2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

முதலமைச்சர் குழுவினர் தாக்கியதாக மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு; முதல்வர் தரப்பு மறுப்பு

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

நேற்று மாலை மட்டக்களப்பு மாநகர சபை மேயரின் வாசஸ்தலத்தில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் தான் தாக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஆர்.பிரபாகரன் புகாரிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையத்தளத்திடம் ஆர்.பிரபாகரன் கூறுகையில்,

"புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் உள்ள கடைத்தொகுதியில் தனக்கு 5 கடைகளும் உணவு விடுதி மற்றும் சிற்றுண்டிசாலையும் வழங்கும்படி மேயர் சிவகீதா பிரபாகரனிடம் கோரியிருந்தார்.

இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை சிவனேசதுரை சந்திரகாந்தன் தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்விடுத்தார்.

இதனையடுத்து எனக்கு எதுவும் நேர்ந்தால் முதலமைச்சர் சந்திரகாந்தன் தான் பெறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.

பஸ் நிலைய கடை வழங்குவது தொடர்பான விசேட கூட்டம் நேற்று மாலை மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தனது அடியாட்களுடன் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தன்னை தாக்கியதுடன் கழுத்திலிருந்த 4 1/2 பவுண் தங்கச் சங்கிலியையும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தார்.

அவருடன் வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினார்களான பிரசாந்தன், பிரதீப் மாஸ்டர் மற்றும் முதலமைச்சரின் ஆலோசகர் செல்வேந்திரன் ஆகியோர் உடபட 25 பேர் கொண்ட கும்பல் என்னை தாக்கியது.

தற்போது நான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு உட்காயங்கள் உள்ளன.

எனக்கு முதலமைச்சர் தாக்கியமை தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரிடமும் மட்டக்களப்பு பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்" என்றார் ஆர்.பிரபாகரன்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரசாந்த ஜயகொடியை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

"மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட நான்கு ஐந்து பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டவர்கள் சிறு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்" என்றார்.

தாக்கிய மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் தனக்கு தெரியாது எனவும் இச்சம்பவத்தில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்புபட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என  பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பல தடவை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தனை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

இச்சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை. நேற்று மாலை மட்டக்களப்பு மேயரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு முதலமைச்சருடன் நானும் சென்றிருந்தேன்.

அங்கு வைத்து முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனோ அல்லது அவரது குழுவினரோ எந்தவொரு மாநகர சபை உறுப்பினரையும் தாக்கவில்லை. எனினும் அங்கிருந்த சிலர் முதல்மைச்சர் என்று கூட மரியாதை செலுத்தாமல் அவதூறான வார்த்தைகளால் ஏசினார்கள்.

இது தொடர்பில் நாங்கள் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்" என்றார் அவர்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஆர்.பிரபாகரன் தெரிவித்த கருத்துக்களை ஒலி வடிவில் கேட்கலாம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .