2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தேசியப் பட்டியல் நியமனச் சர்ச்சைகள்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

கடந்த 35 வருடங்களில் இடம்பெற்ற மிக அமைதியான தேர்தல் என தேர்தல்கள் ஆணையாளரான மஹிந்த தேசப்பிரியவால் வர்ணிக்கப்பட்ட பொதுத் தேர்தல் 2015 நிறைவுக்கு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அரசியல் குரோதப் பேச்சுகளும் குற்றச்சாட்டுகளும், ஏன் இனவாதப் பேச்சுகளும் கூட ஓரளவுக்கு இல்லாமல் போயிருக்கின்றன. நாடு வழமையான தினசரி வாழ்க்கையை நோக்கிச் சிறிது சிறிதாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால், அமைச்சரவை எப்போது பதவியேற்கும், யார் யாருக்கு எந்தெந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்பெறும், எந்தெந்தப் பிரதேசங்கள் அல்லது மாவட்டங்களுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெறும் போன்ற ஐயங்கள் காரணமாக, அரசியல் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்களில் முக்கியம் வகிக்கும் இன்னொரு விடயம், தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதாகும்.

நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப கட்சிகள் தீர்மானித்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான எதிர்ப்புகளும் கலந்துரையாடல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்த 6 வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் 2 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒரு வேட்பாளரை ஐக்கிய தேசிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும், தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடிவு செய்திருக்கின்றன. கடுமையான எதிர்ப்பலைகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.

'மக்களால் நிராகரிக்கப்படுபவர்களை இவ்வாறு பின்கதவால் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப நினைப்பது, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை உதாசீனம் செய்வதாகும். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது' என்பது இந்த எதிர்ப்பின் சாராம்சம். மேலோட்டமாகப் பார்க்கையில், இது ஓரளவு வலுவுள்ள வாதம் தான்.

இந்த வாதங்களின் வலுவை ஆராய முன்னர், தேசியப் பட்டியல் தொடர்பாக இலங்கையின் அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் பார்ப்பது பொருத்தமானது. இது, 99அ பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

'...பங்குபோடுதலின் கீழ், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று, ஆசனமொன்றுக்கு உரித்துடையதாகவுள்ளவிடத்து தேர்தல்கள் ஆணையாளர், அறிவித்தல் மூலம் அத்தகைய ஆசனங்களை நிரப்புவதற்கென இவ்வுறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட நிரலில் அல்லது அத்தேர்தலில் அத்தகைய கட்சியினால் அல்லது குழுவினால் ஏதேனும் தேர்தல் மாவட்டம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் நியமனப் பத்திரத்தில் அவர்களின் பெயர் உள்ளடக்கப்பட்ட ஆட்களாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுள்ள ஆட்களை, அத்தகைய அறிவித்தலிலிருந்து ஒரு கிழமையினுள் பெயர்குறித்து நியமிக்கும்படி அத்தகைய அங்கிகரிக்கப்பட்ட அரசியற் கட்சியின் செயலாளரை அல்லது அத்தகைய சுயேட்சைக் குழுவின் குழுத்தலைவரைத் தேவைப்படுத்துதல் வேண்டுமென்பதுடன், அவ்வாறு பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஆட்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களென வெளிப்படுத்துதலும் வேண்டும்'.

ஆகவே, இலங்கையின் அரசியலமைப்பின் படி, தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு வகைப்பாடு உள்ளது. ஆகவே, இந்தக் கட்சிகள் அனைத்தும் மேற்கொண்ட இந்நடவடிக்கை, இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்புடையது, ஆகவே சட்டரீதியற்ற நடவடிக்கைகள் அல்ல. இந்தச் சட்ட அமைப்பு தவறானதெனில், இடம்பெறுகின்ற எதிர்ப்புகள், கோபங்கள் அனைத்தும், இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியிருக்கின்ற மக்களின் பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

'நாடாளுமன்றம் கூடும் போது, அரசியலமைப்பின் 99அ பிரிவை மாற்றியமையுங்கள். தோல்வியுற்றவர்களை அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு அனுப்புவதைத் தடுக்க வழிவகை செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்யாவிடில், அடுத்த தேர்தலில் உங்களுக்கான வாக்கை அளிக்கப் போவதில்லை' என்ற செய்தியைத் தெளிவாக மேற்கொள்வது சாலப்பொருத்தமானதாக அமையும். அதைவிடுத்து, சட்டரீதியான ஒரு செயலைச் செய்தமைக்காக எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது, சிறிது பொருத்தமற்றது.

சட்டரீதியான எல்லாமே நியாயமானவையாக இருக்க வேண்டியதில்லைத் தான். ஆகவே, இதன் நியாயத்தன்மை அல்லது நெறிமுறை பற்றியும் ஆராய முடியும்.

ஏற்கெனவே சொல்லப்பட்டபோது போல, தோல்வியடைந்த ஒருவரை நாடாளுமன்றத்து நியமிப்பது, மக்களின் ஆணையை உதாசீனம் செய்வது போன்றது என்ற ஒரு பார்வை இருக்கிறது. அதில் குறிப்பிட்டளவு நியாயத்தன்மை இருப்பது போலவே தெரிகிறது. ஆனால், இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளில் இருப்பது தேர்தல் மூலமான ஜனநாயகத் தன்மை. கட்சிகள் சார்பாகத் தேர்தல்களில் நியமிக்கப்படும் குறிப்பிட்ட தொகுதியிலிருந்து ஒருவரையே எம்மால் தெரிவுசெய்ய முடியும். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகக் கழுதையை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள்' என்றொரு கேலியான சொற்றொடர் உண்டு.

அது சில நேரங்களில் முழுமையாக உண்மையானது. உதாரணமாக, கொழும்பு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக எவர் நிறுத்தப்பட்டாலும், அவர் வெற்றிபெறுவதற்கு முழுமையான வாய்ப்புகள் உள்ளன. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான தொகுதிகள் உள்ளன. அதேபோல், வடக்கின் பல தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் பலமாகக் காணப்படுகிறது.

உதாரணமாக, கொழும்பு வடக்கில் சுதந்திரக் கட்சியின் மிகவும் நேர்மையான ஒரு புதுமுக வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றிச் சிந்தியுங்கள். அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவானது. இந்த நிலையிலேயே, தோல்வியடைந்தவர்கள் நாடாளுமன்றம் செல்வது ஓரளவு நியாயமாகிறது.

'தோல்வியுறும் தொகுதிகளில் எதற்காகச் சிறந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும்? வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதியில் அவரை நிறுத்தலாமே?' என்ற வினா எழுப்பப்படலாம். இது, '‡பிக்சிங்' போலாகிவிடும். இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு, விட்டுக்கொடுப்பில் ஈடுபடும் நிலை உருவாகும். இது உண்மையான ஜனநாயகமன்று.

அத்தோடு, தேசியப் பட்டியலென்பதின் முக்கியமான எதிர்பார்ப்பு, மக்களின் அபிமானங்களை வெல்லாத கல்விமான்களையும் உயர் திறமையுடையோரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பது என்பதே. ஆனால், கடந்த சில பொதுத் தேர்தல்களில் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியல்களை ஆராய்ந்து பார்த்தால், தேர்தல்களில் வெல்ல முடியாத அல்லது வெல்வதற்குக் குறைவான வாய்ப்புகளையுடைய சிரேஷ்ட உறுப்பினர்கள் அல்லது விசுவாசிகளுக்கே இந்தத் தேசியப் பட்டியல் பதவி சென்றிருக்கிறது.

உதாரணமாக, 2010 பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூ சார்பான 17 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில், இரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம் ஜெயரத்ன, டலஸ் அலகப்பெரும, கீதாஞ்சன குணவர்தன, எல்லாவல மேதானந்த தேரர், முத்து சிவலிங்கம், அச்சல ஜெயகொட, விநாயகமூர்த்தி முரளிதரன், ஜே.ஆர்.பி சூரியப்பெரும, ஜனக பண்டார பிரியந்த, ஏ.எச்.எம் அஸ்வர், மாலினி பொன்செகா, கமலா ரணதுங்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இந்த 13 பேரும் கல்விமான்களாக அறியப்பட்டவர்களல்லர். இவ்வாறு, தோல்வியடைவார்கள் என்ற அச்சத்தினால் தேசியப் பட்டியல் வழங்கப்படுவதற்கும், தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்படுவதற்குமிடையில் பெரியளவுக்கு வித்தியாசம் கிடையாது என்பதே உண்மை.

அதேபோல், இதுவொன்றும் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையும் கிடையாது. உதாரணமாக, இந்தியாவின் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணிபுரிந்து வரும் அருண் ஜெட்லியும் மனித வள அபிவிருத்தி அமைச்சராகப் பணிபுரிந்துவரும் ஸ்மிர்தி இராணியும் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள் தான்.

அதேபோல், மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படாதவர்களும் அந்த அமைச்சரவையில் இடம்வகிக்கிறார்கள். அதேபோல், ஐக்கிய அமெரிக்காவின் அமைச்சரவை முழுவதுமே மக்களால் தெரிவுசெய்யப்படாதது தான். இலங்கையின் நாடாளுமன்ற முறையானது இங்கிலாந்து நடைமுறையைப் பின்பற்றியதாகும். அங்கும், 'ஹவுஸ் ஒ‡ப் லோர்ட்ஸ்' இல் காணப்படும் தெரிவுசெய்யப்படாத உறுப்பினர்கள், அமைச்சர்களாகப் பதவியேற்க முடியும். இந்த நடைமுறையானது இன்னும் பல நாடுகளிலும் காணப்படுகிறது.

ஆகவே, சிறப்பான அரசாங்கமென்பது, மக்களின் ஆதரவை வென்றது மாத்திரமல்ல, மக்களின் முன்னேற்றம் தொடர்பாகச் செயற்படுவதும் தான். தேசியப் பட்டியல் மூலமாக யார் தெரிவுசெய்யப்படுகிறார்கள் என்பது தொடர்பான எதிர்ப்புகளை விட, வாக்குகள் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த 5 வருடங்களில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களின் கட்சி என்னவாக இருந்தாலும், அவர்களின் செயற்பாட்டைப் பொறுத்து வாக்களிப்பதென்பது முக்கியமானது.

அதைவிட முக்கியமானது, இந்த 5 வருடங்களிலும் அவர்கள் எமக்காகச் செயற்படுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும், அவர்களுக்கு அழுத்தத்தை வழங்குவது தான். ஏனெனில், ஜனநாயகமென்பது வெறுமனே தேர்தல்களில் வாக்களிப்பதோடு நிறைவடைந்துவிடுவதில்லை. தேர்தலென்பது திருமண நிகழ்வு போன்றது, அரசியல் என்பது திருமண வாழ்க்கை போன்றது. திருமண நிகழ்வை விட திருமண வாழ்க்கை முக்கியமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .