2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கோட்டா என்றால் ‘பயம்’

என்.கே. அஷோக்பரன்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகார அரசியலின் முக்கிய தத்துவ அறிஞர்களுள் ஒருவரும் அதிகாரத்தைத் தக்கவைக்க விளையும் அரசியல் விளையாட்டுச் சூத்திரத்தை தனது எழுத்துகளில் முன்னிலைப்படுத்தியவரும், அதிகார அரசியல் விளையாட்டின் வேதம் என்று பிரபல்யமாக நம்பப்படும் “இளவரசன்” (த ப்ரின்ஸ்) என்ற நூலை எழுதியவருமான நிக்கலோ மக்கியாவலி, தனது டிஸ்கோர்சி III 21இல், “மனிதர்கள் முக்கியமாக அன்பு அல்லது பயத்தால் இயக்கப்படுவதால், இந்த இரண்டில் எந்தவோர் உணர்ச்சியைத் தூண்டும் திறனும், கட்டளையிடும் சக்தியை வழங்குகிறது” என்கிறார். 

ஆனால் ஓர் “இளவரசன்”, தான் ஆட்சி செய்வதற்கு, அன்பு, அச்சம் ஆகிய இரண்டில் எதைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தனது II பிரின்சிப்பியின் 17ஆம் அத்தியாயத்தினூடாக, மாக்கியாவலி பதிலளிக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார். “அன்பு, அச்சம் ஆகிய இரண்டும் இருப்பது சாலச்சிறந்தது. ஆனால், இரண்டையும் கலப்பதில் உள்ள சிரமம் காரணமாக, “இளவரசன்” ஒருவன் மீது (அவனது மக்களுக்கு) பயம் இருக்கும் போது, அந்த இளவரசன் பாதுகாப்பாக இருக்கிறான் (அதாவது அவன் அதிகாரம் பாதுகாப்பாக இருக்கிறது). இதற்குக் காரணம், ஒரு புதிய “இளவரசன்” தன்னுடைய மக்களிடமிருந்து மோசமானதைத் தான் எதிர்பார்க்க வேண்டும். அவன் புதிதாக வெற்றிகொண்டு தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்திருக்கும் மக்களை நம்பும் நிலையில் அவன் இல்லை.” 

இது பற்றி மேலும் விவரிக்கும் மாக்கியாவலி, “அன்பு என்பது கடமைப்பாட்டு உணர்ச்சியினால் கட்டமைந்தது. ஆகவே, கட்டாயப்பாடு ஏற்படும் போது, அது உடையக்கூடும். அச்சம் என்பது வலி பற்றிய பயத்தின் அடிப்படையிலானது, அது, நீடித்து நிலைக்கக்கூடியது” என்று குறிப்பிடுகிறார்.

மனிதர்களை ஆட்டிப்படைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும், அச்சம் என்பது உண்மையில் ஒரு பலமான ஆயுதம்தான். மிக முக்கிய அரசறிவியல் மற்றும் தத்துவ அறிஞரான ஜோன் லொக், “பயம் என்பது மனத்தின் ஒரு வகை சங்கடநிலையாகும். மனித நடவடிக்கைகளுக்கு முக்கிய அல்லது ஒரே ஊக்கக்காரணியாக அமைவது, சங்கடநிலைதான் என்று குறிப்பிடுவதுடன், மிகப்பெரும் இன்பங்களின் கவர்ச்சியைவிட, அச்சம் போன்ற கொஞ்சம் எரியும் உணர்வானது, எம்மை மிகப் பலமாகத் தள்ளுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

2019 நவம்பர் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்தநாளன்று, அவரது தம்பி கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக, 52.25% வாக்குகளுடன் வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்டார். கோட்டாபயவின் வெற்றி பலருக்கு “அச்சத்தை” ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக, இந்த நாட்டின் சிறுபான்மையினரிடையே கோட்டா பற்றிய பயம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. கோட்டா, அவரது தமையனாரான மஹிந்தவைப் போன்று தொழில்முறை அரசியல்வாதி அல்ல. அடிப்படையில், கோட்டா ஓர் இராணுவ அதிகாரி. ஆகவே, இயல்பிலேயே அரசியல்வாதிக்குள்ள மக்கள் தொடர்பாற்றல், கோட்டாவில் இல்லை. அவர், ஒரு கடுமையான அதிகாரியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். ஒருவகையில், இந்தத் தேர்தல் வெற்றிக்கும் அது தேவைப்பட்டது எனலாம். 

2015 ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட மாற்றம் என்பது, இந்த நாட்டு மக்கள், குறிப்பாக பெரும்பான்மையின மக்கள், அன்றைய ராஜபக்‌ஷ ஆட்சியில் நிலவிய குடும்ப ஆட்சி, ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பவை தொடர்பில் எற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக கொண்டுவந்த மாற்றமாகும். 2015 ஜனவரி மாற்றத்தின் பின்னர், மக்கள் வாழ்வில் ஒருவித இலேசுத்தன்மை, அச்சமற்ற இயல்புநிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக சிறுபான்மையோரிடத்தில். 

அவ்வப்போது பேரினவாதச் சக்திகள் சில சலசலப்புக்களையும் தாக்குதல்களையும் நடத்தினாலும், அரச இயந்திரத்தின் ஆதரவு, அவற்றுக்கு  இருக்கவில்லை என்பதால், அத்தகைய சவால்மிகுந்த சூழ்நிலையின் போதுகூட சிறுபான்மையினரின் அச்சவுணர்வு என்பது தற்காலிகமானதாகவே இருந்தது. 

ஆனால், கோட்டாவின் வெற்றி, மக்களிடையே குறிப்பாக “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாத மக்களிடையே, கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில், கோட்டாவின் வெற்றிக்கு பெரும்பான்மை மக்களிடையே கடந்த ஏறத்தாழ 5 வருடங்களில் மெதுவாகப் பரவியிருந்த அச்சம்தான் காரணம் என்பதும் இங்கு மறுப்பதற்கில்லை. 

ஏறத்தாழ 5 வருடகால “நல்லாட்சி”இல் இடம்பெற்ற ஊழல்கள், பொருளாதாரப் பின்னடைவு, உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் தேக்கநிலை, உள்நாட்டுப் பாதுகாப்பின் பின்னடைவு என்பன, பெரும்பான்மை மக்களை தமது எதிர்காலம் தொடர்பான அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. அதிலும் மிகக்குறிப்பாக, 2019 ஏப்ரலில் இடம்பெற்ற “உயிர்த்த ஞாயிறு” தாக்குதல்கள், அச்சத்தின் கீழ் வாழும் நிலையை மீள ஞாபகப்படுத்தியிருந்தன. அதுவேதான் கோட்டாவின் வெற்றிக்கான மூல காரணம். 

2018 டிசெம்பர் அரசமைப்பு நெருக்கடி நிலையில், சட்டமுரணாக மஹிந்த தரப்பு, மைத்திரபால சிறிசேனவின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தபோது, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருக்கவில்லை. மாறாக அவர்கள், ராஜபக்‌ஷவின் அதிகார மோகமாகவே அதனைப் பார்த்தார்கள். ஆனால், “நல்லாட்சி” அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினாலும், அரச இயந்திரத்தின் குறைபாட்டினாலும் ஏற்பட்ட “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்”, இந்நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே, குறிப்பாக “சிங்கள-பௌத்த” மக்களிடையே பலத்த அச்சத்தையும் சிறுபான்மையினர் தொடர்பான நம்பிக்கையீனத்தையும் வலுவடையச் செய்திருந்தன. 

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், தமது நலன்களைப் பாதுகாக்க, தமக்கு வலுவான “ஓர் இரட்சகன்” தேவை, அவன் சர்வாதிகாரியாக இருந்தால்கூட பரவாயில்லை. சுதந்திரமா, உயிரா என்று பார்த்தால், உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுதலே முக்கியம் என்ற ஆற்றொணா நிலை, “சிங்கள-பௌத்த” மக்களுக்கு ஏற்பட்டதுதான், கோட்டாவின் வெற்றியாக இன்று வௌிவந்திருக்கிறது. 

ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டா, தன்னுடைய முதலாவது உரையில், “இந்தத் தேர்தலின் பிரதான செய்தியானது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளே நான் ஜனாதிபதியாக வெற்றிபெறக் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார். இது பற்றிய விமர்சனங்கள் பல எழுந்தன. ஆனால், தரவு அடிப்படையில் இதுவே உண்மை. கோட்டாவுக்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. 

ஆனால், இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்கு, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளே காரணம். அந்த உரையில் அவர் மேலும், “சிங்கள பெரும்பான்மையினரின் வாக்குகளால் மட்டுமே நான் வெல்ல முடியும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால், எனது வெற்றியில் பங்குதாரராக இருக்குமாறு தமிழர்களையும் முஸ்லிம்களையும் கேட்டேன். அவர்களின் பதில் நான் எதிர்பார்த்தளவுக்கு இருக்கவில்லை. இருப்பினும், ஓர் இலங்கையை உருவாக்க என்னுடன் இணையுமாறு, அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆகவே, பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே தமது பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டிருந்த அச்சம்தான் “கோட்டா” என்ற “பலமான” ஆட்சியாளனை, தம்மைப் பாதுகாக்கும் “இரட்சகனாக” வாக்களித்து அதிகாரப்படியிலேற்ற வழிவகுத்தது. 

ஆனால் இன்று, கோட்டாவின் பதவியேற்பு, சிறுபான்மையினரிடையே மட்டுமல்லாது, தாராளவாத சிங்கள மக்களிடமும் தமது சுதந்திரம், உரிமைகள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையல்ல. 2015இன் பின்னர், சமூக ஊடகவௌியில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்த முகங்காட்டாத ஊடகவியலாளர்கள் சிலரே, தமது கணக்குகளை மூடிவிட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். வௌிநாட்டுக்குக் குடிபெயர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம், சிறுபான்மையின இளைஞர்களின் சிந்தனையில் வலுவாக மீளக்குடியேறத் தொடங்கியுள்ளது என்றாலும் அது மிகையல்ல. 

ஆனால், கோட்டா பற்றிய இந்த அச்சம், இந்த வரையறைக்குட்பட்டதல்ல. அரசியல்வாதிகளிடம்கூட கோட்டா பற்றிய அச்சம் இருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக, அவருடைய கட்சியின் அரசியல் தலைவர்களிடம்கூட! 

கோட்டாவின் ஆரம்பகட்ட நியமனங்களைப் பார்க்கும் போது, அவர் தன்னுடைய கட்சியின் தொழில்முறை அரசியல்வாதிகள் மீதும் காலங்காலமாக அரசியல்வாதிகளுக்கு துதிபாடிய அதிகாரிகள் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே ஓரளவு புலப்படுகிறது. 

தற்காலிகமாகப் பதவியேற்றிருக்கும் இந்த அமைச்சரவை நியமனங்கள்கூட, அந்தப் பதவிகளை ஏற்றிருப்பவர்களுக்கே திருப்திகரமானதாக இருக்காது என்பது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்தே தௌிவாகிறது. 

மேலும், நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, நகர சுத்திகரிப்பு ஆகிய விடயங்களில், அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் கோட்டா கடுமையான அணுகுமுறையையே கையாள்வார் என்பது, கடந்தகால அனுபவத்தின் மூலம் தௌிவாகிறது. ஆகவே, கோட்டா பற்றிய அச்சம் வெவ்வேறு அடிப்படைகளில், வேறுபட்ட வகையில் அனைவரிடமும் இருக்கவே செய்கிறது என்றால் அது மிகையல்ல. 

அப்பாவியான மனம், “பயம் நல்லதுக்கே” என்று சொல்லலாம். அடிபோட்டு படிப்பிக்கும் ஆசிரியர்தான் நல்ல ஆசிரியர் என்று பல தலைமுறைகளாக நம்பிய மக்கள் கூட்டம் நாம். ஆனால், அடித்தல் என்பது மிகப் பெரும் துஷ்பிரயோகம் என்பதுதான் உண்மை. அடிபோடும் ஆசிரியர்கள், கீழ்ப்படியும் மந்தைக் கூட்டத்தை உருவாக்கியிருக்கலாமேயன்றி, திறமைமிக்க, உயிர்ப்பான, துடிப்பான, ஆக்கத்திறன்மிகுந்த ஆரோக்கியமான சமூகத்தை ஒருபோதும் “அடியின்” மூலமும் “அச்சத்தின்” மூலமும் உருவாக்கியிருக்க  முடியாது. 

இந்த அடிபோடும் “அச்சம் மிகுந்த” ஆசிரியர்கள், இறுதியில் தம் இலக்கில் தோல்வியே அடைகிறார்கள். ஏனென்றால், அச்சம் என்பது மிகப்பலமானதோர் உணர்வு என்றாலும், அது நிரந்தரமானதோர் உணர்வல்ல. ஒன்று, அடிக்கு பழக்கப்படும் மாணவனுக்கு அடி பற்றிய அச்சம் அகன்று விடுகிறது. இரண்டு, அடியிலிருந்து தப்பிக்க மாணவன் மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்கிறான். இந்த இரண்டும், அடி பற்றிய அச்சத்தை இல்லாது செய்துவிடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், “அச்சத்தை” மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஆசிரியர் தோற்றுவிடுகிறார். 

அதனால்தான், புதிதாக ஆட்சியேறும் “இளவரசன்” ஒருவன், தான் தனது ஆட்சியில் வேறூன்ற “அச்சம்” பலமான ஆயுதம் என்று சொல்லும் மாக்கியாவலிகூட, அன்பின் மூலமே அது தக்கவைத்துக் கொள்ளப்பட முடியும் என்று உணர்த்துவதாக தன்னுடைய மாக்கியாவலியின் நிலைப்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றில் ஜக் டி’அமிகோ குறிப்பிடுகிறார்.

மேலும், சிறுபான்மையினரின் அச்சம் என்பது, கோட்டா என்ற தனிமனிதன் மீதானது என்பது தவறான புரிதலாகவே அமைகிறது. சிறுபான்மையினரின் அச்சம் என்பது, பேரினவாதத்தின் மீதானது. ஒரு சமூகம், தனிமனிதனைக் கண்டு அஞ்சுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. 
ஒரு தனிமனிதனின் மனித வலு என்பது, அவன் சர்வாதிகாரியாக இருப்பினும் கூட மட்டுப்படுத்தப்பட்டது. ஆகவே, இங்கு சிறுபான்மையினர் அஞ்சும் பேரினவாதத்தின் பிரதிநிதியாக கோட்டா இருக்கிறாரோ என்பதே, சிறுபான்மையினர் கோட்டா மீது கொண்டிருக்கும் அச்சமாகும்.

கோட்டாவின் முன், இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று, பல்வேறு தரப்பும் அவர் மீது கொண்டிருக்கும் அச்சத்தைக் களைந்து, புதிய நம்பிக்கையை விதைத்து, அன்பை அறுவடை செய்வது. அப்படிச் செய்தால், அடுத்த தேர்தலில், கோட்டா அவர் சொன்னது போல சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றிபெறத் தேவையில்லை. 

இரண்டு, அனைவரும் அச்சம் கொள்ளும் வல்லாட்சியாளனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வது. அப்படிச் செய்தால், உலகின் எல்லா வல்லாட்சியாளர்களும் சர்வாதிகாரிகளும் அடைந்த நிலையை, கோட்டாவும் அடையலாம். இதில், எந்தப் பாதை என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

பயம் நீடித்து நிலைக்கக்கூடியது. ஆனால், நிரந்தரமானது அல்ல. ஒருமுறை பயத்தைக் கடந்துவிட்டால், பயம் மறைந்துவிடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .