2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

தென்னிலங்கை நகர்வும் இரு உரைகளும்

Thipaan   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 'சர்வதேசத்தை வெற்றி கொண்ட தலைவர்' எனும் தொனியிலான சுவரொட்டிகளையும் கடந்த வாரம் தென்னிலங்கையின் பல பாகங்களிலும் காண முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணங்களையோ, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளிலோ கலந்து கொண்டு நாடு திரும்புகின்ற ஒவ்வொரு தருணத்திலும் பெருமெடுப்பில் வரவேற்கப்பட்ட காட்சிகளை கடந்த ஆட்சிக்காலத்தில் கண்டிருக்கின்றோம். அவ்வாறானதொரு காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்கப்பட்ட முறைமை பிரதிபலித்தது. நல்லாட்சிக்கு வாக்களித்தவர்களையும், வலுச்சேர்த்தவர்களையும் அது கொஞ்சம் எரிச்சலூட்டியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளதான அறிவிப்பு தென்னிலங்கை பூராவும் விடுக்கப்படுகின்றது. 'நாட்டையும், நாட்டுக்காக அர்ப்பணித்த இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரையும் சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இழைத்த பெரும் பிழையை நாம் திருத்தியிருக்கின்றோம். தூக்குக் கயிற்றை அகற்றியிருக்கின்றோம்.' என்கிற அரசாங்கத்தின் அறிவிப்பினை கடந்த நாட்களில் காண முடிந்தது.

இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகள் இன்றி இலங்கையின் உள்ளக சட்டங்களுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்றது. 'இலங்கையிடம் நீதியான உள்ளக விசாரணையொன்றை நடத்துவதற்கான சக்தி இல்லை. அதற்கான சட்டங்களும் பொறிமுறையும் கூட கிடையாது.' என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ள போதிலும், இதுவரைக்கும் 38-க்கும் அதிகமான நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன. அதற்கான ஆணையை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் வழங்கியிருக்கின்றது. குறித்த தீர்மானத்தின் வரைபு கிட்டத்தட்ட அப்படிப்பட்டதாகவே இருக்கின்றன.

இலங்கையின் அரசாங்கங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதில்லை. அதுபோலவே, சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் அக்கறை கொண்டிருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கத் தீர்மானத்தினை முன்வைத்து நிகழ்த்தப்படவிருக்கும் உள்ளக விசாரணை என்பது எந்தவித உறுதிப்பாடும்- சுயாதீனத்தன்மையும் இன்றி முன்னெடுக்கப்படும் சாத்தியங்களே காணப்படுகின்றன.

அத்தோடு, விசாரணையொன்றை நடத்துவதற்கு பதிலாக, அதனை செல்லரிக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை கொண்டிருக்கின்றது. அதாவது, தேசிய நல்லிணக்கம் - இணக்கப்பாடு எனும் போர்வையில் மதத்தலைவர்களை முன்னிறுத்திய இணக்கசபைகள் தொடர்பிலான  நிகழ்ச்சித் திட்டத்தினூடு, குற்றவாளிகளை குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்றுவதற்கும், 'பொதுமன்னிப்பு' எனும் நிலைப்பாட்டிருக்கு நகர்வதற்கும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்மூலம், தொடரும் பெரும் பிரச்சினையொன்றிலிருந்து எந்தவித சேதாரமும் இன்றி மீள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது.

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான தீர்க்கமான நகர்வினை மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்த் தரப்போ சோம்பலோடும்- அலுப்போடும் ஆழ்தூக்க நிலையில் இருக்கின்றது.  பாதிக்கப்பட்ட தரப்பினரின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாத்திரம் நிகழ்த்திவிடும் என்கிற அசட்டுத்தனமா, அல்லது நம்பிக்கையீனங்களின் நீட்சியா என்று எண்ணுமளவுக்கான ஆழ்தூக்க நிலை. இவ்வாறான நிலை தமிழ் மக்களை தோல்விகளின் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கும். அதிலிருந்து விரைவாக மீண்டெழ வேண்டும்.

'பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடக்கு- கிழக்கு மக்கள் அதை ஏற்கவில்லை. ஏற்கவும் முடியாது. காரணம், சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பேசும் மக்கள்  வடக்கு- கிழக்கு  பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள்.  எனவே, மதிப்புடனும் மரியாதையுடனும் எம் மக்கள் வாழ வேண்டும் என்றால் எம்மை அவ்வாறான சிறப்பியல்புகளுடன் ஏற்க வேண்டும். இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர்.  பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.'  என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தென்னிலங்கையின் அரசாங்கங்களோ- பௌத்த சிங்கள அதிகார மையங்களோ தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை ஏற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்காத நிலையில், அதற்கான கோரிக்கைகளையோ, அறைகூவல்களையோ நாம் தொடர்ந்தும் விடுக்க வேண்டியிருக்கின்றது. சி.வி.விக்னேஸ்வரனின் குறித்த உரை ஜனாதிபதியினால் எவ்வளவு தூரம் இரசிக்கப்பட்டது என்பது கேள்வி? ஆனாலும், அவர், 'பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம். பேசித் தீராத பிரச்சினைகள் ஏதும் கிடையாது' எனும் தொனியில் பதிலளித்துவிட்டு அதிலிருந்து விடுபட்டுக் கொண்டார்.

நல்லிணக்கமும் இணக்கப்பாடும் அனைத்து தரப்பினரின் உரிமைகள் அதிகாரங்களை அங்கிகரிப்பதுடன், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதனூடாகவுமே ஏற்படுத்தப்பட வேண்டியது.

ஆனால், தென்னிலங்கை அரசாங்கங்கள் நீதியைப் புறந்தள்ளிக் கொண்டு நல்லிணக்கம்- இணக்கப்பாடு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் தான், பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம் என்றும், அதில், நம்பிக்கை கொள்ளுமாறும் அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசாங்கங்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கான ஆரம்ப முயற்சிகளாக இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம். அதன் நியாயத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் அரசாங்கம் வெளிப்படுத்தும் அக்கறை முக்கியமானது. அது, இரண்டு தரப்புக்களையும் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்.

மரத்தின் மீது சிறு செடிகள்- கொடிகளாக வாழ்தலை தமிழ் மக்கள் என்றைக்குமே எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியானதொரு நிலைக்கு செல்வதற்கு தயாராக இருந்திருந்தால், இலங்கை பிரித்தானியா கலாணித்துவத்திலிருந்து விடுபட்ட நாளிலேயே அதற்கு இசைந்திருப்பார்கள். அது, எமது பிறப்புரிமையை மீறுவதாக அமையும்.

அப்படிப்பட்ட நிலையில், அனைவரது உரிமைகளையும் அங்கிகரிப்பதற்கு  இசைய வேண்டும். நாமும் இன்னொரு மரமாக நீண்டு வளர்வதற்கு உரிமையுள்ளவர்கள். எங்களின் கிளைகளை யாரும் வேட்டுவதற்கு உரிமையற்றவர்கள். அதுபோல, மற்ற மரங்களின் கிளைகளையும் நாம் வெட்டுவதற்கு விரும்பவில்லை என்ற நியாயப்பாட்டின் பக்கத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

அதற்கான, தொடர் அர்ப்பணிப்பும் போராட்ட குணத்தினையும் விடுவிப்பதற்கு தயாராகவும் இல்லை. ஆனால், அந்தப் போராட்டக் குணத்தினை திட்டமிட்ட சதிகளினூடு தோற்கடிக்கலாம் என்பது தொடர்ந்தும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். அது, எந்தவொரு தரப்புக்கும் நல்லதல்ல.

இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், புதிய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், 'தமிழ் மக்கள் ஏன் ஆயுதமேந்திப் போராடினார்கள் (வன்முறையைப் பின்பற்றினார்கள்) என்று இன்னமும் விளங்கவில்லை. வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது.' என்பது மாதிரியாக தொனிப்படும் உரையொன்றை யாழ்ப்பாணத்தில் ஆற்றியிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களின் ஆரம்பம் எது, அதற்கான தூண்டல்களை எந்தெந்தத் தரப்புக்கள் முன்னின்று முன்னெடுத்தன என்பது தொடர்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவமுள்ள இரா.சம்பந்தன் இப்போது கேள்வியாக எழுப்புவது ஆச்சரியமானது. ஆயுதப் போராட்டங்களின் எழுச்சியிலும், அதற்குள் இளைஞர்களை இழுத்து விட்டதிலும் அவர் சார்ந்திருக்க கட்சிகளினதும், அவர் உள்ளிட்ட அதன் தலைவர்களினதும் பங்கு எப்படிப்பட்டது?, என்பது பற்றியெல்லாம் அவருக்கு ஞாபகமறதி ஏற்பட்டிருப்பது எரிச்சலை ஏற்படுத்துவது.

தமிழ் மக்கள் தமது போராட்ட வடிவங்களில் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்ற தவறுகள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் என்பதிலோ, பூகோள அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொள்வது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலோ மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால், பொறுப்புக் கூறுதலில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களின் தோல்விகளிலோ, அதன் நீட்சியிலோ தமக்கு பங்கில்லை மாதிரியான தோற்றப்பாட்டினை இரா.சம்பந்தன் போன்றவர்கள் வெளிப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

அது, அவசியமும் அற்றது.  இரா.சம்பந்தனின் குறித்த உரை தென்னிலங்கையினால் மிக ஆவலாக ரசிக்கப்பட்டிருக்கலாம். அதுபோல, சி.வி.விக்னேஸ்வரனின் உரை எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். இரண்டு உரைகளும் ஒரே கட்சிக்குள்ளிருந்து, தமிழ் மக்களினால் ஏகோபித்த ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களினால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை ஏற்றுக் கொள்வதையோ, எதிர்காலத்தில் திருத்திக் கொள்வதையோ இப்போதுள்ள தலைமுறை நிராகரிக்கவில்லை.

ஆனால், நியாயப்பாடுகளோடு முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்புள்ள போராட்டங்களை முற்றுமுழுதாக நிராகரிப்பது மாதிரியான முன்வைப்புக்களை இரா.சம்பந்தன் போன்றவர்கள் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆயிரமாயிரம் உயிர் அர்ப்பணிப்புக்களின் மீது தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .