2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மாற்றம் எங்கு தேவை?

Niroshini   / 2017 ஜூன் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களாக வரட்சி வானிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையை, கடந்த 24ஆம் திகதியில் இருந்து பெய்துவரும் அடைமழை புரட்டிப்போட்டது. குறிப்பாக, தென்மாகாண மக்களை இந்த மழை, நிலைக்குலைய வைத்து, அந்த மாகாணத்தை மயான பூமியாகவே மாற்றிவிட்டதெனலாம்.   

அடை மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில், 202 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 112 பேர் காயமடைந்தும், 99 பேர் காணாமலும் போயுள்ளனர். இதேவேளை, இந்த அனர்த்தங்களால், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளானவை, முழு நாட்டையும் மாத்திரமன்றி உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு அனர்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய அனர்த்தமாக, இச்சம்பவம் கருதப்படுகிறது.  

கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தம் காரணமாக, தென் மாகாணத்தில், சுமார் 264 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 8 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் 26,284 வீடுகள் சேதமடைந்திருந்தன.  

இந்தப் பாரிய அழிவின் கொடுமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து, இழந்த அனைத்தையும் மீளப்பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த மக்கள், மீண்டும் நாம் இந்த இயற்கையின் கோரபிடிக்குள் சிக்கிக்கொள்வோம் என்று அறியாமலேயே நாட்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அதில் எத்தனை பேர் தங்களுக்கான மரண வாசல் கதவு திறந்திருக்கும் என்பதை அறிந்திருப்பார்கள்?   

அன்று இந்த இயற்கை அனர்த்தம் எவ்வாறு தென் மாகாணத்தை இருளுக்குள் தள்ளி குடிக்கக்கூட நீர் இன்றி நடுத்தெருவுக்கு அழைத்து வந்ததோ, அதே நிலைமைக்கு, சொல்லி வைத்ததுபோல், 2017 ​அதே மாதத்தில் அந்த மாகாணத்தை மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.   

கணவனை இழந்த மனைவியும் மனைவியை இழந்த கணவனும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் என, எண்ணிலடங்காதோர் அநாதைகளாக்கப்பட்டு, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி இருளிலும் வௌ்ள நீருக்கு நடுவிலும் தத்தளித்துக்​கொண்டிருக்கின்றனர்.  

நாட்டின் நாலா பாகங்களில் இருந்தும் அதேபோல், சர்வதேச நாடுகளின் பக்கங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. சுமார் 44 நாடுகளின் உதவிகள், இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   

அதேபோல், சேதமடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான முழுச் செலவையும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ​அதேவேளை, அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதியையும் தடை செய்து, அதன் மூலம் கிடைக்கும் நிதியையும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதகால சம்பளத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.  

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த அரசாங்கம் முண்டி அடித்துக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்குவதால், பாதிக்கப்பட்ட மக்களின் மனதைக் குளிரவைக்க முடியுமா என்பது சந்தேகமே.

இத்தனை காலமும் குருவி சேர்ப்பது போல் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு வாங்கிய பொருட்களுடன் சொந்த வீடுகளில் வாழ்ந்த இம்மக்களுக்கு, அரசாங்கம் வழங்கும் இந்த நிவாரண உதவி போதுமாக இருக்குமா? அது அவர்களை முன்னரைப் போல சந்தோசமாக வாழ வைக்குமா என்பது கேள்விக்குறியே.

அது தவிர, உரிய நிவாரண உதவிகள், முழுமையாக மக்களிடம் போய்ச் சேருகின்றனவா? அவ்வாறு சேரும் நிவாரண உதவிகள் மக்களுக்கு போதுமானதாக உள்ளனவா, என்பதும் சந்தேகமே.   

இவ்வாறு தொடர்ந்து அரங்கேறி வரும் இயற்கை அனர்த்தத்துக்கு எம்மால் முற்றுப் புள்ளிவைக்க முடியாவிட்டாலும், அது குறித்து முன்கூட்டியே பாதிக்கப்படப்போகும் பிரதேசங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தால், இவ்வளவு உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்காது என மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.   

இதற்கான முழுப் பொறுப்பையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சே ஏற்க வேண்டும். இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படப்போகின்றமையை தாம் அறிந்திருக்கவில்லை என்று அந்த அமைச்சு ஊடகங்களுக்கு வெளிப்படையாகக் கூறியுள்ளது.  

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது, அனர்த்தங்கள் ஏற்பட முன், அதற்காக முன்கூட்​டியே தயார் நிலையில் இருத்தல், அனர்த்தம் ஏற்படும் போது, அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள், மிக விரைவாக, தமது இயல்பு வாழ்க்கைக்குச் செல்வதை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதாகும்.

இவ்வாறானதொரு கடமையில் இருந்து விலகி, இந்தக் கருத்தை, அமைச்சு வெளியிட்​டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.   

அனர்த்தம் நடைபெற்ற பின்னர், நிவாரண நடவடிக்கைகளைச் சேகரித்துக் கொடுக்கும் ஒரு பிரிவாகவே, இந்த அமைச்சு செயற்பட்டு வருகிறது. இத்தனைக்கும் மேலாக, நாடு இவ்வாறானதொரு அழிவைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், இந்த நாட்டிலேயே இல்லை என்பது, ​குறிப்பிடத்தக்கது.   

மெக்சிகோவில் நடைபெற்ற வருகின்ற, அனர்த்தங்களைத் தடுப்பது தொடர்பான மாநாடொன்றில் அவர் கலந்துகொள்ளச் சென்ற நிலையில், கடந்த 24ஆம் திகதியன்று, “இயற்றை அனர்த்தமொன்றின் போது, உட்கட்டமைப்புச் சேதங்களைக் குறைத்து, பொருளாதார அழிவுகளை எவ்வாறு கட்டுப்படுத்திக்கொள்வது” என்ற தொனிப்பொருளிலான உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

அவரது உரைக்குப் பின்னரான, அதாவது, கடந்த 26ஆம் திகதியன்றே, இலங்கை இந்த ​மாபெரும் வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்களை எதிர்கொண்டது. இருப்பினும், இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவர் இலங்கைக்கு பறந்துவரவில்லை.

மாறாக, மெக்சிகோவில் இருந்துகொண்டு, கடந்த 29ஆம் திகதியன்று, இலங்கையிலுள்ள அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் துனேஷ் கன்கந்தவைத் தொடர்புகொண்டு, அனர்த்தங்கள் தொடர்பில் கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குப் பறந்துள்ளார்.   

   அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அவசர நிலைமைகளின்போது எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விசேட அனர்த்த அபாய பிரிவு ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அனர்த்தங்கள் குறித்து அக்கறையுடன் செயற்படுவதற்காக அமைச்சொன்று இருக்கின்றபோது, இந்தப் புதிய பிரிவு எதற்காக நிறுவப்படுகின்றது என்ற கேள்வியும் எழுகிறது.   

மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஒத்துக்கொண்டாலும், ஒரு பக்கம் தொழில்நுட்பத்தின் மீது பழி சுமத்துகின்றது. அல்லது மக்கள் மீது பழியைச் சுமத்துகின்றது.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இக்கால கட்டத்தில், அரசாங்கத்தின் இக்காரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகவே உள்ளது. இது, இந்த அரசாங்கம் மட்டுமல்ல. கடந்த அரசாங்கங்களும் இவ்வாறான குற்றச்சாட்டுகளையே தொடர்ந்தும் முன்வைத்து வந்திருந்தன.   

இதற்கு நல்ல​தோர் உதாரணம், அவுஸ்திரேலியாவில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற அனர்த்தங்களாகும். இந்த அனர்த்தங்களை அந்நாட்டு அரசாங்கமும் ஊடகங்களும் கையாண்ட விதம், உயிரிழப்புக​ளை நினைத்துக்கூட பார்க்கமுடியாதளவுக்குக் கட்டுப்படுத்தியது.

இதற்காக, அந்நாட்டு அரசாங்கம், ஊடகங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது என்றே கூறலாம். ஆரம்பத்தில், “கூகுள் வெதர்” என்ற செய்மதிக் காட்சியின் மூலம், நாட்டுக்கு வரப்போகும் ஆபத்து தொடர்பில், மக்களுக்கு அறிவித்தது. அதன்பின்னர், காற்றழுத்தம், மேகங்களின் அமைவிடங்கள், எதிர்கொள்ளப்போகும் மழைவீழ்ச்சி, காற்றின் வேகம், போன்றன குறித்து, எதிர்வுகூறி, அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலும் விளக்கமளித்தது. இந்நிலைமையை, மணித்தியாலத்துக்கு மணித்தியாலம், மக்களுக்கு அறிவுறுத்தி வந்தது.   

இவ்வாறான சந்தர்ப்பத்தில், மக்கள் என்ன செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாது, பாதுகாப்பான இடங்கள் எங்கே உள்ளன என்பவை தொடர்பிலான அறுவுறுத்தல்கள், மக்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் எங்கே உள்ளன.

அவற்றின் தொலைபேசி இலக்கங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொதிகள் தொடர்பான விவரங்கள், அப்பொதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் என்பன தொடர்பிலும், விளக்கப்பட்டன.  

அந்தப் பொதியில், சிறிய ரக டோர்ச் ஒன்று, குடிநீர்ப்போத்தலொன்று, விட்டமின்கள் அடங்கிய பழப்பானப் போத்தலொன்று, சொக்கலேட் ஒன்று, ஷீஸ் ஒன்று, பிஜாமா ஒன்று, உள்ளாடைப் ​​பெக்கெட் ஒன்று, கிருமிநாசினி மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ​பெம்பர்ஸ் பக்கெட் போன்றன உள்ளடங்குகின்றன.   

இதேவேளை, வௌ்ளத்தில் நிரம்பியுள்ள பகுதிகள், விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் மூலம், மக்களுக்கு காண்பிக்கப்படுகின்றன. அத்துடன், பிரதமர், முதலமைச்சர், ஆளுநர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், மீட்புப் பணியாளர்கள், நிவாரண உதவியாளர்கள் என, அனைத்துத் தரப்பினமும், மழையில் நனைந்துகொண்டு, சகதியில் குளித்துக்கொண்டு மக்களோடு மக்களாக, மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவை, அரசியல் சுயலாபம் பெற்றுக்கொள்வதற்காகச் செய்யப்படும் செயலாகத் தெரியவில்லை. ஆபத்துகளைச் சந்தித்துள்ள மக்களுடன் எப்போதும் நாம் ஒன்றாக இருப்போம் என்று, அம்மக்களுக்கு தைரியத்தை ஊட்டும் செயலாகவே உணரப்பட்டது.   

இவ்வாறான நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, நாம் எங்கி​ருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இவ்விரு நாடுகளும், கடந்த இரண்டு மாதங்களிலேயே, இப்பாரிய அனர்த்தங்களை எதிர்கொண்டன.

ஆனால், இலங்கையில் இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, 200ஐத் தாண்டிவிட்டது. ஆனால், அவுஸ்திரேலியாவில், இரண்டே இரண்டு உயிரிழப்புகள் மாத்திரமே நிகழ்ந்தன.

அதுவும், வௌ்ளத்தில் சிக்கியிருந்த வயோதிபப் பெண்ணொருவருக்கு திடீரென ஏற்பட்ட இரத்தஅழுத்தம் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றாத பிலிப்பைன்ஸ் நாட்டுப் பிரஜை ஆகிய இருவர் மாத்திரமே உயிரிழந்தனர். இலங்கையின் நிலைமை பற்றி சிந்தித்துப்பார்க்க இனி வேறேதும் உண்டா?   

அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் மும்மரமாகச் செயற்படும் எமது நாட்டு அரசாங்கம், அனர்த்தம் ஏற்படுவதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், மழைவீழ்ச்சி தொடர்பான துல்லியமான எதிர்வுகூறல்களை வெளியிடுவதற்கு பின்பற்றப்படும் முறைகளில் குறைப்பாடு காணப்படுவதாகவே, வளிமண்டளவியல் திணைக்களம் கூறுகின்றது.   

அன்றைய தினம், அதிகூடிய மழைவீழ்ச்சியாக மணித்தியாலத்துக்கு 100 மில்லிமீற்றர் அல்லது 150 மில்லிமீற்றர் பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

மழைவீழ்ச்சியைக் கூட துள்ளியமாக அளவிடுவதற்கான முறைமை இலங்கையில் இல்லை என்பது, மிகவும் வேதனைக்குரிய விடயமாகிறது.   

பிரதேசங்கள் ரீதியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடைவையே மழைவீழ்சி அளவிடப்படுவது வழமையாகும். அதில், பிரதேச ரீதியாக அளவிடப்படும் மழைவீழ்ச்சி பற்றி தகவல்கள் தலைமையகத்துக்குச் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரியவருகிறது.

இந்தப் பிரச்சினையை நிவர்த்திக்க, ஆட்சியில் இருந்த எந்தவோர் அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.  

அடுத்தாக, அரசாங்கம் முன்வைத்து வரும் மிக முக்கிய காரணம், மக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாகும். எந்தவொரு இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும், இறுதியில் பழி சுமத்தப்படுவது மக்கள் மீதே.

அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும், மக்கள் அதுகுறித்து கணக்கிலெடுக்கவில்லை என்றே, தொடர்ந்தும் கூறப்பட்டு வருகின்றது. 

கொஸ்லந்த - மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவின் போதும், இதே குற்றச்சாட்டு தான் முன்வைக்கப்பட்டது. அரநாயக்கா மண்சரிவின் போதும், அதுவே ஒப்புவிக்கப்பட்டது.   

அனர்த்தம் குறித்து முன்னெச்சரிக்கை விடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருப்பதுபோல், அவ்வாறு அனர்த்தம் ஏற்படவுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றுவதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

இவ்வாறான முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், அப்பகுதி மக்கள் மாற்று இடத்தைத் தேடி எங்கு போவார்கள்? அதன் பின்னர் அவர்களது வாழ்விடங்களுக்கு உறுதி என்ன? என்ற கேள்விகளுக்கு, யாரிடமும் பதிலில்லை. அரசாங்கமோ அல்லது உரிய அதிகாரிகளோ, ஒரு வார்த்தையில் இவ்வாறான அறிவிப்பை விடுத்துவிட்டுப் போகலாம்.

ஆனால், அம்மக்கள் எதிர்கொள்ளும் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை யார் அளிப்பது? அவற்றுக்குப் பதில் தெரியாதமையால் தான், அவர்கள் அவ்விடங்களை விட்டு நகர்வதில்லை என்று கூறப்படுகிறது.   

அனர்த்தங்களின் பின்னர் போட்டி போட்டு ஓடிவந்து உதவி செய்யும் அரசியல் தலைமைகள், மக்களின் இவ்வாறான நிலைமைகள் குறித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

​அ​தேபோல், அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளின் உதவி, உள்நாட்டு உதவி, நிவாரண நடவடிக்கை என முன்னெடுக்கப்படுவதற்காகச் செய்யப்படும் செலவுகளை, அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர், மேற்கொண்டால், இழப்புகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் அல்லவா?   

அடுத்தடுத்து நாடே இயற்கை அனர்த்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில், அனர்த்தங்களின் போது, சேதங்களைக் குறைப்பதற்கு, அரசாங்கம் எவ்வாறு தயாராக இருக்கிறது என்பது தொடர்பில், சர்வதேசத்துக்கு விளக்கி பாராட்டுகளைக் குவிப்பதால் என்ன பயன்?   

இயற்கை அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சக்தி, மனிதனிடம் இல்லை. ஆனால், அந்த இயற்கை, சீற்றக்கொண்டு எழவும் மனிதன் தான் காரணமாகவும் இருக்கிறான் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இருப்பினும், இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படக்கூடிய அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர, மனித மூளையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தால் போதும். அதைச் சிந்தித்து அரசாங்கம் இனியேனும் செயற்படுமாயின், இனியும் இவ்வாறான இழப்புகளை நாடு எதிர்கொள்ளாதென்பது திண்ணமே.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .