2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. பரிகாரம் தேட வேண்டும்: ராமதாஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்ற போது அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை, இப்போது அதற்காக பரிகாரம் தேட வேண்டும் என்று தமிழக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ஆம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வட மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டாம் என தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில் அப்பாவித் உயிரிழந்தபோது, அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு தெரிவித்து, அவற்றைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது' என்று ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.

ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா., இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

லிபியா, சிரியா போன்ற எண்ணெய் வள நாடுகளில் ஏதேனும் நடந்தால் மட்டும் அங்கு ஆதிக்க நாடுகளின் பிரதிநிதியாக தலையிடும் ஐ.நா., அப்பாவி தமிழர்கள் விடயத்தில் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது கண்டிக்கத்தக்கது.

ஐ.நா. மீது உலக மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நம்பிக்கையையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், இலங்கை விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் நோக்குடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும்.

இலங்கை ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து தமிழர்களை காக்கும் நோக்குடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி தனிநாடு அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார். (நக்கீரன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .