2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வட மாகாணசபையின் பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக்கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றைக் கோருதல் தொடர்பில் வட மாகாணசபையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, 'வட மாகாணத்தில் நிறைவேற்றப்படும் இவ்வாறான தீர்மானங்கள், ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

எது எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்தினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை ஒன்றே  மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது எனவும் அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதிகட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 


இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறியுள்ள ராஜித சேனாரட்ண, கடந்த முறை இதே தீர்மானம் வடமாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது அதை எப்படி ஏற்றார் எனவும் கேள்வி எழுப்புகிறார்.

இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது.

விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிகட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை எனக் கூறியுள்ள அமைச்சர், இனப்படுகொலை என்று கூறி நிறைவேற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீர்மானத்தை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளாது என உறுதியாகக் கூறியுள்ளார். 
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்லிணக்க முயற்சிகளை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த பிரேரணை எந்தளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. 

இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்சி தி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த செய்தியில், வடமாகாண சபையின் இந்த தீர்மானம், இலங்கையில் வியாகூல தன்மையை ஏற்படுத்தியுள்ளது' என்றுட் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த பிரேரணையானது, ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அறிக்கையை எந்தளவில் பாதிக்கும் என்பதை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை ஜெனீவா பெற்றுக்கொடுக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் நம்புவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை, சர்வதேச இனஅழிப்பு விசாரணைகள் சவால்களை ஏற்படுத்துமானால், அது முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இதற்கிடையில், இனஅழிப்பு பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால், அதில் இந்தியா பிரசன்னமாகாது இருக்கலாம் என்றும் அச்செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .