2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 ஜூன் 11 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி.

எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப் பெறுகின்ற சிந்தனைகள் நீண்டகாலத்துக்கு நிலைப்பது குறைவு. 

வரலாறு தனது கொடுங்கரங்களால் சிந்தனைகளின் செயலை நடைமுறையில் தோற்கடித்து சிந்தனைகளைக் காலத்துக்கு ஒவ்வாததாக மாற்றிவிடுகிறது. 

இதையும் தாண்டி ஒரு சிந்தனை காலமாற்றத்துக்கு நின்று நிலைக்குமாயின் அது மகத்துவமானது. அது அச்சிந்தனையின் சிறப்பை, மாறுகிற காலத்துடன் மாறுகின்ற செயன்முறையை, அதன் காலப்பொருத்தத்தைக் காட்டி நிற்கின்றது.   

விளாடிமிர் லெனின் தலைமைதாங்கி வெற்றிகரமாக நடாத்திக் காட்டிய ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு இவ்வாண்டாகும். கார்ள் மார்க்ஸும் பிரட்ரிக் ஏங்கல்ஸும் முன்மொழிந்த ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ உலகின் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கான பாதையைக் காட்டி நின்றது. 

அவை, வெறுமனே வரட்டுத் தத்துவங்கள் என இகழப்பட்ட நிலையில், அத்தத்துவத்தின் அடிப்படையில் புரட்சியொன்றை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி, அதை நிலைபெறச் செய்த பெருமை லெனினையும் அவரது தோழர்களையும் சாரும்.   

கம்யூனிஸ்ட் அறிக்கை என்பது வெறும் சொற்கோவை கொண்ட வெற்றுப் பிரகடனம் அல்ல; அது உலகத் தொழிலாளிவர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுக்கப்பட்ட போராட்ட அறைகூவலாகும் என்பதை ரஷ்யப் புரட்சி உலகுக்கு அறிவித்தது. 

அப்புரட்சியே அந்த மகத்தான வரலாற்று அறை கூவலை, ஒவ்வொரு நாட்டிலும் எதிரொலிக்கச் செய்தது. அதுவே முதலாளித்துவ உலகை நோக்கி, தத்துவார்த்த கோட்பாட்டு நிலையிலும் பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலையிலும் தொடுக்கப்பட்ட முதலாவது தாக்குதல் ஆயுதமாகவும் அமைந்தது. 

அதிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் ஒவ்வொரு நாடுகளிலும் விழுந்தன. தொழிலாளி வர்க்கத்தையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் விழித்தெழவும் போராட்டப் பாதையில் பயணிக்கவும் செய்தது அதுவே.  

நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ரஷ்யப் புரட்சி உருவாக்கிய நம்பிக்கை, போராட்ட உணர்வு, புரட்சிகர வாழ்வு இன்றும் செந்தீயாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது. 

உலக அரங்கின் நிகழ்வுகளில் ரஷ்யப் புரட்சியின் தாக்கம் பெரிது. இருபதாம் நூற்றாண்டைப் புரட்சிகளின் நூற்றாண்டாக மாற்றிய பெருமை ரஷ்யப் புரட்சியைச் சாரும். காலனியாதிக்க முதலாளித்துவம் வெல்ல முடியாத சக்தியாகத் தோற்றமளித்த காலத்தில் ரஷ்யப் புரட்சி, அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தது. 

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முதல் எகிப்து வரையிலான பல்வேறு நாடுகளில் முதல்முறையாக வரலாற்றில் காலனியாதிக்க எதிர்ப்புப்போராட்டங்கள் மிகப்பெரும் அளவில் பொங்கியெழுந்தன. அடுத்த சில ஆண்டுகளில் சீனப்புரட்சிக்கான முதல்கட்ட போராட்டங்கள் ஷாங்காயிலும் பிற இடங்களிலும் தொடங்கின. புரட்சிகளின் நூற்றாண்டாக இருபதாம் நூற்றாண்டு தொடங்கியதன் முதற்தீப்பொறி ரஷ்யப் புரட்சியே.  

போல்ஷ்விக் புரட்சி என அறியப்பட்ட ரஷ்யப் புரட்சியானது, சோசலிச அரசியலை அதன் ஐரோப்பியத் தன்மையிலிருந்து சர்வதேசத் தன்மையுடையதாக, உலகளாவியதாக மாற்றியது என்பது முக்கியமானது. 

இம்மாற்றம் அடிப்படையில் ஐந்து வகைப்பட்ட தன்மைகளை உள்ளடக்கியிருந்தது. முதலாவது, விவசாயத்தை மையமாகக் கொண்ட ரஷ்ய சமூகத்தில் நிகழ்ந்த புரட்சி என்ற வகையில் புரட்சிக்கான தத்துவத்தில் மிகப்பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தது. 

விவசாயி, தொழிலாளி கூட்டணியை பாட்டாளி வர்க்க அரசியலின் முன் நிபந்தனையாக்கியது. அவ்வகையில் விவசாய வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக மாற்ற வழிசெய்தது. பின்பு நடைபெற்ற புரட்சிகள் யாவும் பிரதானமாக விவசாய சமூகங்களில் நடைபெற வழிவகுத்தது.  

இரண்டாவதாக, லெனினும் அவரது தோழர்களும் உருவாக்கிய போல்ஷ்விக் கோட்பாடு, ஐரோப்பாவின் முதலாளித்துவ சிந்தனைகள் அனைத்துக்கும் எதிரானதாக விளங்கியதோடு தேசியம் மற்றும் காலனியாதிக்கம் குறித்த கேள்விகளின் நியாயத்தை அங்கிகரித்தது. 

அவ்வகையில் முழு ஆசியாவிலும், ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் எல்லைகளிலும் தேசிய விடுதலைக்கான போராட்டங்களுக்கு ஆதரவளித்தது. பின்னர் நடைபெற்ற சோசலிசப் புரட்சிகளுக்கும் தேசிய விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பவற்றுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. 

இந்தியா முதல் தென்னாபிரிக்கா வரை நடைபெற்ற தேசிய இயக்கங்களில் கம்யூனிஸ்ட் அரசியல் மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கியது.   

ரஷ்யப் புரட்சியின் வழி உருவான மூன்றாவதாக, கம்யூனிஸ்ட் அகிலம் இருபது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக சோசலிசப் புரட்சிக்கான தத்துவத்தையும் நடைமுறையையும் புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ளும் இடமாகவும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த போராளிகள் ஒருவர் மற்றவரிடமிருந்து மொழி, இனம், மதம் ஆகிய தடைகள் ஏதுமின்றி நேரிடையாக கற்றுக் கொள்ளும் இடமாகவும் இருந்தது.   

நான்காவதாக, புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் சோசலிசத்தின் தத்துவமும் நடைமுறையும் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் வர்க்கங்களோடு நின்று விடவில்லை. 

வேறுவகையில் சொல்வதானால் தொழிலாளர்கள், விவசாயிகள் என்பதோடல்லாமல் ஒடுக்குமுறைக்காளான சமூகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இது தேவைப்பட்டது.   

நிறைவாக இவையனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டு, உலக முழுமைக்குமான பண்பாடாக உருமாற்றம் கண்டதோடு புரட்சியில் பண்பாட்டின் பாத்திரத்தின் வகிபாகம் குறிக்கப்பட்டது. புரட்சியின் முக்கிய தளகர்த்தாவாக இலக்கியமும் பண்பாடும் திகழமுடியும் என ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. 

பண்பாட்டு அமைப்புகள் நாட்டு எல்லைகளைத் தாண்டி, வெகுஜன அமைப்புகள், நாடகக்குழுக்கள், எழுத்தாளர் அமைப்புகள், பாசிச எதிர்ப்பு இயக்கங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் இனவாதத் தன்மையோடு கூடிய முதலாளித்துவ உலகமயத்துக்கு முற்றிலும் மாறாக சோசலிச சர்வதேசியம், தீவிரத்தன்மையோடு அனைத்து மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தது.  

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், ரஷ்யப் புரட்சி வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை நோக்குமிடத்து, அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் பல்வேறு வகையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்துச் சொல்லப்பட வேண்டியதொன்று. 

காலனியாதிக்க சாம்ராஜ்யங்களின் ஒரு மையமாக விளங்கிய ஸாரின் ரஷ்யாவில், நடந்தேறிய புரட்சி காலனியாதிக்க எதிர்ப்புப் போராளிகள் மத்தியில் எழுச்சியை உருவாக்கியது. பிறகு இதே சூழலில்தான் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கான கொள்கைபூர்வமான ஆதரவு போல்ஷ்விக்குகளால் தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் பரந்த அளவில் திரட்டமுடியும் என்ற உண்மையை நடைமுறைப்படுத்திக் காட்டியதன் மூலம் புரட்சி என்பது சமூகத்தின் மேல்தட்டினரால் நடத்தப்படுவதல்ல; மாறாக அடித்தட்டு மக்களைத் திரட்டி நிகழ்த்தப்படுவது என்பதாக மாற்றம் கண்டது. இது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ரஷ்யப் புரட்சி கற்றுக் கொடுத்த முக்கிய பாடமாகும்.   

சுயநிர்ணய உரிமை எனும் நெறி, முதன்முதலில் ரஷ்யப் புரட்சியின் தொடர்பில் லெனினால் முன்வைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. அது, ரஷ்யாவில் ஸார் ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களிடையிலும் சுயதெரிவின் அடிப்படையில் ஒற்றுமையைப் பேணி, அதன்மூலம் அவை சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் ஒன்றினுள் சமமமான பங்காளிகளாகத் தொடர்ந்திருக்க வேண்டி, நன்கு சிந்தித்து வகுக்கப்பட்ட ஒரு மூலோபாயமாகும். 

தேசங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய நோக்கம் ஏதெனின், பிரிந்துசெல்லும் உரிமையானது பிரிவினையை ஊக்குவிப்பதற்கு மாறாக, எவ்விதமான கட்டாயமுமின்றிச், சுயவிருப்பின் அடிப்படையில் ஒற்றுமையை இயலுமாக்கலாகும் என்பதாகும். இவ்வகையில் தத்துவார்த்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்து, அதைப் புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவின் அரசியலமைப்பில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தியதன் ஊடு, அதற்கான தளத்தை வழங்கியது ரஷ்யப் புரட்சியே.   

இதனடிப்படையில் ரஷ்யப் பேரரசை மாற்றியமைப்பதற்கான புரட்சிகரப் போராட்டம் ஒன்றின் போக்கில், தேசிய ஓடுக்குதலையும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையையும் கையாளுவது தொடர்பாக, தேசம் என்ற பதத்துக்கான வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது. 

தேசம் என்ற பதத்துக்கு ஸ்ராலின் முன்வைத்த நேர்த்தியானதும் முழுமையானதுமான வரைவிலக்கணம், இன்றும்கூடச் சமகாலத் தேசம் என்பதற்குச் செல்லுபடியானதும் பொருத்தமானதுமான ஒரு விவரணமாகவே உள்ளது.

 ‘தேசம் என்பது, பொதுவான மொழி, பிரதேசம், பொருளியல் வாழ்வு, பொதுவான பண்பாடொன்றாகப் பரிணமிக்கும், உளவியல் தன்மை என்பனவற்றின் அடிப்படையில், வரலாற்றின் வடிவுபெற்ற ஒரு உறுதிப்பாடான மக்கள் சமூகமாகும்’. 

ஓரு தேசத்தைச் நடைமுறைச் சாத்தியமாக்குவது எதுஎன்ற, கூர்ந்த கவனிப்பினதும் ஆழ்ந்த விளக்கத்தினதும் அடிப்படையில் அது அமைந்திருந்தது. ஸ்ராலின் வரைவிலக்கணம் தேசத்துக்கான அத்தியாவசியமான பண்புகள் எனக் கூறுவன, ஓரு தேசத்தை நடைமுறைச் சாத்தியமாக்கத் தேவையானவையாக இன்னமும் பரவலாக ஏற்கப்படுகின்றன. மதம்  தென்னாசியாவில் சாதி, போன்ற காரணிகள் சமூகக் குழுமங்களின் அடையாளங்களை வரையறுத்துள்ளதுடன் தேசிய இயக்கங்களிலும் தேசிய அடையாளத்தின் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றியுள்ள போதும், அவை தேசத்தை வரையறுக்கும் காரணிகளல்ல என்பதை நினைவிலிருத்துவது தகும்.  

முதலாளியம், ஏகாதிபத்தியமாகியமை முதலாளிய விருத்திப் போக்கிற் விலக்கற்கரிதானது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு லெனின் அதை முதலாளியத்தின் அதியுர் நிலை என்றார். 

ரஷ்யப் புரட்சி தொட்டு, முதலாளிய ஆட்சிக்கெதிரான ஒவ்வொரு புரட்சிகரப் போராட்டமும் ஏகாதிபத்தியம் பற்றி லெனின் தந்த உள்நோக்கால் பயனடைந்தது. கொலனிய விரோதப் போராட்டங்களின் வெற்றிகளும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியப் புரிதலுக்குக்கு மிகக் கடப்பாடுடையன.   

இப்பின்னணியில் ரஷ்யப் புரட்சியின் பின்னரான நூறு ஆண்டுகள் சில முக்கியமான பாடங்களை எமக்குக் கற்றுத் தந்துள்ளன. குறிப்பாக உலகம் இருமைய உலகில் இருந்து ஒருமைய உலகாக மாற்றமடைந்து இன்று ஒருமைய உலகின் தேய்வும் பல்மைய உலகின் எழுச்சியையும் காண்கிறோம். இம்மூன்று வகைப்பட்ட காலப்பகுதியிலும் ரஷ்யப் புரட்சி செல்வாக்குச் செலுத்தியுள்ளது.   

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியின் மையமான நிகழ்வு போல்ஷ்விக் புரட்சியெனில், இரண்டாவது கால்பகுதியில் சீனப்புரட்சியும் மூன்றாவது கால்பகுதியில் கியூப, வியட்நாமியப் புரட்சிகள் முக்கிய நிகழ்வுகளாயின. 

போல்ஷ்விக் புரட்சி புரட்சிகர இயக்கங்களின் தோற்றத்துக்கு வழியமைத்தது என்றால் சீனப் புரட்சி உலகெங்கும் புரட்சிகர இயக்கங்கள் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்களை அதிகரித்தது எனலாம்.   

சோவியத் யூனியனின் மறைவு, இருமைய உலகின் முடிவை மட்டுமன்றி சோசலிசத்தின் முடிவையும் குறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவை முதன்மையாகக் கொண்ட ஒருமைய உலகின் புரட்சிகள் சாத்தியமில்லை என முடிவாகியது. அவ்வாறு முடிவாகி, புரட்சிகளை கல்லறையேற்றிய சில ஆண்டுகளில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான மெக்சிக்கோவில் ஸப்பற்டிஸ்டாப் போராளிகளின் புரட்சி புதிய திசையைக் காட்டிநின்றது. 

அதைத்தொடர்ந்து இலத்தீனமெரிக்காவெங்கும் வீசிய இடதுசாரி அலை ரஷ்யப் புரட்சி முன்மொழிந்து சாதித்து நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நோக்காகக் கொண்டது. 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவால் ஐரோப்பாவில் உருவான போராட்டங்களும் சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான மோதலை இன்னொரு தளத்துக்கு உயர்த்தின. இதைத் தொடர்ந்த ‘அரபு வசந்தம்’ ஜனநாயகம் பற்றிய கேள்விகளை எழுப்பியது.  

ரஷ்யப் புரட்சியின் முடிவு எனக் கருதப்பட்ட சோவியத் யூனியனின் முடிவைத் தொடர்ந்த மூன்று தசாப்தங்கள், ரஷ்யப் புரட்சிசார்ந்து நமக்கான சில படிப்பினைகளை வழங்கியுள்ளன.   

எதிர்ப்புகள் பொதுசன அதிருப்தியை வெளிப்படுத்துவன. அவை தம்மளவில் புரட்சியின் வித்துக்களாகா. கடந்த ஒரு தசாப்தமாக, ஐரோப்பாவுக்குக் குறுக்காக நிகழ்ந்த பெரும் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கங்களை மாற்றியுள்ள போதும் அவை அரசாங்கக் கொள்கைகளில் புறக்கணிக்கத்தக்க தாக்கத்தையே விளைவித்தன.

 இவை ஆளும் வர்க்கத்துக்குச் சவால் விடுத்து, முதலாளிய அரச இயந்திரத்தை எதிர்கொண்டு, சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு வெகுசன அமைப்பு உருவாக, எதிர்ப்பியக்கம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது என்பதைக் கோடுகாட்டின. 
தென்னமெரிக்காவின் எதிர்ப்பியக்கங்களின் போக்கில் சில நாடுகளில், கைக்கெட்டக்கூடிய ஆனால் புரட்சி என்று அழைக்க இயலாத, மாற்றங்கள் நேர்ந்துள்ளன. அவை நிச்சயமாக ‘21ம் நூற்றாண்டின் சோஷலிசம்’ அல்ல என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியம்.  
எதிர்ப்பு என்பது சனநாயக உரிமைகளின் வலியுறுத்தல் என்பதாலும் மாக்சிய நோக்கில் புரட்சிகரப் போராட்டங்கள் சாராம்சத்தில் சனநாயகத்துக்கான போராட்டங்களே என்பதாலும், வெகுசன எதிர்ப்புகளைப் பற்றி ஆக்கமான அணுகுமுறையின் அவசியத்தைக் கடந்த இரு தசாப்தகால அனுபங்கள் சுட்டியுள்ள அதேவேளை, எதிர்ப்பு இயக்கங்களைப் புரட்சிப் போராட்டத்தின் பகுதியாக்குவது மிகப்பெரிய சவாலாகும் என்பதையும் தெளிவாக்கியுள்ளன.  

வெகுசன அதிருப்தி எதிர்ப்புகளாக வெளிப்படும் அதேவேளை, எதிர்ப்பு என்பது இடதுசாரிகளின் ஏகபோகமல்ல, எதிர்ப்புகள் யாவுமே சாராம்சத்தில் முற்போக்கானவையுமல்ல; அதைவிட, பாசிஸவாதிகள் உட்படப், பிற்போக்காளர்களும் வெகுசன அதிருப்தியைத் தமக்கு வாய்ப்பாக்கியுள்ளனர். 

அரசியல் பொருளாதார நெருக்கடிக் காலங்களில் பிற்போக்குக்கும் பாசிஸத்துக்கும் உதவும் விதத்தில் வெகுசன அதிருப்தி உற்பத்தியாகியுமுள்ளது. 

புரட்சியின் பெயரால் தமது நோக்கங்களை ஒப்பேற்றுமாறு பிற்போக்காளர்கள் மக்களை அணிதிரட்டுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பாசிஸவாதிகள் அதைச் செய்துள்ளனர். 1973இல் சிலியில் நடந்தது போன்றும் இப்போது வெனிசுவேலாவில் நடப்பது போன்றும், ‘உற்பத்தியான அதிருப்தி’ இடதுசாரி அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் பயன்படலாம். இவ்விடத்தில் டேனியல் தெரினின் கூற்றொன்றை நினைவுபடுத்துவது பொருந்தும்: ‘சோசலிசத்துக்கான நெடும்பயணத்தில் ஒருநொடி கண்ணயர்ந்தாலும் பாஸிசம் எனும் கொடுந்தண்டனை நம்மை வந்து சேரும்’.   

லிபியாவினதும் சிரியாவினதும் விடயத்தில் பல முற்போக்காளர்கள் தவறிய இடம் ஏதெனில், கடாபியையும் அஸாத்கையும் பிற்போக்கு அடக்குமுறையாளர்கள் என்று அவர்கள் சரியாக அடையாளம் கண்டபோதும், பிரதான முரண்பாடு எது என்பதையும் ‘எதிர்ப்பாளர்களின்’ பின்னால் இருந்த உண்மையான சக்திகள் எவை என்பதையும் அவர்கள் தவறவிட்டமையாகும்.   

இவையனைத்தும் கடந்த சில தசாப்தகால அனுபங்கள். இவ்வனுபங்களுக்கான பாடங்களைக் கற்றுத் தந்தது ரஷ்யப் புரட்சியின் கோட்பாட்டும் நடைமுறையுமே என்பதை மறக்கவியலாது.  

ரஷ்யப் புரட்சி காட்டிய வழி, முற்போக்கானது மட்டுமன்றி புரட்சிகரமானதும் கூட. அது கடந்த நூறு ஆண்டுகளில் பலதடவை தன்னைப் புடம்போட்டுத் தொடர்ச்சியாக செழுமையடைந்துள்ளது. 

இன்றும் புரட்சிகர சக்திகளுக்கான முன்மாதிரியாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியான காலப்பொருத்தமும் முக்கியத்துவமும் உலக வரலாற்றின் தவிர்க்கவியலாத பெருநிகழ்வாக நிலைநிறுத்தியுள்ளன. இதுவே நூற்றாண்டுகாலச் செழுமை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X