2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா - தங்கபாலு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியப் பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர் சோனியா காந்தி. இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாக அவர் விளங்குகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இலங்கையில் போர் ஆரம்பமான காலப்பகுதி தொடக்கம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் சுமூகநிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரையில் சோனியா காந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை இலங்கை வாழ் தமிழர்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோனியா காந்தியை விமர்சித்து வைகோவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவினால் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதும் அவ்வாண்டு பெப்ரவரி மாதம் 7, 8, 9ஆம் திகதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்ற வேண்டும் என்ற சோனியா காந்தியின் அறிவுறுத்தலுக்கேற்ப தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

அத்துடன், சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு 800 தொன் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் 25 தொன் மருந்து பொருட்களுடன் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட இந்திய மருத்துவக்குழுவினையும் இலங்கையில் போர் இடம்பெற்ற பொது அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்து தமிழ் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மேலும், போர்க் காலத்தில் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தியின் ஆணைகேற்ப கடந்த அரிசி, பருப்பு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி ஜஹிந்தவை சந்தித்து, இலங்கையில் போர் நிறுத்தம் எற்படுத்தப்பட்டு அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும என வலியுறுத்தினார். இதனையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவி பிரதீபா பட்டேல் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்திய மத்திய அரசு முன்னெடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே இங்கு நான் நினைவுபடுத்தியுள்ளேன்.

இதனைத்தொடர்ந்து இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதி உருவாக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் இந்திய ரூபாப்படி 5 ஆயிரம் கோடி வழங்கப்பட்டமை உலகறியும். 

வீடிழந்து, உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இலங்கையில் போர்க்காலம் தொடக்கம், அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்பும் மனிதாபிமான உணர்வோடு மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர்களின் மீள்குடியேற்ற திட்டங்கள் அபரிமிதமாக தொடர்ந்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விலைமதிக்க முடியாத தலைவர் ராஜீவ்காந்தியை நாம் பறிகொடுத்தோம். இன்றைக்கு சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.

இந்நிலையில் அறிக்கைகளை வெளியிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன? அரசியல் நடத்த வேறு வழியோ, கொள்கையோ இல்லாத நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை மாத்திரமே வைத்து தமிழின மக்களுக்கு விரோதமாகவும், எஞ்சியிருக்கும் தமிழர்களை காப்பாற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசுகின்றமையை ஏற்க முடியாது" என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--