2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இந்துத்துவா தலைவர்களாக மாறும் தமிழக கட்சித் தலைவர்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது. வருகின்ற ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பிறகு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எத்தனை பேர் இறுதியாக போட்டியிடுவார்கள் என்பது தெரிந்து விடும். அனைத்துக் கட்சிகளுமே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளன.தமிழக தேர்தல் களம் ஆறு முனைப் போட்டியைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பஞ்சமில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் நொறுக்குத் தீணி போல் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டு, அவர்களும் ஆங்காங்கே சுற்றி வருகிறார்கள். திருவாளர் வாக்காளர் இத்தனை பிரச்சாரங்களையும் பார்த்து, தன் வாக்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்ற முடிவை ஏப்ரல் 24ஆம் திகதி எடுக்கப் போகிறார் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் தற்போதையை நிலைமை.

இதுவரை நடைபெற்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் மலைக்கு மடுவுக்கும் இடையேயான இடைவெளி இருக்கிறது. அ.தி.மு.க. தன்னந்தனியாக தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க.வோ ஏற்புடைய கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி கண்டு கை கோர்த்துச் செல்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சியை இன்னொரு கட்சி விழுங்கி விடும் என்ற மனப்போக்கில்தான் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் அனைவருமே இருக்கிறார்கள். பா.ஜ.க.விற்கு ம.தி.மு.க.வின் தனி ஈழம் பிடிக்கவில்லை. டாக்டர் ராமதாஸுக்கு வன்னியர் வாக்கு வங்கியை வசீகரம் செய்த விஜயகாந்தின் போக்கு பிடிக்கவில்லை. விஜயகாந்துக்கோ தன்னை நடிகர் என்று சித்தரித்த டாக்டர் ராமதாûஸப் பிடிக்கவில்லை} இதுதான் பா.ஜ.க. கூட்டணியில் தலைவர்களின் பங்களிப்பு. இவைகள் அனைத்துமே கூட்டணிகள் என்பதை விட ஒன்றுக்கு மற்றொன்று மாற்றணி என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தி.மு.க.விற்கு கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஸ்டார் பிரசார நாயகர்கள். அ.தி.மு.க.விற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே பிரச்சார நாயகர். ஆனால் பா.ஜ.க.விலோ வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய அனைவருமே ஸ்டார் அந்தஸ்துள்ள பிரச்சார நாயகர்கள். இவர்களில் யாருடையை பிரசாரமும் வாக்காளர்களை கவர்ந்து இழுத்துவிடவில்லை என்பதுதான் இப்போது நிலவும் நிலைமை. காரணம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டு மவுனப்புரட்சி செய்து கொண்டிருப்பது போலவே தெரிகிறது. கூட்டங்களில் மக்கள் தென்படுவதில்லை. இளைஞர்களை காண முடியவில்லை. ஏன் பெண்களைக் கூட அழைத்து வந்து அமர வைக்கும் கட்சிக் கூட்டங்கள்தான் அதிகம் நடக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் வாக்காளர்கள் பார்வையில் இது ஒரு வித்தியாசமான தேர்தல்.

தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்வதால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்பதை வாக்காளர்கள் நிச்சயம் எடை போடுகிறார்கள் என்பதே இன்றைய நிலைமை. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அனைவருமே ஆர்வமாக இருக்கிறார்கள். அதே மாதிரி உறுதியான தலைமை இந்தியாவிற்கு கிடைக்க வேண்டும் என்பதிலும் அக்கறையுடன் இருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படியொரு இமேஜ் உள்ள நரேந்திர மோடிக்கு வாக்காளர்கள்} குறிப்பாக இளம் வாக்காளர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் நரேந்திரமோடியின் பிரச்சாரங்கள் திசை மாறுகின்றன. வளர்ச்சி நாயகனாக காட்டப்பட்ட மோடி இன்று வம்பு நாயகனாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்த உடனேயே அவர் வளர்ச்சியை விட இந்துத்துவாவை அதிகம் நம்புகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியது. அடுத்து பசுவதை பற்றி பேசுகிறார். சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை ஒரு பிரதமர் வேட்பாளர் என்ற தகுதிக்கும் கீழே போய் விமர்சிக்கிறார். பா.ஜ.க.விற்குள் உள்ள அத்தனை சீனியர் லீடர்களையும் ஒரம் கட்டியிருக்கிறார்.

உதாரணமாக பா.ஜ.க.வின் முகமாக கருதப்பட்ட முரளி மனோகர் ஜோசி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், சுஸ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் அத்வானி போட்டியிடுவதற்குள் அவருக்கே சவாலாகி விட்டது. இப்படி மோடியின் ஒவ்வொரு சமீப கால பேச்சுக்களும், நடவடிக்கைகளும் பா.ஜ.க.விற்குள் மோடி என்பதை விட மோடிக்குள் பா.ஜ.க. என்ற இமேஜைக் கொடுத்திருக்கிறது. இந்த லேட்டஸ்ட் குழப்பம் வாக்காளர்களை கொஞ்சம் திணற வைத்துள்ளது என்பதே உண்மை. மோடிதான் இந்த நாட்டின் சாய்ஸ் என்று இருந்த வாக்காளர்கள் மத்தியில் இவரை விட்டால் வேறு யாரும் இல்லையா என்று யோசிக்க வைத்துள்ளது. அதுவே மோடிக்கு ஒரு சறுக்கல்தான். பீஹாரில் ராம்விலாஸ் பாஸ்வானும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் மட்டும்தான் இப்போது பா.ஜ.க. பக்கம் மோடி தலைமையை நம்பி வந்துள்ள முக்கிய பிற கட்சித் தலைவர்கள். ஆனால் இவர்கள் கூட நாளைக்கே பா.ஜ.க.விற்குள் அத்வானியா மோடியா என்ற கேள்வி பிறந்தால், அத்வானி பக்கம் நிற்கக் கூடியவர்கள்தான் என்பதை மறப்பதற்கில்லை.

நரேந்திரமோடியின் எண்ணவோட்டத்தின் மாற்றம் இப்படியொருக்க பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடும் வில்லங்கம் ஆகியிருக்கிறது. ஒரு தேசிய கட்சி நாட்டின் முதல் கட்டத் தேர்தல் நடக்கப் போகும் தினத்தில் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. வாஜ்பாய் இருந்த போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்று தனி செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க.விற்கு என்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னது கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளையும், பின்னது பா.ஜ.க.வின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டம் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் உணர்வுகள் பிரதிபலிக்க வாய்ப்பில்லை. இதுவும் மோடிக்கு இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்றம் வேண்டும் என்ற நினைத்த வாக்காளர்கள் மத்தியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆலோசித்து முடிவு எடுப்பதையே அருவருப்பாக பார்ப்பது போல் இருக்கிறது மோடியின் பேச்சு என்ற குற்றச்சாட்டு அனைத்து மட்டத்திலும் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஆலோசனை கேட்டால் அவர் கமிட்டி போடுகிறேன் என்பார் என்று மோடி பேசியது எல்லாம் நடுநிலையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை. ஆலோசிப்பதே தவறு என்று பேசுவது எப்படி ஒரு நல்ல நிர்வாகத்திற்கு அடையாளமாக இருக்க முடியும் என்ற கருத்து மோடியின் மீது இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஆர்.எஸ்.எஸ்.தான் எனக்கு வழிகாட்டி என்று மோடி பேசிய பிறகு அவர் மீது இருந்த வளர்ச்சி நாயகன் இமேஜ் விலகிக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். நாயகன் என்ற இமேஜ்தான் இப்போது முன்னுக்கு நிற்கிறது. இது காங்கிரஸிற்கு மாற்றாக ஏற்றுக் கொள்ள வேண்டிய கூற்று அல்ல என்ற தோற்றத்தை வேகமாக உருவாக்கி வருகிறது.

பல பத்திரிக்கைகளில் இப்போது கட்டுரையாளர்கள் மோடியை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் தலையில் தூக்கிக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் இப்போது அவரை தோளுக்கு இறக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். மோடியின் பேச்சுக்கள் இப்படியே தொடருமானால், தோளில் இருக்கும் மோடியே இறக்கி விட்டுப் போய் விடும் ஆபத்துதான் ஏற்பட்டிருக்கிறது. தேர்தலின் துவக்கத்தில் தன்னை வளர்ச்சி நாயகன் என்ற சொல்லுக்கு மட்டுமே உரியவன் என்று மோடி முன்னிலைப்படுத்திக் கொண்டார். இப்போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவி தேர்தலில் கிடைக்காது என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் சென்று கொண்டிருக்கிறார் மோடி. குஜராத் கலவரத்தை வளர்ச்சி நாயகன் என்ற போர்வையால் மறைத்த மோடியின் ஆதரவாளர்களால் தேர்தல் நெருங்க நெருங்க அந்தப் பணியை செம்மையாகச் செய்ய முடியவில்லை. குறிப்பாக உத்தரபிரதேசத்தில்," பழிக்குப் பழி வாங்க பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்' என்று மோடியின் நண்பர் அமித் ஷா பேசியதையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசியதுடன் ஒப்பிட்டு வக்காலத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு பா.ஜ.க. வந்து விட்டது. இதை வாக்காளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். தமிழக வாக்காளர்களும் இதையெல்லாம் கவனிக்கத் தவறவில்லை.

அகில இந்திய அளவில் மோடியின் மாற்றம் இப்படியென்றால் தமிழக கோணத்தில் பார்த்தால் இங்கு இப்போது தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகளில் இலங்கை தமிழர் பிரச்சினையும் ஒன்று. அப்பிரச்சினையில் இதுவரை பா.ஜ.க. எந்த ஆக்கபூர்வமான கருத்தையும் சொல்லவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது பா.ஜ.க. அதில் கூட சீனாவின் அத்துமீறல்கள், பாகிஸ்தானின் அத்து மீறல்கள் எல்லாவற்றையும் சொன்ன பா.ஜ.க. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கை தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலை விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்க  தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா பற்றி பா.ஜ.க. அகில இந்தியத் தலைவர்கள் கப் சிப் என்று இருக்கிறார்கள். தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து இலங்கை தமிழர் பிரச்சினையிலும் இதுவரை நரேந்திர மோடியிடமிருந்து காங்கிரஸýக்கு மாற்றாக புதிய கொள்கைப்பாடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதனால் தமிழக வாக்காளர்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை மனதில் வைத்து வாக்களித்தால் கூட அதை வரவேற்கும் விதத்தில் மோடியின் கருத்துக்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது அந்த அணிக்கே சற்று சிக்கலான விஷயம்தான்.

மோடியின் இமேஜ் பெரிய மாற்றத்தை இந்த இடைப்பட்ட காலத்தில் கண்டிருக்கிறது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவர் என்ற நிலையை அவரே மாற்றிக் கொண்டு வருகிறார். என்னை இந்துத்துவா வாக்காளர்கள் மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும் என்ற சிந்தனையோட்டத்துடன் சிறகடித்துப் பறந்து வருகிறார். காலம் காலமாக இது போன்ற பிரச்சினைகளுக்கு இடம்தராத தமிழக மண்ணில் மோடியின் இந்துத்துவா மோகம் எந்த அளவிற்கு அவருக்கு வெற்றிக் கணியைப் பறித்துக் கொடுக்கப் போகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக மாறி நிற்கிறது. அதே போல் மோடியை முன்னிறுத்தி களத்தில் நிற்கும் வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த விளக்கத்தை எப்படி மக்களுக்கு அளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் ஒரு வேளை இந்துத்துவா தலைவர்களாகவே தேர்தல் காலத்திற்காக மாறிவிடப் போகிறார்களா என்பதும் புரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்துமே முஸ்லிம் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை. இந்தக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் 29 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதைப் பார்த்தால், மோடியின் இந்துத்துவாக் கொள்கைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து விட்டார்கள் இந்த தலைவர்களும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--