2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

2012ஆம் ஆண்டு பட்ஜெட் மக்களுக்கான நிவாரணங்கள் அற்ற வெறும் கனவுத்திட்டம்: ஜே.வி.பி.

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உதயகார்த்திக்)

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மக்களுக்கான நிவாரணங்கள் அற்ற வெறும் கனவுத்திட்டமாக அமைந்துள்ளது" என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.  

2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையை கொழும்பு புறக்கோட்டையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்து வைத்தது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'10,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த அரசாங்க ஊழியர்களினதும் 40 வீத சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த தனியார் ஊழியர்களினதும் எதிர்பார்ப்புகள் 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன், சாதாரண மக்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்புக்களையும் இந்த வரவு – செலவுத்திட்டம் பூர்த்தி செய்யவில்லை.

2011ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், 2012ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தில் புதிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன' என்றார்.  

மக்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஏமாந்து அதன் பின்னால் போகக்கூடாதெனவும்  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  ரில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, கே.டீ.லால்காந்த, விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி நாடாளவிய ரீதியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By:Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .