2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

புத்திஜீவிகளுக்கு பொருத்தமற்ற மோதல்

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், கடந்த சனிக்கிழமையன்று, சிறுபான்மையின மற்றும் பெரும்பான்மையின மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலால், மஹிந்த ராஜபக்ஷ அணியினர் வெகுவாக மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிகிறது. வழமைபோல, வட மாகாணத்தைப்  புலிகள் கைப்பற்றிக் கொண்டனர் என்றவாறு, அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற பெரும்பான்மையின மாணவர்கள் தாக்கப்பட்டமையையும் அவர்களும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தமையையும் சிறிய விடயமாகக் கருத முடியாது என்றும், தமது ஆட்சிக் காலத்தின் போது, வட பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறத் தாம் இடமளிக்கவில்லை என்றும் அந்த வகையில், உண்மையான நல்லிணக்கம் தமது ஆட்சிக் காலத்தில் தான் நாட்டில் நிலவியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

மஹிந்தவின் முக்கிய சகாவான முன்னாள் வீடமைப்பு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவும், வடக்கில் படுபயங்கர நிலைமை உருவாகியிருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரபாகரன் போராடிய காலத்தில் கூட, இதுபோன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவில்லை என அவர் கூறயிருக்கிறார்.

தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பும், பெரும்பான்மையின மாணவர்கள் தாக்கப்பட்டமை பாரதூரமான விடயம் என்றும் இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் என்றும், எனவே அரசாங்கம், வட பகுதியிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறவோ, வட பகுதியில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவோ கூடாது என்றும் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி, இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுகுகிறது. இந்த மோதலைப் பாவித்து, சமூகங்களுக்கிடையே கலவரங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் உரிமைகளை வென்றெடுக்க, குறிப்பாக கல்வித் துறையில் மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்க மாணவர்களும் தொழில்சார் அமைப்புக்களும் சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்து வரும் நிலையில், மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது மாணவர்களுக்கு மட்டுமன்றி உரிமைகளுக்காக போராடும் அனைவரினதும் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் என, அக்கட்சியின் மாணவர் அமைப்பான சோசலிச மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிசக் கட்சியும் இதே கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்தச் சம்பவத்தைப் பாவித்து, இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் பேச்சுக்களைப் பார்க்கும் போது, தென் பகுதியிலுள்ள ஒரு சிலர் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த விரும்பாவிட்டாலும், சிலர் இதனைப் பாவித்து வடக்கில் அடக்குமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, மஹிந்த ஆதரவாளர்கள் அதனைத் தான் கூறுகிறார்கள்.

தமது ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தீவிரவாதிகள் செயற்படவில்லை என மஹிந்த கூற முற்படுவது முற்றிலும் தவறானதாகும். அக்காலத்திலும் தென் பகுதிப் பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மையினத் தீவிரவாதிகள் இருந்ததைப் போலவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தமிழ்த் தீவிரவாதிகள் இருந்தனர். அவர்கள், புலிகளின் ஞாபகார்த்த தினங்களில் ஞாபகார்த்த நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னரும் இது போன்ற சம்பவங்களுக்காகச் சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே, இதைப் புதிய நிலைமையாகச் சித்தரித்து பெரும்பான்மையின மக்களைத் தூண்ட மஹிந்த எடுக்கும் முயற்சி, மிகவும் மோசமான அரசியல் என்றே கூற வேண்டும்.

பிரபாகரன் பேராடிய காலத்தில் கூட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறவில்லை என விமல் வீரவன்ச தெரிவிக்கும் கருத்தும் அதே நோக்கத்தில் முன் வைக்கும் கருத்தாகும். புலிகள் போராடிய ஆரம்ப காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவர்களது கோட்டையாக விளங்கியது என்பதை ஒன்றில் விமல் மறந்திருக்க வேண்டும் அல்லது அது அவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது அதனை மூடி மறைத்து, தற்போது யாழ்ப்பாணத்தில் பயங்கரமானநிலை உருவாகியிருப்பதாகக் கூறி, பெரும்பான்மையின மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்ட அவர் முயற்சிக்கிறார்.

நாட்டில் இனக் கலவரங்கள் உருவாவதையே இந்தக் கும்பல் விரும்புகிறது போலும். ஏனெனில், அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களைத் தூண்டி, அதன் மூலம் மக்கள் ஆதரவைத் தம் பக்கம் திருப்பிக் கொண்டு மீண்டும் தாம் பதவிக்கு வர முடியும் என அவர்கள் நினைக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்ட போதும், மஹிந்த அணியினர் இது போலவே, இதோ பிரபாகரன் உயிர்பெற்று எழும்பிவிட்டார் என்பதைப் போன்று, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக பெரும்பான்மையின மக்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்தார்கள். அப்போதும் தமது ஆட்சிக் காலத்தில் அது போன்ற பயங்கர நிலைமையொன்று உருவாகியிருக்கவில்லை என்றே அவர்கள் கூறினர். ஆனால், மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும், போர்க் காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தின் பின்னால் வெளிச்சக்திகள் செயற்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி வசந்தி அரசரட்ணமும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் கூறினர் என, செய்திகள் கூறுகின்றன. இருவரும், பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பானவர்கள். அவர்கள், வதந்திகளை நம்பி அவ்வாறு கூறியிருப்பார்கள் என நம்ப முடியாது. அவ்வாறாயின், அந்த வெளிச்சக்திகள் யார் என்பதை அவர்கள் அம்பலப்படுத்த வேண்டும். அதேபோல், அச்சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கவும் கூடாது. ஏனெனில், இவ்வாறு மாணவர்களிடையே மோதல்களைத் தூண்டக் கூடிய சக்திகளை விட்டு வைத்தால், அது எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படக் காரணமாகலாம்.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்பதற்கான வைபவத்தில், பெரும்பான்மையின மாணவர்கள் கண்டிய நடனத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தாலேயே இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற, பல்வேறு கலாசார பாரம்பரியங்களைக் கொண்ட மாணவர்கள் இருக்கும் ஓரிடத்தில் இடம்பெறும் நிகழ்ச்சியொன்றின் போது, அந்தக் கலாசார பன்மைத்தன்மை பிரதிபலிப்பதில் தவறில்லைதான். பரஸ்பரம் அவரவரது கலாசார அம்சங்களை மதிப்பதானது, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்கவும் உதவலாம்.

ஆனால், நல்லிணக்கத்தை பலாத்காரமாகத் திணிக்கவும் முடியாது. எனவே, வழமைக்கு மாறான கலாசார அம்சங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளின் போது அறிமுகப்படுத்தப்படுவதானால், அது சகல சமூகக் குழுக்களினது இணக்கத்துடனேயே நடைபெற வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தின் போது, கண்டிய நடனம் அறிமுகப்படுத்தப்படுவதானால், அது அங்கு கல்வி பயிலும் சகல மாணவர்களினதும் இணக்கத்துடன் இடம்பெற்றால் மட்டுமே நல்லிணக்க நோக்கம் நிறைவேறும்.

நல்லிணக்கத்தின் பெயரால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வைபவங்களில் பெரும்பான்மையினக் கலை அம்சங்களும் இடம்பெற வேண்டும் என ஒருவர் வாதிடலாம். அந்த வாதம் சரியாகவும் இருக்கலாம். அதேவேளை, தமிழ் மாணவர்கள் வழமைக்கு மாறாக அறிமுகப்படுத்தப்படும் பிற சமூகக் கலாசார அம்சங்களை விரும்பாமல் இருக்கலாம். அவர்களது நிலைப்பாடும் சரியாக இருக்கலாம். இங்கு யார் சரியென்பதல்ல பிரச்சினை. யார் சரியாக இருந்தாலும் ஒரு சாரார் விரும்பாத நிலையில் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் மற்றொரு சாராரது கலையம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது முறுகல் நிலையிலேயே முடிந்துவிடும். மேலாதிக்க மனப்பான்மையிலன்றி, உண்மையிலேயே நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு, அவ்வாறு பெரும்பான்மையின கலாசார அம்சமொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த முயற்சித்தாலும், தமிழ் மாணவர்கள் அதனை விரும்பாவிட்டால் அங்கு நல்லிணக்கம் ஏற்படப ;போவதில்லை. இது பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயம்.

மாணவர்களுக்கிடையிலான மோதலின் காரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பெரும்பான்மையின மாணவர்கள் தற்காலிகமாகவேனும் வெளியேறிய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில், தீவிரப் போக்குள்ளவர்கள் இருப்பது வடக்கில் மட்டுமல்ல. தென்பகுதித் தீவிரவாதிகளும் தென் பகுதிப் பல்கலைக்கழகங்களில் வேண்டுமென்றே பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தென் பகுதியின் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமொன்றே கடும் தொனியில் விட்டிருந்த அறிக்கையொன்றை நாம் இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தோம். அவ்வாறானவர்கள் மிக இலகுவாகவே மாணவர்களைத் தவறான வழியில் தூண்டலாம். அது பல்கலைக்கழகங்களை மட்டுமன்றி முழு நாட்டையுமே பாதிக்கலாம்.

தமது கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமானால், அதேவேளை பிற கலாசாரங்களை மதிக்கும் பக்குவம் இருக்குமானால், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத்தளங்கள் ஆகியவற்றில பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாய் வாழ்வதும் கடமையாற்றுவதும் சமபந்தப்பட்ட அனைவருக்கும் பயன்தரக் கூடியதாகும். ஏனெனில், அவ்வாறு வாழ்வதனால் பரஸ்பரம் அனுபவம் மற்றும் அறிவு பரிமாறப்படுகிறது.

ஆனால், இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கும் மிகச் சிலரைத் தவிர ஏனையவர்கள் பிற மதங்களை, கலாசாரங்களை, நடைமுறைகளை மதிப்பதில்லை. எனவே, பிற கலாசாரங்களைச் சிலர் வெறுக்கின்றனர். வேறுசிலர், தமது கலாசாரத்தை மற்றவர்கள் மீது திணிக்கின்றனர். உலகின் பல இடங்களில் போர்கள் வெடிக்கக் காரணமாக இருப்பது, இது போன்ற நிலைமைகளே.

பல்கலைக்கழகங்கள், புத்திஜீவிகளைத் தோற்றுவிக்கும் நிலையங்களாகவே கருதப்படுகின்றன. அவ்வாறான இடங்களில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாவது கவலைக்குரிய விடயமாகும், புத்திஜீவிகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இதை விட நாகரிகமான முறைகள் இருக்க வேண்டும்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தமோதல் தொடர்பாக விடுத்த அறிக்கை மிகவும் பொருத்தமானதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்லினத்தன்மையை குழப்பக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறக் கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கூட்டமைப்பு, பெரும்பான்மையின மாணவர்களை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அழைத்திருப்பதோடு, அவர்களை வரவேற்குமாறு தமிழ் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழலில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்த்தே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாடு பாரதூரமான சட்டத் தொகுதியொன்றை, அதாவது புதியஅரசியலமைப்பொன்றை தற்போது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. மோசமான சம்பவங்களால் அந்த விடயத்திலும் பாதிப்புக்கள் இடம்பெறலாம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .