2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பழசைக் கிளறிக் கிளறி புதிதாக்குதல்

காரை துர்க்கா   / 2020 மார்ச் 03 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், புலம்பெயர்ந்து கனடா நோக்கிச் செல்லும் தமிழ் மக்களது எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்தது. இவ்வாறு, வேறு பல நாடுகளிலிருந்தும் கனடா நோக்கி, இடம்பெயர்ந்து மக்கள் சென்றார்கள்.  

இவ்வாறு செல்லும் குடியேற்றவாசிகளை, அங்கு சிறையில் அடைத்து வைப்பார்கள். பிறநாட்டு அகதிகள் தங்கியிருந்த அறை, அவர்கள் வெளியே செல்லாதவாறு, பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும்.  ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குக் கதவே கிடையாது.  

இந்நிலையில், ஒரு நாள் சிறைச்சாலையைப் பார்வையிட, அந்நாட்டு அரச உயர் அதிகாரி வந்தார். கதவே இல்லாத அறையில், ஈழத்துத் தமிழ்க் அகதிகள் ஒருவர் கூட, ஓடாமல் இருப்பது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவர்களது நேர்மைக்கு அவர் புகழாராம் சூட்டினார்.  

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரி விடயத்தை விளங்கப்படுத்தினார். அதாவது, ஒருவர் ஓடினால் கூட, மற்றையவர்கள் அவரைத் தப்ப விடாது, அவர்களே எமக்கு பிடித்துத் தருவார்கள். இந்நிலையில், கதவுகள் இவர்களுக்கு எதற்கு?  

இது ஒரு பகிடிக் கதையாக இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்களது ஒற்றுமையீனத்தைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. 

ஆனாலும், இத்தனை ஆண்டுகளாக, எத்தனையே எண்ணற்ற துயரங்களையும் அனுபவித்த பின்னரும், எத்தகைய மாற்றங்களும் தமிழினத்திடையே ஏற்படவில்லை என்பதே துயரம் ஆகும்.  

இதனது பிறிதொரு வகையிலான வெளிப்பாட்டையே, சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ந. திருக்குமரன் பின்வருமாறு தெரிவித்துள்ளார். “ஒவ்வோர் அமர்விலும் பழைய விடயங்களைத் திரும்பத் திரும்பப் பேசி, இரண்டு வருடங்களை வீணடித்து விட்டோம். 

இனிவரும் காலங்களிலாவது ஆக்கபூர்வமாக மக்களுக்குப் பயன் தரக்கூடிய விடயங்களை முன்னெடுத்துச் சிறந்த சபையாகத் திகழப் பாடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

“வீதிகளுக்கு விளக்குப் போடுவதும், வீதிகளைச் சீரமைப்பதும் தவிசாளர் அலுவலர்கள் ஆகியோரில் குற்றம் கண்டுபிடிப்பதும் எமது கடமை அல்ல. நாங்கள் (சபை) இல்லாவிட்டாலும் செயலாளர்கள் இந்த வேலைத்திட்டங்களை வருடா வருடம் மேற்கொள்வார்கள்.  இந்தச் சபையால், மக்கள் பயன் பெறக்கூடியவாறாக, என்ன முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம் என்று, ஒவ்வோர் உறுப்பினர்களும் சிந்தித்தால் பூச்சிய நிலையே காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

மக்கள், தங்கள் மனங்களில் என்ன நினைக்கின்றார்களோ அதை அப்படியே படம் பிடித்ததைப் போன்று, உள்ளதை உள்ளவாறு நகர சபை உறுப்பினர் கூறியுள்ளார். மனந்திறந்து பேசியதற்காக முதலில் அவருக்கு பாராட்டுகள். உள்ளூராட்சி மன்றங்கள் (பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை) மக்களைப் பிரதிநிதித்துவப்படும் முக்கிய மக்கள் அமைப்புகள் ஆகும்.  

உள்ளூர் மட்டத்தில் நிர்வாகம்,  அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் நடைமுறையில், பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்குப் பெருமளவு வாய்ப்புகளை ஏற்பாடு செய்யும் நோக்கத்துடன் பிரதேச சபைகளைத் தாபிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும் அத்தகைய சபைகளின் தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் குறித்துரைப்பதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர் விலகலான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டமே 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.  

இவ்வாறான எண்ணக்கருக்களை மய்யமாகக் கொண்டே, நகர சபை, மாநகர சபைகளது சட்டங்கள் கூட இயற்றப்பட்டு உள்ளன. ஆகவே, அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக, மக்கள் பயனுறும் வகையில் பெருமளவு வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களைத் திருப்பிகரமான வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் ஆற்றி உள்ளனவா என, அம்மன்றங்களின் உறுப்பினர்கள் தங்கள் மனத்தராசில் கணக்குப் போட வேண்டும்.  

நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களோடு நெருங்கிப் பழகுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகும். ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றில் வேட்பாளர் முழு மாவட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களிடம் வாக்குக் கேட்டு,  வாக்குச் சேகரிப்பார்.  

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர், வட்டாரத்தை அடிப்படையாகக் கொண்டே வாக்குச் சேகரிப்பார். அது கூடப் பொதுவாக, அவர் பிறந்து வாழ்கின்ற (வாழ்ந்த) வட்டாரமாகவே இருக்கும். ஆகவே, தனது வட்டாரத்தில் வாழும் மக்களது நாடித்துடிப்பை நன்கு உணர்ந்தவராக இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம்.  

ஆகவே, தனது (சொந்த) ஊருக்காக உழைக்கும் வாய்ப்புகள் மிக உயர்வாக உள்ள உன்னதமான மக்கள் மன்றமே, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும். ஆனால், அவ்வாறான மன்றத்தில், அவ்வாறாக மக்கள் பிரதிநிதிகள் உழைக்கவில்லை என, மக்கள் கவலை கொண்டுள்ளார்கள்.  

நிலைமைகள் இவ்வாறிருக்க, வட்டாரங்களுக்கு உள்ளேயே உறவினர்களுக்கிடையே கூடப் போட்டிகள் ஏற்பட்டு, புதிதாகக் கட்சி விலகல்களும் கட்சி வருகைகளும் நடைபெற்று வருகின்றன.  

அதுவும் கொடும் போரால் முற்றிலும் மு(அ)டங்கிப் போன மக்கள் வாழ்வில், வெளிச்சம் தரக் கூடிய வகையில் தங்களது உச்ச சக்தியைத் தொடுகின்ற அளவில் உழைக்கவில்லை என, மக்கள் அதிருப்தி கொண்டு உள்ளார்கள்.  

கணிசமான சபைகளில், கட்சி அடிப்படையில் பிரிந்து நின்று தலைமையைப் பிடிப்பதற்கு அடிபடுகின்றார்கள். சிலர் தாங்களும் ஒன்றும் செய்யாது, ஏனையோருக்கும் ஒத்துழைப்பும் வழங்காது, குழப்பங்களின் தோற்றுவாயாக உள்ளனர்.  

சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ந. திருக்குமரன் கூறுவது போன்று, உள்ளூராட்சி மன்றங்களில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாது விட்டாலும், வீதிகளுக்குத் தார் போடுவது, வீதிகளுக்கு வெளிச்சம் போடுவது போன்ற பணிகளை மன்றங்களின் செயலாளர்கள் ஊடாகச் சிறப்பாக நடைபெறும்; நடைபெற்றும் வந்தன. இவை வழமையான வேலைகள் ஆகும்.  

ஆனால், இவ்வாறான உள்ளூராட்சி மன்றங்கள் இவற்றையும் தாண்டிப் புதிதாகப் பலவற்றைச் செய்ய(லாம்) வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.  

இவ்வாறே, 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல், மாகாண சபை தோற்றம் பெற்று, முதல் முறையாக நடைபெற்ற போது, மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது.  

நீதியரசர் முதலமைச்சராகவும் வைத்தியர் சுகாதார அமைச்சராகவும் கல்வி (ஓய்வு நிலை) அதிகாரி கல்வி அமைச்சராகவும் வருகின்றார்கள். அவர்கள் வினைத்திறனாக நிர்வாகத்தை நடத்துவார்கள்; எம் வாழ்வில் மாற்றம் மலரும் என, வடக்கு வாழ் மக்கள் மகிழ்ந்தனர்.  

வடக்கு மாகாண சபை, நாட்டின் ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழும் என, உள்ளூரக் கருதினார்கள். ஆனால், இறுதியில் மக்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லையோ அல்லது, ஏனையோர் அவர்களுக்க ஒத்துழைப்பு வழங்கவில்லையோ எனத் தெரியாது. மொத்தத்தில், மக்கள் மாற்றம் கிட்டும் என இருக்க, ஏமாற்றமே கிட்டியது.  

இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கௌரவ உறுப்பினர்களாக உள்ளவர்களே, நாளை மாகாண சபைத் தேர்தலிலும் அதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் என, அடுத்தடுத்த கட்டங்கள் தாண்டிப் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணிக்காக உழைக்கப் போகின்றார்கள்.  

ஆகவே, அவர்களுக்கான அரசியலின் ஆரம்பப் பாடசாலையே உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும். எனவே, ஆரம்பப் பாடசாலையே ஆட்டம் காணக் கூடாது; வகுப்பிறக்கம் நடைபெற்று விடக்கூடாது.  

நிலைமைகள் இவ்வாறிருக்கையில், விரைவாகப் பொதுத் தேர்தல் வரவிருக்கின்றது. பெரு வெற்றியே, தமது இலக்கு என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  நிறுவனரும் ஸ்ரீ லங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் செயலாளருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்து உள்ளார். அதாவது, வெற்றியையும் தாண்டிச் செல்ல உழைக்கப் போகின்றார்கள்.  

தற்போது நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புகள் கூட, ஆளும் கட்சிக்கான வாக்குகளை அள்ளிக் குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன.  

இதில், பிரதேச செயலகங்களின் பிரிவுகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகவே, ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக, மொட்டுக்கான வாக்குகள் திரளப் போகின்றன. இது, வடக்கு, கிழக்குக்கும் பொருந்தும்.  

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களின் தமிழ் உறுப்பினர்கள், இனியும் மற்றவரின் பழசைக் கிளறிக் கொண்டு இருப்பார்களேயானால், புதிதாக எம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது.  

தமிழ் மக்கள், பாரிய உடல் உள நெருக்கீடுகளோடு வாழ்ந்து வருகின்றார்கள். தற்கொலைகள் சர்வசாதாரண நிகழ்வுகள் ஆகி விட்டன. தனித்த தற்கொலைகள் தாண்டி குடும்பமே கூண்டோடு போய்ச் சேருகின்ற பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூமியில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

இந்நிலையில், இன்னும் எத்தனை காலத்துக்குப் பழசைக் கிளறிக் கிளறிக் கதைக்கப் போகின்றோம். 

மற்றவரின் பழசைக் கிளறாமல், நாங்கள் ஏதாவது புதிதாகச் செய்தால்தான் என்ன? செய்வார்களா, முயற்சியும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள்  செய்வதற்கும் செயற்படுவதற்கும் அனுமதிப்பார்களா?  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .