2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடையாளங்களும் அரசியலும் அர்த்தங்களும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடையாளங்கள் என்பவை, ஒழுங்கமைக்கப்பட்ட மனித வாழ்க்கையின் மிக முக்கிய மய்ய அம்சங்கள் எனலாம்.   

ஒழுங்கமைக்கப்பட்ட மதம், அரசாங்கம், நாடு, அமைப்பு ஆகியவற்றின் சின்னங்கள், கொடிகள், துதிப்பாடல்கள், நிறங்கள், ஸ்தலங்கள் போன்றவை மேலோட்டமாகப் பார்ப்பின், வெறும் சம்பிரதாயபூர்வமானவையாகத் தெரிந்தாலும், மேலோட்டமாக உணரமுடியாத ஆழமான முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டு.  

சிக்கலான நிகழ்வுகளை, எளிமையாகவும் தெளிவாகவும் காண்பிப்பதில், அவை ஓர் அத்தியாவசிய சேவையைச் செய்வதே, இதற்குக் காரணமாகும். அவை, எளிமையான வடிவத்தில், சிக்கலான எண்ணக்கருக்களைக் குறித்து நிற்கின்றன.   

மிகவும் சிக்கலானதோர் எண்ணக்கருவை, அவை மிக மேலோட்டமாக வௌிப்படுத்தி நிற்கின்றன. அதன்படி, ஒரு சிக்கலான எண்ணக்கருவை, எளிமைப்படுத்தி, மிகவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உணர்த்துவதற்கு, அடையாளங்கள் உதவி செய்கின்றன.   

அவை, பலமான செய்திகளைச் சொல்லாமல் சொல்கின்றன. இதனால்தான், அரசியலில் அடையாளங்களின் பங்கு மிக முக்கியமானது என்பதுடன், அவை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியனவாகின்றன. நாம், அவற்றைக் கூர்ந்து அவதானிக்கத் தவறிவிட்டோமானால், அவை சொல்லும் அர்த்தங்கள், எமக்குப் புரிபடாமல் போய்விடலாம்.  

2019 நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷ, 2019 நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொள்கிறார். அவரது பதவியேற்பு இடம்பெற்ற இடம் பலரதும், குறிப்பாக அரசியல், வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக இருந்தது.   

நாமறிந்த வரையில், ராஜபக்‌ஷ குடும்பம், தென்னிலங்கையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. அவர்களது இரண்டாவது வீடாக, தலைநகர் அமைந்த மாவட்டமான கொழும்பு மாவட்டம் இருந்து வருகிறது.   

ஜனாதிபதியின் செயலகம், ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம், சுதந்திர சதுக்கம் என, இலங்கை அரசுக் கட்டமைப்பின் முக்கிய அடையாள ஸ்தலங்கள் கொழும்பிலேயே இருக்கின்றன.   

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது பதவியேற்பு வைபவம் இடம்பெறும் ஸ்தலமாக, வடமத்திய மாகாணத்தின், அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்ற கேள்வியே அரசியல், வரலாற்றாய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது.   

அது ஏன்? ருவன்வெலிசாயவின் முக்கியத்துவம் என்ன? குறிப்பாக, அரசியல் ரீதியாக, ருவன்வெலிசாய சொல்லும் செய்தி என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளுதல், கோட்டா தனது பதவியேற்பு இடமாக, ருவன்வெலிசாயவைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள உதவலாம்.  

ருவன்வெலிசாய என்பது, அநுராதபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரியதொரு பௌத்த தாதுகோபமாகும். வரலாற்றில் இது, ‘சுவர்ணமாலி மஹாசாய’, ‘சுவர்ணமாலி சைத்திய’, ‘மஹாசாய’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.   

குறித்த தாதுகோபத்தை ஸ்தாபிக்கும் பணிகள், மஹாவம்சத்தின் நாயகனான துட்டகைமுனு என்று, இன்று பிரபலமாக அறியப்படும் துட்டகாமினியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதன் கட்டுமானத் திட்டம், துட்டகைமுனுவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே, மஹிந்த தேரரால், தேவநம்பியதீசனுக்கு உரைக்கப்பட்டிருப்பதாக, கல்வெட்டு ஆதாரங்களை, சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  

பண்டைய இலங்கையின் வரலாற்றைச் சொல்லும், பாளி மொழியிலான இரண்டு காப்பியங்களான மஹாவம்சம், தீபவம்சம் ஆகியவை, ருன்வெலிசாயவின் வரலாறு பற்றிக் கூறுகின்றன. ருவன்வெலிசாயவைக் கட்டுவதற்காக, மன்னன் துட்டகைமுனு, தனது இராச்சியத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, ஆதரவைத் திரட்டியதாகக் குறிப்பிடுகின்றன.   

கௌதம புத்தரின் நினைவாக, மகத்தானதொரு தாதுகோபத்தைக் கட்டுவது, துட்டகைமுனுவின் கனவாக இருந்தது. கட்டுமானப் பணிகள் தொடர்பாக, ஏராளமான தொண்டுகளைச் செய்யும் குடிமக்கள் அனைவருக்கும், ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று, துட்டகைமுனு உத்தரவிட்டதாக மேற்கூறிய பாளிக் காப்பியங்கள் உரைக்கின்றன.   

ஒவ்வொருவரும் குறித்த தாதுகோபம் கட்டப்படுவதில், தங்கள் சாதிக்கு ஏற்ப, தங்கள் பணிகளைச் செய்தனர் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.   

இப்படியாக, ஒட்டுமொத்த இராச்சியமும் ருவன்வெலிசாயவின் கட்டுமானத்தில் பங்கேற்றது. ஆனால், இப்பணியை ஆரம்பித்த துட்டகைமுனுவால் ருவன்வெலிசாயவின் கட்டுமானப்பணிகளை நிறைவுசெய்ய முடியவில்லை; காலம் அதற்கு அனுமதியளிக்கவில்லை. பெருங்கனவு நிறைவேறாமலே, துட்டகைமுனுவின் உயிர் பிரிந்தது.  

துட்டகைமுனுவுக்குப் பின் பதவியேற்ற துட்டகைமுனுவின் தம்பி சதாதிஸ்ஸவால், ருவன்வெலிசாயவின் கட்டுமானப் பணிகள், நிறைவுசெய்யப்பட்டன. அதன்பின் வந்த அக்கபோதி, தாதுசேனன் உள்ளிட்ட பல மன்னர்களும் ருவன்வெலிசாயவைப் புனரமைத்துப் பாதுகாத்தனர் என்று வரலாறு கூறுகிறது.   

ஆனால், கலிங்க மாகனின் படையெடுப்புடன், அநுராதபுர இராச்சியத்தின் வீழ்ச்சியின் பின்னர், ருவன்வெலிசாய பராமரிப்பின்றி கைவிடப்பட்டநிலையில், பாழடைந்து போய்க்கொண்டிருந்தது.   
அதன் பின்னர், ருவன்வெலிசாயவின் புனரமைப்பு என்பது 1873இல், நாறன்விட சுமனசார தேரர் என்ற புத்த பிக்குவின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. தனிநபராக முன்னின்று ஆதரவு திரட்டி, குறித்த பணியை, சுமனசார தேரர் செய்ததாகத் தன்னுடைய கட்டுரையொன்றில், உபாலி சல்காதோ குறிப்பிடுகிறார்.   

பல தசாப்தங்களாக இடம்பெற்ற இந்தப் பணிகள் நிறைவுற்று, ‘சூடமனிக்க’ எனும் மாணிக்கக்கல், பர்மிபயப் பிக்குகளால் வழங்கப்பட்டு, புனரமைக்கப்பட்ட ருவன்வெலிசாயவின் உச்சியில் வைக்கப்பட்டது. நிற்க!   

ருவன்வெலிசாய, மிகமுக்கியமான பௌத்த புனிதஸ்தலம் என்பதால், கோட்டாபய ராஜபக்‌ஷ அந்த ஸ்தலத்தில் பதவியேற்றுக் கொண்டார் என்று சிலர் சொல்லலாம். ஆனால், இலங்கை பூராகவும், மிகப்புனிதமான பௌத்த ஸ்தலங்கள் பல இருக்கின்றன. பௌத்த ஸ்தலங்களில் மிகப் புனிதமானதும், முக்கியமானதும், அதிகாரக் கேந்திரம் என்று பார்த்தால், அது நிச்சயமாக புத்தரின் புனித தந்தத்தைக் கொண்டிருக்கும் கண்டி தலதா மாளிகைதான்.   

ஆகவே, தலதா மாளிகை, ஏனைய பல்வேறு பௌத்த புனித ஸ்தலங்களைக் கடந்து, ருவன்வெலிசாயவைக் கோட்டாபய தேர்ந்தெடுக்கக் காரணமொன்று இருக்க வேண்டுமல்லவா? அந்தக் காரணமும் அதன் அரசியல் பொருள்கோடலும் அதன் அடையாள முக்கியத்துவமும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.  

மிகப்புனிதமான பௌத்த ஸ்தலம் என்பதைத் தாண்டியும் ருவன்வெலிசாயவுக்கு வேறு ஓர் அடையாள முக்கியத்துவமும் உண்டு.ருவன்வெலிசாய என்பது, துட்டகைமுனுவின் கனவு. ருவன்வெலிசாயவும் துட்டகைமுனுவும் ஒன்றோடொன்று கலந்த, பிரிக்கமுடியாத அடையாளங்கள்.  

இலங்கையைப் பல்வேறு மன்னர்கள் சிறப்புற ஆண்டிருந்தாலும் இலங்கை அரசியலிலும் சமூகத்திலும், குறிப்பாக, சிங்கள பௌத்தர்களிடையே துட்டகைமுனு அளவுக்குப் பிரபல்யமானவர்கள் எவரும் இலர்.   

இதற்கு முக்கிய காரணம், ‘மஹாவம்சம்’ ஆகும். சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையே மஹாவம்சம்தான். மஹாவம்சம் கூறும் வரலாற்றுப் புனைவானது, சிங்கள பௌத்த தேசியத்துக்கு, ஒரு ‘பயன்தரு கடந்த காலமாக’ அமைகிறது. அந்தப் பயன்தரு கடந்த காலத்தின் நாயகன் துட்டகைமுனு.   

துட்டகைமுனுவின் மிகப்பெரும் சாதனையாக, வில்ஹெல்ம் கைகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, ‘மஹாவம்சம்: இலங்கையின் பெரும் வரலாற்றுக்கூறு’ என்ற நூலின், 25ஆம் அத்தியாயத்தின் 75ஆம் சரத்து பின்வருமாறு கூறுகிறது:  

‘முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை வீழ்த்தியதும் துட்டகைமுனு, இலங்கையை ஒரே இறைமையாக ஆட்சிசெய்தான்’. அதாவது, எல்லாளன் எனப்படும் மனுநீதிச் சோழன் உள்ளிட்ட 32 தமிழ் மன்னர்களைப் போரில் வென்று, இலங்கையை மீண்டும் ஒன்றுபடுத்தி, ஆட்சி செய்தவன் துட்டகைமுனு என்கிறது மஹாவம்சம்.   

உண்மையில், இலங்கைத்தீவு என்ற முழுமையையும் நவீன கால மேலைத்தேய இறைமைக் கோட்பாடுகளோடு பொருந்தும் வகையில், துட்டகைமுனு ‘ஒரே இறைமையாக’ ஆண்டானா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்துக்குத் தேவையான வலுவானதோர் அடிப்படையை, ‘மஹாவம்சம்’ கூறும் புனைகதை வரலாறு, துட்டகைமுனு ஊடாக வழங்கிவிடுகிறது.   

இதனால்தான், துட்டகைமுனு சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தன்னிகரில்லா அடையாளமாகிறான். ஆகவே, துட்டகைமுனுவும் ருவன்வெலிசாயவும் வெறுமனே, பௌத்த புனித ஸ்தலங்கள் என்ற அடையாளத்தையும் தாண்டிய முக்கியத்துவத்தை, சிங்கள பௌத்த தேசியவாதப் பார்வையில் கொண்டிருக்கின்றன.  

எல்லாளன் எனும் மனுநீதிச் சோழனை, மஹாவம்சம் பழிக்கவில்லை; மாறாக, அவனது நீதிநெறி தவறாத நல்லாட்சியைப் புகழ்ந்தே சொல்கிறது. ஆனாலும், அவன் ‘அந்நியன்’; ஆகவேதான் எல்லாளனுக்கு எதிராகத் துட்டகைமுனுவின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.   

எல்லாளன்-துட்டகைமுனு யுத்தத்தின் அடையாள முக்கியத்துவம், இன்றும் ‘சிங்கள பௌத்த’ தேசியவாத அரசியலுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான், ஜே.ஆர் முதல் கோட்டாபய வரை, ‘நவீன துட்டகைமுனு’க் கனவு, அவர்களைத் துரத்திக்கொண்டிருக்கிறது.  

ருவன்வெலிசாயவில் பதவியேற்ற கோட்டாபய, ஜனாதிபதியாகத் தான் ஆற்றிய கன்னி உரையில், “இந்தத் தேர்தலின் பிரதான செய்தியானது, நான் ஜனாதிபதியாக வெற்றி பெறக் காரணம், பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளே” என்று வௌிப்படையாகவே சொல்லியிருந்தார்.   
அத்தோடு, இலங்கையர் அனைவருக்கும் நான் ஜனாதிபதி என்று தொனிப்படும் கருத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தும், அது சொல்லப்பட்ட இடமும் நிச்சயமாகப் பலரையும் குறிப்பாக, சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.  

‘மஹாவம்ச’ மனநிலை, இந்த நாட்டுக்கு இதுவரை எந்த நன்மையையும் பெற்றுத் தரவில்லை. மஹாவம்சம் என்பதை, இலங்கையின் முழுமையான வரலாறாகக் கொள்வது மிகச் சிக்கலானது எனப் பல்வேறு ஆய்வாளர்களும் மிகத் தௌிவாகக் கருத்துரைத்து இருக்கிறார்கள்.   

‘ஒரு புனைவுக்குச் சாதகமானதொரு பார்வையை வழங்குவதனூடாக, அதைத் தமது கட்டமைப்பை நியாயப்படுத்த, ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்’ என்ற ஷபீரோவின் கருத்துக்கேற்றாற் போல, மஹாவம்சப் புனைவானது, சிங்கள தேசக் கட்டமைப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டுவிட்டது.   

இந்த மஹாவம்ச மனநிலைதான், இனப்பிரச்சினைக்கான அடிப்படையாகவும் அதைத் தீர்ப்பதற்கான முட்டுக்கட்டையாகவும் மாறியிருக்கிறது. சுதந்திரத்தின் பின்னர், ஒரு சிவில் தேசமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டிய நாடானது, இன்று பெரும்பான்மையினத் தேசியவாதம், பெரும்பான்மையினத் தேசியவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக உருவான சிறுபான்மையினத் தேசியவாதம் என, இனத் தேசியவாதங்களால்  உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கிறது.   

மீண்டும் மீண்டும் இந்த இனத் தேசியவாதத்துக்குத் தீனி போட்டு வளர்ப்பது, இந்நாட்டுக்கும் இந்தநாட்டு மக்களுக்கும் எந்தவித நன்மையையும் பெற்றுத்தராது.  

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஐந்து ஆண்களில், வௌ்ளைச்சாரம் கட்டாது, ஜனாதிபதியான ஒரேயொருவர் கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமே!   

உண்மையில், இந்த நாட்டுக்குச் சுபீட்சமானதோர் எதிர்காலத்தை அவர் வழங்க விரும்பினால், பொருளாதார ரீதியில் வளமானதோர் அமைதியானதொரு மக்கள் சௌஜன்யத்துடன் வாழுமொரு நாட்டை அவர் கட்டியமைக்க விரும்பினால், முதற்படியாக இலங்கை அரசியலை ‘மஹாவம்ச’ மனநிலையிலிருந்து விடுவிடுக்க வேண்டும்.   

‘மஹாவம்ச’ மனநிலை தொடரும்வரை, ‘இனத் தேசியவாதம்’ மறையாது. பேரினத்தேசியவாதம் இருக்கும் வரை, அதன் அடக்குமுறைக்கு எதிரான ‘சிறுபான்மையினத் தேசியத்தின்’ இருப்பு என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.   

‘வௌ்ளைச் சாரத்தை’ விட்டொழித்ததுபோல, ‘மஹாவம்ச’ மனநிலைப் போக்கில் மாற்றத்தையும் கோட்டா கொண்டுவந்தால் மட்டுமே, அவர் விரும்பும் அபிவிருத்தி, இந்த மண்ணில் கனவைத் தாண்டி நிஜமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .