2021 மே 08, சனிக்கிழமை

கேள்விக்குறியாகும் மஹிந்தவின் எதிர்காலம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்ததை அடுத்து, அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி இப்போது முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ எதிர்பாராத தோல்வியை கண்டிருந்தார். இந்தத் தோல்வியை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னும் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு – 2022ஆம் ஆண்டுவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருப்பதே அவரது திட்டமாக இருந்தது. அந்தத் திட்டம் நிறைவேறும் என்ற முழு நம்பிக்கையில் அவர் இருந்திருந்தார். இதனால், அவர் தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் குறித்த திட்டங்கள் எதையும் முன்கூட்டியே வகுத்துக்கொள்ளக்கூடிய நிலையேதும் இருந்திருக்கவில்லை. இப்போதைக்கு தாம் ஆட்சியிலிருப்பதுவும் தனக்கு பின்னர், அதிகாரத்தை தனது மகன் நாமல் ராஜபக்ஷவின் கையில் கொடுப்பதுமே அவரது மேலோட்டமான எதிர்காலத்திட்டமாக இருந்தது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ற திடீர் சூறாவளி தனக்கும் தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று அவர் கொஞ்சமேனும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால், அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கமுடியாத நெருக்கடியினுள்; சிக்கிப்போயுள்ளார்.

மக்களால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இனி அரசியலில் ஈடுபடுவதிலிருந்து ஒதுங்கிக்கொள்வோம் என்று அவரால் இன்னமும் கூட முடிவெடுக்க முடியவில்லை. மிக உயர் பதவியிலிருந்த ஒருவர், மக்களால் நிராகரிக்கப்படும்போது, மீண்டும் மக்களின் முன் வாக்குக் கேட்டுச் செல்லாமல், அரசியலை விட்டு ஒதுங்குவது மாண்பு.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் பதவியிலிருந்து விலகிய பின்னர், அரசியலில் ஈடுபடவில்லை. இவர்கள் மூன்றாவது பதவிக்காலத்துக்கு போட்டியிட வாய்ப்பின்றியோ அல்லது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பாமலோ அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டனர்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறன ஒருவரல்ல. அவர் பதவியிலிருந்தபோதே, மூன்றாவது பதவிக்காலத்துக்காக போட்டியிட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். அவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்தபோதிலும், தனது 45 வருட அரசியல் வாழ்வு குறித்து பெருமையாக பேசும் அவரால், தனது கடந்தகால அரசியல் வாழ்வுக்கு மாண்பை ஏற்படுத்தும் முடிவொன்றை இன்னமும் எடுக்கமுடியவில்லை. அவ்வாறு செய்ய முடியாதமைக்கு காரணம், அவரது அரசியல் எதிர்பார்ப்பு இன்னமும் ஈடேறவில்லை என்பதேயாகும்.

இன்னமும் அதிகாரத்தை பிடிக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருக்கிறது. இல்லாவிட்டால், அவர் மூன்றாவது பதவிக்காலத்துக்காக போட்டியிட்டிருக்கமாட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில், இப்போது தனக்காக மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்களுக்காகவேனும் அதிகாரத்துக்காக போட்டியிடவேண்டிய நிலையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் மட்டுமன்றி, அவருக்கு ஆதரவளித்து உயர்த்திவிட்டவர்களும் அவரது ஆட்சியில் அவரை சுற்றி இருந்தவர்களும் இப்போதும் அவரை வைத்து தம்மால் மேலெழ முடியுமென்று நம்புபவர்களும் அவரை அரசியலிலிருந்து ஒதுங்கிவிடப்போவதில்லை. இதுவே, மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க முடியாதுள்ளமைக்கு முக்கிய காரணம்.

இப்போது அவரது கையிலிருந்து ஆட்சி அதிகாரம் மட்டும் பறிக்கப்படவில்லை. கட்சியின் மீது அவர் செலுத்திய அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது.   2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவிடமிருந்து கட்சியின் அத்தனை அதிகாரங்களையும் எவ்வாறு பறித்தெடுத்தாரோ, அதுபோலவே இப்போதும் அவருக்கும் நடந்திருக்கிறது.

ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக அவராகவே இறங்கிவந்து தன்னிடமிருந்த கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் மஹிந்த ராஜபக்ஷ விட்டுக்கொடுக்க மறுத்திருந்தால், நெடுநாளைக்கு அவரால் அந்தப் பதவியை கட்டிக்காக்க முடிந்திருக்காது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்து விலகிக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை, மீண்டும் அரசியலுக்குக் கொண்டுவருவதற்கும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவைப்பதற்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவுடனேயே, மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து விலகமாட்டார், அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்திருந்தார்.
விமல் வீரவன்ச மட்டுமன்றி, முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர போன்ற இடசாரித் தலைவர்களும் கூட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவோ, அவரது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவோ தயாராக இல்லை.
இந்தளவுக்கும், இவர்கள் அனைவரும் முன்னர் சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தவர்கள்.  
சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றாலும், இப்போது சந்திரிகா பின்புலத்திலிருந்து இயக்கமுற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இவர்களால் கைகோர்க்க முடியவில்லை. இதற்கு கொள்கை ரீதியான முரண்பாடே காரணமென்று கூறினால் அது அபத்தமானது.

அதைவிட, கொள்கை ரீதியில் அப்படியொன்றும் வித்தியாசமான தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்துவிடவும் இல்லை.
கடந்த பத்தாண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி இயங்கிப் பழகிவிட்ட இந்த அரசியல் தலைமைகளால், அதனைக் கைவிட்டு வெளியே வரமுடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கவர்ச்சியும் மக்கள் ஆதரவும்  அவர்களின் வெற்றிக்கும் தேவைப்படுகிறது. அண்மைய ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிட்டத்தட்ட 57 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. இந்தளவுக்கு மக்கள் ஆதரவு உள்ள ஒருவரை முன்னிறுத்தி, அரசியல் செய்வதே புத்திசாலித்தனமானது என்று அவரது முன்னைய கூட்டணிக் கட்சிகள் நினைக்கின்றன. ஏனென்றால், எப்படியும் இன்னும் இரண்டொரு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிடும்.

அடுத்து நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய நிலையில் விமல் வீரவன்சவோ, தினேஸ் குணவர்த்தனவோ, திஸ்ஸ விதாரணவோ, டியூ.குணசேகரவோ, வாசுதேவ நாணயக்காரவோ இல்லையென்று கூறமுடியும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டது இந்தக் கட்சிகளுக்கு பலம் சேர்த்ததே தவிர, இந்தக் கட்சிகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலம் பெற்றதென்று கூறுவது மிகையான கருத்தாகும்.

முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று  தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் பதவி போய்விட்டது. இப்போது அவரிடம் உள்ளது கட்சியின் போசகர் பதவி மட்டும்.

தேர்தலுக்கு பின்னர் இராணுவத்தினரின்; துணையுடன் ஆட்சியை தக்கவைக்க முயன்றதாக சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், அதனை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகர் பதவியிலிருந்தும் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், மீண்டும் அவரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலுக்கு வருவதோ,  பிரதமர் பதவியை பிடிப்பதோ சாத்தியமானதொரு விடயமாக இருக்காது.

எனவே, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒரு புதிய கட்சியை உருவாக்கி, அதனுடன் கூட்டணியை வைத்துக்கொண்டு போட்டியிட்டால், தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியுமென்று அவரது முன்னைய கூட்டாளிகள்  எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே,  மீண்டும் அவரை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தாம் புதிய கட்சியையோ, கூட்டணியையோ உருவாக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது எந்தளவுக்கு உறுதியான கருத்தென்று கூறமுடியாது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய ஓய்வு, அவரை மட்டுமே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்திவிடப் போவதில்லை. அவரை சுற்றியிருந்த குடும்பத்தினரையும் அரசியல் கட்சிகளையும் கூட அகற்றிவிடும் ஆபத்துள்ளது.

தேர்தல் தோல்வியின் பின்னர், புதிய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் சவாலான விடயமாகியுள்ளது. தொடர்ச்சியாக எல்லா முனைகளிலிருந்தும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவரை திணறடிக்கத் தொடங்கியுள்ளன.   அவர் மீதும், அவரது சகோதரர்கள் மற்றும் பிள்ளைகள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது, அமைதியாகவே இருந்தார்.

ஆனால், தனது மனைவி சிராந்தி ராஜபக்ஷ மீது 100 கிலோ தங்க மோசடி முயற்சி குற்றச்சாட்டை முன்னாள் பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவி சுமத்தியதை அடுத்தே, அவர் வாயை திறந்தார். தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவை அனைத்தும் பொய்யானவை என்றும் என்றோ ஒரு நாள் இது வெளிச்சத்துக்கு வருமென்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையின் ஓர் இடத்தில், தாம் ஓய்வுபெற்ற பின்னரும் அமைதியாகவோ, நிம்மதியாகவோ இருக்கமுடியவில்லை என்றும் கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ. இது அவர் விரக்தியின் உச்சத்தை எட்டியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கடந்த 9ஆம் திகதி அதிகாலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறியபோது, தனக்கும்  தனது குடும்பத்தினதும் பாதுகாப்புக்கு தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தரவாதத்தை பெற்றிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
ஆனாலும், அவரை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்று  அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள் எல்லாவற்றுக்குமே அவர் பதில் கூறி ஆகவேண்டிய நிலை ஏற்படும் போலத் தெரிகிறது. தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து அவரை நிலைகுலைய வைக்க புதிய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிகிறது.

இத்தகைய நிலையில், தம்மையோ தமது குடும்பத்தினரையோ புதிய அரசாங்கம் விட்டுவைக்காது என்பது அவருக்கு புரிந்திருக்கும். குற்றச்சாட்டுகளிலிருந்து புதிய அரசாங்கம் தம்மை பாதுகாக்காது என்று தெரிந்த நிலையில், தனது குடும்பத்தினது நலனை பாதுகாப்பதற்காக அவர் மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கலாம். அதற்காக அவர் வேறுபட்ட வழிமுறைகளை கையாள முயன்றாலும் கூட ஆச்சரியமில்லை. என்றாலும், மீண்டும் அரசியலில் உச்சத்தை எட்டிப்பிடிப்பது என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனிமேல் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. இது அவரது குடும்பத்தினருக்கும் அவரை சுற்றி இருப்போருக்குமுள்ள பாதகமான விடயம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்த மிகப்பெரிய தவறு உள்நாட்டுக்குள் மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும் நண்பர்களை விட விரோதிகளை அதிகம் சம்பாதித்துக்கொண்டமை. அதன் விளைவாக, இன்று மஹிந்த ராஜபக்ஷவின் நிலைக்காக எந்த நாடுமே வாய் திறந்து வருத்தம் தெரிவிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் காய் நகர்த்தல்களில் செய்த பல தவறுகள் இப்போது அவரையே எதிர்த்துத் தாக்க ஆரம்பித்துள்ளன. இது அவரை எங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறது என்பதை காலந்தான் தீர்மானிக்கவேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X