2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

குற்றப்பிரேரணை விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் விசனம்: அயர்ஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டியான் சில்வா)

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் விசனமுற்றிருப்பதாக அமெரிக்க பிரதி உதவி செயலாளரான அலீஸா அயர்ஸ் கூறியுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே, பிரதம நீதியரசர் விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதையிட்டும் அமெரிக்கா விசனப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றத்தை அவர் கவனத்தில் எடுத்துள்ளார்.

13ஆவது திருத்தம் பற்றி தற்போது நாட்டில் நிலவும் விவாதம் குறித்து கேட்டபோது, 'அதிகாரப் பகிர்வும் தமிழ் சமுதாயத்தின் உரிமைகளும் அமெரிக்க அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்கா தான் ஆகக் கூடுதலான உதவியை மீளக் குடியமர்த்தலுக்காக வழங்கி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள், சட்டத்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை என்பவற்றுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, பல்லின சமுதாயத்தின் சகிப்புத்தன்மை, பத்திரிகை சுதந்திரம் என்பவற்றை பூரணமாக மதித்து நடப்பதில் அமெரிக்கா எப்போதும் அக்கறையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களையும் அலீஸ் அயர்ஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .