அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும்

‘நல்லாட்சி’ என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த, ஒன்றிணைந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், முடிவடையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், மீண்டும் அரசமைப்புத் திருத்தம்; அதனூடான இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டம், அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்திருக்கின்றன.   
இவ்வாறிருக்கையில், அரசமைப்புத் தொடர்பாக, மேலோட்டமாகவே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமூகம், தற்போது கூடிய கரிசனை காட்டத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது.   

இலங்கை முஸ்லிம்கள், ஒரு நாளும் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் அல்லர். இரண்டு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றோ, அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றோ, போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் இல்லை. பிரிக்கப்படாத நாட்டில், எல்லா இனங்களுடனும் சௌஜன்யத்தோடு வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.   

முஸ்லிம்கள் மீது, தமிழ் ஆயுதக் குழுக்கள் பல்வேறு அநியாயங்களை மேற்கொண்ட வேளையிலும், இனவாதச் சக்திகள் நெருக்குவாரப்படுத்திய சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் பொதுவாகப் பொறுமையைக் கடைப்பிடித்து வந்ததை மறுக்க முடியாது.   

பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கூறியிருந்ததைப் போல, இந்த நாட்டில், ஆயுதத்தை நாடாத ஓர் இனமாகவே முஸ்லிம்கள் இருப்பதற்கும், மேற்சொன்ன மனோநிலையே காரணம் எனலாம்.   

ஆனால், அரசியல் அதிகாரமோ, ஆட்சி அதிகாரமோ அன்றேல், ஆயுத ரீதியான மேவுதல்களோ அளவுகடந்து போகின்றன என, முஸ்லிம்கள் கருதும் சந்தர்ப்பங்களில், சற்றுக் காலம் தாமதித்தேனும், அது விடயத்தில் எச்சரிக்கையுடன் செயற்படுவதும், தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது.   

வேறெந்தச் சமூகமும், தமது அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, முஸ்லிம்கள் குறுக்கே நின்றவர்கள் எனச் சொல்ல முடியாது.   

ஆனால், யாருக்காவது கிடைக்கின்ற வரப்பிரசாதங்கள், முஸ்லிம்களின் அபிலாஷைகளைக் கேலிக்குள்ளாக்குமானால், முஸ்லிம்களின் பங்கு மறுதலிக்கப்படுமாயின், முஸ்லிம் சமூகம் பாராமுகமாக இருக்கும் என்று, தப்புக் கணக்குப் போடவும் முடியாது.   

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இவ்வரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு மறுசீராக்கம் பற்றியே பேசி வருகின்றது. இதற்கான இடைக்கால வரைபு, முன்னரே சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவதில், நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.  

இவ்வாறிருக்கையில், அடுத்த தேர்தலுக்கு முன்னராவது, அதைச் செய்தாக வேண்டும் என்ற உள்ளெண்ணத்தோடு, இப்போது அரசமைப்பு மறுசீரமைப்புக்கான கோவைகள், தூசுதட்டி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.   

கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து, தனியாக ஆராயப் பொதுவான இணக்கம் காணப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில், தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

அதன்படி, இலங்கையில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக, ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான ஒரு குழுவை, அரசாங்கம் நியமித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏககாலத்தில், இந்த நகர்வை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.   

நான்கு பேர் கொண்ட இவ்வுயர் மட்டக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சரத் அமுனுகம, டிலான் பெரேரா, அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.   

அதாவது, 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் சமூகத்தின் சார்பில், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது இக்குழுவில், பெயருக்கேனும் உள்ளடக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தின் அவதானத்தைப் பெற்றுள்ளது.   

இதன்மூலம், அதிகாரப் பகிர்வு என்பது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விவகாரமே தவிர, முஸ்லிம்களோ அல்லது ஏனைய இனங்களுக்கோ இதில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று, அவர்கள் சொல்ல முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.  

நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற அரசமைப்பில் காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதிலும் முற்றாகப் புதிய யாப்பு நிறைவேற்றப்படுவதிலும் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தேர்தல் முறைமை, இனப்பிரச்சினைத் தீர்வின் அடிப்படை, அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான முன்மொழிவு உள்ளிட்ட சில விடயதானங்களில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கின்றனர்.   

வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மீண்டும் இணைக்கப்படுவதை நியாயபூர்வமாக எதிர்க்கின்ற முஸ்லிம்கள், வேறு அடிப்படைகளில் தமிழர்களுக்குத் தீர்வுப் பொதி வழங்குவதில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் வாழ்கின்ற ஆட்புலப் பிராந்தியத்தை உள்ளடக்கியதான ஒரு தீர்வு, அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பிரிப்பு வழங்கப்படுமாயின், அதில் முஸ்லிம்களுக்குரிய பங்கு கிடைத்தேயாக வேண்டும் என்று தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.   

குறிப்பாக, உத்தேச அரசமைப்பு மறுசீரமைப்பு, ஒரு தரப்புக்குச் சாதமாக நடைபெறுவதாகக் கூறப்பட்டமை, இடைக்கால அறிக்கையின் மயக்கமான வார்த்தைப் பிரயோகங்கள், தமக்கு அநியாயம் இழைக்கப்படலாம் என்ற உள்ளுணர்வை முஸ்லிம்களுக்குக் கடந்த பல வருடங்களாகவே ஏற்படுத்தியிருந்தன.   

இவ்வாறான பின்னணியில், அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராயும் குழுவிலும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் உள்ளடக்கப்படாமை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மேலும் சந்தேகத்தை விதைத்திருக்கின்றது.   

தமிழர்கள் கோரிக்கைகளை முன்வைத்து, பல தசாப்தங்களாகப் போராடினார்கள். எனவே, அவர்களுக்குத் தீர்வு கிட்ட வேண்டும் என்பதில், இருவேறு அபிப்பிராயங்கள் கிடையாது.   

ஆயினும், இலங்கையில் இனப் பிரச்சினை என்பது, தனியே தமிழர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அல்லது புலிகளுக்கும் இராணுவத்துக்கும் உரித்தானதும் தொடர்புபட்டதுமான விவகாரம் அல்ல. மாறாக, இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லா இனங்களுடனும் தொடர்புபட்டது.   

குறிப்பாக, முஸ்லிம் சமூகமும் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரும் தென்பகுதித் தமிழ் மக்களும் கூட, இனப்பிரச்சினையால் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர் என்ற அடிப்படையில், அதிகாரப் பகிர்வோ அல்லது வேறு எந்தத் தீர்வுத்திட்டமோ எதுவானாலும் அது இலங்கையில் வாழும் எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்வதாக இருப்பது மிக முக்கியமாகும். எனவே, தம்மைத் திருப்திப்படுத்தாத பொதியை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்.   

தேசிய அளவில், முக்கியத்துவமிக்க துறைகளின் அதிகாரம், மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அல்லது மாகாண ரீதியாக, முக்கியமான துறைகளின் அதிகாரம், அக்குறிப்பிட்ட மாநில அரசாங்கத்துக்கும், அரசமைப்பு ரீதியாகப் பகிர்ந்து அளிக்கப்படுவதற்கான ஓர் ஏற்பாட்டை, அதிகாரப்பகிர்வு என்று சொல்கின்றார்கள்.   

அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான ஓர் ஏற்பாடாகவே, சமஷ்டி முறையும் உள்ளது. சமஷ்டியைப் பொறுத்தமட்டில், முழுமையானதும் பகுதி அளவிலானதுமான சமஷ்டிகள், பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன.   

ஆனால், இலங்கையில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், ‘ஒருமித்தநாடு’, ‘ஏக்கிய ராஜிய’ என்ற சொற்பிரயோகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது உண்மையில், சமஷ்டியின் தன்மைகளைக் கொண்டுள்ளதாக, அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   

அந்த அடிப்படையில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு, பொதுவில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும், குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் எந்தளவுக்கு நன்மையளிக்கும் என்பதே, இன்று நம்முன் வைக்கப்பட்டிருக்கின்ற வினாவாகும்.   

சுமஷ்டி என்று வரும் போது, மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையில், ஓர் அதிகாரச் சமநிலை காணப்படும். அது முழுமையான சமஷ்டி முறைமை என்றால், மாநிலத்துக்கு எந்தெந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதோ, அதில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது.   

இந்நிலையில், இலங்கையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த மற்றெல்லா மாகாணங்களிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்கின்றார்கள். எனவே, பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.   

மாகாண அரசுகளுக்கு அதிகாரம் பகிரப்பட்டால் சிலவேளை, இணைந்த வடக்கு, கிழக்கில் அல்லது இணையாத கிழக்கில், முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்கலாம். வேறெங்கும் முஸ்லிம்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என்றால், முஸ்லிம்கள் இதனை ஆதரிக்கவே முடியாது என்று அரசியல் ஆய்வாளர்கள் அழுத்தமாகக் கூறுகின்றனர்.  

அப்படியாக, சமஷ்டியின் தன்மையுடன் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுமாயின், சிலவேளை இணைந்த வடக்கு, கிழக்கு உட்பட, எல்லா இடங்களிலும் அதிகாரம் பெறும் இனத்தால் ஆளப்படும் சமூகமாகவே முஸ்லிம்கள் இருப்பார்கள் என்பது உண்மையான கணிப்பு என்றால், அது இலேசுப்பட்ட விவகாரமல்ல.   

ஓர் அரசாங்கத்தின் கீழேயே, இந்தப் பாடுபடும் முஸ்லிம்கள், அதிகாரம் பகிரப் பெற்ற பல மாநில அரசாங்கங்களின் கீழ் வாழும் நிலை என்பது, நிச்சயம் இதைவிடப் பாரதுரமானதாகவே இருக்கும்.   

எனவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தையும் வழக்கம் போல கண்மூடித்தனமாக ஆதரிக்காமல், அதன் உள்ளடக்கங்களால் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை ஆராய வேண்டும். 

அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கம், முஸ்லிம்களையும் தென்னிலங்கைத் தமிழ் மக்களையும் காலாகாலத்துக்கும் ஆளப்படும் மக்கள் கூட்டமாக மாற்றிவிடக் கூடாது.    

யாருக்கு அதிகாரம்?

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரப்பகிர்வு என்ற விடயத்துக்கு,  முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாக, அரசாங்க ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன.   

உண்மையில், ஆட்சியில் இம்முறை, முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல், இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  

முஸ்லிம் கட்சித் தலைவர்களும் ஏனைய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களும் இம்முறை ஆட்சியில் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற முன்மொழிவுகளை ஆதரிக்க வேண்டிய தர்மசங்கடம் இருக்கலாம்.  

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், எந்தவொரு திட்டத்திலும் தமது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகத் தன்மைகள் குறித்து, கவனம் செலுத்த வேண்டியது, அதைவிட முக்கியமானது.   

அந்தவகையில், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கூறுகின்ற விடயங்களில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது.   

இந்த அரசமைப்பில் முன்மொழியப்படும் அதிகாரப்பகிர்வை, முஸ்லிம்கள் பார்க்க வேண்டிய கோணம், ஏனைய சமூகங்களில் இருந்து வேறுபடுகின்றது. தமிழர்களுக்குச் சில பகுதிகளில் ஆள்வதற்கு அதிகாரம் கிடைக்கும்; சிங்கள மக்களுக்குப் பல மாகாண அரசாங்கங்களில் அதிகாரம் கிடைக்கும்.   

இந்நிலையில், முஸ்லிம்கள் ஆளப் போகின்றவர்களா, இல்லை ஆளப்படுகின்றவர்களாக இருக்கப் போகின்றார்களா என்பதைப் பொறுத்தே, இந்த அதிகாரப் பகிர்வைப் பார்க்க முடியும்.   

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசமைப்பும் அதனூடான அதிகாரப் பகிர்வும் நடைமுறைக்கு வருமாயின், முஸ்லிம்கள் பல்வேறு வழிகளிலும் இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்ற அதேநேரத்தில், பரவலாக அடக்கி ஆளப்படும் சமூகமாக மாற்றப்படுவார்கள் என்று, சட்ட முதுமானியும் அரசியல் ஆய்வாளருமான வை.எல்.எஸ். ஹமீட், அண்மைக் காலமாகத் தெரிவித்து வருகின்றார்.   

அவரது கருத்தின்படி, மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படப் போகின்றது என்றால், அந்த ஆட்புலத்தில், பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்கள், அதைப் பயன்படுத்தி ஆளப் போகின்றார்கள் என்றால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற ஏழு, எட்டு மாகாணங்களில் ஆளப்படுகின்றவர்களாக இருப்பார்கள்; அவர்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறையும்.   

அத்துடன், நாட்டில் வாழ்கின்ற சுமார் 25 சதவீதமான சிறுபான்மையினரில் எட்டு சதவீதமானோர் மாத்திரமே ஆள்கின்ற சிறுபான்மையாக இருப்பார்கள். மீதமுள்ள 17.2 சதவீதமான சிறுபான்மையினர் ஆளப்படப் போகின்றவர்களாக இருப்பார்கள் என்று, அவர் கூறும் புள்ளிவிவரமும் குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, ஒன்றாக இருந்த ஒரு நாடு, பல அரசாங்கங்களாகப் பிரிவடைகின்ற சமஷ்டியும் உள்ளது. அதேபோல், பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நாட்டை உருவாக்கி, அந்த அரசாங்கம் சமஷ்டி முறையில் இயங்குவதும் உள்ளது. இரண்டாவது வகையிலான நாடுகளுக்கு, அரசமைப்பில் மறுக்கப்பட்டிருந்தால் தவிர, தனியாகப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கும்.   

ஆனால் எவ்வகையான சமஷ்டியைக் கொண்ட நாடாக இருப்பினும், சுயநிர்ணயம் என்ற விடயத்தைப் பயன்படுத்தி, பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகின்றது.   

எனவே, ஒருமித்த நாடு என்ற சொல், மறைமுகமான உள்ளர்த்தங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை, முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர் என்பது கவனத்துக்குரியது.     


அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.