2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இடைக்கால நிர்வாகம் மூலம் இலங்கையில் சர்வதேச விசாரணை வேண்டும்: த.தே.ம.மு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'இலங்கையில் உள்ள அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை சர்வதேசம் உருவாக்கி இலங்கைக்கு எதிரான சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை அரசாங்கதினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் எற்படவில்லை' என்றார்.

'தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னரைவிட தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரே அதாவது கடந்த ஒரு வருட காலத்துக்குள்ளேயே வன்முறைச் சம்பவங்களும் நில அபகரிப்பு நடவடிக்கையும் அதிகரித்துள்ளன' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு உள்ளாக பொறிமுறை மூலமே தீர்வைக் காண வேண்டும் என்று சர்வதேசம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அது நடுநிலைத் தன்மையில் விசாரணைகள் நடைபெற்று தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது. குற்றவாளிகளிடமே குற்றத்தை விசாரணை செய்து தண்டனை வழங்குங்கள் என்ற தொனியிலேயே சர்வதேசத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த நிலையில் சர்வதேசம் கடந்த யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கையின் அரசியல் யாப்புக்கு அப்பால் இடைக்கால நிர்வாகம் ஒன்றை நிறுவி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைக்கப்படுகின்ற இடைக்கால நிர்வாகமும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

'அத்துடன், கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு எதுவிதமான நன்மையினையும் ஏற்படுத்தவில்லை. இருந்தபோதும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிகளுக்கும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .