2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் முயற்சி: மஹிந்தவுக்கு பிறந்தநாள் பரிசு

Thipaan   / 2015 நவம்பர் 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது 70ஆவது பிறந்த நாளையொட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம் நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்குவதைப் போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அன்றே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையில் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

அது அன்றைய தினமே ஏகமனதாக அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது. அதன் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒரு குழு அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறானதோர் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அதற்கு முதல் நாள் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவமொன்றின் போது ஜனாதிபதி அறிவித்திருந்தார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராகவிருந்த அண்மையில் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரின் பெயரால் தாம் இந்தப் பிரேரணையை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அப்போது கூறினார்.

சோபித தேரர் தான், மஹிந்தவை பதவியில் இருந்து தூக்கியெறிய சித்தாந்த அடிப்படையை கொடுத்து மஹிந்தவின் எதிரிகளை ஒன்று திரட்டியவர். அவரது பெயரால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தாலும் தற்போதைய நிலையில் அது மஹிந்தவுக்கு சாதமாகவே அமையக் கூடும்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மஹிந்தவிடம் இந்த அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு அவர், 'மிகவும் நல்லது, இப்போதே செய்வதாக இருந்தால் நல்லது' என சுருக்கமாக பதிலளித்தார்.

பதவியில் இருக்கும் போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை வெகுவாக விரும்பி, அதன் அதிகாரங்களைக் கூடிய வரை அனுபவித்தாலும், இப்போது மஹிந்த நேர்மையாகவே இவ்வாறு கூறியிருக்க வேண்டும். ஏனெனில், மஹிந்த இனி மீண்டும் நாட்டின் தலைவராக வர இது இலகுவான வழியாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைத்த அரசாங்கம், கடந்த மே மாதம் 28ஆம் திகதி, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியது. அதன் மூலம் ஒருவர் இரண்டு முறையே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற பழைய நிலைமை மீண்டும் உருவாக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு, இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மூலமும் இதே நிலைமை இருந்த போதிலும் தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை பதவியில் இருக்கும் நோக்குடன், 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அந்த வரையறையை மஹிந்த நீக்கினார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் காரணமாக, மீண்டும் அரச தலைவராக பதிவிக்கு வரும் மஹிந்தவின் எதிர்பார்ப்பு தகர்க்கபட்டது. ஏனெனில், அவர் ஏற்கெனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்திருக்கிறார். ஆயினும், நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும் பட்சத்தில், நிறைவேற்று அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்படும். அவ்வதிகாரங்கள், பிரதமர் மூலமாகவே நடைமுறைக்கு வரும். அதாவது, சித்தாந்தம் எதைக் கூறிய போதிலும் நடைமுறையில் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் உருவாகப் போகிறார். அந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்கு போட்டியிட மஹிந்தவுக்கு எவ்விதத் தடையும் இல்லை. சட்டப் படி, மூன்றாவது முறையாகவும் அரச தலைவராக முடியாத நிலை இருந்த போது, 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதற்கான் வாய்ப்பை மஹிந்த உருவாக்கிக் கொண்டார். ஆனால், மக்கள் அவரை தோல்வியுறச் செய்தனர்.

பின்னர் மைத்திரிபால, அவருக்கு மற்றொரு முறை அரச தலைவராகும் வாய்ப்பை இல்லாமல் செய்யும் வகையில்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால், அதே மைத்திரிபால, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதன் மூலம் மஹிந்தவுக்கு மற்றொரு முறை அரச தலைவராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்.

அதனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யக் கூடாது என்று எவரும் கூற முடியாது. நிறைவேற்று ஜனாதிபதி முறைiயைப் பாவித்து, ஒருவர் எந்தளவு கொடுங்கோலாட்சியை நடத்து முடியும் என்பதை மஹிந்தவே எடுத்துக் காட்டியுள்ளார். இந்த ஆட்சி முறையின் கீழ் அரச தலைவர் நீதிமன்றத்துக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ பொறுப்புக் கூறுவதில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்பட்டு, நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமரிடம் சென்றடைந்த போதும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அவரை விமர்சிக்கலாம். தட்டிக் கேட்கலாம். நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்காடலாம்.

எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதானது வரவேற்கத்தக்க செயலாகும். ஒரு காலத்தில் சிறுபான்மை தலைவர்கள், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஆதரித்தார்கள். ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சகல சமூகங்களினதும் ஆதரவைப் பெற வேண்டும் என்பதால், அவர், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளின் பால் கவனம் செலுத்துவார் என்றதோர் வாதம் அக் காலத்தில் இருந்தது. அதனால் தான், நிறைவேற்று ஜனாதிபதி பதவி சிறுபான்மை மக்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயற்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு முறை கூறினார்.

ஆனால், அந்த வாதம் பிழையானது என்பதை பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளும் நிரூபித்துவிட்டனர். குறிப்பாக மஹிந்த போன்றவர்களிடம் சிறுபான்மையினர் அது போன்றதோர் நிலைமயை எதிர்பார்க்கவே முடியாது என்பது புலனாகியது. அதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க போன்றோரும் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்து மக்களை ஏமாற்றியதை கருத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதி மைத்திரிபால அதற்காக அமைச்சரவைக்கு பிரேரணையொன்றை சமர்ப்பித்தமை வெகுவாக பாராட்ட வெண்டியதொன்றாகும்.

இந்த விடயத்தில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதியைப் பாராட்டும் போது, பதவியில் இருக்கும் போதே நிறைவேற்று ஜனாதிபதி முறைiயை இரத்துச் செய்ய முற்பட்ட பிராந்தியத்தின் முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தாலும் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் பின்னரே அமுலுக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

பதவியில் இருக்கும் போதே நிறைவேற்று ஜனாதிபதி முறைiயை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்த பிராந்தியத்தின் முதலாவது நபர் மைத்திரிபால அல்ல. போதிய ஆதரவு எதிர்க்கட்சியிடமிருந்து கிடைக்காது என்று தெரிந்திருந்த நிலையிலாயினும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 2000ஆம் புதிய அரசியலமைப்பு நகலொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனஸிரின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி தாம் பதவியில் இருக்கும் போதே தமது பதவியின் மிக முக்கிய நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்தார்.

அதேவேளை, பதவியில் இருக்கும் போதே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை எடுத்தார் என்று கூறுவதும் அவரது பதவிக் காலத்தின் பின்னரே அது அமுலுக்கு வரும் என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களாகும்.

ஆயினும், இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேர்மையை சந்தேகிப்பதாக இது அர்த்தப்படாது. இந்த விடயத்தில் இலங்கையில் அரசியல்வாதிகளின் வரலாறு மிகவும் கேவலமானதாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அம் முறையை எதிர்த்து வந்துள்ளன. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை விட நீண்ட காலம் ஸ்ரீல.சு.க தலைவர்கள் இவ் ஆட்சி முறையை நடத்தி வந்துள்ளனர்.

1994 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது, சந்திரிகா குமாரதுங்கவும் 2005 மற்றும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டே பதவிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைச் செய்யவிலிலை. 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குத் உதவுவதாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த காமினி திஸாநாயக்க, அப்போதைய பிரதமராகவிருந்த சந்திரிகாவிடம் தெரிவித்த போதிலும் சந்திரிகா அதனை ஏற்கவில்லை.

அதேபோல், 2010ஆம் ஆண்டு புலிகளின் தலைமையை அழித்ததன் பயனாக, மஹிந்தவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர சுட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றது. ஆனால், அந்தப் பலத்தைப் பாவித்து மஹிந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக, அதனை மேலும் பலப்படுத்திக் கொண்டார். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்கக் கூடிய வகையிலும் ஜனாதிபதியை ஓரளவுக்காவது கட்டுப்படுத்திய அரசியலமைப்புச் சபையையும் சுதந்திர ஆணைக்குழுக்களையும் ஒழிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுத்தார்.

மைத்திரிபாலவும் பிரதானமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டே பதவிக்கு வந்தார். ஆனால் அவர், அந்த விடயத்தில் நேர்மையாக இருக்கிறார் போல் தான் தெரிகிறது. எனினும்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் மட்டுமே இரத்துச் செய்யப்பட்டன. சில அதிகாரங்களை இரத்துச் செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியது.  எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக இரத்துச் செய்யவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும்.

இது அரசாங்கம் எதிர்நோக்கும் பெரும் சவாலாகவே அமையும். ஏனெனில், மக்கள் அரசியல் ரீதியாக தெளிவற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் பல அரசியல் சக்திகளினால் தூண்டப்பட்டே இது போன்ற விடயங்களின் போது செயற்படுவர். குறிப்பாக சம்பிக்க ரணவக்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக காத்திருக்கும் நிலையில், ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் ஏதாவதொரு வாதத்தை முன்வைத்து இது சிங்கள மக்களை பாதிக்கும் என்று பிரசாரம் செய்தால் சிலவேளை எதிர்பார்க்கப்படும் முடிவு கிடைக்காமல் போகவும் கூடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .