2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யஷினை மீட்ட பொலிஸார் கௌரவிப்பு

George   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் கப்பம் கோரி, கடத்தி செல்லப்பட்ட 4 வயது சிறுவனான தினிந்து யஷின் மீட்கும் பணிகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறுவன் தொடர்பில் தகவல்கள் வழங்கிய பொதுமகன் ஆகியோருக்கு சன்மானம்; வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை(30) நடைபெற்றது.
  
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவனை மீட்கும் கடமையில் ஈடுப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் கல்கமுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் 30 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
 
அத்துடன் சிறுவனை மீட்கும் நடவடிக்கைளின்போது தகவல் வழங்கிய பிரதேசவாசி ஒருவருக்கும்  25,000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்காக 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
 
பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன் பதவியேற்ற பின்னர் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் 3,040 பேர் மற்றும் 137 பொதுமக்களுக்கு  7 கோடியே 47 இலட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த வருடத்தில் மாத்திரம் இராணுவ அதிகாரிகள் நால்வர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 829 பேர் மற்றும் தகவல் வழங்கிய பொதுமக்கள் 30 பேர், ஆகியோருக்கு ஒரு கோடி 80 இலட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் சன்மானமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் நான்கு வயது சிறுவனான தினிந்து யஷின் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
 
முகங்கள் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரே வீட்டிலிருந்த பெற்றோரை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனை கடந்த திங்கட்கிழமை இரவு கடத்திச் சென்றுள்ளதாக கல்கமுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அதனையடுத்து  விசாரணைகளை ஆரம்பித்த கலகமுவ பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுவனை கடத்தியோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு கூறியிருந்ததுடன்  ஜீலை மாதம் 30 ஆம் திகதி சிறுவனை மீட்டனர்.
 
இந்த சம்பவத்துடன் தெர்ர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .