2021 மே 08, சனிக்கிழமை

பல்லினமே எமது சக்தி என்ற உண்மையை அரசியல் தலைமைகள் உணரவில்லை: மிலிந்த மொரகொட

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'எமது நகரில் காணப்படும் பல்லினத் தன்மையே நகரின் சக்தியாகும். நான் அனைவரையும் சமமாகவே பார்க்கின்றேன். அதனால் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எனக்கு இல்லை. அனைத்து இன மக்களையும் நான் மதிக்கின்றேன். அனைவரும் எமது மக்கள் என்றே கருதுகின்றேன். அதேவேளை, பல்லினமே எமது சக்தி என்ற உண்மையினை உணர எமது அரசியல் தலைமைகள் தவறிவிட்டார்கள்' என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டினார்.

தமிழ்மிரருக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டார். எமக்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியின் முழு வடிவத்தினையும் இங்கு தருகிறோம்.

கேள்வி :-     அமைச்சர் ஒருவராக உயர் பதவி வகித்த நீங்கள், ஒரு மேயர் வேட்பாளராகக் களமிறங்க காரணம் என்ன?

பதில் :-     நாடாளுமன்றத்துக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக கொழும்பு மாநகரசபை உள்ளது. இந்நிலையில், கொழும்பு மாநகர மேயர் என்பது சிறிய பதவியல்ல. அந்தவகையில் அந்தப் பதவிக்கு போட்டியிடும் தீர்மானத்துக்கு என்னை கொண்டுவந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கொழும்பு நகரசபையை 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் கொண்டுவர வேண்டும் என்று ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக கொழும்பு மாநகரசபைக்கு பாரியளவில் எதுவும் செய்ய முடியாது போனது. உண்மையில், யுத்த சூழ்நிலை காரணமாக இந்த நகரம் மூடப்பட்டிருந்தது என்றே கூற வேண்டும். காரணம் யுத்தம் கொழும்பு நகரை மிகவும் பாதிப்படையச் செய்தது. அதனால் 21ஆம் நுற்றாண்டின் சிறந்த நகராக மாற்ற வேண்டும். அதற்கு சிறந்தவொரு தலைவர் தேவை. அதற்கு நீங்களே பொருத்தமானவர் என்று ஜனாதிபதி கூறினார். இந்நிலையில், அவருடனும் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த மேயர் பதவிக்கு போட்டியிடுவதான தீர்மானத்துக்கு வந்தேன்.

என்னுடைய இந்த தீர்மானத்திலிருந்து இரு முக்கிய விடயங்களைப் பார்க்க முடிந்தது. ஒன்று மக்களுக்கு சிறந்த சேவையொன்றை வழங்க முடியும். ஒரு எம்.பி.யாக நாடாளுமன்றத்திலிருந்து கொள்கை ரீதியில் சேவையாற்ற முடியும். ஆனால் கொழும்பு என்பது பாரியதொரு தொகுதியாகும். அவிசாவளை முதல் மட்டக்குளி வரையில் பரந்துபட்ட பிரதேசமாகும். இதற்குள் இருந்துகொண்டு சமூகத்துக்கு தெளிவாக விளங்கும் சேவையொன்றை வழங்க முடியாது. அப்படி சேவையொன்றை வழங்குவதென்பது பாரிய சவாலாகும். அந்த சவாலை எதிர்கொள்ள எனக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று கருதுகிறேன்.

எமது சேவையின் மூலம் இந்த மாநகரசபையினை புதிய வகையில் நிர்மாணித்துக்கொள்ள முடியும். இந்த உலகில் காணப்படும் நகரசபைகளைக் கருத்திற்கொள்ளுமிடத்து அவை சேவை வழங்கும் நிறுவனங்களாகவே செயற்பட்டு வருகின்றன. அதில் மக்களே நுகர்வோர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு நிலைமையிலேயே புதிய நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் எமது நகரம் அப்படியானதல்ல. பழமையான விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அடுத்த காரணம் என்னவெனில், எந்தவொரு நகருக்கும் இல்லாத விசேட தன்மை எமது நகருக்கு உண்டு. அனைத்து இன மக்களும் இங்கு வாழ்கின்றார்கள். இந்த அனைத்து இன மக்களுக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன. அவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும். இவ்வாறாக அனைவரும் ஒருமிக்க இருக்கும் போது எம்மால் எமது சேவைகளையும் இனிதே நிறைவேற்ற முடியும். அதன்மூலம் இந்த உலகுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நாம் விளங்க முடியும். இந்த இரு காரணங்களையும் கருத்திற்கொண்டே ஜனாதிபதியின் யோசனைக்கு தலையசைத்தேன்.

கேள்வி :-    ஐ.தே.க.விலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், ஒரு மேயர் வேட்பாளராக அரசின் சார்பில் களமிறங்குவதால் மீண்டும் பாரியதொரு சவாலை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

பதில் :-   
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கியே கடந்த பொதுத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். அந்த காலத்தில் இந்த தேசிய காங்கிரஸே நாட்டில் இருந்தது. வேறு கட்சிகள் இருக்கவில்லை. அதில் தமிழ், சிங்கள தலைவர்கள் என ஏராளமானோர் இருந்தனர். அந்த யுகத்துக்குள் மீண்டும் நாம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இந்த நாட்டில் காணப்படும் கட்சி முறைமைகள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. கட்சி என்பது ஒரு குலமோ கோத்திரமோ அல்ல. நாம் அனைவரும் காலம் காலமாக பாரியதொரு வரலாற்று ரீதியான தவறைச் செய்து வருகின்றோம்.

எமது பிள்ளையொன்றை பாடசாலைக்கு சேர்க்க வேண்டுமானாலும் அந்த பிள்ளையின்  தாய், தந்தையர் பின்பற்றும் கட்சியைக் கருத்திற் கொண்டே நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதற்கு அரசியல் அல்லது அரசியல் பிரமுகரின் தயவு, தலையீடு தேவைப்படும் ஒரு யுகத்திலேயே நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்தளவுக்கு இந்த நாடு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் மாற  வேண்டும். நான் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போதும்  இந்த கொள்கையுடனேயே இருந்தேன். என்னை பலரும் பலவாறாக விமர்சித்தார்கள். நான்  பச்சை நிற ஆடை அணிவதில்லை என்பதைக்கூட பிரச்சினையாக்கினார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தபோது என்னுடைய கொள்கை தொடர்பில் நான்  அவருக்கு விளக்கமளித்தேன். அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். 'நீங்கள் உங்களுடைய கொள்கையைப் பின்பற்றுங்கள். அதற்கு கட்சிக்குள் முழு சுதந்திரம் காணப்படுகிறது' என்று கூறினார்.

இதன் அடிப்படையிலேயே நான் எனது பயணத்தை தொடருகின்றேன். நான் அரசியலில் ஈடுபடுகிறேன் என்றால், அது வெற்றியை இலக்காகக் கொண்டதோ அல்லது அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வெறியோ அல்ல. அரசியலில் இருந்துகொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக நான் பதவி அந்தஸ்துக்களை எதிர்ப்பார்க்கவில்லை. நான் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டுக்காக சேவையாற்ற முடியும். இந்நிலையில், அரசியலுக்குள் உட்புகுவேன் என்றால், எனக்கு தேவையானதைச் செய்யும் சூழலை என்னால் உருவாக்கிக் கொள்ளவும் எனக்கு முடியும்.

அரசியலில் எமது நோக்கங்களைப் போன்று பயணமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். எமது அந்த பயணம் சிறப்பானதாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இந்த கொள்கை இருக்கும் பட்சத்தில் எமது வாக்குறுதிகளை இனிதே நிறைவேற்றவும் முடியும். அதற்கான அனுமதியினையும் மக்கள் எமக்கு வழங்குவார்களாயில் எமது பயணத்தை நாம் தொடர முடியும்.

கேள்வி :-    கொழும்பில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இதேவேளை, பிரதான மேயர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் நீங்கள் மாத்திரமே சிங்களவராக காணப்படுகின்றீர்கள். இவ்வாறானதொரு நிலையில், தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்வதற்காக ஏனைய வேட்பாளர்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பதில் :-      என்னுடைய அரசியல் பயணத்தில் அது கடினமான விடயமாகக் காணப்படாது. எமது நகரம் விசேடத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு காணப்படும் பல்லினத் தன்மையே நகரின் சக்தியாகும். இது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். இதனை நான் நன்றாக உணர்ந்தவன். அத்துடன், நான் அனைவரையும் சமமாகவே பார்க்கின்றேன். அதனால் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எனக்கு இல்லை. அனைத்து இன மக்களையும் நான் மதிக்கின்றேன். அனைவரும் எமது மக்கள் என்றே கருதுகின்றேன்.

அதேவேளை, பல்லினமே எமது சக்தி என்ற உண்மையினை உணர எமது அரசியல் தலைமைகள் தவறிவிட்டார்கள். தினமும் ஜாதி, மதம், பேதம் என்ற கொள்கைகளுடனேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதனாலேயே எமது மக்களுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. இந்த நிலைமையிலிருந்து நாம் விலக வேண்டும். நான் விலகியே இருக்கின்றேன். அந்த காலம் முதல் நான் இதே கொள்கையிலேயே செயற்பட்டு வருகின்றேன்.

அனைத்து மக்களுக்கிடையேயும் நாம் நம்பிக்கையினை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிணைந்த சமூகம் மற்றும் அரசியல், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நான் தேர்தலில் களமிறங்கிய போது என்னிடம் பலரும் முன்வைத்த கேள்வி, தமிழ் மக்களின் மனங்களை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் என்பதேயாகும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற பதிலையே நான் முன்வைத்தேன்.

இதனை தனியே பேச்சின் மூலம் வெற்றி கொள்ள முடியாது. எமது நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாகவே நாம் மக்கள் மனங்களில் நம்பிக்கையினை ஏற்படுத்த முடியும். அதனால் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்வதென்பது எனக்கு ஒரு சவாலாக அமையாது.

கேள்வி :-     மிலிந்த மொரகொடவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் உயர்மட்ட மக்களுக்கே பொருந்தும் என்ற ஒரு பேச்சு அடிபடுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், கொழும்பு வாழ் அடிமட்ட மக்களின் மனங்களை எவ்வாறு வெற்றிகொள்ளப் போகிறீர்கள்? அவரகளின் தேவைகளை உங்களால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

பதில் :-   
  மிலிந்த மொரகொட உயர்மட்ட மக்களுக்காக உள்ளவர் என்று கூறுபவர்கள் - நீங்கள் சொல்லும் இந்த உயர்மட்ட ரகத்தைச் சேர்ந்தவர்களே தவிர சாதாரண பொதுமக்கள் அல்ல. இந்த கொழும்பு நகரில் சுமார் 1600 இற்கும் மேற்பட்ட சேரிப்புறத் தோட்டங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பல்வேறு அரசியல்வாதிகளின் உதவிகளை நாடுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், அரசியல்வாதிகளுக்கிடையே உள்ள போட்டி, பொறாமை என்பன இந்த மக்களைப் பாதிப்படையச் செய்கின்றன. இதனால் மக்களிடையே பிளவும் ஏற்படுகின்றது. இது தான் சேரிப்புறத் தோட்டங்களில் காணப்படுகின்ற அரசியலாகும். ஆனால், மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு கட்சிகளையும் தெரியும், அரசியல்வாதிகளையும் அறிவார்கள். இருப்பினும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதனால்தான் அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் அரசியல்தான். முற்றுமுழுதாக அரசியல்வாதிகளே காரணம். உண்மையில், ஏழை, எளிய மக்களே புத்திசாலிகள். அனைத்துவித பிரச்சினைகளாலும் துன்பப்படுபவர்கள் அவர்களே. அவர்களுக்காக நான் அன்றும் குரல் கொடுத்தேன், இன்றும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன், இனியும் குரல் கொடுப்பேன். அத்துடன் செயல்ரீதியிலும் அம்மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி சேவையாற்றுவேன். எனக்கு இந்த உயர்மட்டம், தாழ் மட்டம் என்ற பேதமெல்லாம் இல்லை. எமது சேவை மக்களுக்கானது.

கேள்வி :- ஒரு மேயராக, மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கப் போகிறீர்கள்?

பதில் :-     மக்களுக்கான சேவையினை வழங்குவதில் நான் இரு வழிமுறைகளைப் பின்பற்றவுள்ளேன். அதில் முதலாவது 100 நாள் வேலைத்திட்டமாகவும் மற்றையது நீண்டகால வேலைத்திட்டமாகவும் காணப்படுகின்றது. இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 12 முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நெறியான திறமைமிக்க நிர்வாகம், தகவலறியும் உரிமை, பலதரப்பட்ட கலாசார நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் மற்றும் அவற்றை சிறப்புறக் கொண்டாடுதல், நிர்மாணப் பணிகளுக்கான அங்கீகாரம் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படுதல், குற்றச்செயல்கள் அற்ற நகராக மாற்றுதல், ஓர் அழகிய நவீன நகரமாக மாற்றுதல், அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொடுத்தல், சேவைகள் ஸ்தம்பிதம் அடையும்போது அவற்றை உடனடியாக திருத்தி சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்கு திட்டம் வகுத்தல், விளையாட்டு வசதிகளை மேம்படுத்தல், 'புரசவிய' திட்டத்தின் கீழ் இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல், சுகாதார வசதிகளை நெறியான முறையில் உயர்நிலைப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு உதவி என அந்த 12 அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நீண்டகால வேலைத்திட்டமானது மேற்படி 12 அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் முக்கிய இடம் வகிப்பது மாநகரசபையின் நிர்வாக முறைமையினை மாற்றியமைத்து மக்களுக்கு சேவையாற்றும் ஒரு நிறுவனமாக கொழும்பு மாநகரசபையை மாற்றுவதாகும். ஒரு அமைச்சரல்ல மக்களுக்காக சேவையாற்ற முன்செல்ல வேண்டும். அந்த நிறுவனமே முன்னிற்க வேண்டும்.

இதேவேளை, கொழும்பு நகரை பாதுகாப்பான நகரமாக்க வேண்டும். எவ்வித குற்றச்செயல்களும் அற்ற நகராக எமது நகரம் காணப்பட வேண்டும். அதற்காக நீண்ட கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நீண்டகால திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகளுக்கு அமைய அவர்களின் கருத்துப்படியே அவற்றை செயற்படுத்த தி;ட்டமிட்டுள்ளோம்.

கேள்வி :-     அரசாங்கத்தின் வாக்குறுதிகள், முக்கியமாக மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள நிலையில், நீங்கள் முன்வைத்திருக்கும் இந்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் எங்கே நிறைவேற்றப்படப் போகின்றன என்ற கருத்தினை எதிர்த்தரப்பினர் முன்வைத்துள்ளனர். அவர்களுடைய இந்த குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :-     மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து எதிர்க்கட்சியினரின் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் மஹிந்த சிந்தனையில் நிறைவேற்றப்பட்ட பல விடயங்கள் உள்ளன. அப்படி அவை நிறைவேற்றப்படவில்லையெனில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தெரிவாகியிருக்க மாட்டார். அதனால் அவை நிறைவேற்றப்பட்டனவா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சியல்ல. அந்த தீர்மானத்தை எடுக்கும் பலம் மக்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே நானும் எனது வேலைத்திட்டங்கள் உள்ளடங்கிய விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளேன். இது முற்றாக மக்களுக்கான சேவையை உள்ளடக்கியதாகும். இதன் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதிலேயே எல்லாமே தங்கியுள்ளது. இது தேர்தல் உத்தி அல்ல. நான் மேயராக வந்தால் இவற்றைச் செய்வேன். அதற்கான திட்டங்களை வகுத்துள்ளேன். அவற்றை நிறைவேற்ற மக்களின் அனுமதி தேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

கேள்வி :-     அமைச்சராக இருந்த காலத்தில் மக்களுக்காக செய்யத் தவறிய விடயங்கள் இந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா?

பதில் :-     கொள்கை ரீதியில் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய சில விடயங்களை இதில் உள்ளடக்கியுள்ளேன். உதாரணமாக தகவலறியும் உரிமை மற்றும் வெளிநாட்டு உதவி மற்றும் உல்லாசப் பயணத்துறை ஆயவற்றைக் குறிப்பிடலாம். இதேவேளை, அடிமட்ட ரீதியில் செய்துவந்த சில நடவடிக்கைகயை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். அவற்றில் முக்கியமாக, 'சஹன செவன' என்ற வேலைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். இதன்மூலம், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் கணினியூடாக பிரதேச செயலகத்துக்கு தொடர்புபடுத்துவதுடன், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரஜைகள் குழுக்களை அமைத்து மக்களின் பங்களிப்பினை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, 'செனசிலி' என்னும் சிறுவர் மைதானம் என்ற ஒரு திட்டத்தை வகுத்துள்ளேன். சேரிப்புறத் தோட்டங்களுக்கு மத்தியில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை தொடர்ந்தும் பல தோட்டங்களில் நகர ரீதியில் முன்னெடுக்கவுள்ளேன்.  இவ்வாறாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

கேள்வி :-     மேயர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ஐ.தே.க.வின் முஸம்மில், ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் ஆகியோரிடையே நீங்கள் காணும் சாதகமான பாதகமான விடயங்கள் எவை?

பதில் :-  
   அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். மக்களுடன் தொடர்புபடுகிறார்கள். இவை அனைத்தையும் கருத்திற்கொள்ளும் மக்களே யாரிடம் அதிகாரத்தைக் கையளிப்பது என்ற நல்ல தீர்மானத்தை இறுதியில் எடுக்க வேண்டும். நான் யாரையும் விமர்சனத்துக்கு உட்படுத்துவதில்லை, விமர்சிக்கவும் மாட்டேன். என்னுடைய கருத்துக்களையே நான் முன்வைப்பேன். அதுவே என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி :-     எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுடன் நிலவும் தேர்தல் போட்டி நிலைவரம் எந்தளவில் காணப்படுகிறது? இந்த போட்டியில் முஸம்மிலுடன் எவ்வாறானதொரு சவாலை எதிர்நோக்கியுள்ளீர்கள்?

பதில் :-    எனது அரசியல் வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் சவால்களையும் என்னை நான் நிரூபிக்க கிடைத்த சிறந்த வாய்ப்புக்களாகவே நான் பார்க்கிறேன். அதுவே என்னுடைய சாதாரண தோற்றப்பாட்டின் வெளிப்பாடும் ஆகும். அதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதென்பது கடினமான விடயமாக நான் பார்க்கவில்லை. மக்கள் புதிய விடயங்களை எதிர்ப்பார்க்கிறார்கள். என்னுடைய அரசியல் மக்களைக் கவரும். அவர்கள் அதை விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன். புதிய மாற்றங்களுக்காக அவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

கேள்வி :-     அரசாங்கம் சிறுபான்மையினருக்கு சார்பற்ற மனப்பான்மையைக் கொண்டது என்ற கருத்து நிலவுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படப் போகின்றீர்கள்?

பதில் :-     இதுவொரு மாநகரசபைத் தேர்தலாகும். இதில் தேசிய கொள்கைகளுக்கு இடமில்லை. மக்களுக்கான சேவையை யாரால் வழங்க முடியும் என்ற பிரச்சினையே இங்கு உள்ளது. மக்களுக்கான பாதுகாப்பினை நகரத்தால் வழங்க முடியும். இதனை நகரசபையினால் தனியாக செய்ய முடியாது. அரசாங்கத்துடன் இணைந்தால் மாத்திரமே அதனை சிறப்பாகச் செய்ய முடியும்.

நகரசபையொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் அடிபிடிபட்டுக்கொண்டால் அந்த நகரசபையினால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. காரணம் அரசாங்கத்திலிருந்தே அனைத்து சொத்துக்களும் வர வேண்டும். இவ்வாறான நிலைமையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கருத்து தேவையற்றதாகும். மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். நகரசபை அதற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்.

கொழும்பு நகரானது அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழும் நகரமாகும். இதுவே அனைத்து விடயங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். மாற்றத்துக்கான காலம் கனிந்துள்ளது. மாற்றங்களை சிங்கள மக்கள் மாத்திரம் விரும்பவில்லை. தமிழ், முஸ்லிம் என அனைத்தின மக்களும் விரும்புகின்றனர். மக்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் பற்றி பேசி அவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதிலேயே திறமை ஒழிந்திருக்கின்றது. அத்துடன், அவரவர் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் யார்? எவர்? எந்த கட்சி? என்றெல்லாம் மக்கள் பார்க்க மாட்டார்கள்.

கேள்வி :-     தேர்தலில் நீங்கள் வெற்றியடையும் பட்சத்தில், உங்களுடன் ஏதேனும் கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? அப்படியாயின் அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் கட்சிகள் எவை என்று கூற முடியுமா?

பதில் :-     இது தேர்தலின் பின்னர் சிந்திக்க வேண்டிய விடயமாகும். மக்களுக்கான தீர்வுகள் தொடர்பிலேயே நான் இதுவரையில் சிந்தித்துள்ளேன். அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. முதலில் நாம் எமது தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும். அவர்களுக்கான தீர்வுகள் தொடர்பில் கூற வேண்டும்.

இது தவிர, இந்த கட்சிகளை இணைத்தல் தொடர்பில் நாம் இப்போதே சிந்திக்க ஆரம்பித்தோமானால், எமது இலக்கிலிருந்து விலகிவிடுவோம். முதலில் எமது திட்டங்களை மக்களிடம் முன்வைத்துப் பார்ப்போம். அவர்கள் முடிவு எடுத்ததன் பின்னர் ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவோம்.

கேள்வி :-     பிரதி மேயராக யாரை நியமிக்கலாம் என்று கருதுகின்றீர்கள்?

பதில் :-   
 இது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுப்போம்.

கேள்வி :-     இறுதியாக ஒரு கேள்வி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாரம்பரிய வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றீர்களா?

பதில் :-     நான் இந்த பாரம்பரிய வாக்குகள் தொடர்பிலோ அல்லது ஐ.தே.க., ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற தனிப்பட்ட ரீதியிலோ இந்தத் தேர்தலைப் பார்க்கவில்லை. கொழும்பு மாநகரம், அதன் மக்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன். நான் முன்வைத்துள்ள கொள்கை வரைபு, அதன் செயற்றிறன், ஜனாதிபதியின் தலைமைத்துவம் என்ற விடயப் பரப்பிலேயே வெற்றி தங்கியுள்ளது. காரணம் ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன்றி என்னால் தனியாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. அவருடைய தலைமைத்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களாயின் எனக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நேர்காணல் :- எம்.மேனகா
படப்பிடிப்பு :- கித்சிறி டி மெல்

மிலிந்த மொரகொடவின் தேர்தல் விஞ்ஞாபனம்...


  Comments - 0

 • nakkiran Sunday, 25 September 2011 03:00 AM

  கொழும்பில் உள்ள காகங்களின் எண்ணிக்கை குறைக்க திட்டம் உங்களிடம் இல்லை. எப்படி அழகிய நகரமாக்க போறிங்கள் .

  Reply : 0       0

  xlntgson Sunday, 25 September 2011 09:53 PM

  காக்கைகளுக்கு விஷம் வைக்கின்றனரா யாரும்? எங்கு பார்த்தாலும் காகங்கள் செத்துக் கிடக்கின்றன. சாலை ஓரங்களில் கூட காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதை கரைந்து கூறும் காக்கைக் கூட்டங்களையும் காணோம். முன்பெல்லாம் ஒரு காக்கை இறந்து கிடந்தால் ஆயிரக்கணக்கில் காக்கைகள் வட்டமிடும், இக்காலம் அவை எங்கே போயின? எச்சில் கையால் காக்கையை விரட்டாதவர்கள் அதிகரித்து விட்டனர்; விஷம் வைக்கின்றனரோ? அவ்வாறாக நகரில் சுத்தம் ஏற்படாது. பூனைகளை கொன்றால் பிளேக் நோய் வரும் என்பது போல் மனிதர்கள் சாக வேண்டும் புதுத் தொற்று நோய்களால்.

  Reply : 0       0

  THIVAAN Saturday, 24 September 2011 07:02 AM

  100 நாள்களுக்குள் ஒரு டாக்குமென்டரி படம் தயாரிக்கலாம்.

  Reply : 0       0

  sadath Saturday, 24 September 2011 02:18 PM

  நீங்கள் அதிகமாக பேசுவீர்கள். எதையும் செய்ததாக தெரியவில்லை. வெறும் பேச்சுதான். சரி இனியாவது பார்ப்போம்! you are good at statement and hand leaf issuance but never achieved anything on the ground in the past, lets c what u do this time....

  Reply : 0       0

  xlntgson Saturday, 24 September 2011 09:18 PM

  இவர் இதை விட பெரிய பதவிகள் வகித்தவர். ஆகவே மேயர் பதவியை தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருப்பாரா, மீண்டும் தேசிய அரசியலில் குதிக்க பார்த்துக் கொண்டு இருப்பாரா? பாராளுமன்றத்துக்கு நின்று தோற்றுப் போனவர்கள் localcouncils ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் போட்டியிடக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X