2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மூன்றில் இரண்டு இருக்கும் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கையளித்துள்ள குற்றப்பிரேரணை தமிழ் மக்களை பொறுத்தவரை நல்ல விடயம் என அண்மையில் அரசாங்கத்தில் சேர்ந்த தமிழ் அரசியல்வாத; ஒருவர் கூறியிருந்தார். அவர் எதிர்க் கட்சியில் இருந்திருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

அதேபோல், எதிரணியில் இருந்து ஆளும் கூட்டணியில் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும்; அப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களும் ஆளும் கூட்டணியில் சேராமல் இருந்திருந்தால் இந்தப் பிரேணையில் கையெழுத்திட்டு இருப்பார்களா என்பது சந்தேகமே.

அரசியல் காரணங்களுக்காகவே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டது என ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்டவருமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்த புத்தளம் மாவட்ட எம்.பி அருந்திக்க பெர்ணான்டோ கூறியிருந்தார். ஆளும் கட்சியைச் சேராத எவரும் இதில் கையெழுத்திடவில்லை என்பதும் அவரது வாதத்தை உறுதிப் படுத்துகிறது.

இந்தக் குற்றப் பிரேரணையைப் பற்றி நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று விசாரணை நடத்தவிருக்கின்றது. அவ்விசாரணையின் போதும் பின்னர் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையின் உள்ளடக்கத்தை கருத்தில் கொண்டு தத்தமது மனச்சாட்சிக் கேற்ப செயற்படுவாரகளா அல்லது ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று பிரிந்து வாக்களிப்பார்களா என்பது முக்கிய கேள்வியொன்றாகும்.

ஆளும் கூட்டணியில் உள்ள சமசமாஜ கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டும் இந்தக் குற்றப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதில்லை என முடிவு செய்திருக்கின்றன. ஆனால் அது விதி விலக்காகும். பொதுவாக ஆளும் கட்சி; எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இவ்விடயத்தில் தத்தமது மனச் சாட்சிக்கேற்ப செயற்படுவதற்கு பதிலாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று பிரிந்தே வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்க முடியும். 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் சில வாரங்களாக நீடித்த நிறைவேற்றுத் துறையினருக்கும் நீதித்துறையினருக்கும் இடையிலான மோதலை அடுத்தே இந்தப் பிரேரணை முன்னனெடுக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. திவிநெகும சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த மோதலின் முக்கிய கட்டம் என்றே கூறப்படுகிறது.

குற்றப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்ல மூன்று பேரே அக்குழுவில் கூடுதலாக இருக்கிறார்கள். தப்பித் தவறி ஒருவர் மனம் மாறினாலும் அல்லது வேறு காரணங்களுக்காக விசாரணையின் தீர்ப்பு வழங்கும் போது சமூகமளிக்காவிட்டாலும் ஆளும் கட்சியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் அரசாங்கத்திற்கு இருக்கும் ஆர்வத்தையே இது காட்டுகிறது.

தெரிவுக் குழுவிற்கு ஆளும் கட்சியின் சார்பிலும் எதிர்க்கட்சி சார்பிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கேட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளும் என்று நம்ப முடியாது.
அதேவேளை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது இப்பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது.

பிரேரணையின் உள்ளடக்கம் எதுவாக இருப்பினும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஆதரித்தே வாக்களிப்பார்கள். சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காவிட்டலும் அது அரசாங்கத்திற்கு அவ்வளவு பாதிப்பபை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தால் நாட்டில் எதனையும் செய்யக் கூடிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அரசாங்கம் என்பதை விட எதனையும் செய்யக் கூடிய நிலையில் ஜனாதிபதி இருக்கிறார் என்பதே உண்மை. தற்போதைய நிலையில் நீதித் துறையாலும் அதற்கு எதிராக எதனையும் செய்ய முடியாது.

நியாயமான காரணங்களுக்காகவோ அல்லது நியாயமற்ற காரணங்களுக்காகவோ ஒரு சட்டம் இலகுவாக நிறைவேறுவதை தடுப்பதற்காக வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். அந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருக்கிறது.

திவிநெகும சட்டமூலம் விடயத்தில் உயர் நீதிமன்றம் இவ்வாறானதோர் தீர்;ப்பை வழங்கியது. ஓன்றில் அச்சட்ட மூலத்தின் 8 (2) என்ற வாசகம் திருத்தப்பட வேண்டும் அல்லது அச்சட்ட மூலம் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயார் என அப்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அது வெறும் வாய்வீச்சல்ல. மூன்றில் இரண்டு வாக்குகளால் சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டு சர்வஜன வாக்கெடுப்பபொன்றின் மூலம் அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற முடியும் என்ற நம்பிக்கையினாலேயே அவர் அவ்வாறு கூறினார். அரசாங்கம் பின்னர் சட்ட மூலத்தின் 8 (2) என்ற வாசகம் திருத்தப்படுமென்றும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில்லை என்றும் அறிவித்தது. ஆனால் தேவை இருந்தால் அரசாங்கம் அவ்வாறானதோர் சர்வஜன வாக்கெடுப்பிலும் நிச்சயமாக வெற்றி பெறும் நிலையிலேயே இருக்கிறது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தால் அரசாங்கம் பிரதம நீதியரசரையும் கூட நீக்கிவிட முடியும். அதேவேளை, அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவு மட்டுமல்ல நாட்டில் பெரும்பான்மை மக்களின் ஆதரவும் இருக்கிறது.

போதாக் குறைக்கு 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்போது அவருக்கு நியமனங்களை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை. 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தும் போதே 17ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டது. 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின கீழ் ஜனாதிபதியின் நியமனங்களை எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்க வேண்டியிருந்தது.

இதனால் ஜனாதிபதி விரும்பியவாறு உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்க முடியாதிருந்தது. இப்போது அவருக்கு அவ்வாறானதோர் தடையில்லை. 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது நீதித் துறையாலும் அரசாங்கத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. ஆனால் நீதித் துறைக்கும் இப்போது ஜனாதிபதி தமக்கு வேண்டிய நியமனங்களை வழங்க முடியும்.

மூன்றில் இரண்டு வாக்குகள் என்பது ஆளும் கூட்டணியின் உறுப்பனர்களின் எண்ணிக்கையே தவிர வேறொன்றும் அல்ல. அந்த மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தின் காரணமாக அந்த உறுப்பனர்களும் இப்போது சொன்னதை கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலமான எதிர்க் கட்சியொன்று இருந்தால் அவர்களுக்கு இதை விட சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.

அதாவது மூன்றில் இரண்டு பெருமபான்மை பலம் இருக்கும் வரை சட்டப் படி அரசாங்கத்தை அசைக்க முடியாது. அதேவேளை அந்த பலம் இருக்கும் வரை அரசாங்கம் நினைத்ததை செய்யும். சிலவேளை விமல் வீரவன்சவை முன்னால் அனுப்பிவிட்டு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அரசாங்கம் ரத்துச் செய்யலாம். இப்போதைய நிலையில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தை வழங்கிய மக்களாலும் இவற்றுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது.

  Comments - 0

  • rima Tuesday, 13 November 2012 04:15 PM

    இதுக்கு எல்லாம் காரணம் இந்த அரசின் காலில் விழுந்து கிடக்கும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும், சில தமிழ் உறுப்பினர்களும்தான். இவருகல மக்கள் இப்பொது நம்புவது இல்லை, இவருகல விரட்டும் காலம் வந்து விட்டது. இவருகளுக்கு பெரிது பதவிதான். மக்கள் அல்ல. சமூக துரோகி முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .