2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மெல்ல மெல்ல கொல்லும் புகை

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

  - நடராஜன்  ஹரன்  

நமது நாட்டில் பரவிவரும் போதைப்பொருள் பாவனையைக் குறைக்கும் முகமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படவுள்ளதோடு, இவ்விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதாரச் சேவைகள் பொதுப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் புகைப்பிடிப்பதனாலும் மது பாவனையாலும், நாளொன்றுக்கு 60 பேர் மரணிக்கின்றனர். இதனால், வருடமொன்றில் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில், வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும், புகைத்தல் காரணமின்றி ஆனால், புகைப்பிடிப்பவர்களைச் சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக, வருடமொன்றுக்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அமெரிக்காவில், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே, புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள், காயங்களைச் சுத்தமாக்கும் தொற்று நீக்கியாகவும் வலி நிவாரணியாகவுமே, புகையிலையைப் பயன்படுத்தினர். வட அமெரிக்காவில், பணம் உழைக்கும் பயிராகவும் புகையிலை இருந்துள்ளது.

1847ஆம் ஆண்டில், பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும், சிகரெட் பயன்பாடு என்பது, ஆரம்ப காலங்களில், இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமும் மட்டுமே காணப்பட்டது. 1953களில், சிகரெட் மற்றும் புகையிலைப் பாவனையால், பலவகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என்று, டாடர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.

இதனைத் தொடர்ந்து 1964களில், புகைபிடிப்பதால் சுகாதாரத்துக்கு கேடு என்னும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தால், புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும், சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

மனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில், புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே, புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, உலக சுகாதார ஸ்தாபனம், 1987ஆம் ஆண்டு மே 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக, ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.

புகைத்தலானது, புகைப் பிடிப்பவரை விட அவரைச் சூழ இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள், தமது ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே, தமது உயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். தன்னுயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது,  தன் சுயநலத்துக்காக, அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கும் அவர்கள் காரணமாக  இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, உலகில் நிமிடத்துக்கு 6 பேர் மரணிப்பதாக, சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

20ஆம் நூற்றாண்டில், 100 மில்லியன் பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமை நீடிக்குமானால், 21ஆம் நூற்றாண்டின் முடிவில்  1 பில்லியன் பேர் உயிரிழந்திருப்பர் எனவும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நிலைமை தொடருமானால், 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில், 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என, எதிர்வு கூறப்படுகிறது.

புகைக்கும் போது வெளிவரும் புகையில், 400க்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதமானவை, சுவாசப் புற்றுநோயை ஏற்படுத்துபவையாக உள்ளன. அத்துடன், இப்புகையைச் சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங்ஹோம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புகையிலையைச் சுவாசிப்பதால், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடலுறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள், புகைப்பவர்களின் உடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால், புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தமது வாழ்நாளை, வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலுமே கழிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

புகையிலையை, பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாகப் பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட, பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலை பயன்படுத்தப்படுகின்றது.

புகைப்பிடிப்பதால் சிலவேளைகளில், உடல் அல்லது மன உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் சொல்லிலடங்காதவை.

புகையை உள் இழுக்கும் போது, அதிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள், மூளையைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் புகையை இழுக்கும் போது, அந்த இரசாயனப் பொருள் மூளைக்குச் செல்கின்றது. அத்துடன், இந்த இரசாயன நச்சுப் பொருளுடன், 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.

மூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு, நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால், புகைப் பிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள், இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே, புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், அநேகமான ஆண்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது, புகைப் பிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.

இலங்கையிலும், புகைபிடிப்பதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில், மகிழ்ச்சிக்காகவென 22 சதவீதமானோரும் நண்பர்களுடனும் பொழுதுபோக்கவென 8.2 சதவீதமானோரும், புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 சதவீதமானோரும், தனிமையைப் போக்க 10.5 சதவீதமானோரும், பரீட்சித்துப்பார்க்கவென 8.7 சதவீதமானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 சதவீதமானோரும், பிரச்சினைகளுக்காக 15 சதவீதமானோரும் என, புகைப்பிடிப்பதற்கான காரணத்தைப் பட்டியலிடுகின்றனர். 

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்றவர்கள், சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையை எத்தனை சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்தாலும், எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கத் தவறுவதில்லை. எனவே தான், அரசாங்கங்களும் எந்தவித அச்சமோ தயக்கமோ இன்றி, அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன. இந்த விலையேற்றத்தால், குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.

200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். அத்துடன், ஒரு நாளைக்கு, 4,101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவும், சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியை ஈட்டுகின்றன. இலங்கை அரசாங்கம், சிகரெட் மூலம் 12 சதவீத வருமானத்தைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், புகைபிடிப்பதற்காக மாத்திரம், 58 பில்லியன் ரூபாய், வருடமொன்றுக்கு செலவிடப்படுகின்றது. 

அதேவேளை, புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, சுகாதார அமைச்சு 22 சதவீதத்தைச் செலவிடுகின்றது. புகைப் பிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை, 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.

புகைப் பிடித்தலை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த புகையிலைக் கம்பனிகள், அமைதியாக இருந்துகொண்டு, கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக உழைக்கின்றன. ஆனால், இவற்றை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள், அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து, பணத்தையும் விரயம் செய்துகொண்டிருக்கின்றனர்.

கிழக்கிலிருந்து மட்டும், புகையிலைப் பொருட்கள் மூலமாக, 5.1 பில்லியன் ரூபாயை அரசாங்கம் வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான், புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கமும் அரசு சாராத நிறுவனங்களும், சமூக நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 

இதன் ஒரு முயற்சியாகவே, இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு, இன்று முதல் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி வரையான இரு வாரக் காலப்பகுதியை, புகையிலை எதிர்ப்பு வாரங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கையில், பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை எவரும் கருத்திற் கொள்வதில்லை. எனவே, இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க, பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இவற்றை விற்க தடையுள்ள போதும், கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதேபோல், பொது இடங்களிலோ ஊடகங்களிலோ, சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும், சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ மதுசாரப் போத்தல்களிலோ, பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.

1988ஆம் ஆண்டில், பின்லாந்தும் 1994ஆம் ஆண்டில் பிரான்ஸும்,  புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல, எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வந்திருக்கின்றன. புகைத்தல் அற்ற உலகை நோக்கி நாம் பயணிப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .