2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

நல்லவர்களையும் வல்லவர்களையும் தேடுகிறேன்: விஜயகாந்த்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது கிறிஸ்மஸ் சீஸன். வழக்கமாக கிறிஸ்துவ மதத்தினர் இந்த விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாடுவார்கள். தேவாலயங்கள் எல்லாம் களை கட்டி நிற்கும். ஆனால் அதில் அரசியல் கட்சிகள் எல்லாம் முந்தியடித்துக் கொண்டு "கிறிஸ்மஸ்" திருவிழாவை நடத்துவதுதான் - குறிப்பாக தேர்தல் சீஸனில் பிரதானமானது. அதுவும் ஏதாவது தேர்தல் வரப்போகின்றது என்றால், இந்த கொண்டாட்டங்களை அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் கையில் எடுத்துக் கொள்ளும். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலில் சென்னை டிரேட் சென்டரில் நடத்திய பிரமாண்டமான "கிறிஸ்மஸ் விழா" மற்ற கட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. சின்னஞ்சிறு கட்சிகள் அடுத்தடுத்து இதுபோன்ற கிறிஸ்மஸ் விழாக்களை நடத்தினாலும், இப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்த் தலைமையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எல்லாம் அடுத்தடுத்து கிறிஸ்மஸ் விழாக்களை நடத்தியிருக்கிறார்கள். அதுவும் ஒரே நாளில் கருணாநிதியும், விஜயகாந்தும் வெவ்வேறு இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு சிறப்பம்சம் சிங்காரித்து நிற்கிறது.

பொதுவாக பேராயர் எஸ்.றா.சற்குணம் - தி.மு.க. ஆதரவு பிரமுகர் என்ற கருத்து தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் உண்டு. கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் கூட. அவர் இந்த முறை விஜயகாந்த் நடத்திய கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்று "கேக்" வெட்டினார். விஜயகாந்தே, "நீங்கள் கேக்கை வெட்டுங்கள்" என்று பேராயர் எஸ்.றா. சற்குணத்திடம் கூற, "இல்லை, இல்லை நீங்கள் வெட்டுங்கள்" என்று அவர் விஜயகாந்திடம் சொல்ல, இறுதியில் விஜயகாந்தே கேக்கை வெட்டினார். பொதுவாக, முக்கிய ஆலோசனைகள் நடத்த "டின்னர் டிப்ளமெஸி", "லஞ்ச் டிப்ளமெஸி", "டீ பார்ட்டி" போன்றவற்றை அரசியல்வாதிகள் எப்படி நடத்துகிறார்களோ, அதுபோல்தான் கிறிஸ்மஸ் விழாக்களை தமிழகத்தில் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள். அந்தவகையில் விஜயகாந்தின் கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்ற பேராயர், "நல்லவர்கள், வல்லவர்களுடன் சேருங்கள்" என்று விஜயகாந்த்தை வைத்துக் கொண்டு பேசினார். இந்த பேச்சிற்கு பதிலளித்த விஜயகாந்த், "நல்லவர்கள், வல்லவர்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்று இங்கு இறை தூதர் போல் பேராயர் பேசினார். ஆனால் நல்லவர்கள், வல்லவர்கள் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை. நானும் நல்லவர்கள், வல்லவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று பகிரங்கமாகப் பேசினார். பேராயர் சற்குணம் "கூட்டணி வையுங்கள்" என்று கூறவில்லை. "சேருங்கள்" என்றுதான் சொன்னார். விஜயகாந்தோ, "கூட்டணி வையுங்கள்" என்று கூறினார் என்றே பேசியிருக்கிறார்.

வல்லவர்களை, நல்லவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த கிறிஸ்மஸ் விழாவில் சொன்ன விஜயகாந்த் தன் பேச்சில், "நான் தெய்வத்தையும் மக்களையும் நம்பியிருக்கிறேன். இங்கு பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு குறித்து நான் பேசினேன். அதற்காக என் மீது மானநஷ்ட ஈடு வழக்குப் போட்டு கோர்ட்டிற்கு அழைக்கிறார்கள்" என்று ஆவேசப்பட்டார். அதே நேரத்தில் எஸ்றா சற்குணத்தின் கருத்திற்கு வலு சேர்ப்பதுபோல், "தி.மு.க. ஆட்சியில் இரண்டு மணி நேரம்தான் பவர் கட் இருந்தது. இப்போது 18 மணி நேரம் பவர் கட் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7000 மெகாவாட் மின் திட்டங்களை நிறைவேற்றியிருந்தாலே இந்நேரம் தமிழகத்தில் மின்பற்றாக்குறை நீங்கியிருக்கும்" என்று உரையாற்றினார். இந்தப் பேச்சிற்கு முன்னுரிமை கொடுத்து தி.மு.க.வின் டி.வி.யான "கலைஞர் டி.வி" திரும்பத் திரும்ப செய்தி வாசித்துக் கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. அதே தினத்தில் இன்னொரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அதாவது, "தண்ணீரின்றி (காவிரி டெல்டா பகுதிகளில்) விவசாயப் பயிர் கருகுகிறது என்பதற்காக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்" என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை அது. இதில் வேறு ஒரு சூட்சமும் இருக்கிறது. இதே மாதிரி "விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்" என்று அதே தினத்தில் முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கைதான் வெளிவந்தது. சமீப காலங்களில் கருணாநிதி சொல்லும் கருத்தையே திரும்பவும் விஜயகாந்த் சொல்லி வருகிறார். விஜயகாந்த் மீது பல மானநஷ்ட வழக்குகள் போடப்பட்டபோது அதை மறைமுகமாகவே கண்டித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆகவே இதுவரை இரு தரப்பிலும் இருந்த மறைமுக உறவு கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம்போடத் தயாராகி வருகிறது என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஏன் விஜயகாந்த் இவ்வளவு அவசரப்பட்டு தி.மு.க. பக்கம் சாய்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் மனதில் வினா எழாமல் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க. அரசு அவர் மீது எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள். தொடுக்கும் வழக்குகள். இதுதவிர அவர் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பிரிக்கும் முயற்சிகள். ஆளும் தரப்பிலிருந்து அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை சமாளிக்க தி.மு.க. போன்ற முக்கிய எதிர்க்கட்சி துணை வேண்டும் என்ற சிந்தனையை விஜயகாந்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க. சார்பு கருத்துக்களை விஜயகாந்த் வெளியிட்டாலும், "வல்லவர்களையும், நல்லவர்களையும் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். தேர்தல் அணியில் தன் கட்சிக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகளை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதால் கூட்டணி பேசும் போது தன் "பார்கைனிங் பவரை" தக்க வைத்துக் கொள்ளுவதற்காகவே அப்படிப் பேசியிருக்கிறார்.

அதே தினத்தில் இன்னொரு கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ்காரர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்றுள்ளார். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பங்கேற்கவில்லை. ஆனால் அக்கட்சியின் முன்னணி பிரமுகர்களில் ஒருவரான பீற்றர் அல்போன்ஸ், மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவ்விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, "தமிழகத்தில் நான் முதலமைச்சராக இருந்தபோது, அன்னை சோனியா காந்தி அவர்களை சந்தித்து, அவர்கள் நான் சொன்ன விளக்கங்களை எல்லாம் புரிந்து கொண்டு, தமிழுக்கு செம்மொழி தகுதி தருகிறேன் என்று உறுதியளித்தார்கள். உறுதியளித்ததோடு நிற்கவில்லை. உடனடியாக அந்த செம்மொழிக்கான கட்டிடம் தமிழகத்திலே உருவாக வேண்டும் என்று அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். கிறிஸ்மஸ் விழாவில் சோனியாவை தி.மு.க. தலைவர் பாராட்டியதற்கு ஒரு காரணம் உண்டு. ஒருவேளை காங்கிரஸ் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முடியாத சூழல் உருவாகுமேயானால், சோனியாவிற்காக விழும் "கிறிஸ்துவ மைனாரிட்டி வாக்குகள்" தி.மு.க.விற்கு சேதாரம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் காரணம். ஏனென்றால் பலரும் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று "ஹேஸ்யம்" சொல்லிக் கொண்டிருந்தாலும், அந்தக் கூட்டணியில் காங்கிரஸுக்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த 16 எம்.பி. தொகுதிகளைக் கொடுப்பதில்தான் தி.மு.க.விற்கு சிக்கலே முளைக்கும்.

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் சோனியாவை பாராட்டி கிறிஸ்துவ மைனாரிட்டி வாக்குகளில் தனக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் கருணாநிதி. தி.மு.க.வின் நெருங்கிய நண்பராக இருக்கும் பேராயர் எஸ்றா. சற்குணம் - விஜயகாந்த், கருணாநிதி ஆகியோர் பங்கேற்ற இரு கிறிஸ்மஸ் விழாக்களிலும் கலந்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க அம்சம்.

இப்படியொரு சூழலில் குஜராத் முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகின்ற 26ஆம் திகதி குஜராத் போகிறார் என்ற அரசு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது நரேந்திர மோடி சென்னை வந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றார் என்பதற்காக இப்போது தமிழக முதல்வர் குஜராத் செல்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். தேசிய அரசியலை மனதில் கொண்டு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா இப்படி மோடி விழாவிற்கு போவது வியப்புக்குரியது அல்ல. இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் பா.ஜ.க.விற்குள்ளேயே உள்ள தலைவர்கள்தான்! ஆனால் தமிழக அரசியலைப் பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, மோடி விழாவிற்கும் செல்கிறார். கிறிஸ்மஸ் விழாவினையும் கொண்டாடுகிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் பாதை என்பது "மைனாரிட்டி" மற்றும் "இந்துத்துவா" ஆகிய இரு தரப்பு வாக்குகளையும் அரவணைத்துச் செல்லும்விதமான வியூகம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .