2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரக் கட்சியின் தோல்வி முகம்

Thipaan   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் நாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  கடந்த பத்து வருடங்களாக இறுக்கமான சூழலுக்குள் இருந்த மக்களுக்கு ஆட்சி மாற்றமும் அதன் மூலம் கிடைத்துள்ள நெகிழ்வுத் தன்மையுள்ள ஜனநாயக இடைவெளியும் பெரும் நிம்மதியைக் கொடுக்கின்றது.

 ஆனால், இந்த ஜனநாயக இடைவெளியின் நீட்சி எவ்வளவு காலத்துக்கு என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழாமல் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொது எதிரணி முன்வைத்த 100 நாட்கள் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் தேசிய அரசாங்கம் குறிப்பிட்டளவு அக்கறை காட்டுகின்றது.
இதன்மூலம், மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்றியிருக்கின்றோம் என்ற செய்தியோடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நினைக்கின்றது.

ஆனாலும், நாடாளுமன்றத்தில் அதற்கான ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகின்றது என்கிற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்தது. நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த பின்னர் அது இன்னமும் வலுப்பெற்றிருக்கின்றது.

 ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாடாளுமன்ற அமர்வுகள் புதுமையான காட்சிகளை அரங்கேற்றியது. நாட்டின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் இருவரும், அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அருகருகே ஒரே அணியில் இருக்கின்றார்கள்.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப -தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். கட்சியொன்றின் தலைவர் (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன) அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும், கட்சியின் உப-தலைவர் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இலங்கை வரலாற்றில் இதுதான் முதன்முறை. (சந்திக்கா- ரணில் காலத்தினை அப்படிக் கொள்ள முடியாது.)

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் ஸ்ரீ லங்;கா சுதந்திரக் கட்சி 127 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது. ஆனாலும், அக்கட்சி எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வழங்கியிருக்கின்றது.

 தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு  தமது ஆதரவினை ஸ்ரீ லங்;கா சுதந்திரக் கட்சி வழங்கவுள்ளதாக அறிவித்தாலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற அச்சமும், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் எதிர்வரும் 6 வருடங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய வந்துவிடுமோ என்கிற அச்சமும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றது.

ஏனெனில், கடந்த பத்து வருடங்களாக தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்து அதன் ருசியை அனுபவித்தவர்கள்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் தலைவராக முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இருக்கின்றன.

அதற்கான முன்னேற்பாடுகளிலும் அவை ஈடுபட்டிருக்கின்றன. ஏனெனில், அதுதான், சிங்கள மக்களிடம் வாக்குகளை பெருமளவில் பெற்றுத் தரும் என்று நினைக்கின்றன.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அந்த எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தாலும் சிரேஷ்ட உறுப்பினர்களும், கட்சித் தலைமையும் அதனை அனுமதிக்காது.  

மிகவும் சிக்கலான நிலைக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது சிக்குண்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள முடியாது. அதற்கு கட்சி யாப்பு அனுமதிக்காது. ஐக்கிய தேசியக் கட்சியை முன்னிலைப்படுத்தும் தேசிய அரசாங்கத்திலும் முழுமையாக ஐக்கியமாக முடியாது.

அது, கட்சியை பெருமளவு சிதைத்துவிடும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீளமைத்து முன்னிறுத்தலாம் என்றால் அதற்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் போசகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்டவர்கள் உடன்படுவர்களா என்கிற சந்தேகம்.

இப்படியான நிலையில் தான், புரிபடாத சூழ்நிலையொன்றொடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு அண்மையில் அரங்கேறிய காட்சியொன்றை உதாரணமாகக் கொள்ள முடியும்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் அண்மையில் அமர்த்தியது. அவரும் ஒருநாள் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்றார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சச்சரவுகளை ஏற்படுத்தியிருந்தது. மொஹான் பீரிஸினை நீக்கியது தவறு என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கோசமிட்டனர். விவாதமொன்றுக்கான சந்தர்ப்பமொன்றையும் கோரினர்.  

அப்போது, குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைப் பார்த்து (குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரைப் பார்த்து), 'நீங்கள் இங்கு கூச்சலிட்டால் உங்களின் தலைவரிடம் முறையிடுவேன்.

 உங்களின் தலைவர் தான் எங்களின் ஜனாதிபதி' என்றார். அந்தப் பதிலை ரணில் விக்ரமசிங்க மிகவும் நக்கலான தொனியிலேயே முன்வைத்திருந்தார். இந்தக் காட்சியொன்று சொல்லிவிடும் இப்போதுள்ள நாளுமன்றத்திலும், அரசியல் களத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் நிலையை உணர்வதற்கு.

ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் நிலை இப்படியென்றால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் முனைப்போடு ஈடுபட்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் என்கிற வடிவில் ஸ்ரீ லங்;கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை கட்டம் கட்டியிருக்கின்றது. இப்போது வரையில் வெளிநாடு செல்ல முடியாதவாறு முன்னாள் அமைச்சர்கள் பலரது கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுவிட்டன.

முன்னைய ஆட்சியில் எவ்வளவு ஊழல்களும், மோசடிகளும், அத்துமீறல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்று நாளாந்தம் செய்திகள் வெளிவருகின்றன. ஊழல்களின் அளவு என்பது மில்லியன்களைத் தாண்டி பில்லியன்களின் கணக்கிடப்படுகின்றன.  

இன்னொரு பக்கம், தேசிய அரசாங்கம் முன்வைத்த இடைக்கால வரவு- செலவுத் திட்டம் என்பது நாட்டின் பெரும்பான்மையான கீழ் மற்றும் மத்தியத்தர வர்க்கத்தினரை நோக்கி நிவாரணங்களை வழங்கியிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் தேர்தலை முன்னிறுத்திய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதும், தேர்தலின் பின்னர் அவை பெருமளவாக அதிகரிக்கப்படுவதும் வழக்கம். ஆனால், தேசிய அரசாங்கம் பொருட்களின் விலைக் குறைப்பினைச் செய்துவிட்டு அதற்கான காரணமாக முன்வைத்த விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது.

முன்னைய அரசாங்கம் மக்களின் பணத்தினை ஊதாரித்தனமாகப் பயன்படுத்தியது என்றும், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியின் பங்காளர்களின் செலவுகள் என்பது மக்களின் மீது சுமையேற்றும் அளவுக்கு இருந்ததாகவும் கணக்கினைப் பட்டியலிட்டது. அந்தச் செலவுகளைக் குறைக்கும் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகுறைப்பு என்பது சாத்தியமானது என்கிற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.

 மக்களின் மனங்களை வெல்வது என்பது முதலில் ஊடகங்களை வெல்வது என்கிற அடிப்படையை கருத்தில் கொண்டு தேசிய அரசாங்கத்தின் தலைமைக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய நகர்வினை முன்னெடுத்திருக்கின்றது.

ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களுக்குமான கருத்துச் சுதந்திரம் என்பது நாட்டின் முன்னேற்றத்தின் அறிகுறியாக கொள்ளப்படும். அதனை வழங்குவதனூடாக மக்களிடம் முற்றுமுழுதான ஜனநாயக சூழலொன்றுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்று உணர வைக்க முடியும். அதனை மிகவும் திட்டமிட்ட ரீதியில் அனுமதித்திருக்கின்றது.  

எந்தவொரு தருணத்திலும் சிறுபான்மைக் கட்சிகள் தேசிய அரசாங்கத்துக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி கருத்தில் கொண்டு செயலாற்றுகின்றது.

நீண்ட காலத்தின் பின் நாட்டின் ஜனநாயகமும், இன நல்லிணக்கமும் ஏற்பட்டிருக்கின்றது என்கிற கோசத்தை எந்தவொரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் மக்களிடம் நாட்டினை அமைதிப்பூங்காவாக ஆட்சி செய்வதற்கான அனுமதியைக் கோருகின்றோம் என்கிற வடிவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கின்றது.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் பல ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளலாம்.

 மக்கள் விடுதலை முன்னணியும், சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகவே தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன. தேர்தலில் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கத் தயார் என்கிற நிலைப்பாட்டினை மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளியிட்டிருக்கின்றன.

சரத் பொன்சேகா அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றார். இப்படியான நிலையில், இப்போதுள்ள தேசிய அரசாங்கத்தின் மாதிரியொன்றையே நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் அமைப்பதற்கான முயற்சிகளை பொது எதிரணிக் கட்சிகள் முன்னெடுக்கின்றன. அதில், குறிப்பிட்டளவு வெற்றிபெறுவதற்கான சூழலும் இருப்பதை உணர முடிகின்றது.  

ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷ போன்று சிங்கள மக்களிடம் அபிமானம் பெற்ற ஒருவரை இப்போதுள்ள ஸ்ரீ லங்;கா சுதந்திரக் கட்சி கொண்டிருக்கவில்லை.

இப்போது, மஹிந்த ராஜபக்ஷ,  சிங்கள மக்களிடம் கொண்டிருந்த அபிமானத்தையே அதிருப்தியாக தேசிய அரசாங்கம் மாற்றிக் கொண்டிருக்கின்றது. அது, மஹிந்த ராஜபக்ஷவின் மீதான அதிருப்தியாக மட்டுமில்லாமல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீதான அதிருப்தியாகவும் உருமாறியிருக்கின்றது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரமுள்ள நாடாளுமன்றத்தை உருவாக்கவும், அதில் ஆட்சியமைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முனைப்போடு செயற்படுகின்றது. அதில் வெற்றியும் பெற்றுவிடும். ஏனெனில், ஐக்கிய தேசியக் கட்சியின் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் இல்லை என்பதுதான் பெரும் யதார்த்தம்!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X