2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

18 ஆவது திருத்தத்தின்பின் அடுத்தது என்ன?

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிகார பரவலாக்கல், தேர்தல்முறை மறுசீரமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் நான்கு அங்கத்தவர்கள் குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழுவின் தலைவராக முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பாக 19 ஆவது யாப்பு திருத்தத்தை கொண்டுவருவதே இதன் நோக்கம்.

அரசாங்கம் இந்த செய்திகளை இதுவரை மறுக்கவில்லை. இது உண்மையெனில் அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறை மறுசீரமைப்பு ஆகிய இரண்டு விடயங்களில் அரசாங்கம் மிகுந்த அக்கறையோடிருப்பதையே இது காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன், அரசாங்க தலைவர்கள், ஜனாதிபதி பதவி, அதிகாரப் பகிர்வு மற்றும் இவை தொடர்பான விடயங்கள் பல அடங்கிய ஒரு யாப்புத் திருத்தம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், ஜனாதிபதி பதவி, மற்றும் குறிப்பான சில விடயங்கள் கொண்ட, இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக திருத்தங்கள் கொண்டு வரப்படும் என அவர்கள் கூறினர்.

ஜனாதிபதியுடன் தொடர்பான 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபின், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் தாமதிக்கவில்லை. தமிழ் கட்சிகளும், தமிழ் சமூகமும் பிரச்சினைகள் மீது முழுக் கவனத்தையும் குவித்து அக்கறையோடு செயற்பட வேண்டும் என்பதை இது காட்டுகின்றது.

இன்று இலங்கையில் தமிழ் அரசியலில் ஏராளமான பிரிவுகள் காணப்படுகின்றன. இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலைநாட்டு தமிழர் என பல வகையான பிரிவுகள் காணப்படுகின்றன. இன்றைய அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இந்தக் கட்சிகளுக்கிடையில் வித்தியாசமான கொள்கைகளும் திட்டங்களும் உள்ளன.

மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளுக்கு 46 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் பிரிந்து நிற்கின்றனர். சமுதாயத்துக்காக இவர்கள் குறிப்பிட்டதக்க எதையும் செய்ய முடியாதவர்களாக உள்ளனர். தமக்கு உரித்தானவற்றையும், தேவையானதையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ள இவர்கள் யாவரினதும் ஆதரவு தமிழ் பேசும் மக்களுக்கு தேவை. இவர்களிடையே காணப்படும் வேறுபாடுகள் கொள்கைகள் சார்பானவையாக அன்றி, தலைவர்கள் சார்பானவையாகவே உள்ளன.

அரசாங்கத்தின் பக்கம் உள்ளவர்கள் கூடாதவர்கள் ஆகிவிடுகின்றனர். கடந்த 30 வருடங்களாக எந்த அரசாங்கமாகவிருந்தாலும் அவற்றை விடாப்பிடியாக எதிர்த்து வந்தவர்கள், தாம் மற்றையவர்களைவிட மேலானவர்கள் என கருதுகின்றனர். இவர்கள் தம்மை தமிழ் அரசியல் மனச்சாட்சியின் ஏக பாதுகாவலர்களாக கருதுகின்றனர். இவர்கள் , ஏனையோரை, தமிழர் இலட்சியதுக்கு விசுவாசமற்றவர்கள் என அடையாளமிட்டுவிடுவர்.

ஒரு வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வகைக்குள் வரும். இந்த கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்கள் கிடைத்தன. இவர்களில், சிங்கள வழித்தோன்றிய பியசேன என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்துள்ளார். இருந்தும் தனி ஒரு தமிழ் கட்சிக்குரித்தான உச்ச அளவிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியுடன் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், அண்மையில் 18 ஆம் திருத்தம் மீதான வாக்கெடுப்பு ஆகிய யாவற்றிலுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களித்தது. 18 ஆம் திருத்தம் மீதான வாக்கெடுப்பில், முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் யாவருமே ஒரே முகமாக, அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தனர். இப்போது இலங்கைத் தமிழர் சமூகம் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளது.

நாட்டின் இனத்துவ அரசியலில் இலங்கைத் தமிழர் என்ற வகுதியின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. அதேபோல இலங்கைத்தமிழர் அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் மறுப்பதற்கில்லை. இந்த வகையில் முழுமையாக தமிழ் பேசும் மக்களின் குரலின் அர்த்த புஷ்டியான பிரதிநிதித்துவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானதாகவுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தின் அபிலாஷைகளுடன் இணைந்து போகும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் தன்மையை பொறுத்தும் இது இவ்வாறே உள்ளது. இந்த வகையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்குக் காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுக்களை நடத்தி வந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்றே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தனியொரு மிகப்பெரிய முஸ்லிம் அரசியல் சக்தியாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளது.

மலையகத் தமிழர்கள் வித்தியாசமான அபிலாஷைகளை கொண்டுள்ளனர். இருப்பினும், யுத்தத்துக்கு பிந்திய நிலைமையில் சகல தமிழ் மக்களுக்கும் பொதுவான அரசியல் நிலைப்பாடு ஒன்றை அடையவேண்டுமெனில், மலையக அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் புறந்தள்ளிவிட முடியாது. இதை உருவாக்குவது சுலபமான காரியமும் அல்ல.

இனியும் தாமதிக்க முடியாது

யாப்புக்கான 19 ஆவது திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் கட்சிகள் இனி தாமதிக்க முடியாது. மூன்று வகுதியினரதும் தமது, அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பொதுவான ஒரு தொகுதி ஆலோசனைகளுடன் பொதுவான ஒரு தலைமையின் கீழ், அரசாங்கத்தை அணுக வேண்டும்.

இதற்கான பல காரணங்கள் உண்டு. 1981 இன் பின், முதல் தடவையாக அடுத்த வருடம் வடக்கு, கிழக்கில் நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது. இனப்பிரச்சினை, யுத்தம் வன்முறை, புலம்பெயர்வு, மரணங்கள் என்பன இலங்கைத் தமிழ்; சமூகத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்துள்ளன.

1981 இல் இருந்ததைவிட தற்போது அதிகளவான முஸ்லிம்கள் கிழக்கில் காணப்படுகின்றனர். இது எண்பதுகளில், 30 சதவீதமளவில் இருந்தது. இப்போது இது 45சதவீதமாக உயர்ந்திருக்கமுடியும். முழுநாட்டையும் கருதும்போது இலங்கைத் தமிழர்களைவிட மலையகத் தமிழர்கள் கூடுதலாக இருக்கமுடியும். இது சுதந்திரத்துக்கு பிந்திய காலத்தில், இருந்த நிலைமைகளை மீட்டுப்பார்க்க வைக்கும்.

மலையகத் தமிழர்கள் மலர் மஞ்சத்தில் உள்ளனர் என்பது இதன் பொருளாகாது. எப்போதும் போன்றே, இவர்களின் துன்பங்கள் வாழ்நிலையுடன், வாழ்வாதார பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டதேயன்றி, உரிமைகள், முன்னுரிமைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. தேசிய அளவில், தமிழ் பேசும் சமுதாயத்தினுள், இவர்களின் தொகை அதிகரிப்பு புதிய சமன்பாடுகளை தோற்றுவிக்கலாம். இவர்களையும் அங்கீகரித்து கருத்தில் கொள்ள வேண்டும்.

இவர்களின் பிரச்சினை தனித்து இவர்களின் சனத்தொகையுடன் மட்டும் தொடர்பானதல்ல. ஒப்பீட்டளவில், இவர்கள் தமது பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கி;ன்றனர். தேர்தல் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம், இவர்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாகலாம். இது இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய வகுதியினருக்கும் உண்மையாகலாம்.

குறிப்பாக, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக இவர்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமாயின் இது விடயத்தில் இவர்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.


தர்மசங்கடமான நிலையில் புலம்பெயர்ந்தோர்

இலங்கை தமிழ் சமூகத்தில் கணிசமானோர் இப்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர். பலர் அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுவிட்டனர். இலங்கையில் காணப்படும் இரட்டை பிரஜாவுரிமை முறை காரணமாக, இலங்கைக்கு இவர்கள் திரும்பி வரக்கூடும்.

யுத்தம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இவர்களிடம் இலங்கைக்கு வர தயக்கம் காணப்படுகின்றது. புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், இணக்கப்பாடு ஆகியவை பற்றி அரசாங்கத்தின் நோக்கத்தை தாம் அவதானித்துக் கொண்டிருப்பதான வழமையான காரணத்தையே இவர்கள் இதற்கு கூறுகின்றனர்.

அதாவது நிலைமைகள் முன்னேற்றம் கண்டால் மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வருவார்கள் என குறிப்பாக உணர்த்துகின்றனர். மூன்று வருடங்களுக்கு மேலாக போரால் அழிந்த நாட்டில் நிலைமை சீராகிவிட்டது என்பதை அறிவதற்கான நியமமான வாய்ப்பாடு எதுவுமில்லை.

புலம் பெயர்ந்தோரின் முதல் சந்தயினரின் பிள்ளைகளில் அதிகமானோர, வெளிநாடுகளிலேயே பிறந்தவர்கள் ஆவர். இதனால் இவர்கள் பிறப்புரிமையாகவே அந்தந்த நாட்டு பிரஜாவுரிமையை பெற்றுள்ளனர். இந்த பிள்ளைகள் தமது பிரஜாவுரிமையை பெறுவதற்காக அகதி அந்தஸ்து, அரசியல் தஞ்சம் போன்ற கஷ்டமான கட்டங்களுக்கூடாக வரத்தேவையற்றவர்கள்.

சமூக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், இவர்கள் வேறு நாட்டு பிள்ளைகள் . உலக தமிழ் புலம் பெயர்ந்தோரின் செல்வாக்கு மிக்க பகுதியினரால் எதிர்பார்க்கப்பட்டதை போலன்றி, இந்த பிள்ளைகள் ஈழயுத்தம் நாளின் முடிவின் கடைசி மாதங்களில் தாம் வாழும் நாடுகளில் இடம் பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் காரணமாக, இனப்பிரச்சினை, யுத்தம், வன்முறை, அழிவு பற்றிய விழிப்புணர்வு உடையவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்களால், முன்னரைவிட அதிகமாக தமது தாய் நாட்டுடன் உணர்வு பூர்வமாக ஐக்கியப்பட முடியும். ஆனால் இது இலங்கையில் நிரந்தரமாக குடியேற போதிய ஊக்குவிப்பாக அமையாது. இவர்கள் அவ்வப்போது இலங்கைக்கு வந்துப் போகலாம். உரிய சூழல் காணப்பாட்டால் முதலீடும் செய்யலாம். இங்குள்ளவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் இவர்கள் இலங்கைக்கு நிரந்தரமாக திரும்ப மாட்டார்கள்.


அவசரமாக ஆலோசிக்க வேண்டிய பிரச்சினைகள்
 
பல காரணங்களால் ஒவ்வொரு பிரச்சினைகளையும் விரிவாக ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, தேர்தல் முறை மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை கொண்டது. 18 ஆவது திருத்தத்தின் மேல் கவனம் குவியமுன் இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு மட்டும்' வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து கூறப்பட்டிருந்தது. நிச்சயமாக இலங்கை தமிழ் சமூகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு மேலாக இலங்கை தமிழ் சமூகத்தின் சனத்தொகையில் எதிர்பார்க்கப்படும்  வீழ்ச்சி, வடக்கிலும், ஓரளவு கிழக்கிலும் நாடாளுமன்றத்தில் பெறக்கூடிய இடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். மொத்தத்தில், இலங்கைத் தமிழர் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும்.

நாட்டின் பல்வகைப்பட்ட மக்களாலும் அரசியல் பிரிவுகளாலும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் இன்னொரு பிரச்சினையாக எல்லை மீள் நிர்ணயம் உள்ளது, தமிழ்பேசும் சமூகத்தின் முப்பிரிவினரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் கவலைப்படக் காரணம் உண்டு.

பொலிஸ் அதிகாரங்கள் இன்னொரு பிரச்சினையாகும். 13 ஆவது திருத்தத்தில் தருவதாக கூறப்பட்டும் தீராத பிரச்சினையாக உள்ளது.

இதேபோல மாகாணசபைகளின் காணி மற்றும் வரி அறவிடும் அதிகாரங்களும் உள்ளன. யுத்தம் முடிந்தபின் மாகாணங்களின் இணைப்பு விடயம் பின் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கைத் தமிழ் சமூகமும், அடிநிலையில் உள்ள யதார்த்தத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை காரணம் காட்டி 2008 இல் நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அசாங்கம் விரைவில் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தலாம். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி நேரத்தில் தட்டுத் தடுமாறாமல் நேரகாலத்தோடு இது விடயமாக தெளிவாயிருக்க வேண்டும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும், தமிழர்களின் வாக்குகள், அவர்களுக்கே உரித்தான பிரதேசத்தில் மேலும் மேலும் பிரிந்து போவதற்கு வழிவகுக்கும். இது துரதிர்ஷ்டமானதே.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி வருகையுடன், அதை தொடர்ந்து வந்த இன யுத்தம் ஆரம்பிக்க முன், வடக்கில் தமிழ் தேர்தல் களத்தில் சிங்கள பெரும்பான்மை கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன ஆதிக்கம் செலுத்தி வந்தன. உடனடிப் பிரச்சினைகளை மட்டும் கவனிப்பதால் வடக்கு தமிழ் அரசியல் சமூகம் பழைய நிலைமை வராது பார்த்துக் கொள்ள வேண்டும். தாம் செய்த தவறுகளுக்காக பெரும்பான்மை சிங்கள சமூகத்தையும், ஏனைய எல்லோரையும் அவர்கள் தொடர்ந்து குற்றங்காண முடியாது.

வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளும் தமிழ்பேசும் சகல மக்களினதும் கட்சிகளுள் ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றுப்பட்டு தமது அபிலாஷைகளை அடைவதற்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியது உடனடி அவசர தேவையாக உள்ளது. இவர்கள் தமது ஆளுமை சார்ந்த பிரச்சினைகளையும், பிரதேச வாதத்தையும் மறந்துவிட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பு இயல்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்ததே. வடக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணிக்கும் எண்ணம் இல்லாதுவிடின், இந்த கட்சி உடனடியாக தொழிற்படவேண்டும். 15 ஆவது திருத்தம் போன்று 19ஆவது திருத்தத்தையும் அரசாங்கம் அவசர திருத்தம் என்ற வகையில் துரிதப்படுத்தினால் இவர்கள் இன்னும் துரிதமாக செயற்பட வேண்டும்.

அவர்கள் தொடர்ந்தும் குற்றம் காணமுடியாது.

வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளும், தமிழ்பேசும் சகல மக்களினதும் கட்சிகளும் ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை அடைவதற்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியது உடனடி அவசர தேவையாக உள்ளது. இவர்கள் தமது ஆளுமை சார்ந்த பிரச்சினைகளையும், பிரதேசவாதத்தையும் மறந்துவிட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பு இயல்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்ததே. வடக்கு மாகாணசபை தேர்தலை புறக்கணிக்கும் எண்ணம் இல்லாதுவிடின், இந்த கட்சி உடனடியாக தொழிற்படவேண்டும். 18 ஆவது திருத்தம் போன்று 19 ஆவது திருத்தத்தையும் அரசாங்கம் அவசர திருத்தம் என்ற வகையில் துரிதப்படுத்தினால் இவர்கள் இன்னும் துரிதமாக செயற்பட வேண்டும்.

தமிழ்க் கட்சிகளும், சமூகமும், வரட்டுத் தத்துவங்களை கைவிட்டு நடைமுறை சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். கடும் பேரம்பேசலின் அடிப்படையில், 19 ஆவது திருத்தத்தின் கீழ் தமது சமூகத்தினருக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய சகலதையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களது எதிர்கால சந்ததியினர், தமது சமூகத்துக்காக இதைவிட சிறப்பாக, பேச்சுவார்த்தைகள் மூலம் சாதிப்பர். அப்படி ஒரு காலம் வரும். இது சாத்தியமாக, தமிழ் பேசும் மக்களின் கட்சிகள், ஒன்றுப்பட்டு, அரசியல் விளையாட்டில், காய்களை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டில் உணர்ச்சியை அல்ல, மூளையையே பயன்படுத்த வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--