2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த நரேந்திர மோடி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் பகுதிக்குச் சென்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அதே பகுதியில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். ரஜினி-மோடி சந்திப்பு தமிழக தேர்தல் பிரசாரத்தை களை கட்ட வைத்திருக்கிறது. ஆனால் இதில் மிகவும் வருத்தப்பட்டவர் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு சினிமா பிரபலம் விஜயகாந்த். ரஜினி நடித்த "பாபா' படப் பிரச்சினை எழுந்த போது வட மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் சமாளிக்க முடியாமல் ரஜினி திணறிய போது, "தைரியம் இருந்தால் பகலில் தியேட்டருக்குள் புகுந்து படப் பெட்டியைத் தூக்க வேண்டியதுதானே' என்று குரல் எழுப்பியவர் விஜயகாந்த். அப்படி டாக்டர் ராமதாஸுக்கு எதிராக கருத்துச் சொல்லித்தான் அரசியல் களத்திற்கு வந்தார். அதன்பிறகு ரஜினிக்கும், விஜயகாந்திற்கும் திரையுலக நட்பு நீடிக்கலாம். ஆனால் அரசியல் ரீதியான நட்பு அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இது போன்றதொரு சூழலில், தமிழகத்தில் தன்னைச் சந்திக்காமல், தனக்குப் போட்டியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை சந்தித்தது விஜயகாந்திற்கு வெறுப்பாகவே இருக்கிறது. அதனால்தான் நரேந்திரமோடியை வரவேற்க தன் கட்சி தலைவர்கள் யாரையும் அனுப்பவில்லை விஜயகாந்த். அது மட்டுமின்றி, வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் கூட சென்னையில் நடைபெற்ற மோடியின் கூட்டத்திற்கு வரவில்லை. எப்படியிருந்தாலும், ரஜினியைச் சந்தித்த மோடிக்கு தமிழக அரசியலில் ஒரு இமேஜ் கிடைக்கும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. ஏனென்றால் ரஜினி ஒரு பொதுவான இமேஜுக்கு கை கொடுக்கும் பெயர். அந்தப் பெயரைச் சொன்னால் அவரது ரசிகர்கள் மோடியின் கட்சியுடன் கை கோர்ப்பார்கள் என்ற நினைப்பு பா.ஜ.க. தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆனால் நிழல் வேறு. நிஜம் வேறு. ரஜினி அரசியல் ரீதியாகச் சொன்ன கருத்துக்கள் ஒரேயொரு தேர்தலில் மட்டுமே கை கொடுத்திருக்கிறது. அது 1996 சட்டமன்ற தேர்தல். ஆனால் அப்போது ஒட்டுமொத்த தமிழகமே ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்த நேரம். அப்படி மக்களின் விருப்பத்துடன் ரஜினியின் கருத்தும் சேர்ந்த போது வெற்றி வாய்ப்பாக அமைந்தது. அது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அணி சேர்ந்திருந்த மூப்பனாருக்கும், அணி அமைத்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் பலனளித்தது. முதலமைச்சரானார் கலைஞர் கருணாநிதி.  போயஸ் கார்டனில் தனக்கு கொடுக்கப்படும் போக்குவரத்து பொலிஸாரின் நெருக்கடிகளில் புழுங்கிக் கொண்டிருந்த ரஜினி, பாட்ஷா பட விழாவில் கொந்தளித்தார். அதனால் ஏற்பட்ட மோதலை அப்போது ஆட்சி அமைக்க தயாராகிக் கொண்டிருந்த தி.மு.க. பயன்படுத்திக் கொண்டது. அப்போது கூட முதலில் ரஜினியை தமிழக காங்கிரஸ் தலைவராகச் சொல்லித்தான் அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் வற்புறுத்தினார். ஆனால் ரஜினி மறுக்கவே, வேறு வழியின்றி மூப்பனார், கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து "வாய்ஸ்' கொடுத்து தி.மு.க. அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தார் ரஜினி. அதுதான் ரஜினி கொடுத்த முதல் வாய்ஸ்.

அடுத்த வாய்ஸ் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்தார். கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு அவர் கொடுத்த அந்த வாய்ஸ் எடுபடவில்லை. தி.மு.க. தலைமையிலான அணி அந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே ரஜினி வாய்ஸ் எடுபடாது என்ற சூழல் தமிழக அரசியலில் எழுந்தது.  இதன்பிறகுதான் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரஜினிக்கும் ராமதாஸுக்கும் லடாய் ஏற்பட்டது. அதன் விளைவாக "நதிகள் இணைப்பு' என்பதை முன் வைத்து, சென்னை விமானநிலையத்திற்குச் சென்று அப்போதையை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு "வாய்ஸ்' கொடுத்தார். ஆனால் அந்த வாய்ஸ்  எடுபடவில்லை. அந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்த அணி நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்து.

ஆகவே ரஜினி வாய்ஸ் என்பது தமிழகத்தில் எடுபட்டு 18 வருடங்களுக்கு மேலாகி விட்டது. அப்படியொரு சூழ்நிலையில் நரேந்திரமோடி ஏன் ரஜினியைச் சந்தித்தார் என்ற கேள்வி எழும். மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. இக்கூட்டணி பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாலர் ஜெயலலிதா விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. முன் வைக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஏன் பா.ஜ.க. கூட்டணியிலேயே இருக்கும் வைகோ கூட, "எங்களை விமர்சிக்காமல் எங்கள் அறுவடையை திருடப் பார்க்கிறீர்களா' என்றே அ.தி.மு.க.வைப் பார்த்து கேட்டு விட்டார். இதற்கு தகுந்தாற்போல் துக்ளக் ஆசிரியர் சோ தன் பத்திரிகையில், "பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கும், அந்தக் கட்சி போட்டியிடாத மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கும் வாக்களியுங்கள்' என்று கூறி விட்டார். அது மட்டுமின்றி பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் அது ஓட்டுப் பிளவுக்கு மட்டுமே வித்திடும் என்றும் எச்சரிக்கை செய்து விட்டார்.

இதை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களும் மறுக்கவில்லை. இது போன்ற சூழ்நிலையில்தான் நரேந்திரமோடி ரஜினியை சந்தித்தார்.  போயஸ் கார்டன் பகுதியில் ரஜினி வீட்டிற்கு திரும்பும் முன்பு இன்னும் இரண்டு வீடுகள் தாண்டினால் முதல்வரின் போயஸ் தோட்ட இல்லம். அங்கு போகாமல் ரஜினி வீட்டிற்குப் போய் விட்டு பொதுக்கூட்ட மேடைக்குப் போய் விட்டார் நரேந்திரமோடி. இது முழுக்க முழுக்க பா.ஜ.க. தொண்டர்களுக்கு,  அல்லது பா.ஜ.க.விற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு, "எனக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த உறவும் இல்லை' என்பதை அறிவிக்கும் விதத்தில் அமைந்து விட்டது. இதன் மூலம்  பா.ஜ.க. வாக்களார்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார் நரேந்திரமோடி. அது மட்டுமின்றி, இந்த சந்திப்பின் மூலம், தன்னிடம் உள்ள தமிழக கூட்டணிக் கட்சிகளுக்கும்  நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட்டிருக்கிறார் மோடி. இப்படியொரு தோற்றத்தை உருவாக்கி விட்டு, நேராக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்திற்குச் சென்றார்.

அங்கு பிரசாரப் பொதுக்கூட்டம். நரேந்திரமோடி தன் உரையில் நிதியமைச்சர் சிதம்பரத்தின் வார்த்தைகளை கடன் வாங்கினார். அவர்தான் ஏற்கனவே, "தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சண்டைக் கோழிகள்' என்றார். அதையே சற்று மாற்றி, " தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதில்தான் காலத்தைத் தள்ளுகிறார்கள். மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் உருவாக்கியிருக்கும் அணி தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்று' என்று டிக்ளேர் செய்தார். நரேந்திரமோடியின் தாக்குதல் மிகவும் ஷார்ப்பாக இல்லை என்றாலும், தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தன் கூட்டணிக் கட்சிகளுக்காக விமர்சிக்க வேண்டிய நிர்பந்தத்தில்தான் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மேடையில் காட்சியளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கூட்டணி அமைந்த பிறகு மோடி அடிக்கும் முதல் விஸிட் இது. ஆனால் முக்கியத் தலைவர்கள் யாரும் வரவில்லை. அந்த மேடை முழுக்க முழுக்க பா.ஜ.க. மேடையாகவே அமைந்து விட்டது. வேட்பாளர் என்ற முறையில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே வந்திருந்தார்.

காரசாரமான தாக்குதல் ஏதுமின்றி மோடி திரும்பியிருப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. தமிழகத்தில் பா.ஜ.க. அணி எத்தனை இடங்களில் ஜெயிக்கும் என்பது இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. அக்கட்சிக்கு மூன்று, நான்கு இடங்கள் கிடைத்தால் அதுவே பெரிய விஷயம் என்ற நிலையில், தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வின் தயவைத்தான் நாட வேண்டியிருக்கும். இந்த இரு கட்சிகளுமே 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.விற்கு மத்தியில் ஆதரவளிக்கும் என்று தோன்றவில்லை. அதுவும் பொது சிவில் சட்டம், ராமர் கோயில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து போன்ற வாக்குறுதிகளை முன் வைத்தும், தமிழகத்தில் தி.மு.க.வின் கெüரவ திட்டமான சேது சமுத்திரத்திட்டம் பற்றி தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமலும் வெளியிட்டுள்ள பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இந்த இரு கட்சிகளுக்குமே சிக்கல். அதிலும் குறிப்பாக தி.மு.க.விற்கு சிக்கல்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதா மோடி தலைமையில் அமையும் அரசுக்கு ஆதரவு அளிக்கக் கூடும். ஆனால் 2016இல் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் முடிவு எடுத்து விட்டால், மோடிக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார். இன்னும் சொல்லப்போனால் தன் வீடு இருக்கும் பகுதிக்கே வந்து தன்னைச் சந்திக்காமல் சென்றுள்ள மோடிக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை அ.தி.மு.க. அவ்வளவு எளிதில் எடுக்காது. இதையேக் காரணம் காட்டி, தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கு அதிக இடங்கள் கிடைத்தால், பிரதமர் பதவிக்கு தன்னையே முன்னிறுத்தும்படியும் பா.ஜ.க.வினருக்கே ஜெயலலிதா கோரிக்கை வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆக மொத்தம் சென்னைக்கு வந்த மோடி ரஜினியைப் பார்த்ததில் தேர்தலுக்குப் பின் ஆதரவு வழங்கக் கூடிய ஒரு நட்புக் கட்சியை இழந்திருக்கிறார் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் நரேந்திரமோடியைப் பொறுத்தமட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே வழக்குகளில் சிக்கியிருக்கிறது. அதுவும் சி.பி.ஐ, வருமானவரித்துறை போட்ட வழக்குகளில் சிக்கியிருக்கிறது. அப்படி வழக்குகள் இருக்கும் அந்தக் கட்சிகள் பிரதமராக நாம் வரலாம் என்ற சூழல் உருவாகி விட்டால் வேறு எங்கு போவார்கள் என்று நினைக்கக்கூடும். அப்படி நினைத்துத்தான் தி.மு.க. கூட்டணியை இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டது. அதே மாதிரி தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. இதே பாணியில் கோட்டை விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சைப் பார்த்தால், அவர் பா.ஜ.க.வையும் விட்டு வைக்கவில்லை. ரஜினி-மோடி சந்திப்பு நடப்பதற்கு முன்பே காவேரி பிரச்சினையில் பா.ஜ.க.வும் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது என்று குற்றம் சாட்டி விட்டார். 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் இப்படியொரு குற்றச்சாட்டை பா.ஜ.க. மீது முன் வைத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நண்பரை சந்தித்து இன்னொரு நண்பரை இழந்திருக்கிறார் நரேந்திரமோடி என்பது மட்டுமே இப்போதைக்கு மோடி சென்னை விஜயத்தினால் கிடைத்த மைலேஜ்.

  Comments - 0

  • raju Wednesday, 16 April 2014 03:55 AM

    superb

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--