2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 51)

முருகேசன் திருச்செல்வம் மறைவு

அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் ஜென்ரல்) முருகேசன் திருச்செல்வம் 1976 நவம்பர் 23 அன்று தனது 69 ஆவது வயதிலே காலமானார். சுதந்திர இலங்கையில் அமைச்சுப் பதவி வகித்த முதலாவது தமிழரான இவர், தனது மிதவாதப் போக்கினால் குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தில் பெரும் அபிமானம் பெற்றவராக விளங்கினார். அவருடைய அரசியல் நிலைப்பாடுகளோடு முரண்படுபவர்கள் கூட, அவருடைய சட்டத் திறன் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க முடியாது.

இலங்கையின் சட்ட வரலாற்றில் பெயர் குறிப்பிடத்தக்க தமிழ் வழக்கறிஞர்களுள் முருகேசன் திருச்செல்வமும் ஒருவர். இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டத்துறையில் முருகேசன் திருச்செல்வத்தின் கனிஷ்டராகப் பணியாற்றியிருக்கிறார். 22 நவம்பர் 1979 அன்று, முருகேசன் திருச்செல்வத்தின் மூன்றாவது நினைவு தினத்தில் உரையாற்றிய அன்றைய இளைஞர் விவகார அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க, 'திரு. முருகேசன் திருச்செல்வம் அவர்கள் உயிரோடிருந்திருந்தால் எங்கள் நாடு வேறொரு பாதையில் பயணித்திருக்கும். அனைத்துத் தரப்பிலும் நல்லெண்ணத்தை விதைப்பதனூடாக இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற அவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார். அவர் அனைத்து அரசியல்க் கட்சிகளோடும் நல்லுறவைக் கொண்டிருந்தார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜீ.ஜீயும் செல்வாவும்

சுதந்திர இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றின் மையப்புள்ளி ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் என்ற இரு ஆளுமைகளாவர். 'இலங்கைத் தேசியம்' என்பதிலிருந்து விலகி, தமிழரின் தனிவழி அரசியலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஜீ.ஜீ; தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் செல்வா. இந்த இரு அரசியல் ஆளுமைகள்தான் சுதந்திர இலங்கையின் தமிழ் அரசியலின் போக்கைத் தீர்மானித்தவர்கள். முன்பு ஒரே கட்சியில் இருந்து, பின்பு பிளவடைந்து இரு கட்சிகளாகி, பின்னர் காலத்தின் தேவை கருதி மீண்டும் கூட்டணி அமைத்து ஒன்றிணைந்தவர்கள். 'அரசியல்வாதிகள்' என்று, இன்று நாம் காணும் விம்பத்துக்குள் இவர்களை அடக்கிவிட முடியாது. இவர்கள் 'அரசியல் மேதகைகள்' (Statesmen). அவர்களின் அரசியல் கொள்கைகளில் நாம் முரண்படலாமேயன்றி அவர்களது அறிவிலோ, அரசியற் பண்பிலோ நாம் குறைகாண இயலாது. அதனாலேதான் அவர்கள் 'அரசியல்வாதிகள்' என்பதற்குப் பதிலாக 'அரசியல் மேதகைகள்' என்றறியப்படுதல் பொருத்தமாகிறது. இந்த இரு ஆளுமைகள் இரண்டரைமாத இடைவெளியில் காலமெய்தியமை, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாக அமைந்தது.

ஆசிய அரசியல் பரப்பில் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் கலாசாரம் மிகவும் அரிதானது. மேலைத்தேய அரசியல் பரப்பில் அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஓய்வு பெறுதல் என்பது சர்வசாதாரணமானதொன்று. அந்த அரசியல் கலாசாரம் ஆசியாவுக்கு ஏனோ, அதிலும் குறிப்பாக தெற்காசியாவிற்கு பெரிதாக வரவில்லை. ஜனநாயகத்தை நாம் ஏற்றாலும், மன்னர் காலத்தில், தன் மரணம் வரை மன்னர்கள் ஆண்டது போலவே பெரும்பாலும் எம்முடைய அரசியல் தலைமைகளும் தம் இறுதிவரை அரசியலில் செயற்பட்டுக் கொண்டே இருந்தார்கள். வெகு சிலரே அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்று ஒதுங்கியவர்கள். அவ்வகையில் இந்த இருதலைவர்களும் தமது இறுதிமூச்சு வரை அரசியல் பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக சா.ஜே.வே. செல்வநாயகம் இறுதிவரை அரசியலில் செயற்படவே விரும்பினார் என அவருடைய சுயசரிதையில் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிடுகிறார்.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் மறைவு

ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது இறுதிக் காலத்திலும் சில பல முக்கியமான அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' உட்பட்ட அரசியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்துவேல் கருணாநிதிக்கு எதிரான 'சர்க்காரியா கமிஷன்' விசாரணையில் கருணாநிதி தரப்பில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆஜராகியிருந்தார். டெல்லி மத்திய அரசாங்கம் தமிழ்நாடு பற்றிய விசாரணையை மட்டும் பக்கச்சார்போடு நடத்துகிறது என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்த ஜீ.ஜீ. பொன்னம்பலம், 'சர்க்காரியா கமிஷன்' முன்பு டெல்லியின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். கருணாநிதிக்கெதிரான ஒவ்வொரு சாட்சியையும் தான் குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தால் அவர்கள் பொய்யர்கள் என்று நான் நிரூபிப்பேன் எனச்சூளுரைத்தார். இவ்வழக்கிற்காக ஒரு சதம் பணம் கூட பெற மறுத்த ஜீ.ஜீக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமொன்றை மரீனா கடற்கரையில் நடத்திய முத்துவேல் கருணாநிதி 'சங்கத் தமிழ் இலக்கியம் உயர் நட்புக்கு வகுத்த இலக்கணத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் மாற்றியெழுதிவிட்டார்' என்று புகழாரம் சூட்டினார். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரும், இலங்கையின் பெருமைமிகு குற்றவியல் வழக்கறிஞர்களுள் ஒருவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் 1977 ஆம் ஆண்டு,  பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி காலமானார். 

சா.ஜே.வே. செல்வநாயகம் மறைவு

மிக நீண்டகாலமாக 'பாகின்ஸன்ஸ்' நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் உடல்நிலை நோயின் தீவிரத்தாலும், வயதின் மூப்பாலும் மோசமாகிக் கொண்டு வந்தது. நோயின் தீவிரத்தினால் நிற்க முடியாது அடிக்கடி விழவேண்டியதாக இருந்தது. இப்படி விழுவதை அவர் பகிடியாக 'இது சிறுகுழந்தை விழுவது போல விழுவது' என்று சொல்வார் எனச் செல்வநாயகத்தின் சுயசரிதையில் அதை எழுதிய அவரது மருமகன் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால் இப்படியாக ஒருமுறை கடுமையாக விழுந்ததில் மயக்கமுற்ற செல்வநாயகம் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலமானார். தனது இறுதிக் காலத்தில் 'தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' எனச் செல்வநாயகம் சொன்னதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இதனை நாம் விரக்தியின் வார்த்தைகளாகக் கூடக் கொள்ளலாம். இரண்டு தசாப்தங்களாக எத்தனையோ விட்டுக்கொடுப்புக்களுடன் முயற்சித்தும் தமிழ் மக்களுக்கேற்றதொரு அரசியல் தீர்வை பெறமுடியாமையின் விரக்தியாக இருக்கலாம், இல்லை‚ அவர் விரும்பிய அஹிம்சைக்கு மாறாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எழுச்சி பெற்றமையினால் வந்த விரக்தியாக இருக்கலாம். எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கடவுளின் கையிலே சமர்ப்பித்து அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். செல்வநாயகத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி நாடாளுமன்றத்தில் 1977 செப்டெம்பர் ஆறாம்; திகதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆற்றிய உரையில் 'என்னுடைய சமுதாயத்திலோ, வேறெந்தச் சமுதாயத்திலோ செல்வநாயகம் என்னைக் கைவிட்டுவிட்டார் என்று சொன்ன ஒருவரைக்கூட நான் கண்டதில்லை' என்று குறிப்பிட்டார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் தோற்றபின்னும் டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்வதற்கு செல்வநாயகம் வழங்கிய ஆதரவைக் குறித்து அவர் இதனைச் சொல்லியிருக்கலாம்.

அடுத்த தலைமை

இந்த மூன்று தலைவர்களினதும் அடுத்தடுத்த மறைவு தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்தது. ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்த ஜீ.ஜீயினதும், செல்வாவினதும் இழப்பு, தமிழ் அரசியல் பரப்பிலும் பெரிய வெற்றிடமொன்றை உருவாக்கியது. ஆயுதக் குழுக்களின் எழுச்சி தொடங்கியிருந்த காலப்பகுதியொன்றில் இந்த இடைவெளியை யார் நிரப்பப் போவது என்ற கேள்வி தொக்கி நின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' முன்வைத்து தமிழர் அரசியல் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அத்தீர்மானத்தின் பிதாமகர் உயிரிழந்தமை, அந்த தீர்மானத்தை முற்கொண்டு செல்லப்போவது யார் என்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. செல்வநாயகத்தின் இறுதிக் காலத்தில் அவர் ஆலோசகராக இருக்க, அ.அமிர்தலிங்கமும் மு.சிவசிதம்பரமும் தேசிய அரசாங்கப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) இல்லாத நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பேச்சாளராகச் செயற்பட்டவர் வி.என். நவரட்ணம் ஆவார். அ. அமிர்தலிங்கமும் மு.சிவசிதம்பரமும் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். செல்வநாயகத்தின் மறைவுக்குப்பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தலைவராகப் பதவியேற்றதுடன் செல்வநாயகத்தின் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு' எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏகோபித்த மக்களாணையை பெற்றுக்கொள்ளத் திடசங்கற்பம் பூண்டார்.

மூழ்கும் கப்பல்

தலைவர்களின் மறைவினால் தமிழ் அரசியல் பரப்பு தளர்வுற்றிருக்க, தேசிய அரசியல் பரப்பில் நிறைய பரபரப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 1976 ஒப்டோபரில் ரொணி டி மெல் மற்றும் பொனி ஜயசூரிய ஆகிய தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைத் தொடர்ந்து நந்த எல்லாவல, பி.ஜீ. ஆரியதிலக்க, ரெனிசன் எதிரிசூரிய, ஏ.எம். ஜினதாச ஆகிய தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினார்கள். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பேரிடியாக இருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சியானது ஆளும் ஐக்கிய முன்னணியிலிருந்து ஏலவே விலகிய நிலையில், 1977 பெப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணியிலிருந்து விலகியது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சராகவிருந்த பீற்றர் கென்னமன் மற்றும் பிரதி அமைச்சராகவிருந்த பீ.வை.துடாவ ஆகியோர் அரசாங்கத்திலிருந்து விலகினர். அவர்களோடு  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசு சபை (நாடாளுமன்ற) உறுப்பினர்களான எஸ்.ஏ.விக்ரமசிங்ஹ, எம்.ஜி.மென்டிஸ், சரத் முத்தெட்டுவேகம, ஏலியன் நாணயக்கார ஆகியோரும் அரசாங்கத்திலிருந்து விலகினர். அமைச்சராக இருந்த ரீ.பீ.சுபசிங்ஹவும் 1977 மார்ச் முதலாம் திகதி அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். சிறிமாவின் அரசாங்கம் பிரபல்யம் இழந்திருந்தது. சிறிமாவும் தோழர்களும் காட்டிய 'சோசலிச மாயை' சாத்தியமாக்கப்படாததும் இதற்கொரு முக்கிய காரணம். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்த இவர்கள் குதித்து வெளியேறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1977 பொதுத்தேர்தல் அறிவிப்பு

சிறிமா அரசாங்கத்துக்கு எதிர்ப்பு பல முனைகளிலும் வலுத்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோசம் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. ஆனால் பிரதமர் சிறிமாவோ அதிகாரத்தைத் தக்க வைக்கவே முயன்றார். 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ நாடாளுமன்றத்தின் ஆயுளை 1977 மே 19 ஆம் திகதி வரை நீட்டித்தார். இந்நடவடிக்கையால் சினமுற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன 1977 மே 22 ஆம் திகதிக்கு மேல் இந்த அரசாங்கம் நீடிக்குமானால் அத்தகைய சட்டவிரோத அரசாங்கத்தை மக்களைக் கொண்டு நான் தூக்கியெறிவேன் என்று சூளுரைத்தார்.

அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு வலுப்பெறவும் திடீரென 1977 மே 16 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோவின் ஆலோசனையின்படி ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ அன்று நள்ளிரவோட நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆணையிட்டார். அடுத்த பொதுத் தேர்தல் 1977 ஜுலை 21 ஆம் திகதி நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதோடு, வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதித் திகதியாக 1977 ஜுன் ஆறாம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் 1977 ஓகஸ்ட் 26 இல் கூடும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தனது ஆட்சியைக் கைப்பற்றும் கனவு நனவாவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதை ஜே.ஆர். ஜெயவர்த்தன உணர்ந்தார். ஐக்கிய தேசியக் கட்சி பலமானதொரு தேர்தல் பிரசாரத்திற்குத் தயாரானது. மறுபுறத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' அடிப்படையிலான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களாணையைக் கோரத் தயாரானது.

(அடுத்த வாரம் தொடரும்...)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X