2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தமிழகத்தில் உடையும் தேசிய ஜனநாயக கூட்டணி!

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கிட்டதட்ட உடையும் நிலையில் இருக்கிறது. ஒட்டு வைத்தாலும் ஒட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு அக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் களை கட்டி விட்டன. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மாநிலத்தில் உள்ள தங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை என்ற குரல் எதிரொலித்து வருகிறது.
 
மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில் முக்கிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. அவற்றுள் வைகோவின் தலைமையிலான ம.தி.மு.க., விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை அடங்கும். இவர்கள் தவிர பிற உதிரிக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்தன என்றாலும், இந்த மூன்று தலைவர்கள்தான் பிரதமர் நரேந்திரமோடிக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தவர்கள். அதிலும் குறிப்பாக வைகோவும், விஜயகாந்தும் மோடிக்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.விற்கு ஒரு எம்.பி. கிடைத்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு எம்.பி. கிடைத்தது. ஆனால் வைகோவிற்கும், விஜயகாந்திற்கும் ஏதும் கிடைக்கவில்லை.
 
ஆனாலும் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இந்தக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எறியப்பட்ட முதல் கல் என்றானது. அதனால் கூட்டணிக்குள் அன்று துவங்கிய சலசலப்பு இன்றும் அடங்கவில்லை. அதற்கு பிறகு உருவான அமைச்சரவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும், விஜயகாந்தின் மைத்துனருக்கும் ஏதாவது அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என்று கணக்குகள் போடப்பட்டன. ஆனால் அவை பொய்க் கணக்கு ஆனது. அதனால் பதவியேற்பு விழாவிற்கு சென்ற விஜயகாந்த் கூட சோகமயமாக சென்னை திரும்பினார்.
 
இப்படி தொடங்கிய குழப்பம் இலங்கை தமிழர் பிரச்சினையால் மேலும் கலங்கிய குட்டையாக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மாறத் தொடங்கியது. இலங்கை தமிழர் விஷயத்தில் பா.ஜ.க. அரசின் அணுகுமுறை, பா.ஜ.க.வினர் இலங்கைக்கு சென்று அங்குள்ள அரசுடன் கைகோர்த்து செயல்பட்டது, இலங்கை பிரச்சினையில் டாக்டர் சுப்ரமண்யம்சுவாமியின் கருத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களை கொந்தளிக்க வைத்தது. குறிப்பாக வைகோ “பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் இலங்கை தமிழர் பிரச்சினையில் எந்த வித்தியாசமும் இருக்காது போலிருக்கிறதே” என்று வருத்தப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். “ஏன் மோடியை முன்னிறுத்திப் பேசினோம்” என்று சிந்திக்கும் நிலைக்கு வைகோ மாறினார். அதே சமயத்தில் டாக்டர் ராமதாஸோ “இனி பா.ஜ.க.வை நம்பி பிரயோஜனமில்லை” என்று நினைத்து தன் இல்லத் திருமணத்திற்கான அழைப்பை எடுத்துக் கொண்டு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியையே சந்தித்து விட்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இலங்கை தமிழர் பிரச்சினையில் வைகோ தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு சற்று விலகி நிற்கிறார். தங்கள் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் டாக்டர் ராமதாஸ் விலகிச் சென்று விட்டார். தன் மைத்துனருக்கு அமைச்சரவையில் ஒரு வாய்ப்பை வழங்கவில்லையே என்ற ஏக்கத்தில் விஜயகாந்த் “அடுத்த முதல்வர் நான்தான். மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறேன்” என்று புறப்பட்டு விட்டார். இப்படி மூன்று தலைவர்களும் மூன்று திசைகளில் நிற்க தமிழகத்தில் பா.ஜ.க. அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி ஏறக்குறைய கலகலத்து விட்டது.
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்து விட்டது சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி கூட்டிய “எம்.பி.க்கள் கூட்டம்”. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் மோடி, “அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்திற்கு வைகோ கட்சியையோ, விஜயகாந்த் கட்சியையோ அழைக்கவில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார். “எம்.பி.க்கள் கூட்டம் இது என்பதால் எம்.பி.க்கள் இல்லாத ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்ற செய்தி டெல்லி பா.ஜ.க.வினால் சொல்லப்பட்டாலும், இது வைகோவிற்கும், விஜயகாந்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “முன்பு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் இருந்த பா.ஜ.க. போன்ற நிலைமை இப்போது இல்லை” என்று வருத்தப்பட்டிருக்கிறார் வைகோ. அப்போது வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி என்பதும், அப்போது ம.தி.மு.க.விற்கு நான்கு எம்.பி.க்கள் இருந்தது என்பதையும் சொல்லாமல் சொல்லிருக்கும் வைகோ, “தனித்து ஆட்சி என்பதால் இப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை மதிக்காமல் செயல்படுகிறார்கள்” என்ற செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் வைகோ. இதே கோபம் விஜயகாந்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அக்கூட்டணியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ், தன் மகன் அன்புமணி ராமதாஸை டெல்லி கூட்டத்திற்கு அனுப்பவில்லை. அழைப்பு கிடைத்தும் கூட்டத்திற்கு அன்புமணி போகவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
 
இப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியில் இருந்த வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள் விலகிச் சென்று கொண்டிருக்கின்ற சூழலில், தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். இதுவரை இருந்த மாநிலத் தலைவர்களை விட கடுமையான அஸ்திரத்தை அ.தி.மு.க. அரசின் மீது தொடுக்கிறார் இவர். பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை, 2-ஜி வழக்கில் சிக்கியிருக்கும் தி.மு.க. போன்றவற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் தங்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் வியூகமாக இருக்கிறது.
 
“இரு திராவிடக் கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஆகவே எங்களால்தான் மாற்று அரசியலை தர முடியும்” என்ற முழக்கத்தை பா.ஜ.க. தமிழகத்தில் முன் வைக்க விரும்புகிறது. ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் “நாங்கள் மாற்று சக்தி” என்று கூறி வெற்றி பெற்றது போல் தமிழகத்திலும் சாதித்து விடலாம் என்பது பா.ஜ.க.வின் எண்ணம். ஆனால் அந்த மாநிலங்களில் உள்ளது போன்ற வாக்கு வங்கி பலம் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இல்லை என்பது ஹைலைட். குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் முதல் கட்சி அ.தி.மு.க. இரண்டாவது கட்சி தி.மு.க. மூன்றாவது கட்சி தே.மு.தி.க. நான்காவது கட்சி காங்கிரஸ். ஐந்தாவது இடத்தில்தான் பா.ஜ.க. இருக்கிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வாக்குகள் கூட வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் போன்றோரின் கூட்டணியால் கிடைத்த வாக்குதானே தவிர, மோடிக்கு மட்டுமே விழுந்த வாக்குகள் அல்ல. பா.ஜ.க.விற்கு மட்டுமே அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல. இந்நிலையில் இருக்கின்ற கூட்டணியை பலப்படுத்தி, வலுப்படுத்தி வைத்துக் கொள்ளாமல் “போகாத ஊருக்கு வழி தேடுகிறது” பா.ஜ.க. அது அக்கட்சிக்கு தமிழகத்தில் அமைந்து இருக்கின்ற தேசிய ஜனநாயக கூட்டணியை சிதைக்குமே தவிர, பா.ஜ.க. மாற்று சக்தியாக வருவதற்கு உதவாது. 
 
அது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி எப்படி “தமிழர் விரோத கட்சி” என்று இலங்கை தமிழர் பிரச்சினையில் முத்திரை குத்தினார்களோ, அதை மாதிரி ஒரு முத்திரை பா.ஜ.க.வின் மீதும் சுமத்தப்படுவதற்கு வெகு நேரமாகாது என்றே தமிழக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. தொடரும் மீனவர் கைது, படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்வது, இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக இலங்கையின் பேச்சைக் கேட்பது போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், “பா.ஜ.க.வின் இன்னொரு முகத்தை தமிழக மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவோம்” என்று சபதம் போடுகிறார்கள். ஆக மொத்தம் தற்சமயம் பா.ஜ.க. தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி தடுமாறி நிற்கிறது. அதிலிருந்தவர்கள் தி.மு.க. கூட்டணி நோக்கியும், தனித்துப் போட்டியிடும் ஆசையிலும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .