2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாதகல்வாசிகளின் மனு; டிச.3இல் விசாரணை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ். வலிகாமம் நிலப்பரப்பைச் சூழ தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, தாம் சொந்தவீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக முறையிட்டு இடம்பெயர்ந்த மாதகல் மேற்கு கிராமவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாமா? இல்லையா? என்பது தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களை முன்வைப்பதற்கான திகதியை உயர் நீதிமன்றம் நேற்று திங்கட் கிழமை தீர்மானித்தது.

இதன் பிரகாரம் வாதப்பிரதிவாதங்களை எதிர்வரும் டீசம்பர்  3ஆம் திகதி முன்வைக்குமாறு இரு தரப்பிற்கும் உயர் நீதிமன்றம் பணித்தது.  இந்த மனு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா. நீதியரசர்கள் கே. ஸ்ரீபவான், பிரியஸாத் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆயுத மோதல்கள் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், தாம் தமது சொந்தவீடுகளில் மீள்குடியேற விடாமல் தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக முறையிட்டு உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள மாதகல் மேற்கு கிராமவாசிகள் சட்டத்தரணி மோஹன் பாலேந்திரா ஊடாக தாக்கல் செய்துள்ள தமது மனுவில் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியா, யாழ். பாதுகாப்புப்படைக் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

மனதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்களான  எம்.ஏ.சுமந்திரன், ஜுனரா அருளானந்தம் மற்றும் மோகன் பாலேந்திரா ஆஜரானார்கள்.  சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சவேந்திர பெர்னண்டோ,சிரேஸ்ட அரச வழக்குரைஞர் நெரின் புள்ளே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்தபோதிலும் தாம் தமது சொந்தவீடுகளில் மீள்குடியேறுவதும் அங்கு செல்வதும் தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

தம்மை அனுமதிப்பதற்கு பதிலாக, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தமது கிராமத்தை உள்ளடக்கிய வலிகாமம் பிரதேசத்தைச் சூழ தடு;ப்புவேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மனுவில் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

வலிகாமம் பிரதேசவாசிகளின் மீள்குடியேறும் உரிமையை உயர்நீதிமன்றம் நடுத்தீர்ப்பு வழங்கியிருந்தபோதிலும், தாம் தமது சொந்த காணிகளுக்குச் செல்லவோ அல்லது மீள்குடியேறவோ இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

தமது காணிகள் அமைந்திருக்கும் பிரதேசம் ஒரு பாதுகாப்புப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தும் எந்தவொரு வலுவான சட்டமோ அல்லது ஒழுங்குப்பிரமாணமோ கிடையாது என்றும் அவர்கள் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அவசரகாலச்சட்ட நிலைமை ஆகஸ்ட் 2011 இல் தளர்த்தப்பட்டது. எனவே இலங்கையிலிருக்கும் எந்தவொரு பிரதேசத்தையும் உயர்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்த எந்தவொரு சட்டரீதியான முகாந்திரமும் கிடையாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டிருக்கும் தமது அடிப்படை உரிமைகளான சமத்துவ உரிமை, சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடும் உரிமை, சுதந்திரமாகும் நடமாடும் உரிமை மற்றும் இலங்கைக்குள் தமது இருப்பிடத்தை தெரிவுசெய்வதற்கான உரிமை ஆகியன மீறப்பட்டுவிட்டன என்று பிரகடனப்படுத்தும் தீர்ப்பை வழங்குமாறு அவர்கள் தமது மனுவில் கோரியிருக்கிறார்கள்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .