2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த

கே. சஞ்சயன்   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்‌ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்‌ஷ.  

மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்‌ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற வகையில், இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டாளராகக் கலந்து கொண்டிருக்கலாம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டுத் தூதுவர்கள் அவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை குறிப்பாக, மேற்குலக நாடுகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.  

பொதுவாகவே, நாட்டின் அரச தலைவர்களுக்கு அடுத்ததாக, எதிர்க்கட்சித் தலைவரை, வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பது வழக்கம். எனினும், அண்மையில் கொழும்பு வந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்கவில்லை. இதுகுறித்து, கெஹெலிய ரம்புக்வெல அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.   

பிரதமர், சில அமைச்சர்களுடனான சந்திப்புகள், வடக்குக்கான பயணம் போன்ற இறுக்கமான நிகழ்ச்சி நிரலால்தான், மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்க முடியவில்லை என்று, நோர்வேத் தூதரகம் கூறியிருந்தது.  

ஆனால், நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலாளரின் பயணம் தொடர்பாக, நோர்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்தமை பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, மஹிந்த ராஜபக்‌ஷ கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிந்தது. அதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவை நோர்வே தூதுவர், சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். ஆனாலும், மஹிந்த ராஜபக்‌ஷவை, மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், பெரிதாகக் கண்டுகொள்ளும் நிலை இல்லை.  

ஒக்ரோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்பால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மேற்குலகத்துக்கும் இடையிலான விரிசல் தீவிரமடைந்தது. மேற்குலக நாடுகள், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அங்கிகரிக்க மறுத்ததுடன், அரசமைப்புச் சட்டத்துக்கு அமையச் செயற்படுமாறும் அழுத்தங்களைக் கொடுத்தன. அதனால் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூட, உயர்நீதிமன்றத்தைத் தட்டிக்கழித்து விட்டு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது.  

அதைவிட, 2015 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், அமெரிக்கா, இந்தியா போன்ற தரப்புகளுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ராஜபக்‌ஷவினர், பின்னர் ஒரு கட்டத்தில், “நாங்கள் கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு விட்டோம். இனிமேல் முன்னரைப் போன்ற தவறுகளை, நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறிவந்தனர்.  

ஆனால், ஒக்ரோபர் 26, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், நடந்த அத்தனை சம்பவங்களுமே, 2005 ஜனவரி எட்டாம் திகதிக்கு முன்னர், எப்படி ராஜபக்‌ஷ தரப்பு இருந்ததோ, அதேவிதமாகவே இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இது மேற்குலகத்துக்கும் ராஜபக்‌ஷவினருக்கும் இடையில் விரிசல் இன்னும் தீவிரமடையக் காரணமாகியது.  

இந்த விரிசலைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில், ராஜபக்‌ஷ தரப்பு இப்போது இருக்கிறது. சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் தொடர்ச்சியாகத் தாம், வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

எதிர்வரும், டிசெம்பர் மாதத்துக்குள் நடக்கப் போகின்ற ஜனாதிபதி தேர்தலில், சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம். சர்வதேச ஆதரவு இல்லாமல், சர்வதேச சமூகத்தைப் பகைத்துக் கொண்டு, ஆட்சி செய்யவும் முடியாது;  அதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியாது என்பதை, ராஜபக்‌ஷவினர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், அதற்கும் அப்பால், வேறொரு காரணமும் இந்தச் சந்திப்பின் பின்னணியில் இருந்திருக்கலாம்.   

கோட்டாபயவையே  அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்திருக்கிறது. கோட்டாபயவும், அதற்கான முன்னேற்பாடாக, அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடும் முடிவுக்கு வந்திருக்கிறார். கடந்த மார்ச் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற, கோட்டாபய, அமெரிக்கக் குடியுரிமையை விலகிக் கொள்ளக் கோரும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார். கோட்டாபய, அந்த ஆவணங்களைக் கொடுத்த பின்னர்தான், மஹிந்தவை அழைத்துக் கொண்டுபோய், அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார் பசில் ராஜபக்‌ஷ.  

அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காகவோ, கோட்டாபயவின் குடியுரிமைத் துறப்புக்கான கோரிக்கையை விரைவுபடுத்துமாறு கோருவதற்காகவோ, இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்.  

எவ்வாறாயினும், மஹிந்தவைப்  பொறுத்தவரையில், அமெரிக்காவையோ, இந்தியாவையோ பகைத்துக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது என்பது வெளிப்படை. இரண்டு நாடுகளுமே உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த இரண்டு நாடுகளையும் இப்போது சமாளித்துக் கொண்டு செல்ல முற்படுகிறார் மஹிந்த.  இந்தியாவோ, அமெரிக்காவோ விரும்புகின்றனவா, இல்லையா என்பதை விட, இரண்டு நாடுகளுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் மஹிந்த ஆர்வம் காட்டுகிறார்.  

பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினை மோசமடைந்த போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்தவையும் தேடிச் சென்று, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தார். உடனடியாகவே, அந்தச் சந்திப்பு பற்றிய தகவல்களை, மஹிந்த ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

ஆனால், அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்த விடயத்தையோ, அதுபற்றிய படங்களையோ இன்றுவரை அவர் பகிரங்கப்படுத்தவில்லை.   இரகசியப் பேச்சுகள் குறித்து, இரகசியம் பாதுகாக்கப்படுவதே இராஜதந்திர மரபு.   

அந்த மரபை, மஹிந்த ராஜபக்‌ஷ மீறினால் அமெரிக்கத் தூதுவரும் மீறுவார்; உண்மைகளை வெளிப்படுத்துவார். அதனால்தான், சந்திப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தாமல் தவிர்த்துக் கொண்டார்.

கோட்டாபய, ‌ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, அமெரிக்கா எந்தத் தடையையும் விதித்து விடக்கூடாது என்பதே, மஹிந்தவின் இப்போதைய எதிர்ப்பார்ப்பு. அதற்காக, மஹிந்த, ‌அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுவதாக, வாக்குறுதிகளை அளித்திருக்கலாம்.  

ஏனென்றால், மஹிந்த ராஜபக்‌ஷவின் குடுமி, இப்போது அமெரிக்காவிடம் தான் உள்ளது. கோட்டாபய ராஜபக்‌ஷவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமெரிக்கா அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் நிறைவு செய்யாமல் இழுத்தடித்தாலே, அது மஹிந்தவுக்குப் பெரும் சோதனையாக அமையும்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குத் தடையை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டுமாயின், அமெரிக்காவை பகைத்துக் கொள்ளக் கூடாது. ஆட்சிக்கு வந்ததும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கக் கூடும்.  

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், ராஜபக்‌ஷவினர் மீண்டும் பதவிக்கு வருவதைச் சாதகமான விடயமாகப் பார்க்கவில்லை. ராஜபக்‌ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2015இற்குப் பின்னர், அமெரிக்காவுக்குச் சாதகமாக ஏற்பட்ட மாற்றங்கள், மீண்டும் பழைய நிலைக்குச் சென்று விடும் என்ற அச்சம், அமெரிக்க ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது.  அவ்வாறான நிலை ஏற்பட்டால், இந்தியப் பெருங்கடலில், சீனா மேலும், காலூன்றுவதற்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் திறந்த, வெளிப்படையான இந்தோ-பசுபிக் மூலோபாயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஜெப் ஸ்மித் எச்சரித்திருக்கிறார்.  

ராஜபக்‌ஷவினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் கணிசமான செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களுடனும் வரையறைக்குட்பட்ட உறவுகளைத் பேண வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.  

அதாவது, ராஜபக்‌ஷவினர் மீண்டும் பதவிக்கு வருவதை, ஆபத்தானதாக அடையாளப்படுத்தும் அமெரிக்க ஆய்வாளர்கள் கூட, அவர்கள் மீண்டும் பதவிக்கு வந்தால், அவர்களுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள். இப்படியானதொரு நிலையில் தான், அமெரிக்கத் தூதுவரைத் தேடிச் சென்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் சீனச் சார்பு நிலை தான், அமெரிக்காவுக்குப் பிரச்சினையே தவிர, அவர் மீதுள்ள, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், அமெரிக்காவுக்கு பொருட்டான விடயங்களே அல்ல.  

அமெரிக்காவின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவராக மஹிந்த ராஜபக்‌ஷ மாறினால், அந்த வாய்ப்பை, அமெரிக்கா பற்றிக் கொள்ளத் தயங்கும் என்று, எதிர்பார்க்க முடியாது. மஹிந்த ராஜபக்‌ஷவே வலிய வந்து, இணக்கப்பாட்டுக்குத் தயாராகும்போது, அமெரிக்காவுக்கு, அவர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எல்லாமே மறந்து போய் விடும்.  

அமெரிக்காவுக்கும் ராஜபக்‌ஷவினர் தேவை, ராஜபக்‌ஷவினருக்கும் அமெரிக்காவின் தயவு தேவை என்றதொரு சூழல், இப்போது மெதுவாக முளைவிடத் தொடங்கியிருக்கிறது. இது ஐ.தே.கவுக்கு மாத்திரமன்றி, போர்க்குற்றங்களுக்கு நீதியைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் கூட, ஆபத்தான அறிகுறிதான்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .