2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 நவம்பர் 27 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றது. இம்முறை, புதிய தலைமை என்பது, இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்கிற விடயம், முன்னிறுத்தப்படுகின்றது.  

உரிமைப் போராட்டத்தை, வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சமூகத்தில் புதிய, நம்பிக்கையான, இளம் தலைவர்கள் எழுந்து வருவது, உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்; வரவேற்கப்பட வேண்டியது ஆகும். இது குறித்து, மாற்றுக் கருத்துகள் இருக்க வேண்டியதில்லை.  

ஆனால், ஒரு சமூகமாக, அதுவும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, உரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சமூகமாக, இறுதிப் போருக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், நாம் என்ன செய்திருக்கின்றோம் என்று, பகுத்தாய்வது மிகவும் சிறந்தது.   

ஏனெனில், பிரபாகரன் காலத்துக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் என்பது, பெரும்பாலும் தேர்தல் வழிக்குள் சுருக்கப்பட்டுவிட்ட சூழலில், புதிய தலைமைகளை, மாற்றுத் தலைமைகளை உருவாக்குவதும், அதைச் சமூக மயப்படுத்துவதும் நீண்ட உழைப்பைக் கோரும் செயற்பாடு ஆகும். இங்கு யாரும், ‘சூரிய தேவன்’ ஆக ஒரே நாளில் உதித்துவிட முடியாது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்டவர்கள், 80 வயதைக் தாண்டியவர்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா 75 வயதைக் கடந்துவிட்டவர். 

இதில், தீர்மானங்களை எடுக்கும், கட்சியை வழிநடத்தும் நபர்களாக, சம்பந்தனைத் தவிர யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தமிழரசுக் கட்சியின் தலைவராக, மாவை ஓரளவு கவனம் பெற்றாலும், அவரைத் தாண்டித் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள், அந்தக் கட்சிக்குள் இருக்கிறார்கள்.  

கூட்டமைப்புக்கு மாற்றாக, ஒரு கட்டத்தில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களின் ஒப்பீட்டில் இளம் தலைவர். வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், அவர் பத்து வருடங்களாக, அவரின் தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸோடு முன்னணியையும் நடத்தி வருகின்றார். அண்மையில் கட்சியை ஆரம்பித்த, பொ. ஐங்கரநேசனை விடவும், கஜேந்திரகுமார்தான் இளம் தலைவராக இருக்கிறார்.  

இந்தப் பத்தியில், இதுவரை எழுதப்பட்ட அனைவரும், ஏதோவொரு கட்டத்தில் கூட்டமைப்போடு சம்பந்தப்பட்டவர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள். 

சிலர் முரண்பாடுகள், அதிருப்திகளால் கூட்டமைப்பைவிட்டு வெளியேறியவர்கள்; வெளியேறிய அனைவரும், தங்களைப் புதிய தலைமையாக முன்னிறுத்தியவர்கள். ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமாரும், அண்மைய காலத்தில் விக்னேஸ்வரனும் அதன்வழி பேசப்பட்டவர்கள். 

கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் பக்கத்தில் நிற்கிற அனைத்துத் தரப்புகளும், இவர்களைக் குறித்து ஒளிவட்டங்களை வரைத்து, ஊடகங்களில் மாற்றுத் தலைமை அடையாளத்தைக் கொடுத்தார்கள். 

ஆனால், வார இறுதிப் பத்திரிகைகளின் கட்டுரைகளில் மாற்றுத் தலைமையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இவர்கள் யாரும், மக்களிடம் தங்களை எந்தவொரு கட்டத்திலும் நிரூபிக்கவே இல்லை.  

தமிழ்த் தேசியப் பரப்பில், மாற்றுத்தலைமைக்கான வெளி, கடந்த பத்து ஆண்டுகளாக, அநாதரவாகக் கிடக்கின்றது. அதனை, அவசரமாக யாரைக் கொண்டாவது நிரப்பிவிட வேண்டும் என்கிற ஒருவித வெறியே, அதற்காக அந்தரப்படும் தரப்புகளிடம் காணப்படுகின்றது. 

மாறாக, மாற்றுத் தலைமை என்பது, அதன் உண்மையான வடிவங்களின் வழி, நிலைபெற வேண்டும் என்கிற விடயம், கருத்தில் எடுக்கப்படுவதில்லை.  

2015இல் ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, கிடைத்த ஜனநாயக வெளியைக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியலும், அதனோடு ஒட்டிய சிவில் சமூகப் பரப்பும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. 

ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில், நடந்திருப்பது என்ன என்பதை நோக்கினால், பெரும் அபத்தங்களின் ஆட்டத்தாலேயே அரங்கு நிறைக்கப்பட்டிருக்கின்றது என்பதே ஆகும். 

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, தோல்வி முகத்தோடு தங்காலை சென்ற ராஜபக்‌ஷக்கள், இந்தக் காலப்பகுதியில், வெற்றியை மீட்டெடுத்து, ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறி அமர்ந்துவிட்டார்கள். 
ஆனால், நாங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நின்ற அதேஇடத்தில், இன்றும் புதிதாக நின்றுகொண்டிருக்கின்றோம்.  

தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ் மக்கள் பேரவை போன்றதொரு புத்திஜீவிகள்(?), செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்களின் கட்டமைப்பொன்று தவிர்க்க முடியாதது. அது, அரசியல் கட்சிகளுக்கும் தலைமைகளுக்கும் அழுத்தம் வழங்கக்கூடிய வகிபாகத்தை ஏற்றிருக்க வேண்டும். 

ஆனால், பேரவை அதைச் செய்ததா என்றால், படுமோசமாகச் சிவில் வெளியை நாசமாக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், கட்சிகளுக்கும் தலைமைகளுக்கும் அழுத்தங்களை வழங்கும் அளவுக்கான நிலையை, ஒரு கட்டமைப்பு அடைய வேண்டும் என்றால், அது அனைத்துத் தரப்பு மக்களிடமும், நம்பிக்கையைப்பெற வேண்டும். 

ஆனால், யாழ்ப்பாணத்து மய்ய வாத கோஷ்டிகள் என்கிற நிலையைத் தாண்டி, பேரவை தன்னை வளர்க்கவில்லை; நம்பிக்கையும் பெறவில்லை. 

‘எழுக தமிழ்’ என்கிற ஒற்றை விடயத்தைத்தவிர, பேரவை எதையும் நிகழ்த்தியும் காட்டவில்லை. அதுவும்கூட, பேரவைக்குள் இருந்த கட்சிகளாலேயே சாத்தியப்பட்டது. 

மாற்றுத் தலைமைக்கான வெளியைச் சிதைத்து, விக்னேஸ்வரனுக்குக் கட்சியை ஆரம்பித்துக் கொடுத்ததை வேண்டுமானால், பேரவை பெருஞ்சாதனையாகக் கொண்டு சுமக்கலாம்.  

அன்றைக்குப் பேரவைக்குள் இருந்துகொண்டு, விக்னேஸ்வரன் மீது ‘ஜனவசியத் தலைவர்’ என்று கூறி, அவரைப் ‘பப்பாசி’ மரத்தில் ஏற்றியவர்கள்தான், இன்றைக்குப் புதிய, இளம் தலைமை குறித்துப் பேசத் தலைப்படுகிறார்கள். 

மக்களிடம் எந்தவித நம்பிக்கையையும்பெறாத, தன்னுடைய நிலைப்பாடுகளிலேயே பற்றில்லாத 80 வயது விக்னேஸ்வரனைக் கொண்டு, மாற்றுத் தலைமைக்கான வெளியை நிரப்ப முயன்றவர்களுக்கு, இளம் தலைமை குறித்து உரையாடுவதற்கான தார்மீக உரிமை இருக்கின்றதா, என்ற கேள்வி எழுகின்றது.  

கூட்டமைப்புக்குள் கட்சி ஜனநாயகம் இருக்கின்றதா என்றால், ‘இல்லை’ என்பதே சரியான பதில் ஆகும்.

தமிழரசுக் கட்சி வைத்ததுதான் சட்டம் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதிலும், சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரனைத் தாண்டி, முடிவுகளை எடுக்கும் நிலை, அந்தக் கட்சிக்குக்குள்ளும் இல்லை. 

ஆனால், சம்பந்தன் காலத்துக்குப் பின், அந்தக் கட்சியை வழிநடத்துவதற்கான நபர்களை, அந்தக் கட்சி அடையாளப்படுத்தி வந்திருக்கின்றது. அந்த நபர்களை, வடக்கு, கிழக்கு மக்களிடம் பிரதேச எல்லைகள் தாண்டி, முன்னிலைப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகின்றது. 

சம்பந்தன் காலத்துக்குப் பின்னரான கூட்டமைப்பின், தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மிக்க நபர், யார் என்கிற கேள்வி, கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடம் இல்லை. அதற்கு, அவர்கள் பதிலோடுதான் இருக்கிறார்கள். அந்தப் பதிலோடு, மக்களும் பெரும்பாலும் இணங்கிச் செல்லத் தலைப்பட்டுவிட்டார்கள். 

ஏனெனில், மாற்றுத் தலைமைக்கான வெளியைத் தகுதியில்லாதவர்களை அல்லது, தங்களை நிரூபிக்காதவர்களைக் கொண்டு, யாழ். மய்யவாதக் கோஷ்டி நிரப்ப முயற்சித்ததன் விளைவு இது.  

தமிழ்த் தேசிய அரசியலில், எல்லோருக்கும் ‘பிரபாகரன்’ ஆக வேண்டும் என்பதே பெரு விரும்பம். தங்களின் முடிவே, இறுதியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலானது அது. 

“....பார்க்கலாம் தம்பி, பேசுவோம் தம்பி...” என்று சம்பந்தன் உரையாடல்களில் கூறினாலும், தான் எடுத்துவிட்ட முடிவை, அவர் மாற்றுவதில்லை. கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி, சுமந்திரனும் நகர்ந்துவிட்டார். 

தாங்கள் எடுக்கும் முடிவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்கிற நிலை உருவாகிவிட்ட பின்னர், எந்தத் தலைவரும், அந்த நிலையிலிருந்து இறங்கிவருவதில்லை. அப்படியான தலைவர்களை, இறங்கிவர வைப்பதற்கு, மக்களிடம் மாற்றுத் தெரிவு ஒன்று இருக்க வேண்டும்.  

மாற்றுத் தெரிவு என்பது, இருப்பதில் சிறந்தது என்கிற நிலையை ஏற்படுத்துவது அல்ல; மாறாக, இது சிறந்தது என்கிற ஆணித்தரமான சூழலை உருவாக்குவது ஆகும். 

அப்படியான சூழல், ஒருசில நாள்களிலோ, மூடிய அறைச் சந்திப்புகளிலோ, ஓய்வுநாள் மேடைப் பேச்சுகளிலோ, வார இறுதி அரசியல் ஆய்வுகளாலோ மட்டும் ஏற்பட்டுவிடாது. 

அதற்கு, மக்களின் மனங்களை அறிந்துகொண்டு, வெயில், மழை பார்க்காது உழைக்க வேண்டும். முதலில், அது குறித்துச் சிந்திப்பது, அனைவருக்கும் நல்லது.

அப்போது, புதிய தலைமை குறித்த சிந்தனை, மக்களிடம் இயல்பாக நம்பிக்கை பெறும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .