2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கை உயர் ஸ்தானிகரை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்குமாறு அவுஸ்திரேலிய பொலிஸாரிடம்கோரிக்கை

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசேர சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவல்லுநர்களின் சர்வதேச ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய பிரிவினால் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு இக்கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பொதுநலவாய வழக்குத் தொடுப்பு பணிப்பாளர், அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கும் இம்மனு அனுப்பப்பட்டுள்ளதாக தி ஏஜ் தெரிவித்துள்ளது.

போர்க் குற்றங்கள் மற்றம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கான நேரடி மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் என வட்டாரமொன்று தி ஏஜ் பத்திரிகைக்கு தெரிவித்த தொகுப்பொன்றும் இம்மனுவில் இருப்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

'தி ஏஜ்' பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"பிரிவினைவாத பயங்கரவாத குழுவான தமிழ் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி வருடங்களில் அட்மிரல் சமரசிங்க இலங்கை கடற்படையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் தளபதியாகவும் கடற்படை அதிகாரிகளின் பிரதானியாகவும் விளங்கினார்.

ஐ.நா கூறுவதன்படி, 2009 இல் யுத்தத்தின் கடைசி மாதங்களில் கிளர்ச்சி படையினருக்கு எதிராக அரசாங்கப் படைகள் முன்னேறியபோது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கிக்கொண்ட 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மோதல்களிலிருந்து தப்பிச்சென்ற நிராயுதபாணிகளாக பொதுமக்கள் மீது  கடற்படைக் கப்பல்கள் நேரடியாக பிரயோகம் நடத்தியதாக சட்டவல்லுநர் ஆணைக்குழுவிடமும் ஏனைய விசாரணையாளர்களிடமும் தனித்தனியாக சுயாதீனமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

அட்மிரல் சமரசிங்க இந்த ஷெல்வீச்சுகளில் நேரடியாக பங்குபற்றியமைக்கோ அல்லது அப்படி செய்வற்கான நேரடி உத்தரவு பிறப்பித்தமைக்கோ ஆதாரம் இல்லை. ஆனால் படை உயரதிகாரிகள் தமது கீழுள்ளவர்களின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புதாரிகள் என அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் இந்த மனுவை ஆராய்ந்து வருவதாகவும் எனவே இப்போது கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது எனவும் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் ஒருவர் த ஏஜ்ஜுக்கு தெரிவித்துள்ளார்.

அட்மிரல் சமரசிங்க தி ஏஜ்ஜுக்கு இது குறித்து கூறுகையில்,  யுத்தத்தின்போதான தனதும் தனது கடற்படையினதும்  நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை எனக் கூறினார். ' தவறான நடத்தை அல்லது சட்டவிரோத நடவடிக்கை குறித்த எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை' என அவர் கூறினார்'

சட்டவல்லுநர்களின் சர்வதேச ஆணைக்குழுவானது ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன சர்வதேச சட்ட அமைப்பாகும். யுனெஸ்கோ, ஐரோப்பிய கவுன்ஸில் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுக்கு ஆலோசனை கூறும் அந்தஸ்தை அது கொண்டுள்ளது
" என  குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0

  • tamilvanan Monday, 17 October 2011 03:42 PM

    இது ஒரு நல்ல முடிவு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--