2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

முன்னாள் பிரதமர் கோவணத்துடன் மாத்திரம் நாடாளுமன்றத்திற்கு வந்தார்: அமைச்சர் தினேஷ்

Super User   / 2011 நவம்பர் 30 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் பிரதமர் டபிள்யூ. தஹநாயக்க 1964 ஆம் ஆண்டு கோவணம் மாத்திரம் அணிந்தவாறு நாடாளுமன்றத்திற்கு வந்தார் என்பது நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தல் கழுத்துப்பட்டியை கழற்றியமை தொடர்பாக  ஏற்பட்ட சர்ச்சையின்போது இவ்விடயத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். 

கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்ற தமக்கு அனுமதிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ரணில் கழுத்துப்பட்டியை கழற்றிக்கொண்டு வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் விமல் வீரவன்ஸ, எம்.பிகளுக்கான ஆடை ஒழுங்கு விதிகளை ரணில் மீறியுள்ளதாக தெரிவித்தார்.

' சபையில்  எம்.பி. ஒருவர் கோட் சூட் அணிந்திருந்தால் கழுத்துப்பட்டியும் அணிய வேண்டம். அப்படியில்லையாயின் அது நாடாளுமன்றத்திற்கான ஒழுங்கு விதிகளை மீறுவதாகும். இவ்விதியின்படி நடந்துகொள்ளாதவர்களை சபையிலிருந்து வெளியேற்ற முடியும்' என அமைச்சர் விமல் கூறினார்.

அரச தரப்பு அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரும் இந்த ஒழுங்கு பிரச்சினையை கிளப்பினார். ரணில் விக்கிரமசிங்க ஆடை ஒழுங்குவிதியை பேணத் தவறியதாகவும் அதனால் அவரை சபையிலிருந்து இடைநிறுத்த வேண்டும் எனவும் அஸ்வர் எம்.பி. கூறினார்.

அப்போது சபைக்குதலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி, இவ்விடயத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் டபிள்யூ. தஹநாயக்க 1964 ஆம் ஆண்டு கோவணம் மாத்திரம் அணிந்தவாறு நாடாளுமன்றத்திற்கு வந்தார் என்பதை அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நினைவுபடுத்தினார்.

தான் வேடிக்கையாக இதை சுட்டிக்காட்டியதாக அமைச்சர் தினேஷ் கூறினார்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவும் இது பற்றி கூறியதுடன், 1989 ஆம் ஆண்டு கலாநிதி பெர்னாண்டோ கழுத்துப்பட்டி இல்லாமல் சபை அமர்வில் கலந்துகொள்ள இடமளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
 


  Comments - 0

  • thivaan Thursday, 01 December 2011 12:02 PM

    கழுத்துப்பட்டி இல்லாமல் சபைக்கு வருவது பெரும் குற்றம்? ஆனால் கொலையாளிகள்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .