2021 ஜனவரி 20, புதன்கிழமை

புனைபெயர்களும் முட்டையில் பிடுங்கப்படும் முடிகளும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

பொதுவெளியில் கருத்துகள் முன்வைக்கப்படும்போது, அதை ஒவ்வொரு நபரும் தமது அறிவுக்கும் பண்புக்கும் ஏற்ற வகையிலேயே அணுகத் தொடங்குகின்றனர். என்ன சொல்லப்படுகிறது என்பதை சிலர் கவனத்தில் கொள்கின்றனர். வேறு சிலர், கருத்து வெளியிடும் நபர்கள் குறித்தே அதிகம் அலட்டிக்கொள்கிறார்கள். யார் சொல்கிறார்கள் என்பதை விடவும், என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியமானது. அதனாலேயே, 'சொல்வதைக் கவனி சொல்பவனைக் கவனியாதே' என்று கூறப்படுகிறது.

உலகில் புனை பெயரில் எழுதியவர்களும் எழுதுகின்றவர்களும் ஏராளமானோர் உள்ளனர். புனை பெயரில் எழுதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள்வரை வென்றவர்களும் உள்ளனர். புனை பெயர்களே சிலருக்கு அடையாளமாக இருக்கின்றன. புனை பெயரில் எழுதுகின்றவர்களின் அடையாளத்தை  அறிவதற்கு அறிவார்ந்தோர் முற்படுவதில்லை. கருத்துகள் பற்றியே அவர்கள் கவனத்தில் கொள்கின்றனர்.

கனக சுப்புரத்தினம் என்கிற கவிஞர் பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அப்படியொரு கவிஞர் இருந்தார் என்றால், அப்படியா என்றே அதிகமானோர் கேட்பார்கள். ஆனால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றிக் கேட்டால், குழந்தைகளுக்குக் கூட 'தெரியும்' என்பார்கள். இதில் பகிடி என்ன தெரியுமா? மேலே சொன்ன இரண்டு பெயர்களும் ஒருவருடையதே. பாரதிதாசனுடைய இயற்பெயரே கனக சுப்புரத்தினம். சுப்ரமணிய பாரதியார் மீதும் அவரின் எழுத்துகள் மீதும் கொண்ட பெருங்காதலால், பாரதிதாசன் என்கிற புனை பெயரை கனக சுப்புரத்தினம் தனக்குச் சூட்டிக்கொண்டு எழுதத் தொடங்கினார்.

ஊடகத்துறையிலும் புனை பெயரில் எழுதுகின்றவர்கள் உள்ளனர். புனை பெயர் என்பது முகமூடி அல்ல. தமது பத்திரிகையில் புனை பெயரில் எழுதுகின்ற ஊடகவியலாளர்கள் குறித்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அறிவார். சிலவேளைகளில் தங்களின் பத்திரிகையில் எழுதும் ஊடகவியலாளர்களுக்கு பிரதம ஆசிரியர்களே புனை பெயரைச் சூட்டி விடுகின்றனர். முட்டையில் முடி பிடுங்கும் வகையினரே புனை பெயரில் எழுதுகின்றவர்கள் தொடர்பில் புலனாய்வு செய்யத் தொடங்குகின்றனர்.

'ஹரி பொட்டர்' என்கிற திரைப்படம் பற்றி நாம் அறிவோம். மாயாஜாலங்கள் நிறைந்த அந்தத் திரைப்படமானது, ஹரி பொட்டர் என்கிற புனைக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஜோஆன் ரோவ்லிங் எனும் பெண் எழுத்தாளரே ஹரி பொட்டர் என்கிற கதையை எழுதினார். அந்தக் கதையை புத்தகமாக்கியபோது, வெளியீட்டாளரின் கோரிக்கைக்கு இணங்க ஜோஆன் ரோவ்லிங் தனது பெயரை ஜே.கே. ரோவ்லிங் என மாற்றிக்கொண்டார். ஜே என்பது ஜோஆன் எனும் பெயரின் ஆங்கில முதல் எழுத்தாகும். கே என்பது கத்லீன் என்கிற பெயரின் ஆங்கில முதல் எழுத்தைக் குறிக்கும். கத்லீன் என்பது கதை ஆசிரியருடைய பாட்டியின் பெயர். ஹரி பொட்டர் நூலின் 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. தனது எழுத்துகள் மூலம் அதிக பணம் உழைப்பவர்களில் ஜே.கே.ரோவ்லிங் பிரதானமானவர். ஜே.கே.ரோவ்லிங்கிடம் சென்று, 'ஏன் நீ இயற்பெயரை மாற்றிக்கொண்டாய்' என்று கேட்டு, யாரும் முட்டையில் முடி பிடுங்கியதில்லை.

தமிழில் புனை பெயரில் அறியப்பட்ட மேலும் பல எழுத்தாளர்கள் உள்ளனர். கவிஞர் கண்ணதாசன் அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். தமிழ் திரைப்படப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த அந்தக் கவிஞனின் சொந்தப் பெயர் முத்தையா. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்தார். அவரின் தாய் விசாலாட்சி, தந்தை சாத்தப்பனார். திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, தமிழ் இலக்கியத்தின் எல்லாத் திசைகளிலும் தன் எழுத்துகளால் பயணித்தவர் கண்ணதாசன். அவருடைய புனை பெயரே அவரின் அடையாளமாகும். இயற்பெயரை புனை பெயர் விழுங்கிவிட்டது. புனை பெயரே அவரின் சொந்தப் பெயரானது. ஆனாலும், கண்ணதாசனிடம் யாரும் வந்து, ஏன் முகமூடி அணிந்துகொண்டு எழுதுகிறாய் என்று கேட்டு, முட்டையில் முடி பிடுங்கியதாகத் தெரியவில்லை.

தமிழில் புனை பெயரால் அறியப்பட்டவர்களில் இன்னுமொரு பிரபலம் -எழுத்தாளர் சுஜாதா. தமிழ் எழுத்துலகில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கியவர்களில் சுஜதாவும் ஒருவர். எஸ்.ரங்கராஜன் அவரின் இயற்பெயராகும். தனது மனைவி சுஜாதாவின் பெயரை புனை பெயராகக் கொண்டு எழுதினார். இவர் பற்றிய இந்த விவரங்கள் தெரியாத வாசகர்கள், சுஜாதா ஒரு பெண் எழுத்தாளர் என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் நூல்களாக வந்து நிறையவே விற்பனையாகியுள்ளன. சுஜாதா இறந்த பின்னரும் அவரின் நூல்கள் மீள்பதிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சுஜாதா பெயரில் எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சுஜாதா பெண் பெயரில் முகமூடி அணிந்துகொண்டு எழுதியதாக யாரும் அவரை விமர்சிக்கவில்லை, முட்டையில் முடி பிடுங்கியதில்லை.

ரிகாடோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பசல்டோ என்பது அந்த இளைஞனின் பெயர். சிலி நாட்டைச் சேர்ந்தவர். இள வயதிலேயே இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு. கவிதைகளும் எழுதினார். ஆனால், இந்த எழுத்து இலக்கியமெல்லாம் அவருடைய தந்தைக்கு அறவே பிடிக்கவில்லை. எழுதாதே என்று கூறிவிட்டார். ஆனாலும், தந்தைக்குத் தெரியாமல் அந்த இளைஞர் கவிதைகளை பத்திரிகைகளுக்கு எழுதினார். தந்தை கண்டுபிடிக்க முடியாத ஒரு புனை பெயரை அதற்காக உருவாக்கினார். பப்லோ நெருடா என்பது அந்தப் பெயராகும். 1971ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பப்லோ நெருடாவுக்கு வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பப்லோ நெருடா மரணமானபோதும், இறவாமல் அவரின் கவிதைகள் இன்றும் வாழ்கின்றன. செக்கொஸ்லாவாக்கிய கவிஞர் ஜோன் நெருடாவின் எழுத்துகள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, ரிகாடோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பசல்டோ எனும் அந்த இளைஞர், பப்லோ நெருடா என்று தனக்கான புனை பெயரை உருவாக்கிக்கொண்டார். ஆனாலும், 'இயற்பெயரைத் தொலைத்துவிட்டு, புனை பெயருக்குள் ஏன் நீ ஒளிந்து கொண்டாய் என்று கேட்டு, பப்லோவிடம் யாரும் முட்டையில் முடி பிடுங்கவில்லை.

சமகால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் சாரு நிவேதிதா. கே.அறிவழகன் என்பது இயற்பெயர். இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரை ஒரு பெண் எழுத்தாளர் என்று இன்றும் சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும், ராஸலீலா, எக்ஸைல் மற்றும் ஸீரோ டிக்ரி போன்றவை சாருவின் நாவல்களாகும். மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் என்கிற தொகுப்பில் சாருவின் சிறுகதைளைப் படிக்க முடியும். இவை தவிர ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். Charu Nivedita என்கிற பெயரில் முகநூலில் உள்ளார்.

தமிழில் வித்தியாசமான எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்கிற தேடல் கொண்டவர்களுக்கு சாரு நிவேதிதாவின் எழுத்துகள் நிச்சயம் தீனி போடும். இவரின் எழுத்துகள், முகத்தில் அறையும் வகையிலானவை. சாருவின் எழுத்துகளை விமர்சிப்பவர்கள் கூட, பெண் பெயரில் சாரு எழுதுகின்றமை குறித்து லூசுத்தனமாகப் பேசி முட்டையில் முடி பிடுங்கியதில்லை.

இலங்கையில் பிறந்தாலும், இந்திய எழுத்தாளராகவே அறியப்பட்டவர் பிரமிள் என்கிற தருமு சிவராம். கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர் மற்றும் ஓவியர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். இவருடைய கவிதைகள் சிலாகிக்கத்தக்கன. பிரமிள் மட்டுமன்றி, இருபதுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் இவர் எழுதினார். பிரமிள் என்கிற புனை பெயரில் அவர் எழுதியபோது, 'ஒளிந்துகொண்டு எழுதுகிறார்' என்று அவரை யாரும் வசைபாடியது கிடையாது. அப்படி முட்டையில் முடி பிடுங்கும் ஆசாமிகள், பிரமிளின் வாசகர்களாக இருக்கவும் முடியாது.

நவீன தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன் புனை பெயராலேயே புகழ்பெற்றவர். 1906ஆம் ஆண்டு பிறந்து 1948ஆம் ஆண்டு மரணித்துப்போனார். இடைப்பட்ட 42 வருட வாழ்க்கையில் பல நூற்றாண்டுகளையும் தாண்டி நின்று நிலைக்கும் சிறுகதைகளை தமிழுக்குத் தந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். 1930 களில் எழுதப்பட்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகளை இப்போது படித்தாலும் ஆச்சரியமாக இருக்கும். அவற்றிலுள்ள நையாண்டிகள் அற்புதமானவை. புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகள் அடங்கிய அவருடைய முழுமையான தொகுதி, நூலாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தனைக் கொண்டாடுவோர் மட்டுமன்றி, அவரின் எழுத்துகள் தொடர்பில் விமர்சனம் கொண்டோரும், அவரின் புனை பெயர் தொடர்பில் கிறுக்குத்தனமான கருத்துகளை முன்வைத்தது கிடையாது. புதுமைப்பித்தன் முகமூடி அணிந்துகொண்டு, புனை பெயரில் எழுதியதாக முட்டையில் முடி பிடுங்கியோர் என்று யாருமில்லை.

புனை பெயரில் எழுதிப் புகழ் பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவர் தராக்கி. சொந்தப் பெயர் தர்மரத்தினம் சிவராம். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். தராக்கி என்கிற புனை பெயரில் தனது கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிவந்தார். இவர் 2005ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராமின் எழுத்துகள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் கூட, 'தராக்கி என்கிற புனை பெயரில் ஏன் எழுதுகிறாய்' என்று யாரும் முட்டையில் முடி பிடுங்கியதாக நாம் அறியவில்லை.
இப்படி புனை பெயரில் எழுதியவர்களின் பட்டியல் மிக நீண்டதாகும்.

தமிழில் நாம் மிக நன்கு அறிந்த எழுத்தாளர்களான ஞானி, மதன், சுரதா, அகிலன், புஷ்பா தங்கத்துரை, தமிழ்வாணன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகிய அனைத்தும் புனை பெயர்களே. புனை பெயர்களில் எழுதுவதொன்றும் பாவப்பட்ட செயலோ, சமூகக் குற்றமோ அல்ல. மேலும், அது முட்டையில் முடி பிடுங்குமளவுக்கான விவகாரமும் அல்ல.
இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவருக்கு 'பாபு நாநா' என்று ஒரு பெயர் இருக்கிறது. அது புனை பெயரா? பட்டப் பெயரா? இல்லை, செல்லப் பெயரா என்று தெரியவில்லை. வேண்டுமானால், இது குறித்து நோண்டிப் பார்க்கலாம். சுவாரசியமாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .