2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சமஷ்டி தொடர்பான ஜே.வி.பி.யினரின் நிலைப்பாட்டுக்கு புளொட் அமைப்பு வரவேற்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒரே தீர்வாக இருக்கும் சமஷ்டி ஆட்சியமைப்பு குறித்து அவர்கள் தெரிவித்த கருத்தானது சிறுபான்மையினருக்கும் அவர்களது தலைவர்களுக்கும் அக்கட்சியின் மீது மரியாதையும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

சமஷ்டி என்ற எண்ணக்கருவின் ஊடாகவே ஜக்கிய இலங்கையினை பாதுகாக்க முடியும் என்பதிலும், அதுவே அனைத்து இனங்களும் தம்மை தாமே ஆட்சி செய்வதற்கான ஆட்சி கட்டமைப்பினை கொண்டுள்ளது என்பதிலும் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதில் தமது நிலைப்பாட்டினை ஜே.வி.பி உறுதிப்படுத்தியது மட்டுமல்ல, அண்மைக்காலமாக தமிழ்மக்கள் மேல் ஜே.வி.பி.காட்டிவரும் கரிசனை அவர்கள் மீது மேன் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றது. இதனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் வரவேற்கின்றது என்று அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்ட 6ஆவது தேசிய மகாநாட்டில், சமஷ்டி தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்ந மாற்றமும் இல்லை என்றும், தமது முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீர அவர்கள் சமஷ்டியை ஏற்றுக்கொண்டு இருந்தாரெனவும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலர் விஜித ஹெரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
வட-கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதில் ஜே.வி.பி.க்கு மாற்று கருத்து இருந்தபோதும், அவர்களினால் நடத்தப்பட்ட ஜனநாயக போராட்டங்களுக்கு நாம் ஆதரவு கொடுத்து வந்துள்ளோம்.

காணாமல் போனோருக்காக யாழ் குடாநாட்டில் ஜே.வி.பி.யினர் போராட்டம் நடாத்தியவேளை அரச குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார்கள். அந்த சம்பவத்தினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உடனும் கண்டித்திருந்தது.

அது மட்டும் அல்ல, 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் ரோஹண விஜயவீர கொல்லப்பட்டபோது அதனை கண்டித்து வவுணியா நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியதோடு, துண்டு பிரசுரங்களையும் வினியோகித்து இருந்தது.

தற்போது ஜே.வி.பி.கட்சியில் முன்னணி தலைவர்களாக இருக்கும் பலர் அன்று சிறுவர்களாக இருந்திருப்பார்கள் என்பதினால் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். விஜயவீராவின் கொலையினை கண்டித்தமையினால் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முன்னாள் இராணுவ தளபதியும், பிரதி தலைவருமான மாணிக்கதாசன் அவர்கள், அப்போதைய ஜனாதிபதியான பிரேமதாசாவின் மிரட்டலுக்கு உள்ளாகி இருந்தார்.
 
மூன்று சகாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக  ஜே.வி.பி.கட்சியினர் முன்னெடுக்கும் ஜனநாயகம் தழுவிய போராட்டங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச செயலகம் என்றுமே ஆதரவினை நல்கும் என்பதினை கூறிக்கொள்கிறோம்.

இது மட்டும் அல்லாது, அரசியல் தீர்வு அவசியமில்லை அபிவிருத்தியே தேவை அல்லது அரசியல் தீர்வை அவசரப்பட்டு முன்வைக்க முடியாது என்று கூறிக்கொண்டு தமது ஆட்சிக்காலத்தில் குடும்ப ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அரசிற்கு எதிராக ஜே.வி.பி.முன்னெடுக்கும் ஜனநாயகவழி போராட்டங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தோள் கொடுக்கும்.'


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--