2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கனடாவின் முடிவு ஏமாற்றமளிக்கிறது:கமலேஷ்; ஆச்சரியமான ஒன்றல்ல: வெளிவிவகார அமைச்சு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளமை தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலர் நாயகம் கமலேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளதுடன்  இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் செயலர் நாயகம்; கமலேஸ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளமை ஏமாற்றமளிக்கின்றது.

பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கும் அடுத்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பொதுநலவாய நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது குறித்து கமலேஸ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பரஸ்பர மறறும் தன்னார்வ நிதியம் பொதுநலவாய நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு

பொதுநலவாய அமைப்புக்கு வழங்கும் நிதியை இடைநிறுத்துவதென்று கனடா அரசாங்கம்  விடுத்துள்ள அறிவித்தல் ஆச்சரியமான ஒன்றல்ல என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

2013 இல் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாட்டில் கனேடிய பிரதம மந்திரி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்த போதே இந்த நிதி வழங்கும் செயற்பாடு இடை நிறுத்தப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.

இலங்கையில் கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஓராண்டுக்கு முன்னர் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது கனடா, பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. 

இவ்விதம் சில நாடுகள் பொதுநலவாய அமைப்புக்கு நிதியை வழங்கி தங்கள் செல்வாக்கை பிரயோகிக்க நினைப்பது பற்றி பல அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே அவதானத்தை செலுத்தி வந்தன. கனடாவின்  இத்தீர்மானம் அதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

கனேடிய அரசாங்கம் தன்னிச்சையாக வழங்கும் நிதியை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டில் தமக்கு இருக்கும் வாக்குப் பலத்தை அடிப்படையாக வைத்து செயற்படுகின்றது.

தனது வாக்காளர்களை திருப்திப்படுத் துவதற்காக கனடா பொதுநலவாய அமைப்பை இவ்விதம் துன்புறுத்துவது தவறாகும்.  கனேடிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டை உதாசீனம் செய்வதாக அமைந்திருக்கிறது. 

இலங்கை அரசாங்கம் யதார்த்தபூர்வமான கால எல்லைக்குள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தீர்வையே எங்கள் நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .