2021 மே 10, திங்கட்கிழமை

இருப்பை அழித்தது 9/11; இருப்பதையும் அழிக்குமா 11/13

Thipaan   / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

உலக வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸின் தலைநகர் பரிஸில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் உலகின் அனைத்துப் பாகங்களையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. தலைநகரின் வௌ;வெறு பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்ற இந்த திட்டமிட்ட தாக்குதல்களும் அப்பாவிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துப் படுகொலை செய்த பாணியும் பயங்கரவாதம் என்பது எவ்வளவு குரூரபண்புகளைக் கொண்டது என்பதை இன்னொருமுறை உலகுக்கு இடித்துரைத்துச் சென்றிருக்கிறது.

தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு ஒருபுறம் அஞ்சலி செலுத்திக்கொண்டு, மறுமுனையில் தாக்குதலுக்கு காரணமானவர்களாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பவர்களை வேட்டையாடுவதற்கு பிரான்ஸும் அதன் நேசநாடுகளும் புறப்பட்டுவிட்டன.

உலகின் ஓயாத கவலையாக கருத்தரித்துள்ள சிரிய பிரச்சினை இன்று ஐரோப்பாவை எவ்வளவு கொடூரமாக பிடித்து உலுப்பிக்கொண்டிருக்கின்றது என்பதற்கும் இஸ்லாமிய தனிநாட்டுக்காக போராடுவதாகக் கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலக நாடுகளின் கண்களில் எவ்வாறு விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது என்பதற்கும் ஐரோப்பாவில் வழிந்தோடும் இரத்தமும் அகதிகளுமே சாட்சியாக கண்முன் விரிந்துகிடக்கின்றன.

அரபுநாடுகளில் ஆட்சிமாற்றங்களைக் கொண்டுவருவதற்காகவும், இயலாவிடின் குறைந்தபட்சம் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவும் அந்த நாடுகளில் அரசுக்கு எதிரான ஆயுதக்குழுக்களை உருவாக்கிவிடும் பாரம்பரியங்களை ஆரம்பித்த வல்லரசு நாடுகள், தங்கள் தேவைமுடிவடைந்த பின்னர் அந்த ஆயுதக்குழுக்களை அப்படியே கைகழுவி விட்டதன் ஒட்டுமொத்த கர்மவினையைத்தான் இன்று சிரியாவில் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

கால தாமதமானாலும் பரவாயில்லை அவற்றை இப்போதாவது அழிக்கலாம் என்று கங்கணம் கட்டியிருக்கும் அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் தமது பாணி தாக்குதல்களுடன் போட்டியில் இறங்கியிருக்கின்றது.

சிரியாவின் மூலை முடுக்கெங்கும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, சிரியாவின் அயல்நாடுகளான லெபனான், ஜோர்தான், ஈராக், துருக்கி போன்றவற்றிலும் தமது எல்லை கடந்த இரத்தவெறியாட்டத்தை அரங்கேற்றிவந்தன.

இவற்றைவிட, உலகின் ஏனைய பாகங்களில் இடம்பெற்ற சிறியளவிலான தாக்குதல் சம்பவங்களையும் - ஏன் பயணிகள் விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களுக்கு கூட - உரிமை கோருமளவுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனது பயங்கரவாதக் கரங்களை ஆழ அகல விரித்து வன்முறைகளின் செறிவை சர்வதேச ரீதியில் விளம்பரம் செய்திருந்தது.

ஆனால், தற்போது பிரான்ஸின் தலைநகர் பரிஸில் ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொண்ட தாக்குதல்தான் வல்லரசுகளின் பிடரியைப் பிடித்து உலுப்பியதுபோல எல்லோரையும் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.

ஆம்... அமெரிக்காவின்  இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷினால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய பங்கரவாதத்துக்கு எதிரான போரில் முழு மூச்சுடன் ஈடுபட்டுவந்த முக்கிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்

ஸின் தலைநகரில் ஒரு பயங்கர அமைப்பு சர்வசாதாரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை ஒரே நாளில் நடத்தி, 130 பேருக்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்திருக்கின்றது என்றால் இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பதை ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

பரிஸ் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியை இதுவரை சுருக்கமாக அலசிய இந்தப் பத்தி, இனிமேல்தான் இந்தத் தாக்குதல்கள் உலக அளவில் என்ன விதமான அதிர்வுகளை ஏற்படுத்தப்போகின்றன என்பதை ஆராயவிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை மூர்க்கமாக நடத்திவருகின்ற பிரான்ஸ் என்ற வல்லரசு, அமெரிக்காவுக்கு அடுத்தடுத்தாக உலக அளவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குச் செலுத்திவருகின்ற தேசங்களில் ஒன்றாகும்.

பிரான்ஸ் தேசம் மேற்குலகின் இறுக்கமான பொருளாதரத்தைக் கொண்ட நாடாக விளங்குவது மட்டுமல்லாமல், அணுசக்தி உட்பட இராணுவ - விமான படைகளில் பலம்பொருந்திய நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளங்கையில் வைத்து ஆட்சிசெய்யும் பிரான்ஸின் இன்னொரு தனிச்சிறப்புத்தான் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவநாடு எனப்படுவது.

இவ்வாறான ஒரு பெருந்தேசத்தின் இதயப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைவைத்திருப்பது என்பது, கடந்த 13ஆம் திகதியுடன் உலக ஒழுங்கின் மாற்றம் என்பது மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, பயங்கரவாதம் மட்டுமல்லாமல் அதற்கு குறைவான மிதவாதம் மீதான தீர்மானங்கள்கூட இனிவரும் காலங்களில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணங்களை முன்வைத்திருக்கிறது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற மகுடவாக்கியத்தின் கீழ் அல் கொய்தாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதியுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் அதன் உதிரிகளுக்கும் எதிரான போராக முழு வீச்சடையப்போவது உறுதியாகியுள்ளது.

முன்னர் நடைபெற்ற போரின் கீழ் உலகளாவிய ரீதியில் விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் பல ஒரேயடியாக தடைசெய்யப்பட்டதும் காலப்போக்கில் அவை அழித்தொழிக்கப்பட்டதும் தமிழர்களை பொறுத்தவரையில் அதிகம் விளக்கமளித்து விளங்கவேண்டிய விடயமல்ல.

புஷ்ஷினது போர்முகத்தின் கோரத்தை ஆழமாக அறிந்துகொண்ட விடுதலைப் புலிகள், 2002இல் சமாதான உடன்படிக்கைக்கு ஊடாக சர்வதேச அரசியல் நெளிவு சுளிவுகளுக்குள்ளால் பயணப்பட தலைப்பட்டபோதும், இலங்கை அரசின் திட்டமிட்ட போர் சீண்டலினாலும் கூட்டணி அமைத்த நாடுகளின் உதவியினாலும் விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாகவே அழிப்பதில் வெற்றிகாண்பதற்கு உதவியளித்தன. ஆனால், வல்லரசுகளின் சர்வதேச போர்ப்பறை வழங்கிய ஆசீர்வாதம்தான் அந்தப்போர் எவ்வளவு கொடூரமாக நடந்திருந்தாலும் அது நடைபெற்ற போக்கின் தவறுகளை இன்றுவரை - விசாரணைக்கு அப்பாற்பட்ட புனித யுத்தமாக பேணிப்பாதுகாக்க உதவியவண்ணமுள்ளன.

ஆனால், தற்போது பிரான்ஸை சீண்டியதால் ஆரம்பமாகவுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான முழுவீச்சான போர் என்பது பெருமுனைப்புடன் நடைபெறப்போவதும் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கப்போவதும்தான் ஆபத்தான அசரீரிகளாக உணரப்படவேண்டியுள்ளது.

ஏனெனில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாத நடைமுறைகள் புதிய வழிகளில் உலகளாவிய ரீதியில் வழிந்தோடிக்கொண்டிருப்பது, சிறிய சிறிய தாக்குதல்களின் மூலம் சாட்சியாகியிருப்பதும் அந்த அமைப்புக்கான விசாலமான ஆதரவெனப்படுவதும் குறிப்பிடப்படவேண்டியவை.

சுமார் இரண்டு லட்சம் புனிதப்போர் வீரர்களை கொண்டிருப்பதாக அறிவித்துள்ள இந்த அமைப்பில் சுமார் 80 நாடுகளிலிருந்து சென்று இணைந்துகொண்ட 15 ஆயிரம் வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருப்பதிலிருந்து இந்த அமைப்பின் ஆதரவுத்தளம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பது ஊகிக்க கூடியதே ஆகும். 

இந்த அமைப்பின் தலைமையும் குறிப்பிட்டு கூறக்கூடியளவு ஓரிருவரிலோ ஓர் இடத்திலோ தங்கியிராமல் பரந்துபட்டிருப்பதால், யாரை அழித்து இந்த பயங்கரவாதத்துக்கு முடிவு காண்பது என்பதும் முடிவில்லா சவாலாகவே கருதப்படுகிறது.

இந்த மாதிரியான பின்னணியில், நவம்பர் 13 ஆம் திகதிக்கு பின்னர் உலக நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினை அடியோடு களையெடுப்பதற்கு கைக்கொள்ளப்போகும் அரசியல் - இராஜதந்திர- பாதுகாப்பு கொள்கைகளானது- நீதியான மிதவாத போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களையும்கூட மிதித்துவிடக்கூடியவையாக இருக்கும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், உரிமைகளை கோரும் மக்கள் கூட்டத்தின் தார்மீக கோரிக்கைகள் மற்றும் அவர்களின் இருப்புக்கள் ஆகியவையும் ஆதிக்க அரசுகளால் நசுக்கிவிடப்படக்கூடியவை. உரிமைகளை கோரிய மக்கள் கூட்டத்துக்கான நீதியை இவ்வளவு காலமும் இழுத்தடித்துவந்த அடக்குமுறை அரசுகள் தங்களது இவ்வளவுகால சம்பிரதாயங்களுக்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டு ஒரேயடியாக நிராகரிப்பினை வழங்கிவிடுவதற்கு இந்த புதிய உலக ஒழுங்கு வழிசமைக்கலாம்.

அதேவேளையில், உரிமையை கோரும் மக்கள் கூட்டங்கள் சரியான சக்திகளின் பக்கம் தமது போராட்ட தளங்களை நகர்த்திக்கொண்டால், நவம்பர் 13ஆம் திகதிக்கு பின்னரான உலக ஒழுங்கு ஒரேயடியாக சாதகங்களைத் தாரைவார்த்து கொடுப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்பதை மறுத்துவிடமுடியாது.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இன்று இதுவே பாரிய சோதனைக்களமாக மாறப்போகிறது. இதில் தமிழர் தரப்பினர் கடைப்பிடிக்கவுள்ள கொள்கையும், போக்கும், ஆதரவு சக்திகளும்தான் அதன் இருப்பை தீர்மானிக்கப்போகின்றன. தமிழர் தரப்பின் ஆதரவுத்தளம் என்பது பொருளாதர பின்னணியோ இராணுவ பின்னணியோ கொண்டதல்ல. உரிமைக்காக இன்னமும் வேட்கையுடன் பயணிக்கும் தாயக தமிழர்களுக்கு அவர்களின் ஒற்றுமையும் உணர்வுள்ள புலம்பெயர் மக்களும்தான் இப்போதைக்கு பலமான சக்திகளாக உள்ளன.

இந்த பலங்களுடன் சரியான ஆதரவுத்தளங்களை தெரிவு செய்துகொண்டால் பிறக்கப்போகின்ற புதிய உலக ஒழுங்கை வெற்றி கொள்வது நிச்சயமே.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர் ஒருவர் அண்மையில் பேசும்போது கூறுகையில்,

'நாங்கள் ஒரு காலத்தில் திருமலை கடல் முதல் அந்தாட்டிக்கா தாண்டி உலகின் சகல சமுத்திரங்களிலும் தங்கு தடையின்றி நீந்தி வந்தோம். அப்போது நாங்கள் சின்ன மீன்கள். வலைகள் எமக்கு தடையாக இருந்ததில்லை. ஆனால், நாங்கள் வளர்ந்தவிட்டபோது முன்னர் நுழைந்து ஓடிய வலை ஓட்டைகள் எல்லாம் நுழைய இடம்தரவில்லை. அதனால், நாங்கள் அகப்பட தொடங்கிவிட்டோம்.

நாங்கள் தப்பித்துக்கொள்வதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன என்பதைப் பிறகுதான் அறிந்துகொண்டோம்.

ஒன்றில், வளர்ந்திருக்கவே கூடாது. இல்லை, அந்த வலைகளையும் அறுத்தெறியக் கூடிய - எம்மைவிடப் பெரிய - மீன்களுக்கு அருகில் நின்றிருக்கவேண்டும். அந்த மீன்கள் தடைகளை உடைக்கும்போது, நாங்களும் அந்த வழியால் சென்றிருக்கலாம்'.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X