் கோயிலின் தேர் இழுக்கும் வீதியில் அரைவாசிக்கும் அதிகாமான நிலப்பரப்பில் முட்கம்பி வேலியிட்டு இராணுவத் தேவைகளுக்காக சுவீகரித்துள்ளனர். இதனால் குறித்த ஆலயத்தின் ஆகம வழிபாட்டு முறைமை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி மக்களின் வாழ்வியலோடும், வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புடைய இந்த ஆலயத்தின் தேர் இழுக்கும் வீதியைப் இராணுவத்தினர் இவ்வாறு சுவீகரித்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் மத ரீதியான முரண்பாட்டு நிலையொன்று தோன்றிவிடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது.

வன்னியில் அரச மரங்களும், புத்தர் சிலைகளும், விகாரைகளும் புதிதாக முளைத்து வரும் சூழலில் பாரம்பரியமாக இந்த மண்ணில் மக்களின் ஆன்மீக வழிபாட்டுக்கு வழிசமைத்த இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டிருப்பதும் அவற்றின் வழிபாட்டு முறைமைகள் தடுக்கப்பட்டிருப்பதும் ஆலயப் பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதும் தமிழ் மக்களின் மனங்களை வேதனையில் ஆற்றியுள்ளது. காலப்போக்கில் இனரீதியான வேறுபாடு மதம் சார்ந்த யுத்தமாக உருவெடுத்துவிடுமோ என்ற அச்சம் கனகாம்பிகை குளம் அம்மன் ஆலயச் சூழலை பார்க்கின்றபோது எழுகின்றது  என்றார்.

இது குறித்து சிறிதரன் எம்.பி தெரிவிக்கையில்:-

தமிழ் மக்களின் பொருளாதார நிலையோடு நெருங்கிய தொடர்புடையது கனகாம்பிகைக் குளம் அம்மன் ஆலயம். கிளிநொச்சி ஒரு விவசாயப் பிரதேசமாக எழுச்சி பெறுவதற்கு கனகாம்பிகை குளம் பிரதான காரணமாகும். இந்தக் குளத்தின் பாதுகாப்புக்கும் அமோகமான விவசாய விளைச்சலுக்கும் கனகாம்பிகைக் குளம் அம்மனே காரணம் என்ற ஐதீகம் இன்றுவரை எம்மக்களிடம் தொடர்ந்தும் நிலவிவருகின்றது. இவ்வாறு மக்களோடு நெருங்கிய தொடர்புடைய ஆலயச் சூழலை இராணுவ மயப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த மக்களினதும் மனங்களை நோகடிக்கும் செயலாகும். இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

நேற்றைய விஜயத்தின்போது மேற்படி கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பார்வையிட்ட இரு எம்.பிக்களும் கோயில் அறங்காவல்சபை ஒன்றுகூடலிலும் அன்னதான நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கனகாம்பிகை அம்மன் ஆலயத் திருப்பணிக்கென சரவணபவன் எம்.பி 2 இலட்சம் ரூபாவை நேற்றைய தினம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--