2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அரசின் மூலோபாயத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ள விக்னேஸ்வரன்

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த எடுத்த முடிவு, வடக்குத் தேர்தல் குறித்த அரச தரப்பின் மூலோபாயத்தை மாற்றியமைத்து விட்டது என்றே கூறலாம்.
 
இந்த மூலோபாய மாற்றம் என்பது, தனியே வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கானதாக மட்டும் இருக்குமா அல்லது அதற்கு அப்பாலும் செல்லுமா என்ற கேள்வியையும் கூடவே இது எழுப்பி விட்டுள்ளது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் அரசியல் நகர்வாக மட்டுமே கையாளும் என்ற அரசின் எதிர்பார்ப்பு, சி.வி.விக்னேஸ்வரன் களத்தில் இறக்கப்பட்டதும், உடைக்கப்பட்டு விட்டது.
 
இந்தக் காய்நகர்த்தல் என்பது, வெறுமனே வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தல் என்ற சாதாரண அரசியல் மூலோபாயத்துக்கு அப்பாற்பட்டது. இந்த யதார்த்தத்தை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
 
சி.வி.விக்னேஸ்வரன் களத்தில் இறக்கப்பட்டதும், நிகழ்ந்த முக்கியமானதொரு மாற்றம், அரசதரப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுங்கிக் கொண்டதைக் குறிப்பிடலாம்.
 
இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை, அரசதரப்பு அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகவும் இல்லை, டக்ளஸ் தேவானந்தா போட்டியில் இருந்து ஒதுங்குவதாக அறிவிக்கவும் இல்லை. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறமாட்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால் அவர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தான் முதல்வர் பதவிக்காகப் போட்டியிடுவேன் என்றும், அதற்காக அமைச்சர் பதவியை இழக்கவும் தயார் என்றும் கூறியிருந்தார்.
 
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தான் போட்டியிடத் திட்டமிட்டிருக்கவேயில்லை என்று அவரால் ஒருபோதும் பல்டி அடிக்க முடியாது. அதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று தானே முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் அவர், தானே முதல்வராவேன் என்று அவர் வலிந்து கூறவில்லை.
 
இப்போதைய சட்டங்களின்படி, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல், வெளியில் இருந்து ஒருவரை முதல்வராக நியமிக்க முடியாது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு இதற்குத் தடைவிதித்துள்ளது.
 
இந்தநிலையில், வெளியில் இருந்து ஒருவரை முதல்வராக நியமிக்க வழி செய்யும் வகையில், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்கும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இவையெல்லாம், வடக்கு மாகாண முதல்வர் பதவி மீது அவருக்கு கண் இருந்தாலும் கூட, போட்டியில் குதிக்கும் எண்ணம் இல்லை என்பதையே காட்டுகின்றன.
 
அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, வடக்கில் மட்டுமன்றி, ஏனைய இரண்டு மாகாணங்களிலும் கூட, முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாமலேயே போட்டியை எதிர்கொள்ளப் போகிறது.
 
எவ்வாறாயினும், அரசதரப்பு ஏனைய மாகாணங்களில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாது போனாலும், அத்தகைய வழக்கத்தை முன்னரும் கடைப்பிடித்திருந்தாலும், வடக்கு மாகாணசபையில் அத்தகைய மூலோபாயத்தைக் கடைப்பிடிக்கத் திட்டமிட்டிருக்கவில்லை. ஏனென்றால், முன்னர் பல சந்தர்ப்பங்களில், அரசதரப்பின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக, கே.பி முன்னிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியிடப்பட்டன.  பின்னர், தயா மாஸ்டர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கசிய விடப்பட்டன. இல்லை, டக்ளஸ் தேவானந்தாவே போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. இவர்களை விட வேறும் சிலரின் பெயர்களும் அடிபட்டன.
 
இத்தகைய செய்திகள் வெளியாகிய போதெல்லாம், ஆளும்கட்சி அதை ஒருபோதும் நிராகரிக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான ஓர் உளவியல் போராகவே இது நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பதை ஏற்படுத்தவும், வடக்கிலுள்ள வாக்காளர்களைக் குழப்பி விடவும், அரசதரப்பே இத்தகைய செய்திகளை ஊக்குவித்தது. ஆனால், இப்போது திடீரென, யாரையுமே முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப் போவதில்லை என்று அரசதரப்புக் கூறுகிறது. இது, ஏற்கனவே முதல்வர் பதவிக்காக எடுத்து வைத்த அடியை, சற்று பின்னே எடுத்து வைத்துள்ளது என்றே அர்த்தம்.
 
அரசதரப்பு, இவ்வாறு பின்வாங்கிக் கொண்டதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் களத்துக்கு வெளியில் இருந்து, முன்னாள் நீதியரசரை முதன்மை வேட்பாளராக தெரிவு செய்தபோது, அவருக்கு இணையான - ஈடுகொடுக்க கூடிய ஒரு முதன்மை வேட்பாளரை அரசதரப்பினால் நிறுத்த முடியாது போயுள்ளது. அரசியல் அனுபவங்களுக்கு அப்பால், சமூகத்திலும் அரசியலிலும், சர்வதேச அளவிலும், செல்வாக்குப் பெற்ற ஒருவருடன், அவருக்கு நிகரானதொரு பிரமுகரை நிறுத்தாது போனால், அந்தத் தேர்தல் களையிழந்து விடும். அதனால் தான், முதன்மை வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிற்பதற்குத் தயங்குவதுடன், ஆளும்கட்சி எந்தவொரு முதன்மை வேட்பாளரையும் நிறுத்தவும் பின்நிற்கிறது.
 
முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என்று பலரை அறிமுகப்படுத்தி விட்டு, கடைசியில், ஒருவரையும் அத்தகைய முகத்துடன் போட்டியிட வைக்க முடியாமல் போனதால், வடக்குத் தேர்தல் தொடர்பான அரசின் முக்கியமானதொரு தந்திரோபாயம் தோல்வி கண்டுவிட்டது என்றே கூறலாம். இதனால் தான், கனதியானதொரு முதன்மை வேட்பாளரை முன்னிறுத்தும் அரசியல் மூலோபாயத்தை அரசதரப்பு மாற்றியமைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
 
சரி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதுடன், அரசதரப்புக்கு இந்த மூலோபாய நெருக்கடி தீர்ந்து விடுமா என்றால், அதுவும் கிடையாது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தாம் தோற்றுப் போவதற்காகப் போட்டியிடவில்லை என்று அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் குறிப்பிட்டிருந்தாலும் கூட, இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் அரசதரப்பு ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புவோர் மிகமிகக் குறைவு.
 
அரச தரப்பினருக்கே இந்த நம்பிக்கையில்லாத போது, சாதாரண மக்களின் நிலை என்னவென்று புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான வேலையல்ல. வடக்கு மாகாண முதல்வராக, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், பொறுப்பேற்கும் நிலை ஏற்படுமானால், அரசாங்கத்தின் அடுத்த அரசியல் தந்திரோபாயமும் கேள்விக்குள்ளாகும். விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக அறிவித்த போது, அதுபற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதனால், வடக்கிலுள்ள மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம், விக்னேஸ்வரன் முதல்வர் பதவிக்கு ஆளுமையற்றவர் என்ற கருத்தின் அடிப்படையிலன்று. எல்லா அதிகாரங்களும் மத்திய அரசின் வசம் உள்ள நிலையில், இவரால் எதைச் செய்து கிழிக்க முடியும் என்ற அகந்தையான கருத்தாகவே அதைக் கருதலாம்.
 
அதாவது, வடக்கில், விக்னேஸ்வரன் முதல்வரானாலும் சரி, வேறு ஒருவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் சரி, அவரை ஆட்டி வைக்கும் அதிகாரம் தம்மிடமே உள்ளது என்றே அரசாங்கம் கருதுகிறது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கு எந்த அதிகாரங்களையும் வழங்கவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தாலும் கூட, தேர்தலின் பின்னர், அவருடன் அரசாங்கம் அதிகளவில் முரண்போக்கை வெளிப்படுத்த முடியாது.
 
ஏனென்றால், அத்தகைய முரண்போக்கு, நியாயமானதொரு தீர்வை விரும்பும் சிங்கள மக்களையும், சர்வதேச சமூகத்தையும், அரசாங்கத்தை வெறுப்புடன் பார்க்க வைக்கும். என்னதான், சம்பிக்க ரணவக்க அவரை, அன்டன் பாலசிங்கத்தின் மறுவடிவம் என்றாலும், விமல் வீரவன்ச அவரை, பிரபாகரனால் முடியாது போனதை, நிறைவேற்ற அழைத்து வரப்பட்டவர் என்றாலும், தனிநாடு கோரும் போராட்டத்துக்கு உயிர் கொடுக்க வந்துள்ளவர் என்று சிங்களத் தேசியவாத அமைப்புகள் குறிப்பிட்டாலும், இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்  அவர், என்ற உண்மை சிங்கள மக்களிலும் கணிசமானோருக்குத் தெரிந்தேயிருக்கும்.
 
இது, அவருடன் எதிர்காலத்தில் முரண்போக்கை வலிந்து உருவாக்க முற்பட்டால், அரசின் மீதான வெறுப்பையே தோற்றுவிக்கும். இத்தகைய நிர்ப்பந்தம் ஒன்று உருவாகும் நிலை தோன்றினால், என்பதைவிட அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலேயே, அரசாங்கத்தின் அடுத்தடுத்த மூலோபாயங்கள் கேள்விக்குள்ளாகும்.
 
எனவே, சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசத்தை, தனியே வடக்கு அரசியல் களத்தில் ஏற்படும் மாற்றமாக மட்டும் கருத முடியவில்லை. அதற்கும் அப்பால், தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதை நிராகரிக்க முடியாது.

  Comments - 0

  • AMBI. Sunday, 28 July 2013 04:21 PM

    கடந்த பொது தேர்தலின் போது சரத் பொன்சேகாவை ஊடகங்கள் இப்படித்தான் ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்தனர். ஐயா ஊடகங்களை நம்பாதீர்கள், கடைசியில் அர்சாங்கத்தோடு சேர்ந்து அறிக்கை விடுவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .