Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 10 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
அமைதி ஆபத்தான ஆயுதம். போர் ஏற்படுத்தும் அழிவுகளிலும் மோசமான அழிவுகளை அமைதி ஏற்படுத்த வல்லது. ஆனால் எல்லோரும் அமைதியை விரும்புவதால் சில சமயங்களில் அமைதிக்குக் கொடுக்கப்படும் விலை மிகுதியாகிறது. விடுதலைக்காகப் போராடும் ஓர் அமைப்பு அமைதி வழிக்குத் திரும்புவது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது. மக்கள் அமைதியை விரும்பும்போது ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டம் அமைதி வழியைத் தெரிவு செய்கின்றது.
உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் 'பார்க்' அமைப்பின் ஆயுதப் போராட்டம் கடந்த வாரம் எட்டிய சமாதான உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துள்ளது. கொலம்பிய புரட்சிகர விடுதலை இராணுவம் எனக் குறிக்கப்படும் 'பார்க்' அமைப்பு 1964 ஆம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வருகிறது. 52 ஆண்டுகளின் பின் ஒரு போராட்ட அமைப்பு ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழிக்குத் திரும்ப உடன்பட்டமை வரலாற்று முக்கியத்துவமுடையது.
தென்அமெரிக்காவின் வட முனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. பல்வேறு பழங்குடிகளைக் கொண்ட கொலம்பியா 1499 ஆம் ஆண்டு ஸ்பானிய கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டு 1886 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. இலத்தீன் அமெரிக்காவின் நான்காவது பெரிய பொருளாதாரமான கொலம்பியா, அந்தீஸ் மலைத் தொடர்கள், அமேசன் மழைக் காடுகள், வெப்ப மண்டலப் புல்வெளிகள், கரீபியன் தீவுகள், பசுபிக் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட புவியியற் பல்வகைமை மிக்க நாடாகும்.
ஃபார்க் அமைப்பின் 52 வருடகால வரலாற்றில் பல தடவைகள் கொலம்பிய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு கொலம்பிய அரசுக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் பல தடைகளைத் தாண்டி சமாதான உடன்படிக்கையை எட்டியுள்ளன.
இந்த உடன்படிக்கையை இயலுமாக்கிய பல்வேறு காரணிகளில் பிரதானமானவற்றில் முதலாவதாகப் பேச்சுவார்த்தைக்கு முழு ஆதரவு வழங்கி ஃபார்க் போராளிகளிடம் நம்பிக்கையை உருவாக்கிய நாடு கியூபாவாகும். பேச்சுவார்த்தைகளின் பல சுற்றுப் பேச்சுக்கள் கியூபாவிலேயே நடைபெற்றன. அடுத்து நோர்வேயாகும். பேச்சு வார்த்தைகளில் முக்கிய நடுவராயிருந்து சமாதான முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பை உறுதிப்படுத்தியிருந்தது. அடுத்து நீண்டகாலமாக ஃபார்க் போராளிகளுக்கு ஆதரவாயிருந்த வெனிசுவேலா நாடாகும். பேச்சுக்களின் மூலமும் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்ததுடன், குறிப்பாக ஹியுகோ சாவேஸ் ஆட்சியின் போது, கொலம்பியாவின் இரு தரப்புகளையும் பேச்சு மேசைக்குக் கொண்டுவந்திருந்தது.
வேறு விதமாகக் கூறின், பேச்சுக்கள் சாத்தியமாக கியூபாவும் நோர்வேயும் உத்தரவாதமாயிருந்தமையும் வெனிசுவேலா வசதிப்படுத்துனராயிருந்தமையும் முக்கிய காரணிகளாகும். இம் மூன்று நாடுகளும் தாம் உடன்பட்டவாறு அமைதி ஏற்பட வழிவகை செய்யக் கடமைப்பட்டிருந்தன. எனவே இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் எட்டிய அமைதி உடன்படிக்கைகளுடன் ஒப்பிடின், இவ்வுடன்படிக்கை பரந்துபட்ட பங்குபற்றலுடன் பிராந்தியத்தின் பலம்வாய்ந்த நாடுகளின் ஈடுபாட்டுடன் நடைபெற்றுள்ளமை முக்கியமானது. இந்த உடன்படிக்கை எட்டப்பட்டமை உலக அரசியலின் திசை வழியில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்கப் பிராந்திய அரசியல் அரங்கில் பல விடயங்களை ஐயந்தெளிபுற விளக்குகிறது.
ஃபார்க் போராளிகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவதற்குக் கொலம்பிய அரசுக்கு முழு இராணுவ, புலனாய்வு, நிதி உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்துள்ளது. அமெரிக்கப் படைகள் கொலம்பியாவில் ஃபார்க் போராளிகளுக்கு எதிராக நேரடியாகவே போர்களில் ஈடுபட்டுள்ளனர். ஃபார்க் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இன்றுவரை கொலம்பிய அரசு ஃபார்க் போராளிகளுடன் பேசக்கூடாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. ஃபார்க் போராளிகளை முழுமையாகத் துடைத்தழிக்க முடியாது என அமெரிக்கா நன்கறியும். வரட்டுக் கௌரவம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமற் தடுக்கிறது.
ஃபார்க் அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகை நீண்டகாலப் பொருளாதார நலன் சார்ந்தது. கொக்கேயின் என்கிற போதைப் பொருளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் கொக்கா பயிர்கள் செழித்து வளரும் பிரதேசங்கள் ஃபார்க் போராளிகளின் தளப் பிரதேசங்களாகும். கொக்கா பயிர் விற்பனை மூலம் தனது போராட்ட நிதித் தேவையை ஃபார்க் அமைப்பு நிறைவு செய்கிறது. உலகின் முக்கியமான போதைப்பொருள் விற்பனையாளராக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திகழ்கின்றது. இதை ஆதாரங்களுடன் தனது நூலில் விளக்கியிருக்கிறார் முன்னாள் சி.ஐ.ஏ உளவாளியாகப் பணியாற்றிய வில்லியம் ப்ளும். சி.ஐ.ஏ.யின் போதைப்பொருள் விற்பனை ஏகபோகத்துக்கு ஃபார்க் தடையாக விளங்குவதால் கொலம்பியாவில் அரச ஆதரவுடனான கூலிப்படைகளை உருவாக்கி அதனூடாக கொக்கேன் உற்பத்தியைச் செய்து வந்த அமெரிக்காவின் வியாபாரத்துக்கு ஃபார்க் அமைப்பு போட்டியானது. இதனால் கூலிப்படைகளை ஆயுதபாணிகளாக்கி ஃபார்க் அமைப்புடன் போரில் ஈடுபடுத்தி ஃபார்க் அமைப்பையும் அதன் ஆதரவுத் தளங்களையும் அழிக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்கா அதில் தோல்வி கண்டது. இன்றுவரை அமெரிக்க நலன்களுக்கு ஃபார்க் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.
இவ்விடத்தில் ஃபார்க் அமைப்பின் தோற்றத்தை நோக்குதல் தகும். 1950 களில் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி கொலம்பியாவில் நிலவிய சர்வதிகார ஆட்சிக்கெதிராக இடையறாத போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அமைதியாக நடைபெற்ற இப்போராட்டங்கள் மீது கொலம்பிய அரசு வன்முறையை ஏவியது. அதையடுத்து கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மனுவல் மருலாண்டா விவசாயிகளை ஒன்றுதிரட்டிக் குழுக்களாக்கி இராணுவ வன்முறையை எதிர்க்கத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளை ஆதரித்ததற்காக அரசு விவசாயிகளுக்கு எதிரான வன்முறையைத் தொடங்கியது. நிலப்பரப்பிற் பெரிய நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான தூரம் மிகப் பெரியது. இது இரண்டுக்கும் இடையிலான வளப் பங்கீட்டையும் பாதித்தது. தலைநகர் பொகோடா, வளம் கொழிக்கும் உயர்குடிகள் வாழும் நகரமாகவும் நாட்டின் ஏனைய பகுதிகள் ஏழ்மையில் வாடும் பகுதிகளாகவும் விளங்கின. இந்த ஏற்றதாழ்வு காரணமாக அரசுக்கெதிராகப் போரிடத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களில் ஒருபகுதியினரின் ஆதரவைப்பெற முடிந்தது. 1964 ஆம் ஆண்டு மருலாண்டாவும் 48 விவசாயப் போராளிகளும் ஒளிந்திருப்பதை அறிந்த அரசு அவர்களை அழிக்க இராணுவத்தை அனுப்பியது. இராணுவத்தினருடனான மோதலில் அனைவரும் உயிர்பிழைத்தனர். இந்நிகழ்வு ஃபார்க் அமைப்பின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது.
சாதாரண விவசாயிகள், நிலமற்ற பழங்குடிகள், ஒதுக்கப்பட்ட இனக்குழுவினர் எனச் சமூக அடுக்குகளில் கீழ்நிலையில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஃபார்க் வளர்ந்தது. பெரிய நிலங்களைக் கையகப்படுத்தியிருந்த நிலச்சுவாந்தர்கள், பெரு முதலாளிகள் ஆகியோருக்கு எதிராக ஃபார்க் அமைப்பு போராடியது. நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்குப் பங்கிட்டனர். எனவே நிலச் சொந்தக்காரர்களும் இராணுவமும் இணைந்து கூலிப்படைகளை உருவாக்கி ஃபார்க் அமைப்பிற்கு ஆதரவான சமூகங்களைக் கொடுமைப்படுத்தியதோடு நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. இதனால் ஃபார்க் அமைப்புக்கு மேலும் ஆதரவு அதிகரித்து 1990 களில் இலத்தீன் அமெரிக்காவின் பலம் வாய்ந்த இயக்கமாகப் ஃபார்க் வளர்ந்தது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஃபார்க் கொலம்பிய இராணுவத்தினை முழுமையாகத் தோற்கடித்துவிடும் வல்லமையுள்ளதாக மாறிவிடும் என அமெரிக்கா 1998 இல் எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முழு ஆசியுடன் ஃபார்க் அமைப்பிற்கெதிரான போரை கொலம்பிய அரசு தீவிரப்படுத்தியது. ஆனால் மலைப்பகுதிகள், அடர்காடுகள் என மிக வேறுபட்டு, கெரில்லாப் போர்முறைக்கு சாதகமான புவியியலைக் கொண்ட பகுதிகளைத் தளமாகக் கொண்ட ஃபார்க் போராட்ட இயக்கத்தை அழிக்க இயலவில்லை.
2008 ஆம் ஆண்டு இவ்வியக்கத்திற்குப் பாரிய இழப்புக்கள் நேர்ந்தன. பார்க் - கொலம்பிய அரசு யுத்தத்தில் முதல் முறையாக ஃபார்க் உயர்பீடத்தில் இருந்த ஒருவரை கொலம்பிய இராணுவம் கொன்றது. இயக்கத்தின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட ராவுல் ரேயஸ் கொலம்பிய வான்படைத் தாக்குதலில் இறந்தார். தாக்குதல் ஈக்குவடோர் நாட்டின் பகுதியில் நிகழ்ந்தது. சர்வதேச விதிகளை மீறிய இச் செயல் கொலம்பிய - ஈக்குவடோர் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக ஈக்குவடோர் கொலம்பியாவுடன் இராஜதந்திர உறவுகளை முறித்தது. அதே ஆண்டு ஃபார்க் நிறுவகர்களில் ஒருவரும் தலைவருமான மனுவல் மருலாண்டா மாரடைப்பால் இறந்தார்.
அதையடுத்து ஃபார்க் அமைப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னை மீளவும் ஒழுங்கமைத்த ஃபார்க் இயக்கம் 2010 ஆம் ஆண்டில் மட்டும் திட்டமிட்ட தாக்குதல்களை நடாத்தி 1,800 இராணுவ வீரர்களைக் கொன்று தனது பலத்தை நிறுவியது. கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு பூகோள அரசியல் மாற்றங்களைத் தாண்டி ஃபார்க் பிழைத்திருப்பது மக்கள் ஆதரவினாலேயே என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது.
இப்போது எட்டிய உடன்படிக்கையில் விரிவான விவசாய வளர்ச்சிக் கொள்கைƒ அரசியல் பங்குபற்றுகைƒ போரை முடிவுக்குக் கொண்டுவருதல்ƒ சட்டவிரோத போதைப்பொருட் பிரச்சனைக்குத் தீர்வுƒ பாதிக்கப்பட்டோருக்குப் பரிகாரம்ƒ ஆயுதங்களைக் கீழே வைத்தலும் மக்கள் மயமாதலும் ஆகிய ஆறு அடிப்படைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. சபையின் மேற்பார்வையில் ஆயுதங்களைக் கையளித்தலும் சமூகமயமாதலும் நடைபெறவுள்ளன. பேச்சுவார்த்தைகளும் அதனோடு எட்டிய உடன்படிக்கையும் வரவேற்க வேண்டியன. ஆனால் அதை நடைமுறைப்படுத்தல் சிக்கலானதும் நீண்டகாலம் எடுக்கக்கூடியதுமாகும். 52 ஆண்டுகளாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தவர்கள் அரசியல் நீரோட்டத்தில் சமூகத்துடன் இணைவதும் இணைக்கப்படுவதும் எளிதல்ல. அவ்வாறே போராளிகள் ஆயுதங்களைக் கீழேவைத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதும் சாதாரணமாக மக்களும் விவசாயிகளும் நிலமற்றவர்களும் பழங்குடிகளும் தங்கள் உரிமைகளைப் பெறுவதை உறுதிசெய்வதும் குறுகிய காலத்தில் இயலாது.
நேபாளத்தில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளின்படி ஆயுதங்களைக் கீழேவைத்த நேபாள மாவோவாதிகள், இந்தோனேசியாவின் ஆச்சேப் போராளிகள் ஆகிய போராட்டக் குழுக்களின் அண்மைய அனுபவங்கள் நம்பிக்கை தருவனவாயல்லாமல் எச்சரிப்பனவாயுள்ளன.
இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. இவ்வுடன்படிக்கை மாறுகின்ற உலக அரசியல் அரங்கில் அரங்கேறுகிறது. கியூபாவின் பங்கெடுப்பும் வெனிசுவேலாவின் ஆதரவும் பிராந்திய ரீதியாக இச்சமாதானச் செயன்முறைக்கு வலிமை சேர்க்கின்றன. ஆனால் எல்லாம் சொன்னபடி நடக்கும் என்ற உத்தரவாதத்தை எவரும் தரவியலாது. ஒரு பிரபல மேற்கோள் நினைவுக்கு வருகிறது: „அரசியல் என்பது இயலும் என நம்புவோர்க்கு மட்டுமே....
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago