2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஐ.நா. வுக்கு பதிலடி கொடுக்குமா அரசு?

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்பணியக வளாகத்துக்கு முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ச சாகும்வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். போராட்டக்காரர்கள், ஐ.நா. வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பணியாளர்களையும் சில மணி நேரம் சிறைப்பிடித்தும் வைத்திருந்தனர்.

அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அப்போராட்டங்களின் விளைவாக கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகத்தை மூடுவதற்கும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியைத் திருப்பியழைக்கவும் முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.

நிலைமைகள் மோசமடைவதை உணர்ந்துகொண்ட அரசாங்கம் ஒருவழியாக அமைச்சர் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமன்றி, ஐ.நா. பொதுச்செயலருக்கு எதிரான போராட்டங்களையும் தணிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவொன்றை ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்ததுதான், அப்போது நடத்தப்பட்ட அப்போராட்டங்களுக்கு காரணம்.

2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் திகதி மர்சுகி தருஸ்மன் தலைமையிலான 03 பேர் கொண்ட அந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையில்தான், இலங்கையில் போரின்போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக முதன்முதலாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டு சரியாக 04 வருடங்கள் கழித்து, இலங்கை தொடர்பான மற்றொரு ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவும் கூட ஒரு ஆலோசனை வழங்கும் குழு தான். ஆனால், ஐ.நா. பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவை விடவும் இந்தக் குழு வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் போரின் இறுதி 07 வருடங்களில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவினதும் இப்போது நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினதும் அடிப்படை நோக்கங்கள் ஒன்றுதான்.

ஆனால், அப்போது ஐ.நா. பொதுச்செயலருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு,  இப்போது நவநீதம்பிள்ளைக்கு எதிராக பெரியளவில் தோன்றவில்லை. கொழும்பு நகரிலோ, இங்குள்ள ஐ.நா. வளாகத்தின் முன்பாகவோ எவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.

அப்போது பான் கீ மூனின் உருவப்பொம்மைகளை எரித்ததுபோன்று, இப்போது நவநீதம்பிள்ளையின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள்  எவரும் முன்வரவில்லை.

04 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆச்சரியமளிக்கக் கூடியதொன்றுதான்.

தென்னிலங்கையிலுள்ள மக்கள், இந்த விசாரணையின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளவில்லையா அல்லது இந்த விசாரணையின் அவசியத்தை அவர்களும் உணர்ந்துகொண்டிருக்கிறார்களா?

தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு இந்த விசாரணையின் தீவிரம் குறித்து அரசாங்கம் கடந்த பல வருடங்களாகவே தேவையான விழிப்புணர்வுகளையும் கருத்துக்களையும் கூறி வந்துள்ளது.

நாட்டில் தீவிரவாதத்தை தோற்கடித்து, அமைதியை ஏற்படுத்தியதற்காக  தன்னை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்லவும் மின்சார நாற்காலியில் அமரவைக்கவும் சில சக்திகள் சதி செய்வதாக பல வருடங்களாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மேடைகளில் உரையாற்றும்போது கூறி வந்துள்ளார்.

அதுமட்டுமன்றி போரில் வெற்றியை பெற்றுத்தந்த படையினரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்ல முயற்சிகள் நடப்பதாகவும் அவ்வாறு நடப்பதற்கோ, அவர்களை காட்டிக்கொடுப்பதற்கோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் பலமுறை சூளுரைத்துள்ளார்.

இதுபோன்ற உணர்ச்சிமயமான உரைகளின் மூலம் அரசாங்கத் தரப்பு, சர்வதேச விசாரணைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமென்று மிகத் தாராளமாகவே எடுத்துக் கூறி வந்துள்ளது.

அரசாங்கத்தின் பிரசாரங்கள் வெற்றியளித்திருந்தால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் விசாரணைக்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டதை தென்னிலங்கை சிங்கள மக்கள் ஆபத்தின் அறிகுறியாக பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு பார்த்ததாகத் தெரியவில்லை.

அதற்காக அவர்கள் இந்த விசாரணைக்குழு பற்றிய புரிந்துணர்வு, அதன் தீவிரத்தன்மை குறித்து சிங்கள   மக்களிடையே போதிய விளக்கம் இல்லை என்று கருதமுடியாது.

ஓரளவுக்கு நிலைமைகளை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் வீதியில் இறங்கத் துணியவில்லை. அவ்வாறாயின், இந்த விசாரணையின் அவசியத்தை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருத முடியுமா?

நிச்சயமாக அவ்வாறான நிலை இருப்பதாக கூறமுடியாது.

ஏனென்றால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மீறல்கள் குறித்த விசாரணைகளால் இராணுவத்தினர், அதிகாரிகள் பலரும் நீதி விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

சிங்கள மக்களுக்கு போரில் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர்கள் அவர்கள். அதை விட, அவர்கள் முற்றிலுமாக சிங்கள இனத்தையே சார்ந்தவர்கள். எனவே, இந்த விசாரணைகளின் தாக்கம் தம் மீதே எதிரொலிக்கும் என்பதை சிங்கள  மக்கள் நினைக்கக்கூடும்.

அப்படியான நிலையில், இந்த சர்வதேச விசாரணை அவசியமானது என்று அவர்கள் உணர்வதாக போலியான மனக் கணக்கை போடக்கூடாது.
ஆனால், நிச்சயமாக தென்னிலங்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அது என்னவென்றால் தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  இறுதிப் போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

இவ்விடயத்தில் ஐ.நா. வுடன் முரண்படக்கூடாது என்றும் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படுவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்கலாமென்றும் அரசாங்கத்திலுள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.நா. வின் சர்வதேச விசாரணையை இலங்கைத் தீவே ஒன்றுபட்டு எதிர்க்கிறது என்ற கருத்தை உலகின் முன் கொண்டுசெல்வதில் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இது பற்றிய தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் கூட, தனியே ஆளும் கட்சியினர் மட்டும்தான் அதற்கு ஆதரவளித்தனர்.
ஆளும் கட்சியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட வாக்களிக்கவில்லை.

எனவே, ஒட்டுமொத்த இலங்கையும் இந்த விசாரணையை எதிர்க்கிறது என்ற கருத்தை அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியவில்லை.
அதேவேளை கலாநிதி தயான் ஜெயதிலக, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க உள்ளிட்ட போரின்போது அரசாங்கத்துக்கு வெளியுலக ஆதரவை தேடிக்கொடுத்த இராஜதந்திரிகள் கூட, அரசாங்கத்தின் இப்போதைய அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அது மட்டுமன்றி, ஐ.நா. விசாரணை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை சரியானதாக இல்லை என்றும் கூறிவருகின்றனர்.
இதனை, இலங்கை அரசாங்கம் தனது பக்கத்தில் இருந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றது என்பதற்கான அறிகுறியாகவே கருதலாம்.

அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள் மட்டுமன்றி சாதாரண சிங்கள  மக்களின் மனோநிலையில் கூட இத்தகைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.

கடைசியாக தென் மற்றும் மேல் மாகாணசபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலின்போது, சர்வதேச விசாரணை முயற்சிக்கு எதிரான ஒன்றுபட்ட ஆதரவை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டிருந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, மின்சார நாற்காலி என்பனவெல்லாம் இந்தத் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன. ஆனாலும், சிங்கள மக்கள் பெருமளவில் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தார்கள் என்று கூறமுடியாது.

முன்னைய தேர்தல்களில் ஆளும் கட்சி பெற்றிருந்த வாக்குகளையும் விடக் குறைவான வாக்குகளைத்தான் இந்தத் தேர்தலில் பெறமுடிந்தது.
எனவே, சர்வதேச விசாரணை பற்றிய பயமுறுத்தல்கள் எல்லாம் அவர்களிடம் எடுபடவில்லை என்றே கூறவேண்டும்.

சர்வதேச விசாரணை விடயத்தில் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறும் அரசாங்கத்துக்கு அதனை தானாக,  சுதந்திரமான விசாரணை மூலம் நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன.

அவற்றை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால்தான், சர்வதேச விசாரணைக்குழு இன்றைக்கு வாசற்படிவரை வந்து நிற்கிறது.
சிங்கள  மக்களின் ஒரு பகுதியினரும் கூட, இந்த நியாயத்தை உணரத்தொடங்கியுள்ளனர்.

அதனால்தான் ஐ.நா. விசாரணை ஆரம்பமாகியுள்ளபோதிலும், இலங்கையிலிருந்து பெரியளவில் எதிர்ப்புகள் ஏதும் தோன்றவில்லை.
இப்போது, சர்வதேச விசாரணையை அரசாங்கமும் அதனைச் சுற்றியுள்ள சக்திகளும் தான் எதிர்க்கின்றன என்ற கருத்தே உருவாகியுள்ளது. இது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு பாதகமான விடயம்தான்.

மக்களின் ஆதரவுடன்தான் எல்லாவற்றையும் செய்வதாக காட்டிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் தெற்கிலுள்ள மக்கள் மட்டுமன்றி, சிங்களத் தேசியவாதிகள் கூட பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது பெரும் பலவீனம்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியுள்ள சூழலில், ஐ.நா. வின் விசாரணைகள் முன்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.

இத்தகைய கட்டத்தில் அரசாங்கம் தெற்கில் தமக்கெதிராக தோன்றியுள்ள விமர்சனங்களை உடைப்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதான வன்முறையைத் தடுக்கத் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகளை துடைப்பதற்காகவும் சர்வதேச விசாரணைக்கு எதிரான போராட்டங்களின் மீது மக்களை திசை திருப்பிவிட முயற்சிக்கலாம் என்ற கருத்துகளும் உள்ளன.

கடந்த திங்கட்கிழமை பேருவளையில் நடத்தப்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலில் கூட, ஐ.நா. விசாரணைக்குழுவை எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அடுத்த வருடத் தொடக்கத்தில்  அல்லது இந்த வருட இறுதியில் தேசிய அளவிலான தேர்தலொன்றை எதிர்கொள்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

இந்தத் தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வலுவானதொரு கருவி அரசாங்கத்துக்கு தேவைப்படுகிறது.

இன்றைய நிலையில், அரசாங்கத்துக்கு அவ்வாறான வலுவான பிரசாரக் கருவியென்று எதுவும் கிடையாது.

எனவே, ஐ.நா. விசாரணைக்கு எதிரான பிரசாரத்தை முன்னிலைக்கு கொண்டுவருவது ஒன்றே அதற்கு இப்போதுள்ள ஒரேவழியாக இருக்கும்.
எனவே, சிங்களத் தேசியவாதிகளால் முன்னெடுக்கத் தவறிய ஐ.நா. விசாரணைக்கு எதிரான பிரசாரங்களை அரசாங்கம் தனது கட்சியின் ஊடாகவே மேற்கொள்ளக்கூடும்.

இதன் மூலம் சர்வதேச விசாரணைக்கு எதிரான கருத்தை உலகின் முன்கொண்டு செல்லமுடியும் என்று அரசாங்கம் நம்புவதாக கருதமுடியாது.
ஆனால், அது ஒன்றே இப்போது அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக கைகொடுக்கத்தக்க ஒரு ஆயுதமாக இருக்கும். எனவே, அதனைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கலாம்.

என்றாலும், அது ஒரு புறத்தில் உள்நாட்டு அரசியலில் அனுகூலங்களை தேடிக்கொடுத்தாலும் சர்வதேச அரங்கில், ஆபத்தைத் தேடித் தருவதாக அமையலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .