2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரேம ஜயந்தவும் ஆதர ஜயந்தவும் ஒன்றா?: ஐ.ம.சு.மு. வேட்புமனு நிராகரிப்பு தொடர்பான வழக்கில் கேள்வி

Super User   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்எஸ்.செல்வநாயகம்)

யாழ். மாவட்ட  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சி தாக்கல் செய்த ஆணைகோரும் மனு மீதான விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற்றது.

அவ்வேளையில் ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு எதுவும் வழங்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன ஆட்சேபித்தன.

United People’s Freedom Alliance எனும் கட்சியின் பெயரை தமிழில் 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு' என எழுதியதால், அவ்வாறானதொரு கட்சி இல்லை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலேயே அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது என காரணம் கூறி, யாழ் தேர்தல் மாவட்ட ஐ.ம.சு.முன்னணியின் 16 வேட்புமனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்திருந்தார். 3 நகர சபைகள் 16 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இவற்றில் அடங்கும்.

இதற்கு எதிராக ஆணை கோரும் மனுக்களை  ஐ.ம.சு.மு சார்பில் அதன் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, தெரிவத்தாட்சி அதிகாரி பி.குகநாதன், ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 நீதிபதிகள் சத்ய ஹெட்டிகே (தலைவர்), உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணையின்போது திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் வழக்குரைஞர் ஜுவந்தா அருளானந்தம் சகிதம் ஆஜரான வழக்குரைஞர் விரான் கொரயா, கூட்டமைப்பா, முன்னணியா என்ற சர்ச்சை குறித்து வாதாடுகையில்,  Alliance  என்பதற்கான அர்த்தம் என்னவென்பது சம்பந்தப்படாத விடயம் என்றார். பிரேமஜயந்தவும் ஆதர ஜயந்தவும் ஒன்றா என அவர் கேள்வி எழுப்பினார். இம்மனுவை நிராகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை, யட்டிநுவர பிரதேச சபைக்கான ஐ.ம.சு.முன்னனணியின் வேட்பு மனு நிராரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் ஆஜரான எம்.ஏ.சுமந்திரன் வாதாடுகையில், மேற்படி வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட கட்சியின் பெயரில் எக்ஸத் ஜனதா ஆகிய இரு சொற்கள்  இல்லாதிருப்பதாக தெரிவித்தார்.

விதிகளின்படி சுயேட்சைக் குழுக்களின் சார்பிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யமுடியும் எனவும் இதனால் மேற்படி ஆவணம் வேட்புமனுவல்ல எனவும் வழக்குரைஞர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
நீதிபதிகள் இவ்வழக்கு விசாரணையை பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .