2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

தமிழகத் தேர்தலில் தலை தூக்கிய "ராஜீவ் வழக்கு'

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடை வெயிலோடு பேச்சாளர்களின் கொப்பளிக்கும் உரைகளும் சேர்ந்து தமிழக தேர்தல் களத்தை உஷ்ணமாக்கியிருக்கிறது. முக்கியக் கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சார ஹீரோக்கள் வாக்காளர்கள் மனதில் தங்கள் கட்சியின் செயற்றிட்டங்களை அறிவித்து விட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அவர்களின் செயற்றிட்டங்களை அறிவித்து "நாங்கள்தான் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று' என்று கச்சை கட்டி நிற்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தை வழிநடத்துகிறார். தி.மு.க.விற்கு கலைஞர் கருணாநிதி வழி நடத்தினாலும், உள்ளபடி களத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் (அதாவது நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள்) சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார நாயகனாக நிற்பவர் ஸ்டாலின்தான். "ஊழல் செய்து, காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்த கட்சி தி.மு.க.' என்று அக்கட்சியை சாடுகிறார் ஜெயலலிதா. அதே நேரத்தில், "வளர்ச்சித் திட்டங்களை முடக்குவார். மத்தியில் நிலையான ஆட்சிக்கு ஆதரவு தரமாட்டார்' என்று ஜெயலலிதாவைச் சாடுகிறார் ஸ்டாலின்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ பெரிய அளவில் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. அக்கூட்டணியில் இருக்கும் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுக்கு மைனாரிட்டி வாக்குகளை இழக்கும் சோகத்தில் இருக்கிறார்கள். அதேபோல் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை இவர்களால் தற்காத்துப் பேச முடியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் காட்சியளிக்க முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடுகளுடன் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி வந்து பேசி விட்டார். அவர் தி.மு.க.வை விமர்சிக்காமல் இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு இந்தியா செய்த உதவிகள் என்ன என்பதை பட்டியலிட்டு விட்டு, என் கணவரையே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தியாகம் செய்திருக்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார். ஆனால் அ.தி.மு.க. அரசை சாடி விட்டுப் போனார்.

தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுதலை செய்ய முழு முயற்சி எடுத்தது மத்திய அரசுதான். அதற்கு முட்டுக்கட்டை போட்டதுதான் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு என்று சாடி விட்டார். நாகர்கோயிலில் பேசிய கூட்டத்திற்கு சென்னையில் பதிலளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, "சோனியா சொல்வது கேலிக்கூத்து. பித்தலாட்டம்' என்றெல்லாம் கடும் சொற்களை வீசியிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் காங்கிரஸ் அரசை விமர்சித்தாரே தவிர, சோனியாவை நேரடியாக விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த முறை சோனியாவை கடுமையாக சாடியிருக்கிறார். தமிழக மீனவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க. அரசுதான் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்று அவர் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில், சோனியாவின் இந்த குற்றச்சாட்டு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சோனியாவின் கூட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சம் இங்குள்ள தி.மு.க.வை அவர் விமர்சிக்காததுதான். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்த லைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க.வை சோனியா விமர்சிக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் சோனியா அதற்கு இடம் கொடுக்கவில்லை. குறிப்பாக தேர்தலுக்குப் பிறகு மதசார்பற்ற ஆட்சி அமையத்தான் தி.மு.க. டெல்லியில் முயற்சி எடுக்கும், அந்த காரணத்திற்காக காங்கிரஸையே கூட ஆதரிக்கும் என்று தி.மு.க. தலைவர் அறிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சியை விமர்சிக்கத் தேவையில்லை என்று சோனியா நினைத்திருக்கக்கூடும். காங்கிரஸுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியம் என்றால் தி.மு.க.விற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் முக்கியம். அதனால் இரு தரப்புமே இந்தத் தேர்தல் களத்தில் மோதிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிகளில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் தி.மு.க. வை விமர்சிக்கத் தவறவில்லை.

இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் பிரசாரத்திற்கு சென்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் அட்டாக்கை மோடி பக்கமும், ஜெயலலிதா பக்கமும் திருப்பி விட்டுள்ளார். திராவிட அலை வீசிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்குள் மோடி அலை எல்லாம் நுழைய முடியாது என்றார். அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியங்கள் சொன்ன சொத்துப் பட்டியல்களை கூட்டம் தவறாமல் விவாதிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்தார். அதேயே கலைஞர் கருணாநிதி கண்டித்துள்ளார். தான் வழங்கப் போகும் தீர்ப்பு பற்றி ஒரு பொது மேடையில் இப்படி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவிக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று ராமநாதபுரம் பிரசாரத்திற்கு வருகிறார் ராகுல் காந்தி. அதற்கு முன்பு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் வந்து திரும்பி விட்டார். அவர் மேடைக்கு அருகிலேயே தேர்தல் பறக்கும் படையினர் ஒருவரிடமிருந்து 8 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்வானியும் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார். இப்படி தலைவர்கள் அனைவரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடக்கும் பிரசாரத்திற்காக தமிழகத்தில் வந்து குவிகிறார்கள். ஏனென்றால் நாளையோடு பிரசாரம் முடிகிறது. அதற்குள் அவரவர் கருத்துக்களை வாக்காளர்கள் மனதில் விதைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் தமிழகத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க விஷயம் இலங்கை தமிழர் பிரச்சினை முன்னிறுத்தப்படவில்லை. அதற்காக போராடிய இயக்கங்கள் அது பற்றி வாய் திறக்கவும் இல்லை. முன்பு இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து காங்கிரஸுடன் இருந்த தி.மு.க.வை விமர்சித்தவர்கள் இப்போது காங்கிரஸுடன் அக்கட்சி இல்லாத சூழ்நிலையிலும் அ.தி.மு.க.விற்காகவே பிரசாரம் செய்து வருகிறார்கள். அப்படிச் செய்பவர்களில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானைச் சொல்லலாம். இலங்கைத் தமிழர்களுக்காக அவர்களுடன் சேர்ந்து போராடிய வைகோ பற்றிக் கூட அவர்கள் கவலைப்படவில்லை.

ஆனால் தமிழக அரசியல், மத்தியில் காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மோடி வந்தால் எல்லாப் பிரச்சினையும் தீரும் என்ற பிரதான கோஷங்கள் என்று தமிழ்நாடு தேர்தல் களைகட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. வாக்காளர்கள் எல்லாமே என்ன முடிவு எடுத்து வைத்துள்ளார்கள் என்பதை எந்த சர்வேயாலும் முடிவு செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இது ஒரு வித்தியாசமான தேர்தல் என்ற நிலைமையில்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றுள் அதிக எம்.பி.க்களை வாங்கும் கட்சிக்கு டெல்லி யோகம் அடிக்கிறது. ஆனால் இது எந்த கட்சி பக்கம் போகப் போகிறது என்பது தெளிவில்லாத காட்சியாகவே இருக்கிறது. இப்போதைக்கு "பா.ஜ.க. அணி அதிக வாக்குகள் பெறும் இடங்களில் அ.தி.மு.க.விற்கு தலைவலியாகும். காங்கிரஸ் அதிக வாக்குகள் பெறும் இடங்களில் தி.மு.க.விற்கு தலைவலியாகும்' என்பதுதான் தேர்தல் களத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி பலமானது என்று பேசப்பட்டாலும், அக்கட்சிக்கு எதிரான வாக்குகளும் இருக்கிறது. தி.மு.க. விற்கு கூட்டணிகள் இருக்கிறது என்றாலும் தி.மு.க. மட்டுமே அக்கூட்டணியில் பலம் பெற்ற கட்சியாக இருக்கிறது. சிறுபான்மையினர், தலித் உள்ளிட்ட வாக்கு வங்கியை பிரதானமாக நினைத்து களத்தில் நிற்கிறது தி.மு.க. யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசம் என்ற ரீதியில்தான் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால் இதுவே நிலையானது அல்ல. அடுத்த சில தினங்களில் மக்கள் மனதை மாற்றும் சக்தி தலைவர்களின் பிரசாரத்திற்கு கிடைத்திருக்கிறதா என்பதும் தெளிவாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சந்திக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களக் காட்சிகள் தமிழகத்தில் சற்று வித்தியாசமானதாக இருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X