2021 மார்ச் 01, திங்கட்கிழமை

விலங்குகளுக்கான உரிமைகளும் பாசாங்குப் போராட்டங்களும்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

சிம்பாப்வேயைச் சேர்ந்த சீசில் என்ற சிங்கம், அமெரிக்காவைச் சேர்ந்த பல் வைத்தியரொருவரால் வேட்டையாடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து, அது தொடர்பான போராட்டங்களும் கூக்குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. அச்சிங்கம் வேட்டையாடப்பட்டமைக்கெதிராக உருவாக்கப்பட்ட பல இணைய மனுக்கள், சில நாட்களிலேயே இலட்சம் பேரின் கையெழுத்துகளைப் பெற்றுக் கொண்டன. இணையப் போராட்ட வீரர்களும் தங்கள் குரல்களை உயர்த்தி, இக் 'கொடுமை'க்கெதிரான தங்கள் குரலை வெளிப்படுத்தினர்.

'சிம்பாப்வேயின் மிகவும் பிரபலமான, அந்நாட்டின் சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்பட்ட சீசிலைக் கொல்வதற்கு, அதுவும் வேட்டையாடும் விளையாட்டுக்காகக் கொல்வதற்கு எவ்வாறு அந்தக் கொடூரனுக்கு எப்படி மனம் வந்தது' எனப் பலர் கோபப்பட்டனர். அதில், பலரது கோபம் உண்மையானதாகவே காணப்பட்டது. அதில் போலி காணப்பட்டிருக்கவில்லை.

ஆனால், உண்மையான கோபங்களிலெல்லாம் நேர்மை இருக்குமென்றோ அல்லது அவர்களுக்கே தெரியாத போலித்தன்மை கலந்திருக்காதோ என்பது அர்த்தமல்ல. கட்டமைப்பு ரீதியில் தாங்கள் நினைப்பது சரியானது என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது.

சீசில் சம்பந்தமான விடயத்தில் சில உண்மைகளை வெளியிடுவது சிறப்பானது.

இந்தச் சிங்கம், சிம்பாப்வேயின் மிகவும் பிரபலமான சிங்கமெனவும் அங்குள்ளவர்களால் மிகவும் போற்றத்தக்கதென்றும் மேலைத்தேய ஊடகங்களால் பிரசாரப்படுத்தப்பட்டது. ஆனால், சிம்பாப்வேயைச் சேர்ந்த பலர், 'சிம்பாப்வேயில் பிரபலமான சிங்கமா சீசில்? இன்று தான் கேள்விப்படுகிறேன்' என்ற பாணியிலான விடைகளைக் கொடுத்திருந்தார். அத்தோடு, அவர்களைப் போன்று ஏராளமானோர் சிம்பாப்வேயில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அது அவ்வாறிருக்க, பொழுதுபோக்குக்காக அல்லது விளையாட்டுக்காக வேட்டையாடுவது தொடர்பான விவாதம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. உணவு அல்லாத வேறு நோக்கமொன்றுக்காக மிருகங்களை வேட்டையாடுவது என்பதை நியாயப்படுத்துவது சிறிது கடினமானது தான்.

ஆனால், இறைச்சியின்றி உயிர்வாழ்வதற்கு மனிதர்களால் முடியுமென்ற நிலையில், இறைச்சி உணவு என்பது, மனிதர்களின் தேவையாகவன்றி, தெரிவாகவே இருக்கிறது. அந்நிலையில், அதை நியாயப்படுத்திக் கொண்டு, விளையாட்டுக்காக வேட்டையாடுவதைத் தவறென்பது ஒருவகையில் சிக்கலானது தான்.

அதை விட முக்கியமானது, வேட்டையாடுவதற்காக வழங்கப்படும் அனுமதிக்காக அறவிடப்படும் உயர் தொகைகள், மிருகங்களின் காப்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்பது பலரும் அறிந்திராத உண்மை.

சமாதானத்துக்கான போர் போன்று, இதுவும் கேலிக்குரியதாகத் தெரிந்தாலும், காப்பு அமைப்புகளின் அறிக்கைகள் இந்தத் தொடர்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. ஆகவே, சுட்டுக் கொல்லப்படும் சிங்கங்கள் கூட சில வேளைகளில், இன்னும் பல சிங்கங்களின் காப்புக்காக உதவ முடியும்.

அத்தோடு, உலகில் தோன்றிய உயிருள்ளவற்றில் 99 சதவீதத்துக்கும் மேற்பட்டவை, இப்பூமியிலிருந்து இல்லாமற் போயிருக்கின்றன எனவும், அதில் 95 சதவீதமானவை தானாகவே, மாற்றங்களுக்கு இசைவைக் காட்ட முடியாது அழிவடைந்துள்ளன. ஆகவே, உயிரினமொன்று அழிந்துவிடுவதால், பூமியின் சுற்றலும் நின்று போகப் போவதில்லை.

இதற்காக, பணத்திமிர் பிடித்தவர்கள், பொழுதுபோக்குக்காக விலங்குகளை விரும்பிய போதெல்லாம் கொல்வதை நியாயப்படுத்த வேண்டுமென்றில்லை. அதற்கான எதிர்ப்பு இருப்பதிலும் தவறில்லை. ஆனால், இந்தப் பொழுதுபோக்குகளின் மூலமாகக் கிடைக்கப்பெறும் மறுபக்கம் பற்றியும் அறிந்திருந்தல் அவசியமானது.

இவை இவ்வாறிருக்க, இந்தப் பூமியில், மனிதர்கள் என்ற வகையில், ஒரே ஓர் இனம் தான் காணப்படுகிறது. மனிதர்களுக்குக் கட்டமைப்பு ரீதியில் ஏற்படுத்தப்படும் அநீதிகள் பற்றிய குரல்கள், சிங்கத்துக்காக எழாமை தான், சிங்கத்துக்கான குரல்கள் அர்த்தமானவையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

சிங்கத்துக்காக எழுப்பப்பட்ட குரல்களில் 1{100 கூட, சில நாட்களுக்கு முன்னர், யூத அடிப்படைவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்ட 18 மாதக் குழந்தைக்காக எழுப்பப்பட்டிருக்கவில்லை. இல்லாவிடில், அமெரிக்காவில் அண்மைக்காலமாகக் கொல்லப்பட்டுவரும் கறுப்பின உயிர்களுக்காக எழுப்பப்பட்டிருக்கவில்லை. போகோ ஹராம் ஆயுதக்குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாலியல்ரீதியான கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் சிறுமிகளுக்காக எழுப்பப்பட்டிருக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் கொல்லப்படும் ஷியா முஸ்லிம்களுக்காக எழுப்பப்படவில்லை.

இங்கு தான் அந்தக் கேள்வி எழுகிறது.

சிங்கத்தின் உயிரை விட, அநீதியாகக் கொல்லப்படும் மனிதனொருவரின் உயிர் எந்தளவுக்குக் குறைவானது, அல்லது எவ்வளவுக்குச் சாதாரணமானது என்ற வினா  தான் அது. சிங்கங்கள் 

அழிந்து வருகின்றன என்பது பொருத்தமான வாதம் கிடையாது.

 

இதன்போது தான், இந்தப் போராட்டங்களின் அடிப்படை இயல்பு கேள்விக்குள்ளாகிறது.

மேலைத்தேய நாடுகளில், அபிவிருத்தியடைந்துள்ளதாகவும் உயர்வானதாகவும் கருதப்படும் நாடுகள் பலவற்றிலும், இன்னமும் ஏற்றத்தாழ்வுகள் சாதாரணமாகவே இருக்கின்றன. அமெரிக்காவில் இன்னமும் கறுப்பினத்தவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே மதிக்கப்படுகின்றனர். கறுப்பினத்தவராகப் பிறந்து, எல்லோரையும் போன்ற வாழ்வை வாழ வேண்டுமாயின், நீங்கள் செல்வம் கொழித்தவராக இருக்க வேண்டும். ஆக, செல்வமில்லாத நிலையில், சாதாரண குடிமகன் ஒருவரது மரணம் கேள்விகளை எழுப்பப் போவதில்லை.

ஆக, விலங்குகளுக்கான உரிமைகள் என்ற கோஷம், மேல்தட்டு மக்களின் 'போராட்டம்' என்ற உணர்வுக்குத் தீனிபோடும் ஒன்றாக மாத்திரமே இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. விலங்குகளுக்கான உரிமைகளுக்காகப் போராடுவதென்பது சாதாரணமான நிலையில் உயர்வானது. தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத அந்த உயிரினங்களுக்காகக் கண்ணீர் வடிப்பதென்பது, மிக மிக உயர்வானது. ஆனால், சக மனிதரொருவர் அநீதியாகக் கொல்லப்படும் போது அக்கண்ணீர் வெளிவரவில்லையெனில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கான உயிர் வாழுமுரிமை பறிக்கப்படும் போது, அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாவிடின், ஏனைய உயிரினங்களுக்கான போராட்டமும் கண்ணீரும் போலியானதா அல்லது மேல்தட்டு மக்களின் மேல்தட்டு உணர்வுகளுக்கான வடிகாலா என்ற வினாவை எழுப்பாமலில்லை.

இலங்கையிலும் இவ்வாறான விலங்களுக்கான அமைப்புகளும் போராட்டக்காரர்களும் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். ஏராளமான பணம் முதலிடப்பட்டு, பல்வேறுபட்ட 'விலங்குகளைக் காப்போம்' என்ற முன்னெடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வீதிகளிலும் புகைப்படங்களும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் தவறு என்று அர்த்தப்படுத்தபடக்கூடாது, ஆனால், இலங்கையில் - அதுவும் கொழும்பிலும் கூட - பாடசாலை செல்ல வசதியில்லாத மாணவர்களும், 3 வேளை உண்ண முடியாத சிறார்களும் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான போராட்டங்களோ அல்லது செயற்பாடுகளோ பரந்தளவில் இடம்பெறுகின்றனவா என்பது கேள்விக்குரியது தான்.

விலங்களுக்கான ஆதரவும் மனிதர்களுக்கான ஆதரவும் ஒன்றுக்கொன்று பொருந்தமுடியாத நடவடிக்கைகள் அல்ல. ஆனால், விலங்களுக்கான ஆதரவுக்கு அதிகளவிலான ஆதரவும் வரவேற்பும் அங்கிகாரமும் கிடைக்கப்பெறும் போது, அது கேள்விகளை எழுப்பாமலில்லை. இந்நிலை ஆரோக்கியமானதும் கிடையாது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான றொக்ஷானி கே பதிவுசெய்திருந்த டுவிட்டர் கருத்து மிகவும் பொருத்தமானது. 'வீட்டை விட்டு நான் வெளியேறும் போது, சிங்கம் போன்ற ஆடையை அணிந்து செல்லப் போகிறேன். எனவே, நான் சுட்டுக் கொல்லப்பட்டால், மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவார்கள்'.

மனிதர்கள் இவ்வாறு சக உயிர்களுக்காக பரிதாபத்தை வெளிப்படுத்தமைக்கான முக்கியமான காரணமாக, மனிதர்களுக்கிடையிலான இன, மத வேறுபாடுகள் இருக்கக்கூடும். வெள்ளையின பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட கறுப்பின இளைஞனுக்காகக் குரலெழுப்புவதற்கு, தனது வெள்ளையினப் பாரம்பரியத்தைப் பெருமையாக எண்ணும் ஒருவருக்குக் கடினமாக இருக்கக்கூடும். மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, அந்த மதங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மனிதர்களுக்கு இயலாமலிருக்கலாம். ஆனால், சிங்கமொன்றுக்காகக் குரலெழுப்புவதற்கு அவ்வாறான தடைகளேதும் இல்லை.

இறுதியாக, மாமிசத்தை உண்டுகொண்டு, விலங்குகளின் தோல்களாலான பல்வேறுபட்ட உபகரணங்களைப் பயன்படுத்திக் கொண்டு, விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள், சக மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது அமைதியாக இருக்கும் போது, விலங்குகளுக்கான அவர்களது போராட்டங்களை 'பாசாங்குப் போராட்டங்கள்' என்றழைப்பதை விட வேறு வழிகளேதும் இல்லை.

விலங்குகளின் உயிர்கள் முக்கியமானவை, ஆனால் மனிதர்களின் உயிர்களின் முக்கியத்துவம் போதுமானளவு உறுதிப்படுத்தப்படும் வரை, விலங்குகளின் உயிர்கள் இரண்டாம்பட்ச முக்கியத்துவமே உடையன என்பது வெளிப்படை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .