2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

காலம் கடந்த ஞானம்

காரை துர்க்கா   / 2017 மே 30 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலோ அல்லது திருத்தம் கொண்டு வந்தாலோ, அதில் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வும் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு விடயத்தில், அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியும் நாட்டை இரு முறை ஆண்ட முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க, அண்மையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.   

அத்துடன், “சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கப் பலர் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எவரும் இல்லை; எனது ஆட்சிக் காலத்திலும் தமிழர்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார். முழுவதும் உண்மையான ஒரு கருத்தை, தெளிவாகவும் யதார்த்தமாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

இலங்கையில் பெரும் அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பப் பின்னணியைக் கொண்ட சந்திரிகா, மேல் மாகாண சபை ஊடாக அரசியலுக்குள் நுழைந்தார். அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, 1993 ஆம் ஆண்டு, மேதினக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவுடன் ஐக்கிய தேசியக் கட்சி, வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.  

 அத்துடன், 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 17 வருடங்களாக ஆட்சி புரிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் சலிப்புற்று இருந்தனர்.  

இக்காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், அப்பாவித் தமிழ் மக்களுக்கு விரோதமான பல செயற்பாடுகள் அரங்கேறின. இதனால் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.  

 இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா வெற்றி பெற வழி சமைத்தன எனலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஏனைய சில சிறு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் ஆட்சியை அலங்கரிக்க ஆரம்பித்தார் சந்திரிகா.   

கடந்த ஜனவரி 2015 இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் போலவே, 1994 இல் சந்திரிகா தலைமையிலான ஆட்சி மாற்றமும் தமிழர்கள் மத்தியில் அதிக விருப்பை பெற்றது.  

சந்திரிகா அம்மையாரும் அன்றைய ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளில் “எனது தகப்பன் மற்றும் கணவனை வெடி குண்டுத் தாக்குதலில் பறிகொடுத்தவள் நான்” என்ற கருத்தாடல், கருத்தாழம் மிக்கதாகவும் அனுதாப அலையையும் நாடு தழுவிய ரீதியில் ஏற்படுத்தியிருந்தது.   

சுமார் 62 சதவீதமான வாக்குகளைப் பெற்று அரச தலைவியானார். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியும் ஆகினார். சமாதானப் புறாவாக வலம் வந்தார். அன்றாட பாவனைப் பொருட்களுக்கு ‘சந்திரகாபை’ (Bag) ‘சந்திரிகா சீப்பு’ என அம்மையாரின் நாமம் கூட சூட்டப்பட்டு, நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவ காலத்தில் விற்பனை செய்யப்பட்டமை நன்றாக நினைவில் உள்ளது.  

விடுதலைப்புலிகளுடன் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தையும் ஆரம்பமானது. ஆனால், ஆரம்பம் முதலே பேச்சுவார்த்தையானது யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் என்று பல சிக்கலின் மத்தியில் பயணிக்க ஆரம்பித்து. 

இறுதியில் 1995 ஏப்ரல் 19 ஆம் திகதி திருலையில் கடற்படையினரின் ‘ரணசுறு’, ‘சூரயா’ போன்ற கடற்போர்க்கலங்களை புலிகள் தகர்க்க, மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. இதனை மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் என்று அழைப்பர்.  

இதனையடுத்து, மீண்டும் பெரும் போர் வடக்கு,கிழக்கு எங்கும் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற 1995 ஜூலை மாதமளவில் ‘முன்னேறிப் பாய்தல்’ என்ற 
பெய​ரில் படை நடவடிக்கை தொடங்கியது. அதன் விளைவாக 1995 ஜூலை ஒன்பதாம் திகதி, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்த மக்கள், கஞ்சியைப் பெற வரிசையில் நின்ற வேளை, இலங்கை விமானப் படையினரின் ‘புக்காரா’ விமானங்கள் மூலம் குண்டுகள் கொட்டப்பட்டன. இரு நூறு பேர் வரையில் கொல்லப்பட, பலர் காயம் அடைந்தனர்.   

சமாதானப் புறா வேடம் களைந்து, போர் வேடம் தரித்தார் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சந்திரிகா அம்மையார். அடுத்து ஒக்டோபர் 1995, வரலாறு காணாத இடப்பெயர்வை கண்டது தமிழர் பூமி.   

நாட்டை ஆண்ட ஏனைய தலைவர்களுக்கு இல்லாத பாரிய பொறுப்பு சந்திரிகாவுக்கு உண்டு எனலாம். ஏனெனில், அவரது தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் தனிச் சிங்களச் சட்டம்; தாயாரால் அறிமுகப்படுத்தப்பட்டது கல்வியில் தரப்படுத்தல்.   

இவை இரண்டும் முறையே தமிழ் மொழி, தமிழர் கல்வி என்பவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. 1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவினால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மக்களை அஹிம்சைப் போருக்கு அழைத்துச் சென்றது. 

1972 இல் சிறிமாவோ அம்மையாரால் கொண்டு வரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல், தமிழ் இளைஞர்களை ஆயுதப் போருக்குள் செல்ல தூண்டியது எனலாம். இவையே ஈற்றில் 2009 மே 18 இல் பெரும் மனிதப் பேரவலம் நடை பெறக் காரணமாயிற்று.   

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2001 இல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த வேளையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அந்த மாற்றமும் ஆட்சியும் வந்தது.   

அடுத்து, 2002 ஆம் ஆண்டு, காலப்பகுதியில் நோர்வே அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு, சமாதான வழியில் அரசியல் தீர்வு முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. இத்தகைய சமாதான முயற்சிகளுக்கு, வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் ஜனாதிபதி என்ற தோரணையில் மேலும் வலுச்சேர்க்க வேண்டிய சந்திரிகா குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணியினருடன் (ஜே. வி. பி) கை கோர்த்து, அந்த ஆட்சியைக் கவிழ்த்திருந்தார்.   

இலங்கை வரலாற்றில் பெரும் கறை படிந்த இந்த இனப்பிணக்கை தீர்க்க வேண்டும் என்ற பெரு விருப்புடன், ஒருமித்துக் கட்சி வேறுபாட்டைக் கடந்து, பயணித்து இருக்க வேண்டிய சந்திரிகா குமாரதுங்க, தனது வரலாற்றுக் கடமையைத் தட்டிக் கழித்து விட்டிருந்தார்.   

சிலவேளைகளில், 2002 இல் அந்தச் சமாதான முயற்சிகள் வெற்றிக்கனியைப் பறித்திருந்தால் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான பெரும் அளவான உயிர்களைப் பறி கொண்டிருக்கக் கூடிய பெரும் மனித அவலத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதியான பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம்.   

சந்திரிகா குமாரதுங்க 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 வரையான பத்து வருட காலம் ஆட்சி புரிந்துள்ளார். அந்த ஒரு தசாப்த காலத்தில் குறிப்பிடும் படியாகத் தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான விடயத்தையும் ஆற்ற முடியவில்லையே என்று இப்போது ஆதங்கப்படுகின்றார். ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்றவாறாகக் கிடைத்த சகல பொன்னான சந்தர்ப்பங்களையும் பலவாறாகத் தட்டிக் கடத்தி விட்டு, பல வருடங்களின் பின் கவலை கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.  

தற்போதைய அரசை நாற்காலிக்கு அழைத்து வந்ததில் சந்திரிகா குமாரதுங்க அவர்களின் பங்கு அளப்பரியது. ஆகவே, அவர்களை ஊக்கப்படுத்தி, தனது பட்டறிவைப் பகர்ந்து, நல்லாட்சி அரசை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்த வேண்டிய பாரிய கடப்பாடும் அவருக்கு உண்டு.   

தவறின் நல்லாட்சி அரசின் தோல்வியிலும் அம்மையாருக்கு கணிசமான பங்கு கிடைத்து விடும். அது, ‘வரலாறு ஒரு வழிகாட்டி’ என்பதை கற்றுக் கொள்ளவில்லை என்றதாகிவிடும்.  

அத்துடன், கடந்த காலத்தில் கை தவறிய தமிழ் மக்கள் உரிமை தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளை மிகத் தெளிவான முறையில் சிங்கள மக்களின் மனதுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.   

ஏனெனில், சிங்கள மக்கள் மத்தியில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு சிறப்பான நற்சான்றுப் பத்திரம் உண்டு. மேலும், சிங்கள மக்கள் இனப்பிணக்கு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பின் ஆரோக்கியமான தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்காது.  

மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகளாகப் பத்து வருடங்கள் (2005-2015) ஆட்சி புரிந்தார். ஆயுதப் போர் மௌனித்ததுடன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பெரும் பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தார். 

அக்காலத்தில் அவர் மானசீகமாக விரும்பியிருந்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், அவரால் தீர்வைக் காணமுடியாமல் போய்விட்டமை நாட்டின் துர்ப்பாக்கியமே.  

மஹிந்த - மைத்திரி ஆகிய இருவருமே சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய சம அளவிலான ஆதரவு உடையவர்கள் எனலாம். ஏனெனில், தமிழ் பேசும் மக்களது வாக்கு பலமே மைத்திரியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. ஆகவே, நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் வளமான வாழ்வின் சுபீட்சத்தின் பொருட்டு இனப்பிரச்சினை விடயத்திலாவது மட்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும்.  

ஏனெனில், நீங்களும் ‘எங்களால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டதே; இனப்பிணக்குக்குத் தீர்வைக் காண முடியாமல் ஆகிவிட்டதே; மக்களை ஒன்று சேர்க்க முடியாமல் போய் விட்டதே’ என அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கவலை, கலக்கம் அடையக் கூடாது. அம்மையாரின் படிப்பினை பலருக்கான அறிவுரை.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .