2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கெடுபிடி அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் மீதான புதிய கெடுபிடி அரசியல்  முயற்சிகளை சிங்கள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான  சரத் பொன்சேகாவிடம் எடுத்துரைத்துள்ளார்.

புலிகள் மீண்டும் உயிர் பெற்று வருகிறார்கள் என்று கூறி தமிழ் மக்கள் மீது புதிய பொலிஸ்-படைத்தரப்பு கெடுபிடிகளை முன்னெடுக்கும் முயற்சிகள் தென்படுகின்றன. இந்த முயற்சிகளின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் கட்சி  அரசியலை சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இதன்மூலம் சிங்கள மக்கள் மத்தியில் சரியும் செல்வாக்கை நேர்படுத்த அரசு திட்டம் போடுகிறது. இந்த புலி பூச்சாண்டி அரசியலை தொடர விட்டால் அது இந்நாட்டில் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரணி கட்சிகளுக்குகூட தமது ஜனநாயக அரசியலை செய்யமுடியாத நிலைமையை உருவாக்கிவிடும்.

புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்பிக்க வேண்டிய அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் இன்று கிடையாது. ஐக்கிய இலங்கைக்குள் தமது தேசிய அரசியல் உரிமைகளை பேச்சுவார்த்தை, ஜனநாயக போராட்டங்கள், சர்வதேச நகர்வுகள் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் இன்று தமிழ் மக்கள் திடமாக இருக்கின்றார்கள்.

தலைநகர் மாவட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புள்ள கட்சி என்ற முறையில்  இந்த கருத்துகளை உங்களிடம் எடுத்து சொல்லும் கடப்பாடு எங்களிடம் இருக்கிறது.
சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து கூறுங்கள்.

அதேபோல் இது பற்றிய உண்மை நிலவரங்களை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து கூறும் பொறுப்பு சிங்கள மக்களை பிரதானமாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு இருக்கின்றது. அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என நாம் கேட்டுகொள்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனநாயக கட்சி தலைவர்  பொன்சேகாவிடம்  தெரிவித்தார்.

புலிகள் இயக்கம் மீண்டும் உயிர் பெறுகிறது என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கு, கொழும்பு ஆகிய பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகள், புதிய கெடுபிடிகள் தொடர்பாக ஜ.ம.மு தூதுக்குழு இன்று ஜனநாயக கட்சியினரை சந்தித்து கலந்துரையாடியது.

கட்சி தலைவருடன் ஜ.ம.மு பிரதி தலைவர் வேலணை வேணியன், உப செயலாளர் சண். குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, இளைஞர் இணைய செயலாளர் நிரோஷ் ஜெயபிரகாசம் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனநாயக  கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஜ.ம.மு தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,

 மீண்டும் புலிகள்

புலி உறுப்பினர்கள் என சொல்லப்பட்ட சிலர் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்ட சம்பவங்கள்  மக்கள் மத்தியில்  பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த புதிய சூழல் மீண்டும் பழைய கெடுபிடி சூழலை உருவாக்கி விடுமோ என தமிழ் மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள்.

வெளிப்படைதன்மையற்ற செய்திகள் காரணமாக, சிங்கள மக்கள் மத்தியிலும் இச்சம்பவங்கள் பலத்த சந்தேகங்களை  எழுப்பியுள்ளன. இந்த புலிகள் மீண்டெழுந்து வந்து விட்டார்கள் என்ற விடயம் தொடர்பாக அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு மேலும் விளக்கங்களை தருவதற்கு கடமைபட்டுள்ளது. எனவே இது தொடர்பில் தேசிய சிங்கள கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
 
அரசின் செல்வாக்கு குறைந்து வருகின்றது

மேல்மாகாணத்திலும், தென்மாகாணத்திலும்  நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல்களில் அரசின் செல்வாக்கு குறைந்து வருவது தெரிகிறது. ஏறக்குறைய 250,000 வாக்குகள் அரசுக்கு குறைந்துள்ளன.

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்ட தொடர் வேளையில் திட்டமிட்டு இங்கு தேர்தல்கள் நடைபெற்றாலும், ஜெனீவா மனித உரிமை பேரவையுடன் தொடர்புபடுத்தி அரசு எழுப்பிய பிரசாரத்தை சிங்கள மக்கள் கணக்கில் எடுக்கவில்லை. கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தமுறை  'சர்வதேச சதி' என்ற அரசு தரப்பு பிரசாரம் புஸ்வாணமாகிவிட்டது என்பது புலனாகிவிட்டது.

ஆகவேதான் ஜெனீவாவை விட்டுவிட்டு இங்கே வடக்கில் மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் என்ற பிரச்சாரத்தை அரசு கையில் எடுத்துள்ளதா என்றும், இதன்மூலம் சிங்கள மக்களின் மனதை வென்று தனது செல்வாக்கை தக்க வைத்து கொள்ள இந்த அரசு முயற்சி செய்கிறதா  என்றும் கேள்விகள் தென்னிலங்கையிலே எழுந்துள்ளன.  

தென்னிலங்கை பெரும்பான்மை தேசிய கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் கடைசியில் தமிழ் மக்களின்  தலையில்தான் வந்து விடிந்துள்ளன. இதுவே கடந்த கால வரலாறு. எனவே மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ள பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் நாம் இது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளோம். ஆகவேதான் இத்தகைய நேரடி சந்திப்புகளை நடத்த நாம் முடிவு செய்துள்ளோம்.

ஆயுத கலாச்சார நோக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை

இந்த புலி பிரசாரத்தை முன்னிறுத்தி பரவலாக நாடு முழுக்க கைதுகள் இடம்பெற்றுள்ளன. கொழும்பிலும் இடம்பெற்றுள்ளது. மீண்டும் பழைய சோதனை சாவடி காலகட்டம் வந்துவிடுமோ என கேள்விகள் எழுகின்றன. ஆயுத கலாச்சார நோக்கங்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இடம் இல்லை, இந்நிலையில் மீண்டும் கெடுபிடி யுகத்துக்குள் பிரவேசிக்க தமிழ் மக்கள் தயார் இல்லை என்ற செய்திகளை பெரும்பான்மை கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வரிசையில் ஏனைய தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளையும் சந்தித்து இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் பிரியாணி குணரட்னவும், உப செயலாளர் சண். குகவரதணும் செய்துவருகின்றனர் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--