2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பா.ஜ.கவுடன் அ.தி.மு.கவுக்கு உறவா, இல்லையா?

Thipaan   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சிக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் என்ன உறவு என்பதுதான் இப்போது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கேட்கப்படும் கேள்வி. கூட்டணி அமைக்க வேண்டிய கட்சிகள், இந்த உறவின் ஆழம் தெரியாமல் தற்போது தயங்கி நிற்கின்றன. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர், முதன் முறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்துக்;கே சென்று சந்தித்தார்.

நீண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம், முதல்வரும் கொடுத்தார். ஆனால், அதன் பின்னர் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் நெருக்கம் வரும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படியொரு நெருக்கம், இதுவரை வெளிப்படையாக வரவில்லை. இதற்குக் காரணம், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின வாக்குகளை (13 சதவீதம்) பகைத்துக் கொள்ள முதலமைச்சர் விரும்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலிலதாவின் அ.தி.மு.க பெற்ற 45 சதவீத வாக்குகளில், மோடி பிரதமராக வேண்டும் என்று வாக்களித்தவர்களும் இருக்கிறார்கள் என்று தேர்தல் புள்ளிவிவரங்களை அலசுவோர் கருதுகிறார்கள். இந்தமுறை பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால், இந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அ.தி.மு.கவில் உள்ளவர்கள் குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா நினைக்கக் கூடும்.

ஆனால், அவருக்கு அதில் ஒரேயொரு சந்தேகம் இருக்கிறது. மோடி பிரதமரான பின்னர் நடைபெற்று முடிந்துள்ள பல்வேறு மாநிலத் தேர்தல்களில், குறிப்பாக ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு மற்றும் கஷ்மீர், தற்போது நடந்துள்ள பீஹார் மாநிலத் தேர்தல் என்று எல்லாவற்றிலுமே சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை பா.ஜ.க கணிசமாக இழந்து வருகிறது. பிரதமர் மோடிக்காக வாக்களித்தவர்கள், அவர் காட்டும் வேட்பாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராக இல்லை.

இந்தத் தேர்தல் நிலைப்பாட்டை உணர்ந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதால் பலன் இருக்காது என்று கருதுகிறார் என்றே தெரிகிறது.

அதனால்தான், பா.ஜ.க அரசுடன் நட்பு ரீதியாக இருப்பது போல் செயற்படுகிறாரே தவிர, அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணவோட்டத்தில் இல்லை. அது மட்டுமின்றி, அப்படிக் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என்று அ.தி.மு.கவுக்கு விழுந்த வாக்குகளும் விழாமல், 13 சதவீதம் வரையுள்ள சிறுபான்மையின வாக்குகளும் (முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சமுதாய வாக்குகள்) போய் விட்டால், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.கவுக்கு பெரும் சவாலாக மாறிவிடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. அதுவும் சமீபத்தில் முடிந்த பீஹார் தேர்தலும், தற்போது தமிழகத்தை வாட்டி வதைத்துள்ள வெள்ளச் சேதமும் அ.தி.மு.கவுக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் குறித்து மேலும் அச்சவுணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றே தெரிகிறது.

வாக்குப் பரிமாற்றம் ஒரு புறமிருக்க, பா.ஜ.கவுடன் கூட்டணி என்று அ.தி.மு.க அறிவித்த அடுத்த நிமிடமே தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க. தலைமையில் ஓரணியாக சேர்ந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால், தி.மு.க.வுக்கு கூட்டணி கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகக் கூட பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும் விடயத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மௌனம்; சாதிக்கலாம். இந்த மௌனம்;, பா.ஜ.கவினரை பதற்றப்பட வைத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர்களை மிகவும் பாதித்துள்ளது.

இப்போது எழுந்துள்ள சூழ்நிலையை 'பளுது என்று மிதிக்கவும் முடியவில்லை. பாம்பு என்று தாண்டவும் முடியாமல்' தவிக்கிறது தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஒரு நாள் அ.தி.மு.கவை விமர்சிக்கிறார். இன்னொரு நாள் அமைதி காக்கிறார். வேறு ஒரு விடயத்தில் பாராட்டுகிறார். 'வெள்ள நிவாரண விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என்கிறார்.

'மூடு டாஸ்மாக்' பாடலைப் பாடிய கோவனை கைது செய்த விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தனது சகோதரர் இல்லத் திருமணத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்று சந்திக்கிறார். அழைப்பிதழ் கொடுக்கிறார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த மாதிரி இதுவரை செய்தி ஏதும் வரவில்லை.

இத்தனைக்கும், பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு, மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணனையும் முதல்வர் ஜெயலலிதா அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.கவின் மேலிடப் பொறுப்பாளரும், தமிழக பா.ஜ.க விவகாரங்களை கவனிப்பவருமான முரளிதரராவ், 'அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை' என்பதை அழுத்தம் திருத்தமாக இரண்டு மூன்று பேட்டிகளில் கூறி விட்டார். 'தென்துருவமும், வட துருவமும் எப்படிச் சேரும்' என்றே ஒரு பேட்டியில் கூறிவிட்டார்.

இப்போது 'ஜாதிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி அமைக்கப் போகிறோம்' என்றும் 'தாழ்த்தப்பட்ட வாக்காளர்களை திரட்ட கூட்டணி வைக்கப் போகிறோம்' என்று பேசி வருகிறார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின் போது இருந்து விட்டு பின்னர் வெளியேறிய விஜயகாந்த், வைகோ, டொக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர், பா.ஜ.க கூட்டணிப் பக்கமே இதுவரை தலை வைத்துப் படுக்கவில்லை.

விஜயகாந்த், இன்னும் முடிவை அறிவிக்கவில்லை என்றாலும், பா.ஜ.கவுடன் எந்த போராட்டத்திலும் இணைந்து அவர் செயற்படவில்லை. வைகோ வெளியேறி, மக்கள் நல கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார். டொக்டர் ராமதாஸோ, 'அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால், பா.ஜ.கவுடன் கூட்டணி' என்று அறிவித்து விட்டு, 'சென்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் பா.ஜ.கவுடனான கூட்டணி முடிந்து விட்டது' என்று அறிவித்துள்ளார்.

ஆக மொத்தம், பா.ஜ.கவைப் பொறுத்த வரை இன்றைக்கு தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ளது. 'அ.தி.மு.க உங்களுடன் கூட்டணி வைக்கும்' என்ற உத்தரவாதத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியிடமோ அல்லது வேறு தலைவர்களிடமோ கொடுத்திருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.

'தனித்துப் போட்டி' என்று பா.ஜ.க அடிக்கடி அறிவிப்பதிலும், 'அ.தி.மு.க அரசை விமர்சிப்பதிலும் கூட' இந்த அறிகுறிகள் தென்படாத கோபம் இருக்கிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

இந்த இரு கட்சிகளுக்கு இடையிலும் உள்ள உறவு 'கூட்டணி உறவா'  அல்லது 'அரசு மட்டத்திலான உறவா' என்பது, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக வாக்காளர்களுக்குமே புரியவில்லை. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக அ.தி.மு.கவுக்கு வாக்குப் போட்ட சிறுபான்மையின மக்களுக்கும் புரியவில்லை. ஏன், அ.தி.மு.க தொண்டர்களுக்கே கூட தெரியவில்லை. தெளிவும் பிறக்கவில்லை.

அதே நேரத்தில், 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவில்லை' என்ற கதையாக, பா.ஜ.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், அக்கட்சியில் உள்ள தொண்டர்கள் மட்டத்தில், 'அ.தி.மு.கவுடன் நிச்சயம் கூட்டணி உண்டு. பிரதமர் மோடி, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, முதல்வரிடம் சொன்னால் அது நடக்கும்' என்று ஆணித்தரமாக பேசுகிறார்கள்.

அப்படியொரு கூட்டணி அமைத்து மற்ற கட்சிகள் தாங்கள் விரும்பும் கூட்டணியை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா வழி விடுவாரா என்பதைத்தான் தி.மு.க போன்ற கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஏன், வைகோ தலைமையில் உள்ள மக்கள் நல கூட்டியக்கம், டொக்டர் ராமதாஸ் தலைமையில் உள்ள பா.ம.க., விஜயகாந்த் தலைமையில் உள்ள தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் இதே பதற்றத்தில் இருக்கின்றன.

வெள்ள சேதங்கள் தமிழக  மக்களை புரட்டிப் போட்டிருக்கிறது என்றால், பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் 'கூட்டணி விடயத்தில்' விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு மற்ற எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைத்துள்ளது. இந்நிலையில் வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்புங்கள் என்று இந்திய உள்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரும், 'விரைவில் அனுப்புவதாகவும், தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய உதவிகளை செய்யும்' என்றும் அறிவித்துள்ளார். வெள்ளச் சேத நிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதியுதவி மிக முக்கியம். 

ஏற்கெனவே, 'தேர்தல் இலாபத்துக்;காக மத்திய அரசின் நிதியை பயன்படுத்த திட்டமா?' என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், தமிழக அரசுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வரும் மத்திய அரசு, 2016 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும், அந்த தேர்தலுக்கு ஏற்பட வேண்டிய கூட்டணியை மனதில் வைத்தும் செயற்படுமா என்பதுதான் இப்போது அனைத்துக் கட்சி தலைவர்கள் மத்தியிலும் எழுந்துள்ள சிந்தனை. எங்கும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழக வெள்ளச் சேதக் காட்சிகள் மாறுவதற்கு 'கூட்டணி காட்சிகள்' அரங்கேற வேண்டும் என்று ஒரு வேளை மத்திய அரசு முடிவு எடுத்தால், தமிழகத்தில் கூட்டணிகள் அமையத் தொடங்கும் என்பதே இன்றைக்கு யதார்த்தமான நிலைமை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X