2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

எல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி...

எம். காசிநாதன்   / 2019 நவம்பர் 11 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லாச் சாலைகளும் உரோமை நோக்கியே... என்ற பழமொழி போல், தமிழகத்தில் உள்ள பல முக்கிய எதிர்க்கட்சிகளின் ‘எல்லா விமர்சனமும் ‘ஸ்டாலினை நோக்கியே’ என்ற நிலை, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.   

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும், தி.மு.க தலைவர் ஸ்டாலினை விமர்சிப்பதில், குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ‘ஸ்டாலினை விமர்சிப்பது’ தங்களுக்கு ஒரு ‘ஹீரோயிசம்’ என்ற நிலை ஓங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.  

விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத் தேர்தல் வெற்றி, தி.மு.க 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெற்ற வெற்றியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.   

ஸ்டாலின் மீதான விமர்சனம், தனிப்பட்ட தாக்குதல் என்பதை விட, அதையும் தாண்டித் திராவிட இயக்கத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. விமர்சிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி அஜெண்டா இருக்கிறது.   

‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பெற்ற தோல்விக்கு ஆறுதல் ஆகும். ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வைத்துள்ள வன்னியர் சமுதாய வாக்குகளை, அந்த இரு தலைவர்களும் மறைந்த பிறகும் பிரித்து, நம் பக்கம் கொண்டு வர முடியவில்லையே என்ற கோபம் ராமதாஸுக்கு இருக்கிறது. அவரது விமர்சனம் இதை எதிரொலிக்கிறது.  

‘தி.மு.க வின் முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் உள்ளது’ என்பது அவரது குற்றச்சாட்டு. ‘அப்படியில்லை; ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்; நான் அரசியலை விட்டு விலகுகிறேன்’ என்று ஸ்டாலின் சொன்னாலும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் டொக்டர் ராமதாஸ்.   
இதில் அவரது யுக்தி என்னவென்றால், தி.மு.க கூட்டணியில் இருக்கும் திருமாவளவனை, அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கு ‘தி.மு.கவிடம் பஞ்சமி நிலம்’ என்றால், அந்த வலையில் திருமாவளவன் சிக்கி, தி.மு.கவின் கோபத்துக்கு உள்ளாவார் எனக் கணித்தார் ராமதாஸ். அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.   

தி.மு.க கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ‘பஞ்சமி நிலம்’ குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியது என்றால், அது திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். டொக்டர் ராமதாஸுக்கு எதிரும் புதிருமாக அரசியல் பண்ணும் திருமாவளவன், இந்த விவகாரத்தில் அவருடன் சேர்ந்து இருப்பது போல், ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ராமதாஸ் சொன்ன பஞ்சமி நிலம் குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்’ என்றார் திருமாவளவன்.  

திருமாவளவன், ‘பஞ்சமி நில விவகாரத்தில், ராமதாஸுக்கு ஆதரவாகப் போகிறார் என்பதை அறிந்த தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் நேரு, “ஸ்டாலினை விமர்சிக்கிறார்கள்; ஆனால் அதுபற்றி, எங்கள் கூட்டணி கட்சியினர் வாய் திறப்பதில்லையே ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.   

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, “ராமதாஸ் தி.மு.கவின் மீது அவதூறு பரப்பி வருகிறார்” என்று கண்டனம் செய்தார். அதன் பிறகு “பொய்யை உண்மை போல் பேசுவதே, டொக்டர் ராமதாஸின் வாடிக்கை” என்ற ரீதியில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார். வைகோ ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து விட்டார். இதுவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மட்டும் அமைதி காக்கிறார். இந்த வெற்றி மட்டுமல்ல, டொக்டர் ராமதாஸ் ‘திராவிட இயக்கமும்’ பலவீனப்பட வேண்டும் என்று காய் நகர்த்துகிறார். விமர்சனங்களின் வேரில் இந்த வியூகமும் இருக்கிறது.  

 அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், ‘மீண்டும் சசிகலா தலைமை ஏற்பாரா’ என்ற கேள்வி சில வாரங்களாகவே வலம் வந்தாலும், அக்கட்சிக்குள் குழப்பங்கள் நிகழ்ந்தாலும், அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன.   

அ.தி.மு.க மீது தி.மு.க குற்றம் சாட்டினால், முதலில் டொக்டர் ராமதாஸ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அ.தி.மு.க ஆதரவுக் கருத்துகளை தெரிவிக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், அதேபோல் அ.தி.மு.க ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இந்த இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.   
அ.தி.மு.கவுடன் நட்பாக இருந்தால், பா.ஜ.க நம்முடன் நட்பாக இருக்கும் என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் கிடைத்துள்ளது. இதில், ஸ்டாலினை விமர்சிப்பதில் அ.தி.மு.க, பா.ம.க, சரத்குமார் போன்றவர்கள் முன்னிலையில் நிற்கிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக ஸ்டாலினைக் கடுமையாக விமர்சிக்க பா.ஜ.க தயாராகியுள்ளது.   

அதன் தொடக்கம்தான், திருவள்ளுவருக்கு காவி வேஷ்டி கட்டியும் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்றும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் தொடங்கின.   

ஆனால், திருவள்ளுவர் அனைவருக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்பதைத் தமிழகம் உணர்ந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. பா.ஜ.க செய்யும் இந்த அரசியல் ‘பரபரப்பை’ உருவாக்கலாம். ஆனால் பலன் தருமா?  

 அதேபோல் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மிசா கைதிகள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரித்த இஸ்மாயில் ஆணைக்குழுவின் அறிக்கையில், ‘ மிசா கைதிகள் அடைக்கப்பட்டிருந்த 9 ஆம் புளொக்கில், ஸ்டாலினும் அடைக்கப்பட்டிருந்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

அந்த ஆணைக்குழு முன்பே, சிறையில் நடந்த சித்திரவதைகளுக்கு ‘அரசு தரப்பு சாட்சியாக’ ஸ்டாலின் சாட்சியமளித்துள்ளதையும் படிக்க முடிகிறது. ஏன் அந்தச் சிறைச்சாலையின் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர், உயர் அதிகாரிகள் ஆணைக்குழு முன்பு கொடுத்த வாக்குமூலங்களில் எல்லாம், ‘ஸ்டாலின் மிசா கைதியாகவே இருந்தார்’ என்பதற்கான ஆதாரங்கள் அறிக்கை முழுவதும் அணி வகுத்து நிற்கின்றன. ஆகவே பா.ஜ.க எடுத்த இரண்டு அஸ்திரங்களும் பயனளிக்குமா?   

இந்நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை வைப்பதன் பின்னனி என்ன?  

தமிழகத்தில், திராவிட இயக்கத்தின் வரலாறு நூற்றாண்டைக் கடந்த சென்று கொண்டிருக்கிறது. 1967க்கும் பிறகு தேசிய கட்சிகளான பா.ஜ.கவோ, காங்கிரஸோ தமிழகத்தில் தனியாக ஆட்சியையும் பிடிக்க முடியவில்லை; தனித்து வெற்றியும் பெற முடியவில்லை.  

 ‘திராவிட இயக்கக் கொள்கைகள்’ வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில், பா.ஜ.கவுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில், பா.ஜ.க காலூன்ற, திராவிட இயக்கத்தின் பலமான கட்சியாக 70 ஆண்டுகளாக விளங்கி வரும், தி.மு.கவுக்கான செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று கருதுகிறது பா.ஜ.க.   

கருணாநிதி இல்லாத இந்த நேரத்தில், ஸ்டாலினை விமர்சித்து, அந்தக் கணக்கை நேர் செய்ய விரும்புகிறது. ஸ்டாலின் தலைமைக்கு,ஓர் எதிர்பார்ப்பு, தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. அவரிடம் ஒருமுறை, ஆட்சியை கொடுத்துப் பார்ப்போமே என்ற எண்ணமும் இருக்கிறது. அதனால் அந்த எண்ணத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், பாண்டியராஜன் போன்ற அ.தி.மு.க அமைச்சர் கூட, ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார்.   

பாட்டாளி மக்கள் கட்சிக்கோ அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் இருக்கிறது. அதற்குப் போட்டியாக இருப்பது ஸ்டாலின்தான் என்று அவர் மீது விமர்சனத்தைப் பொழிகிறது.   

அதனால்தான், தமிழக அரசியலில் இதுவரை, ‘அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையே நடைபெற்ற வந்த விமர்சனங்கள், இப்போது எல்லை தாண்டுகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் போட்டியை மாற்றி, பா.ஜ.க, பா.ம.க போன்ற கட்சிகளுக்கும் உரிய போட்டிக் களமாகத் தமிழகத்தை மாற்றிவிட வேண்டும் என்ற முயற்சி நடக்கிறது. அதன் இன்னோர் அவதாரம்தான், ரஜினி அரசியலுக்கு வருவேன் என்பதும், ‘எனக்கே காவி பூச நினைக்கிறார்கள். அதில் நான் சிக்கமாட்டேன்’ என்பதும் ஆகும்.   

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டை, ‘திராவிட இயக்க அரசியலுக்குள்’ தொடர்ந்து 15 வருடங்கள் வைத்திருந்தார்கள். அதன் பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டை இதே அரசியல் வட்டத்திற்குள் 29 வருடங்கள் வைத்திருந்தார்கள்.

இந்த வட்டத்துக்குள் புகுந்து மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதாக் கட்சியோ அரசியல் செய்ய முடியவில்லை. இப்போது அந்தத் தலைவர்கள் இல்லை. அதனால் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டைத் திராவிட அரசியல் என்ற வட்டத்துக்குள் வெளியே கொண்டு வந்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   

அதில் வெற்றி பெறவே, ‘ஸ்டாலின் மீது’ இவ்வளவு கடுமையான, தனி நபர் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய், ராஜீவ் காந்தி ஆகியோர் உச்சக்கட்டச் செல்வாக்கில் இருந்த நேரத்தில் கூட, தமிழ்நாட்டைத் ‘திராவிட அரசியலுக்கு’ வெளியில் கொண்டு வர இயலவில்லை. இப்போது பா.ஜ.கவும் பா.ம.கவும் அதை செய்து விட முடியுமா?     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .