2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்

காரை துர்க்கா   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   

கல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.   

நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுவது போல, தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு அப்பால், அவர்களுக்கென தொடர்ச்சியான தனியான நிலமும் இருந்தது; இருக்கின்றது. அத்துடன், கடந்த காலங்களில் அவர்களது பொருளாதார வளமும், உயர்வாகக் காணப்பட்டது.   

இவ்வகையில், 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையை தொடர்ச்சியாக ஆட்சி செய்த பெரும்பான்மையின அரசாங்கங்கள், தமிழ் மக்களது மொழி, நிலம், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றை இல்லாமல் ஆக்குவதற்கு பெரிதும் முயற்சிசெய்தார்கள். இதனாலேயே, அவற்றைப் பாதுகாக்க, தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக, ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள்.   
ஆரம்பத்தில், தமிழ்பேசும் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற, சட்டத்துக்கு விரோதமான செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு, பெரும்பான்மையின அரசாங்கங்களைத் தமிழ் மக்கள், கௌதம புத்தர் வழியில் அன்பாக (அஹிம்சை) கேட்ட போது, அடித்தார்கள்; ஆயுதத்தால் கேட்ட போது, பயங்கரவாதம் எனக் கூறி, பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அடித்தார்கள்.   

“தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ, எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தரவும் முடியாது. ஆனால், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியும். நான், கிழக்கு மாகாண அமைச்சராக இருந்தபோது, 7,000 ஆசிரிய நியமனங்களில் 5,000 நியமனங்களைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கினேன்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.   

இவை, கிழக்கு மாகாணத்தில் உள்ள இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, நியாயமாக வழங்கப்பட்ட அரச நியமனங்களாக இருக்கலாம். கல்வி அமைச்சராகச் சேவையாற்றியவர், ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்; இது அவருடைய கடமை. மறுவளமாகத் தமிழ் மக்களுக்கு செய்த உதவியும் அல்ல; சலுகையும் அல்ல. உதவி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால், 

இலங்கையில், சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையில், இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. இவ்வாறான சூழலில், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் கை கோர்த்தால், சிறுபான்மை இனங்கள் என்ற வகையில், அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்றே, ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தார்கள். இந்த உலைக்குள், இரண்டு இன மக்களும் வீழ்ந்து, சிக்கியதே பேரினவாதத்தின் பெருவெற்றி.   

காலங்காலமாக வடக்குக் கிழக்கில், தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இரு சமூகங்கள் என்ற வகையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் உண்மையான சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தார்கள். பேரினவாதமே இவர்களை நன்கு திட்டமிட்டு இரு கூறாக்கியது.   

கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அடுத்தபடியாகத் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். கல்முனை, நிந்தவூர், பொத்துவில் என மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ஒற்றுமையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றனர்.   

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட (1948) காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களத் தேர்தல் தொகுதி கூட இருக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னரான பத்து ஆண்டு காலப்பகுதியில், திருகோணமலையில் சேருவிலவும் அம்பாறையில் அம்பாறை தேர்தல் தொகுதியும் பெரும்பான்மையினத்தவரின் தேர்தல் தொகுதிகளாக முளைத்தன. இவை அங்கு இடம்பெற்ற, அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களின் அழியாத சா(கா)ட்சிகள்.  

இதன் பின்னர், 1960ஆம் ஆண்டுகளிலிருந்து அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெரும்பான்மையின உறுப்பினர் தெரிவானார். இந்நாள்களில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் என நிலைமை காணப்பட்டது.   

ஆனால், சடுதியாக அதிகரித்த சிங்களக் குடியேற்றங்கள், அருகிலுள்ள பிரதேச செயலகங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தமை போன்ற காரணங்களால், இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், சிங்கள மக்களது எண்ணிக்கை அண்ணளவாகச் சமன் செய்யப்பட்டு விட்டது.   

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் மூன்று சிங்களப் பிரதிநிதிகளும் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவாகும் நிலை வந்து விட்டது. ‘அழகிய பாறை’ அம்பாறை மறைந்து, தேர்தல் மாவட்டத்தின் பெயரே, திகாமடுல்ல என ஆகிவிட்டது. இவை யாவும் கறை படிந்த வரலாறுகள்.   

“யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுகின்றார். அவ்வாறாக இருப்பினும், அமைச்சுகள் ஊடாக, அனைத்து முஸ்லிம் மக்களும், அனைத்தும் பெற்று, இந்நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்களா?   

கடந்த ஆட்சியில், முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காத முறையில் சென்றன. அதுபோன்ற வன்முறைகள், இனிமேலும் வேண்டாம் என்றே, முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.  

நல்லாட்சிக் காலத்திலும் அம்பாறை, கண்டி எனப் பல இடங்களில், முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளைத் தரிசித்து விட்டது. ஒவ்வொரு முறையும் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறக் கூடாதென, அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அதிருமே அன்றி, வேறு எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை.   

நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வதியும் மாவட்டமாக அம்பாறை உள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவின் அம்பாறை மாவட்டத்திலேயே, மாயக்கல்லி மலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையைச் சுற்றி, சட்டபூர்வமாக பன்சல, மடாலயங்கள் அமைக்க, பேரினவாதம் முனைப்புடன் செயற்படுகின்றது. தமது இருப்பு அழிக்கப்படுவதை, சற்றும் ஜீரணிக்க முடியாமல் முஸ்லிம் சமூகம் உள்ளது.   

தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால், ஈழத்தைப் பெற முடியவில்லை எனக் கூறுபவர்கள், ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பதைத் தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர்.   

தமிழ் மக்கள் ஆயுத வலுவுடன் பேச்சு மேசைக்கு வந்தபோது, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி பற்றிப் பேச, சர்வதேச அனுசரணையுடன் முன் வந்தவர்கள், தற்போது சமஷ்டி என்ற கதைக்கே இடமில்லை எனக் கூறுகின்றார்கள்.  

ஆனால், புலிகள் தீர்வுக்குத் தடையான உள்ளனர் எனக் கூறி, இதே சர்வதேச அனுசரணையுடனேயே யுத்தத்தை முடித்தவர்கள், பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தல், இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என, இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.   

நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க “தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தர முடியாது” என்று கூறுவது, அதாவது தமிழ் மக்களது உரிமைகளைத் தர முடியாது என்று மறுப்பதானது, மறுவளத்தில், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய எம்மால் முடியும். அதாவது, சில சலுகைகளைத் தர முடியும் என்பதாகும். இதுவே, இலங்கை அரசியலின் இன்றைய நிலைவரம் ஆகும்.  

யார் எதைக் கூறினாலும், தமிழ் மக்களது, எந்த வழிமுறையினாலான (அஹிம்சை, ஆயுதம்) போராட்டமாயினும் அதற்குப் பின்னால், மிகப் பெரிய நியாயம், நீதி உள்ளன. இவற்றை, மனச்சாட்சியை அளவுகோலாகக் கொண்டு அளவிட வேண்டும். இலங்கையில், தமிழ் மக்களது போராட்டங்கள் தோற்றன என்பது, இலங்கையில் நீதி தோற்றது என்பதே தவிர, தமிழ் மக்கள் தோற்றதாக எக்காலத்திலும் கருத முடியாது.   

தமிழ் மக்களது, போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டாலும் இலட்சியங்கள் துடிப்போடும் உயிர்ப்போடும்தான் உள்ளன. தற்போதும் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டே, தமிழ்ச் சமூகம் உள்ளது. பேரினவாத அரசாங்கங்களை மனத்தாலும் கருத்தாலும் வாதத்தாலும் இன்னமும் எதிர்த்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் உள்ளது. ஆகவே, போராட்டம் இன்னும் ஓயவில்லை.  

பேரினவாத இனவாத அரசியலுக்குள் சிக்கித்தவிக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள், தமிழ் மக்களது ஆன்மாவின் ஆழத்தை என்று அறிவார்களோ அன்று போர் தானாக ஓயும்; அதுவரை நீளும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X